மகாராஷ்டிராவில் மத மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிவந்த மருத்துவரும் பகுத்தறிவாளருமான நரேந்திர தபோல்கர், கடந்த 2013 ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் நடந்து முடிந்த ஒன்றரைஆண்டுக்குள்ளேயே மகாராஷ்டிராவில் சிவசேனாவின் இனவெறியையும், ஆர்.எஸ். எஸ். கும்பலின் மதவெறியையும் எதிர்த்துவந்த வலது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கோவிந்த் பன்சாரேயும் அவரது மனைவியும் 2015 பிப்ரவரி 20 அன்று காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரால் சுடப்பட்டனர். இதில் கோவிந்த் பன்சாரே கொல்லப்பட்டார். அவரது மனைவி படுகாயமடைந்து, தீவிர சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அதே ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று கர்நாடகாவில் சாதிவெறியையும் இந்து மதவெறியையும் அம்பலப்படுத்தி வந்த முற்போக்கு எழுத்தாளர் கல்புர்கி, தனது வீட்டில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்ட மூவரும் இந்து மதத்தின் பிற்போக்குத்தனங்களை விமர்சித்து வந்தவர்கள் என்பதோடு, இம்மூவரின் படுகொலைகளும் ஒரேவகையான துப்பாக்கியைக் கொண்டு ஒரேவிதத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளன. இத்தகைய ஒத்த தன்மைகளின் அடிப்படையில் இப்படுகொலைகளை வாதிக்கப்பட்டபோதும், நரேந்திர தபோல்கர் படுகொலை வழக்கை விசாரித்துவந்த மகாராஷ்டிர போலீசு, விசாரணையை ஒப்புக்காக நடத்திக் கொண்டு வழக்கை இழுத்தடித்து வந்தது. இச்சூழலில் அம்மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் கேதான் திரோட்கர், இவ்வழக்கை சி.பி.ஐ. மாற்ற வேண்டும் என வழக்குத் தொடர்ந்ததையடுத்து, 2014 ஆண்டு மே மாதம் இவ்வழக்கு சி.பி.ஐ. மாற்றப்பட்டது. இந்நிலையில், கோவிந்த் பன்சாரே கொலை வழக்கு தொடர்பாக, “சனாதன் சன்ஸ்தா” என்ற இந்துத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சமீர் கெய்க்வாட் என்பவரைக் கைது செய்தது மகாராஷ்டிர போலீசு.
போலீசின் விசாரணையில் சமீர் கெய்க்வாட் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், தபோல்கர், பன்சாரே மற்றும் கல்புர்கி ஆகியோரது படுகொலைகளில் சனாதன் சன்ஸ்தாவின் பங்கு உறுதி செய்யப்பட்டதோடு, சனாதன் சன்ஸ்தா மற்றும் இந்து ஜன்ஜாகிருதி சமிதி ஆகிய அமைப்புகளில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த விரேந்திர சிங் தவாடே என்ற காது- மருத்துவருக்கும் இப்படுகொலைகளில் பங்கிருப்பதை, அவரது மின்னஞ்சல்களையும், தொலைபேசி அழைப்புகளையும் புலனாய்வு செய்து சி.பி.ஐ. உறுதி செய்தது. மேலும், கோவா சர்ச் தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பாக இண்டெர்போல் போலீசால் தேடப்பட்டுவரும் குற்றவாளியான சனாதன் சன்ஸ்தாவைச் சேர்ந்த சரங் அகோல்கர் என்பவருடன் இணைந்து தபோல்கர் கொலை குறித்துத் திட்டமிட்டதும்; நாட்டுத் துப்பாக்கித் தயாரிப்பு மையம் ஒன்றை உருவாக்குவது குறித்தும், வெளிநாட்டுத் துப்பாக்கிகளை அசாமிலிருந்து வாங்குவது குறித்தும், அதற்கான நிதியுதவியைச் சட்டரீதியாகவோ, சட்டவிரோதமாகவோ திரட்டுவது குறித்தும் அகோல்கருடன் மின்னஞ்சல் மூலம் தவாடே திட்டமிட்டு வந்ததும் அம்பலமானது.
இந்து ராஷ்டிரம் அமைப்பதை நோக்கமாகக் கொண்டு ஜெயந்த் பாலாஜி அதாவலே என்ற மனோவசியக்காரரால் புனேயில் 1999 ஆண்டு தொடங்கப்பட்ட அமைப்புதான் சனாதன் சன்ஸ்தா. கலாச்சார, சமூக சேவை அமைப்பாகத் தன்னைக் கூறிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்., கொலை, கலவரம் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத, பயங்கரவாத நட வடிக்கைகளைச் செய்து முடிப்பதற்காக, தனக்குச் சம்பந்தமேயில்லாத அமைப்பு களைப் போல உருவாக்கி வைத்திருக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், அபினவ் பாரத், இந்து தர்மசேனா போன்ற அமைப்புகளின் வரிசையில் சனாதன் சன்ஸ்தாவும் ஒன்று.
உயர் சாதி மற்றும் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரைத் தங்களது புரவலர்களாகவும் இரகசிய உறுப்பினர்களாகவும் கொண்டிருக்கும் சனாதன் சன்ஸ்தாவின் வேலையே நாடெங்கும் சதிச் செயல்களைத் திட்டமிட்டு அரங்கேற்றுவதுதான். 2008 ஆண்டு பன்வெல் மற்றும் தானேயில் மூன்று திரையரங்குகளில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகள், 2009 கோவாவில் நடத்தப்பட்ட சர்ச் குண்டு வெடிப்புகள், வெடி குண்டுகளை எடுத்துச் செல்லும் போது எதிர்பாராதவிதமாக அக்குண்டுகள் மட்கவோனில் வெடித்தது உள்ளிட்டுப் பல்வேறு தீவிரவாத செயல்களில் சனாதன் சன்ஸ்தா ஈடுபட்டிருக்கிறது.
இதன் காரணமாக சனாதன் சன்ஸ்தாவைத் தடை செய்யக் கோரி கோவா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநில அரசுகள் அப்போதைய காங்கிரசு கூட்டணி தலைமையிலான மைய அரசுக்குக் கடிதம் எழுதின. ‘‘தடை செய்யும் அளவிற்கு குறிப்பிடும்படியான சம்பவங்கள் எதையும் மாநில அரசுகள் முன்வைக்கவில்லை என்று கூறி சனாதன் சன்ஸ்தாவைத் தடை செய்ய மறுத்துவிட்டது காங்கிரசு அரசு.
விடுதலைப் புலிகள் ஈழப் போரில் தோற்கடிக்கப்பட்ட பிறகும், அதன் மீதான தடையை ஒவ்வொரு ஆண்டும் நீட்டிப்பதில் அதீத அக்கறை காட்டிய காங்கிரசு அரசு, முசுலீம் மாணவர் அமைப்பான சிமி தொடங்கி மாவோயிஸ்டுகள் வரையிலான இயக்கங் களைத் தடை செய்வதற்குத் தயக்கமே காட்டாத காங் கிரசு அரசு, சனாதன் சன்ஸ்தாவிற்கு விலக்கு அளித்த்தற்குக் காரணம் அதனின் மென்மையான இந்துத்துவா அரசியல்தான்.
காங்கிரசிற்கு மாற்றாக வந்திருப்பதோ பகிரங்க மான இந்துத்துவா ஆட்சி. ஜனநாயக சக்திகளின் போராட்டங்கள் காரணமாக முந்தைய காங்கிரசு ஆட்சியில் இந்து பயங்கரவாதிகள் மீது எடுக்கப்பட்ட அரைகுறை நடவடிக்கைகள்கூட, மோடி பதவியேற்ற பிறகு நீதிமன்றங்களின் துணையோடு ரத்து செய்யப்படுகின்றன.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரக்யா சிங்கின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை எனத் தெரிவித்துள்ள தேசியப் புலனாய்வுக் கழக அதிகாரிகள், அவ்வழக்கில் அவருக்குப் பிணை வழங்கலாம் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். அதே வழக்கில் மற்றொரு குற்றவாளியான இராணுவ அதிகாரி புரோகித்தின் மீது மகாராஷ்டிராவின் திட்டமிட்ட குற்றச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பெற்ற குற்றச்சாட்டு ரத்து செய்யப்பட்டுவிட்டது. குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், அது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச் செயல் அல்ல என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பதோடு, முக்கியக் குற்றவாளிகளை விடுதலை செய்துவிட்டது. சொராபுதீன் போலி மோதல் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான குஜராத் போலீசு அதிகாரி வன்சாராவுக்குப் பிணை வழங்கப்பட்டுவிட்டது. அதே வழக்கில் அமித்ஷாவை விடுதலை செய்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சதாசிவத்திற்கு கேரள கவர்னர் பதவி மோடி அரசால் சன்மானமாக அளிக்கப்பட்டிருக்கிறது.
தனக்கு எதிரான கருத்துக்களை அறிவுப்பூர்வமாக விவாதிப்பதற்குப் பார்ப்பனக் கும்பல் என்றுமே தயாராக இருந்தது இல்லை. பார்ப்பனியத்திற்கு எதிராகக் கருத்துக் கூறுபவர்களை, அதனை அம்பலப்படுத்து பவர்களைக் கொலை செய்வதுதான் அதனின் வரலாறாக இருந்திருக்கிறது. இப்பார்ப்பன பயங்கரத்திற்கு சார்வாகன் தொடங்கி கல்புர்கி வரை பலியாகியிருப்பதற்கு வரலாறு நெடுகிலும் பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. இந்துத்துவாவிற்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பதற்கு கொஞ்சநெஞ்ச இடமிருப்பதையும் ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்று மோடி ஆட்சி கருதுவதை சென்னை ஐ.ஐ.டி. பெரியார்- படிப்பு வட்டம் தடை, ரோஹித் வெமுலா தற்கொலை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள் நிரூபிக்கின்றன. அதனால் மோடி கும்பலுக்கு சனாதன் சன்ஸ்தா போன்ற அமைப்புகள் தேவை. இந்நிலையில் சனாதன் சன்ஸ்தாவைத் தடை செய்யும் பேச்சுக்கே மோடி அரசில் இடமிருக்காது.
– மணி
_____________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2016
_____________________________
டிசம்பர்,2017’ல் இருக்கிறோம்.
கௌரி லங்கேஷும் இந்த பட்டியலில் இணைந்து விட்டார்.
தென் தமிழக சிறுநகரமான என் ஊரில் இந்து முன்னணி முளைத்து விட்டது.
சிறுபான்மையினர்,தலித்களை பார்ப்பனியத்திற்கு பலிகொடுத்து கொண்டே,அந்த கதைகளை கட்டுரைகளாக வடித்து கொண்டு மட்டும் இருப்போம்.
பாவம் கர்கரேகள்.