privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெயா ஆட்சியின் குற்றப் பட்டியல் - ஒரு தொகுப்பு

ஜெயா ஆட்சியின் குற்றப் பட்டியல் – ஒரு தொகுப்பு

-

வன்முறையே சட்டமாக… கொள்ளையே ஒழுங்காக…

 ‘‘ஒன்றரைக்கோடிஉறுப்பினர்களைக்கொண்டபெரியதொருஅரசியல்கட்சிக்குத்தலைமைதாங்கியஜெயலலிதா, தன்மீதுதொடரப்பட்டவழக்குகளைமுகாந்திரமாகக்கொண்டு, வன்முறையில்ஈடுபடக்கட்சியினரைநேரடியாகவோ, மறைமுகமாகவோதூண்டியதில்லை.’’ (புதிய தலைமுறை ஆசிரியர் மாலன், தினமணிக் கதிர், 11.12.2016)

‘‘அவரது ஆட்சியைப் பற்றி எத்தனையோ குறைகளைக் கூறலாம். ஆனால், ஜெயாவின் நிர்வாகத் திறமையும், அவரது ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட சட்டம்ஒழுங்கு நிலையும், ….. பெண்மைக்குத் தரப்பட்ட மரியாதையும் பாதுகாப்பும் தமிழகம் உள்ளவரை நினைவுகூரப்படும்.’’ (தினமணி தலையங்கத்தில்)

L&O_P1
ஸ்பிக் நிறுவனப் பங்குகள் விற்பனை ஊழல் வழக்கில் ஜெயாவிற்கு எதிராகக் கோப்பில் குறிப்புகள் எழுதியதற்காக ஆசிட் வீசித் தாக்கப்பட்ட நிலையில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா.

2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வென்று முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்தவுடனேயே, ‘‘தமிழகத்தில் இருந்த தாலி பறிக்கும் கொள்ளையர்கள் அனைவரும் ஆந்திராவிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாக’’த் தடாலடியாக அறிவித்தார், ஜெயா.  இதன் மூலம் தனது வருகையே, இருப்பே சமூக விரோதக் கும்பலுக்குக் கிலி ஏற்படுத்திவிட்டதாகக் காட்டிக் கொண்டார், அவர்.

ஆனால், கடந்த ஐந்தாண்டில், 2016 சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு வரை, தமிழகத்தில் 7,630 கொலைகளும், 8,119 கொள்ளைச் சம்பவங்களும், 11,245 கொலை முயற்சிகளும் நடந்துள்ளன.

பெண்களின் பாதுகாப்போ, தினமணி தலையங்கத்தில் மெச்சிப் பாராட்டியிருப்பதற்கு நேர்மாறாக, 3,360 பாலியல் வன்முறைகளும், 6,431 பெண் கடத்தல் சம்பவங்களும் நடந்து, பெண்கள் அச்சத்தோடுதான் தெருவில் இறங்கி நடமாட வேண்டிய சூழ்நிலை நிலவியது.

மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற உள்ளூர் இளைஞர்கள் மட்டுமல்ல, போலீசு மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள்கூட மணல் கொள்ளை மாஃபியா கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். கிரானைட் கொள்ளை, தாது மணல் கொள்ளையை அம்பலப்படுத்திய பல பேர் காணாமல் போனார்கள். ரியல் எஸ்டேட் தொழில் தகராறு, போட்டி காரணமாக நடுரோட்டில் படுகொலைகள் நடந்தன. இப்படித் தமிழகம் தொழில்முறை கிரிமினல் மாஃபியா கும்பலின் களமாக மாறிப் போயுள்ள சூழ்நிலையில், ஜெயா ஆட்சியில் சட்டம்−ஒழங்கு சிறப்பாகவும், தமிழகம் அமைதிப் பூங்காவாகவும் இருந்ததாகப் பச்சைப் பொய்யை எழுதுவதற்கு தினமணி கூச்சப்பட்டதாகத் தெரியவில்லை.

இதனைவிடப் பெரிய பொய் அ.தி.மு.க.வை அகிம்சாமூர்த்திகளாகப் பாராட்டும் பத்திரிகையாளர் மாலனின் புகழாரம். தமிழகத்தில் எப்பொழுதெல்லாம் அ.தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறதோ, அப்பொழுதெல்லாம், அக்கட்சியும், முதலமைச்சர் ஜெயா தொடங்கி உள்ளூர் கவுன்சிலர் வரையிலான அக்கட்சியின் அதிகாரப் பிரதிநிதிகளும் நேரடியாகவும் வெளிப்படையாகவும் சட்டத்தின் ஆட்சிக்கே சவாலாக இருந்தனர் என்பதும், அந்த வகையில் சட்டவிரோத கிரிமினல் மாஃபியா கும்பலைவிட அ.தி.மு.க. அபாயகரமானதாக இருந்தது, இருந்து வருகிறது என்பதும்தான் உண்மை.

ஜெயா மீது ஊழல் வழக்குத் தொடரவேண்டுமென்று நீதிமன்றத்தில் மனு போட்டதற்காக அ.தி.மு.க. ரவுடிகளால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடும் நிலையில் தி.மு.க. வழக்குரைஞர் சண்முகசுந்தரம்.
ஜெயா மீது ஊழல் வழக்குத் தொடரவேண்டுமென்று நீதிமன்றத்தில் மனு போட்டதற்காக அ.தி.மு.க. ரவுடிகளால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடும் நிலையில் தி.மு.க. வழக்குரைஞர் சண்முகசுந்தரம்.

பத்திரிகையாளர் மாலன் அ.தி.மு.க. வன்முறையை ஆராதிக்கும் கட்சி அல்ல என்ற தனது புகழாரத்தில் அ.தி.மு.க.வினரால் மூன்று கல்லூரி மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்ட வன்முறைச் சம்பவத்தை விதிவிலக்கு எனக் குறிப்பிடுகிறார். ஆனால், தன்னை எதிர்ப்பவர்கள், எதிர்க்கட்சிகள் மீது வன்முறையை ஏவிவிடுவதுதான் ஜெயா வகுத்த விதியாக இருந்தது. ஜெயாவின் மூன்று தவணை ஆட்சிகளில் அ.தி.மு.க. கும்பல் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நடத்திய வன்முறைகளை, கிரிமினல் குற்றச் செயல்களைப் பட்டியல் இட்டுப் பாருங்கள், அக்கட்சியைப் பயங்கரவாதக் கட்சி என்று குற்றஞ்சுமத்த, யாரும் தயங்கவே மாட்டார்கள்.

ஜெயா, முதல் முறையாகத் தமிழகத்தின் முதல் அமைச்சராக மே,1991−இல் பதவியேற்றார். அவர் முதலமைச்சராகிய அடுத்த மூன்றாவது மாதத்திலேயே ”தராசு” வார இதழ் அலுவலகம் மீது அ.தி.மு.க. கும்பல் கொலை ஆயுதங்களைக் கொண்டு நடத்திய வன்முறைத் தாக்குதலில், அப்பத்திரிகையைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள் கத்திக் குத்துப்பட்டு இறந்து போனார்கள்.

மே 19, 1992 அன்று பட்டப்பகலில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் அவரது முகம், கழுத்து மற்றும் கைகள் வெந்து போயின. இத்தாக்குதல் நடந்தபோது, அவர் தமிழக வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக இருந்தார். ஜெயா சம்பந்தப்பட்டிருந்த ஸ்பிக் பங்குகள் விற்பனை ஊழல் தொடர்பான கோப்புகளில், சந்திரலேகா ஜெயாவிற்கு எதிராகக் குறிப்புகளை எழுதியிருந்தார் என்ற காரணத்திற்காகவே, அதற்குப் பழி தீர்த்துக் கொள்ளும் வெறியோடு அவர் மீது ஆசிட் வீசப்பட்டது என்பது பின்னர் அம்பலமானது.

இந்த இரண்டு தாக்குதலுக்கும் இடைப்பட்ட காலத்தில், அப்பொழுது மைய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த சமயத்தில், அவர் பயணம் செய்த காரின் மீது கற்கள், தடிகள், இரும்புக் கம்பிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ப.சிதம்பரத்தின் மீது தாக்குதலை நடத்திய வன்முறைக் கும்பலுக்கு அ.தி.மு.க.வைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் தளபதிகளாகச் செயல்பட்டனர்.

சொத்துக் குவிப்பு வழக்கை சட்டப்படியும் நேர்மையாகவும் நடத்தியதால், ஜெயா-சசி கும்பலால் அவதூறு செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட அவ்வழக்கின் முன்னாள் அரசு வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா மற்றும் அவ்வழக்கின் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.
சொத்துக் குவிப்பு வழக்கை சட்டப்படியும் நேர்மையாகவும் நடத்தியதால், ஜெயா-சசி கும்பலால் அவதூறு செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட அவ்வழக்கின் முன்னாள் அரசு வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா மற்றும் அவ்வழக்கின் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.

ஜெயா−சசி கும்பல் தமிழக அரசுக்குச் சொந்தமான டான்சி நிறுவன நிலத்தை அடிமாட்டு விலையில், அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வளைத்துப் போட்டது அம்பலமான நிலையில், அவர்கள் மீது இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் 169−ஆவது பிரிவின் கீழ் வழக்குத் தொடரும் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார், தி.மு.க. வழக்குரைஞர் சண்முகசுந்தரம்.  இதையடுத்து அவரது அலுவலகத்தில் புகுந்த ரவுடிக் கும்பல், ‘‘அம்மா மீதே வழக்குத் தொடரும் தைரியமா உனக்கு?’’ எனக் கேட்டபடியே, கத்தி, இரும்புக் கம்பிகளைக் கொண்டு அவரைத் தாக்கி, குற்றுயிரும் குலையுயிருமாகச் சிதைத்துப் போட்டது. உடம்பின் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு,  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த அவரை எப்படியாவது கொன்றுவிடத் திட்டம் தீட்டிய அ.தி.மு.க. கும்பல், அந்த மருத்துவமனையின் மின் இணைப்பைத் துண்டித்தது.

ஜெயா ஆட்சியின் ஊழல்களையும், வன்முறைகளையும் அம்பலப்படுத்தி எழுதி வந்த நக்கீரன் இதழின் பிரிண்டர் கணேசன் அய்யா போலீசு நிலையத்திற்குத் தூக்கிச் செல்லப்பட்டு, போலீசாரல் சித்திரவதை செய்யப்பட்டார். இச்சித்திரவதை நடந்த இரண்டு, மூன்று நாட்களிலேயே உடல் நலிவுற்று இறந்துபோனார் அவர்.

எதிர்கட்சியினர், பத்திரிகைகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டுமல்ல, அச்சமயத்தில் தமிழக ஆளுநராக இருந்த சென்னா ரெட்டி, தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த சேஷன் மற்றும் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகளுக்கு எதிராகவும் ஜெயா−சசி கும்பல் வன்முறைகளையும் மிரட்டல்களையும் ஏவிவிட்டது.

ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்குத் தொடர சுப்பிரமணிய சுவாமிக்கு அனுமதி தந்து உத்தரவளித்தார், ஆளுநர் சென்னா ரெட்டி. இதற்குப் பாடம் கற்பிக்கும் முகமாக, சென்னாரெட்டி புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்த வழியில் திண்டிவனம் அருகே வழிமறித்த அ.தி.மு.க. கும்பல், அவர் காரின் மீது  கற்களையும் செருப்புகளையும் வீசியெறிந்து தாக்குதல் தொடுத்தது. சுப்பிரமணிய சுவாமி உரையாற்றிக் கொண்டிருந்த சென்னை பொதுக்கூட்டத்தில் ஆசிட் பல்புகளும், சோடா பாட்டில்களும் வீசப்பட்டன.

அரசு பயங்கரவாத அட்டூழியம்: பரமக்குடியில் தாழ்த்தப்பட்டோர் மீது ஜெயா போலீசு நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை.
அரசு பயங்கரவாத அட்டூழியம்: பரமக்குடியில் தாழ்த்தப்பட்டோர் மீது ஜெயா போலீசு நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை.

ஜெயா மீது சொத்துக்குவிப்பு வழக்குத் தொடர அனுமதியளித்த சென்னாரெட்டியின் உத்தரவு குறித்த வழக்கில், அந்த உத்தரவை ஏற்றுத் தீர்ப்பளித்த நீதிபதி சீனிவாசனின் வீட்டிற்கு மின் இணைப்பும், குடிநீர் விநியோகமும் நிறுத்தப்பட்டன.

நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி அருணாச்சலத்தின் மருமகன் மீது கஞ்சா வழக்கைப் போட்டு, அந்நீதிபதியை மறைமுகமாக மிரட்டியதையடுத்து, அவர் விசாரணையிலிருந்து விலகிக் கொண்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து வந்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜூனா மீதும், அவ்வழக்கின் அரசு வழக்குரைஞராக இருந்த பி.வி. ஆச்சார்யா மீதும அடுக்கடுக்காக அவதூறுகளையும் வழக்குகளையும் தொடுத்து, அவர்களுக்கு நெருக்கடி கொடுத்தது. இந்த மனரீதியான சித்திரவதைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அரசு வழக்குரைஞர் பி.வி. ஆச்சார்யா அவ்வழக்கிலிருந்து விலகிக் கொண்டார்.

ஜெயாவின் இரண்டாவது தவணை ஆட்சியில், தி.மு.க. சென்னையில் நடத்திய ஊர்வலத்தைக் கலைப்பதற்காக, அயோத்திகுப்பம் வீரமணியைப் பயன்படுத்திக் கொண்டது அவரது அரசு. கடற்கரைச் சாலையில் ஊர்வலம் சென்றபோது, ரவுடி வீரமணி கும்பல் கற்களை வீசித் தாக்கி மோதலை ஏற்படுத்தியது. இதனைச் சாக்கிட்டு போலீசும், வீரமணி கும்பலும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு தி.மு.க.வினரையும் பத்திரிகையாளர்களையும் ஓட ஓட விரட்டி அடித்தனர். ஒரு பெண்ணின் ஆட்சியில் நடந்த இந்தத் தாக்குதலின்போது, பெண் பத்திரிகையாளர்களைக்கூட போலீசு விட்டு வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மூன்றாவது தவணை ஆட்சியின்போது, சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பால் ஜெயா தண்டிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டபோது, அ.தி.மு.க.வினர் சட்டம்−ஒழுங்கை, பொதுமக்களின் பாதுகாப்பை, நீதித்துறையை எந்தளவிற்கு மதித்து நடந்து கொண்டனர் என்பது உலகமே காறிஉழிழ்ந்த ஒன்று.

அ.தி.மு.க. கும்பல் நடத்திய அத்துணை ரவுடித்தனங்களுக்கும் தமிழக போலீசு உடந்தையாக இருந்தது என்பது மட்டுமல்ல, ஜெயாவின் ஆட்சியில் போலீசும் உளவுத் துறையும் போயசு தோட்டத்தின் கூலிப்படையாகவே நடந்து கொண்டன. தி.மு.க. தலைவர் கருணாநிதியை வீடு புகுந்து கைது செய்தபொழுது, தமிழக போலீசும் உயர் அதிகாரிகளும் ஆடிய ஆட்டமும்; ஜெயாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலாவின் கணவர் நடராஜனின் தோழி செரீனா, ஜெயாவின் ஆடிட்டராக இருந்த பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது தமிழக போலீசு போட்ட கஞ்சா வழக்குகளும் அத்துறை ஜெயாவின் ஏவல் நாய் என்பதைத் தமிழகத்திற்கே புரிய வைத்தன.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயா-சசி கும்பல் தண்டிக்கப்பட்டதையடுத்து, அ.தி.மு.க. காலிகள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் காஞ்சிபுரத்தில் எரிக்கப்பட்ட அரசுப் பேருந்து.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயா-சசி கும்பல் தண்டிக்கப்பட்டதையடுத்து, அ.தி.மு.க. காலிகள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் காஞ்சிபுரத்தில் எரிக்கப்பட்ட அரசுப் பேருந்து.

கட்சிக்காரர்களை வேவு பார்ப்பது தொடங்கி, அவர்கள் மேலிடத்திற்குத் தெரியாமல் பதுக்கி வைத்த சொத்துக்களைக் கைப்பற்றி போயசு தோட்டத்தில் ஒப்படைப்பது வரை ஜெயாவிற்கு அனைத்துமாக இருந்து சேவை செய்தது, தமிழக போலீசு. இந்த விசுவாசம் காரணமாக, போலீசுக்கு சலுகைக்கு மேல் சலுகையாக வாரி வழங்கி, அதனை வளர்த்துவிட்டார். பெருந்தீனி தின்று கொழுத்துப் போன பங்களா நாய் சும்மா இருக்குமா? பொய் வழக்குகள், கொட்டடிக் கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட போலீசின் அட்டூழியங்களும், மனித உரிமை மீறல்களும் அவரது ஆட்சியில் பல மடங்கு அதிகரித்ததோடு, தமிழகத்தின் பாளையக்காரனாகவும் போலீசு நடந்து கொண்டது.

கொடியங்குளத்தில் தாழ்த்தப்பட்டோர் மீது கொடூரமான தாக்குதலை நடத்திய போலீசு, அம்மக்கள் குடிநீருக்காகப் பயன்படுத்தும் கிணற்றில் விஷத்தைக் கலந்தது. இந்த அட்டூழியம் நடந்த சமயத்தில் முதல்வராக இருந்த ஜெயாவோ, தனது வளர்ப்பு மகனின் ஆடம்பர திருமண தயாரிப்புகளில் மூழ்கிப் போயிருந்தார். பரமக்குடியில் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைச் சட்டமன்றத்திலேயே ஆதரித்துப் பேசினார், அவர்.

இவை அனைத்தும் கால்தூசு என்பது போல, அரசியல் சாசனத்திற்கே பெப்பே காட்டியவர்தான் புரட்சித் தலைவி; எவையெல்லாம் புனிதமாகக் கூறப்படுகிறதோ, அவற்றின் டவுசரைக் கழட்டி, அம்மணமாக்கியவர்தான் அம்மா.

சட்டமன்றத்தில் சபாநாயகர் இருக்கையில், சபாநாயகரைத் தவிர வேறு யாரும் அமரக்கூடாது என்பது மரபு. அந்த மரபைத் துச்சமாகத் தூக்கிப் போட்டு, அந்த இருக்கையில் தான் அமர்ந்தும், சட்டமன்ற உறுப்பினரே அல்லாத சசிகலாவைத் துணை சபாநாயகர் இருக்கையில் உட்கார வைத்தும் சட்டமன்றத்தை போயசு தோட்டமாக்கினார்.

2001 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புகள் வந்த சமயத்தில், ஜெயா, பிளஸண்டே ஸ்டே விடுதி வழக்கிலும், டான்சி ஊழல் வழக்கிலும் தண்டிக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்திருந்தார். ஆனால், தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்ற உண்மையை மறைத்து இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஜெயாவின் வேட்பு மனு தாக்கல் விவாதப் பொருள் ஆன நிலையில், மேலும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தார், ஜெயா.

ஜெயாவிற்கு மாட்டுக் கறி சமைக்கத் தெரியும் என நக்கீரன் இதழில் வெளியான செய்தியையடுத்து, அப்பத்திரிகை அலுவலகத்தை போலீசின் பாதுகாப்போடு தாக்கும் அ.தி.மு.க. குண்டர்கள்.
ஜெயாவிற்கு மாட்டுக் கறி சமைக்கத் தெரியும் என நக்கீரன் இதழில் வெளியான செய்தியையடுத்து, அப்பத்திரிகை அலுவலகத்தை போலீசின் பாதுகாப்போடு தாக்கும் அ.தி.மு.க. குண்டர்கள்.

ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யக்கூடாதென்பது தேர்தல் விதி. அந்த விதியை மீறி அவர் நான்கு தொகுதிகளுக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ததற்குக் காரணம், தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்ற அடிப்படையில் தனது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிடக் கூடாதென்ற கிரிமினல் தந்திரப் புத்தியாகும். அவர் போட்ட கணக்குப்படியே அவரது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. எனினும், அப்போதிருந்த தி.மு.க. அரசுதான் சதி செய்து, ஜெயாவைப் போட்டியிட முடியாதவாறு செய்துவிட்டதாக ஜெயாவும் அவரது விசுவாசிகளும் கூசாமல் அவதூறுகளை அள்ளிவிட்டனர்.

அச்சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.விற்கு எதிராக மெகா கூட்டணியை அமைத்திருந்த அ.தி.மு.க. வெற்றி பெற்று, ஆட்சியமைத்தது. தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்திருந்த ஜெயா, அப்போதைய தமிழக ஆளுநராக பாத்திமா பீவியை விலைக்கு வாங்கி முதலமைச்சராகி, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்த குற்றவாளி நாட்டை ஆளலாம் என்ற புரட்ச்சியை நிகழ்த்திக் காட்டி, மரபு, சட்டம், அரசியல் சாசனம் என்ற புனிதங்களின் மீது சாணியைக் கரைத்து ஊற்றினார்.

இங்கே நாம் தொகுத்திருக்கும் ஜெயா−சசி கும்பலின் கிரிமினல் குற்றச் செயல்கள் அனைத்தும் ஏதோ அநாதிக் காலத்தில் நடந்தவை அல்ல. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தமிழக மக்களின் கண் முன்னே நடந்தவை. 1996 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2004 நாடாளுமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க.வைத் தமிழக மக்களே ஓரங்கட்டித் தோற்கடித்தனர். 1996 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மட்டுமல்ல, ஜெயாவும் தோற்கடிக்கப்பட்டதற்கு அவரது ஊழல், வக்கிர ஆட்சிதான் காரணமாக இருந்தது.

ஆனால், இவற்றையெல்லாம் திட்டமிட்டு மறைத்துவிட்டு, ஜெயாவை உன்னதத் தலைவியாகப் புகழந்து தள்ளுகின்றன, ஊடகங்கள். தமிழக மக்களும் பழசையெல்லாம் மறந்துவிட்டு, தமக்கேயுரிய இரக்க குணம் காரணமாக, ஊடகங்களின் பொய்யுரைக்குத் தலையாட்டுகிறார்கள்.

ஜெயலலிதா மீது ஒன்பது ஊழல் வழக்குகள் பதியப்பட்ட பிறகு, ஒரு பொட்டு நகைகூட அணியாமல் தனது தோற்றத்தை எளிமையாக மாற்றிக்கொண்ட அவர், ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அவரை நகைநட்டு இல்லாமல் பார்த்த பெண்கள், ‘‘அந்தப் படுபாவி (கருணாநிதி) எல்லாத்தையும் புடுங்கி வெச்சுக்கிட்டாராமில்லே’’ எனப் பேசிக் கொண்டதாகத் தனது அஞ்சலியில் பதிவு செய்கிறார், பத்திரிகையாளர் வாஸந்தி. பொதுமக்களிடம் காணப்படும் இந்தப் பாமரத்தனம்தான், ஒரு கிரிமினல் மாஃபியா தலைவியைத் தமிழகத்தின் அம்மாவாகத் திணிப்பதற்கான அடிப்படையைத் தருகிறது.

– குப்பன்
புதிய ஜனநாயகம், ஜனவரி – 2017

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க