Thursday, December 12, 2024
முகப்புசெய்திஇந்தியாபா.ஜ.க. : கார்ப்பரேட் முதலாளிகளின் கூலிப்படை! நன்கொடை சுருட்டுவதில் நம்பர் 1 !

பா.ஜ.க. : கார்ப்பரேட் முதலாளிகளின் கூலிப்படை! நன்கொடை சுருட்டுவதில் நம்பர் 1 !

தமிழக போராட்டங்களை கொச்சைப்படுத்தி வரும் பா.ஜ.க., அந்நிய நிறுவனமான ஸ்டெர்லைட்டிடம் இருந்து வாங்கிய காசுக்கு விசுவாசமாக 13 பேரை சுட்டுக் கொன்றதை ஆதரிக்கிறது !

-

புதிய தலைமுறை தொலைக்காட்சி சமீபத்தில் கோவையில் நடத்திய விவாத மேடை நிகழ்ச்சியில் கம்யூனிஸ்டுகளை உண்டியல் குலுக்கிகள் எனக் கொச்சைப்படுத்த முயன்று அசிங்கப்பட்டுப் போனார் பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் தமிழிசை.

கம்யூனிஸ்டு கட்சிகள் மக்கள் பிரச்சினைகளுக்காக நடத்தும் பொதுக்கூட்டம், போராட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மட்டுமல்ல, தமது ஊழியர்களின் வாழ்வு, சாவுக்கும்கூட உழைக்கும் மக்களை நம்பியே, அவர்கள் மனம் உவந்து கொடுக்கும் நிதியை நம்பியே உள்ளன என்பது உலகமே அறிந்த உண்மை.

அதேசமயம், பா.ஜ.க. உள்ளிட்ட ஆளுங்கட்சிகள் எப்படிக் கோடிகோடியாய் நன்கொடைகளை வாரிக் குவிக்கின்றன என்பதையும் பொதுமக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.

தூத்துக்குடியின் இரத்தத் தோட்டாக்களுக்கு பாஜக பெற்ற நன்கொடை எவ்வளவு?

ஸ்டெர்லைட்டுக்கும் பி.ஜே.பி.க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனப் பொதுவெளியில் வெடிக்கிறார் தமிழிசை. ஆனால், அவரது கட்சித் தலைமையோ 2013-14 ஆம் ஆண்டில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து மட்டும் 15 கோடி ரூபாய் நன்கொடை பெற்றிருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் நடைபெற்று வரும் அனைத்துப் போராட்டங்களையும் அந்நிய சக்திகளாலும், அந்நியப் பணத்தாலும் நடத்தப்படும் போராட்டங்கள் எனக் கொச்சைப்படுத்தி வருகிறது, பா.ஜ.க. ஆனால், இந்த ’தேசபக்த திலகங்கள்’ இலண்டனைச் சேர்ந்த அந்நிய நிறுவனமான ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து கைநீட்டி காசு வாங்கத் தயங்கவுமில்லை, வெட்கப்படவுமில்லை.

கடந்த 2010 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அந்நிய நன்கொடை ஒழுங்காற்றுச் சட்டம், இந்திய அரசியல் கட்சிகள் அந்நிய நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெறுவதைத் தடை செய்கிறது. ஆனால், தேச பக்தாள் பா.ஜ.க.வோ சட்டவிரோதமாக ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து நன்கொடை பெற்றிருக்கிறது. பா.ஜ.க.வும், காங்கிரசும் பெற்ற அந்நிய நன்கொடைகள் தொடர்பாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கில், “ஆறு மாதங்களுக்குள் இந்த இரண்டு கட்சிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என 2014 மார்ச் 18 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால், ‘யோக்கியன்’ நரேந்திர மோடி அரசோ, அந்நிய நன்கொடை ஒழுங்காற்றுச் சட்டத்தை முன்தேதியிட்டு திருத்தும் ஒரு சட்டத் திருத்தத்தை 2018, மார்ச் 13 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, தனது சட்டவிரோத நடவடிக்கையைச் சட்டபூர்வமாக மாற்றிக் கொண்டது. இச்சட்டத்திருத்தத்தின்படி இந்திய ஓட்டுக்கட்சிகள் 1976-ஆம் ஆண்டு தொடங்கிப் பெற்றுள்ள அந்நிய நன்கொடைகள் அனைத்தையும் எந்தவொரு அமைப்பும் ஆய்வுக்கு உட்படுத்த முடியாது.

இச்சட்டத்திருத்தத்துக்கு அப்பால், கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது இலாபத்தில் 7.5 சதவீதத்திற்கு மேல் ஓட்டுக்கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கக் கூடாது, எந்தக் கட்சிக்கு எவ்வளவு நன்கொடை தரப்பட்டிருக்கிறது என்பதை கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது ஆண்டு வரவு-செலவு கணக்கு அறிக்கையில் தெரிவிக்க வேண்டும் என்ற விதிகளையும் நீக்கிவிட்டது, நரேந்திர மோடி அரசு.

இந்தச் சட்டத் திருத்தங்களின் விளைவாக கார்ப்பரேட் முதலாளிகளிடம் கைநீட்டி நன்கொடை பெறும் தேசியக் கட்சிகளிலேயே பா.ஜ.க.தான் முதலிடத்தில் உள்ளது. 2014-ஆம் ஆண்டில் மட்டும் பா.ஜ.க.விற்கு 2,987 கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்கொடை வழங்கியிருந்தன. அந்த ஆண்டில் காங்கிரசிற்கு நன்கொடை அளித்த கார்ப்பரேட் நிறுவனங்களின் எண்ணிக்கையோ வெறும் 167தான்.

2012-13 தொடங்கி 2015-16 வரையுள்ள மூன்று ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஐந்து தேசிய கட்சிகளுக்கு அளித்திருக்கும் 956.77 கோடி ரூபாய் நன்கொடையில், பா.ஜ.க.விற்குக் கிடைத்திருக்கும் நன்கொடை மட்டும் 705.81 கோடி ரூபாய்.

கார்ப்பரேட்டுகளிடமிருந்து நன்கொடைகளை வாரிக் குவித்திருக்கும் பாஜக . படம்: நன்றி: தி ஹிந்து ஆங்கிலம்

இந்த நன்கொடை மழை காரணமாக, பா.ஜ.க.வின் மொத்த சொத்து மதிப்பு, அக்கட்சி ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அதிகரித்துவிட்டது. 2012-13 ஆம் ஆண்டில் 464 கோடி ரூபாயாக இருந்த பா.ஜ.க.வின் சொத்து மதிப்பு, 2015-16 ஆம் ஆண்டில் 894 கோடி ரூபாயாக எகிறியிருக்கிறது.

நரேந்திர மோடி அரசு பதவிக்கு வந்த ஓரிரு ஆண்டுகளிலேயே அவரது கட்சிக்குக் கிடைத்திருக்கும் சட்டபூர்வ நன்கொடையே இவ்வளவு என்றால், அவரது அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சார்பாக அரசின் கொள்கைகளையும் சட்டங்களையும் திருத்துவதற்குப் பெற்றிருக்கும் கருப்புப் பண நன்கொடை எத்துணை ஆயிரம் கோடி இருக்கக்கூடும்?

அதனால்தான் பா.ஜ.க.வை கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் கூலிப்படை என நாம் அழைக்கிறோம்.

இக்கூலிப்படை ஸ்டெர்லைட் நிறுவனத்தைப் பாதுகாக்கும் தீயநோக்கில் தூத்துக்குடி மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்குப் பெற்ற “நன்கொடை” எவ்வளவு என்பதுதான் தமிழகம் தற்போது எழுப்பும் கேள்வி!

– வினவு செய்திப் பிரிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க