முனைவர் ஆனந்த் தெல்தும்டே

முந்தைய நாள் விமானம்  தாமதமாக வந்திறங்கியதால் ஏற்பட்ட களைப்பின் காரணமாக நான் சற்று காலந்தாழ்ந்து துயில் எழுந்தேன். நான் பணிபுரிகின்ற கோவா மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநரும், சக ஊழியருமான பேராசிரியர் அஜித் பாருலேகரின் தவற விட்ட அலைபேசி அழைப்புகளை பார்த்தேன். எங்கள் நிறுவனத்தின் வளாகத்துக்குள் பூனே போலீஸ் நுழைந்து என்னை தேடுவதாக அவர் கூறியதை கேட்டு அதிர்ந்தேன். அங்கே செல்ல விரைவதாக கூறி விட்டு மேலதிக விவரங்களை பின்னர் தெரிவிப்பதாக கூறினார். அந்த நிறுவனத்தில் பெருந் தரவு பகுப்பாராய்ச்சித் துறையின் தலைவராகவும், முதுநிலை பேராசியராகவும் நான் பணியாற்றுகிறேன்.

காலை பத்து மணிக்கு ஒரு அலுவலக கூட்டம் இருந்ததால் நான் அதற்கு செல்ல வேண்டிய அவசரத்தில் இருந்தேன். கூட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்திலே பல அழைப்புகள் எனது அலைபேசிக்கு வந்தன. ஓசையற்ற பாங்கில் எனது அலைபேசி இருந்தது. அதற்குள்ளாக எல்லா தொலைக்காட்சிகளும் அறிவுத்துறையினர், அரசியல் செயற்பாட்டாளர்கள் இல்லங்களில் நடந்த சோதனைகளையும், அவர்களில் சிலரின் கைதையும் ஒளிபரப்ப தொடங்கியிருந்தன. நான் எனது மனைவியை அலைபேசியில் அழைத்தேன். எங்கள் வீடும் திறக்கப்பட்டு, சோதனை நடப்பதை தொலைக்காட்சிகள் செய்தியிடுவதாக அவர் தெரிவித்தார்.

எனது மனைவி மிகவும் பயந்து போயிருந்தார். மூன்றே முக்கால் மணிக்கு திரும்பி செல்ல வேண்டி ஏற்கனவே பயணச்சீட்டுகள் எடுக்கப்பட்டு விட்டன. நான் மனைவியை தொலைபேசியிலேயே சற்று காத்திருக்க சொல்லி விட்டு வழக்கறிஞர் நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டேன். போலீஸ் சோதனையின் போது யாராவது ஒருவர் இருப்பது நல்லது என்றும் இல்லையேல் சோதனை என்ற சாக்கில் வீட்டில் எதையாவது வைத்து விடுவர் என்றும் வழக்கறிஞர் நண்பர் கூறினார். காவல் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்திடவும் சொன்னார். எனக்கு மும்பையில் சில பணிகள் தொடர்பாக திட்டமிருந்ததால் மனைவியிடம் எனது பயணச்சீட்டை ரத்து செய்து விட்டு கோவா செல்லுமாறு கேட்டுக்கொண்டேன். அதன்படி அவர் கோவா சென்று வழக்கறிஞர் நண்பர் ஒருவரின் துணையுடன் போலீசில் புகார் அளித்தார்.

பின்னர் எனது இயக்குநரை அலைபேசியில் அழைத்து என்னுடைய வீட்டின் சாவியை போலீசிடம் யார் வழங்கியது என்று கேட்ட போது,  நிறுவனத்தின் வளாகத்துக்கு அவர் செல்லும் முன்பே போலீஸ் அனைத்தையும் முடித்து விட்டதாக கூறினார். அவரிடம் என் மீதான குற்றப்பத்திரிகையை வழங்கியுள்ளனர். அதன் ஒளி நகலை அவருடைய செயலாளர் அனுப்பி வைத்தார். அவர் அதை படித்ததாகவும், அதில் ஒன்றுமில்லை எனவும் கூறினார்.

என்னுடைய சக ஊழியர்களுள் ஒருவரான பேராசிரியர் கிருஷ்ணா லத்தா பார்த்தவற்றை கூறினார். போலீசை சந்தித்தவர்களில் ஒருவர் அவர். போலீஸ் அங்கு நின்றிருந்த பாதுகாப்பாளரை மிரட்டி, சாவியை எடுத்து வரச்செய்து பூட்டை திறந்துள்ளனர். இயக்குநர் வரும் வரை போலீசை காத்திருக்க பேராசிரியர் கிருஷ்ணா கேட்டுக் கொண்டுள்ளார். தங்களுடன் வந்திருப்பவருக்கு சோதனையை மேற்கொள்ள அதிகாரமிருப்பதாக மிகக்கடுமையாக தெரிவித்துள்ளனர். அங்கிருந்த  பாதுகாப்பாளர் தான் வீட்டை திறந்ததாகவும் சொன்னார்.

ஒன்றிரண்டு போலீஸ் அதிகாரிகள், பாதுகாப்பாளர் மற்றும் ஒரு வீடியோகிராஃபருடனும் வீட்டுக்குள் நுழைந்து, நான்கைந்து நிமிடங்களிலெல்லாம் வெளியே வந்து, பாதுகாப்பு பணியாளரிடம் கதவை பூட்ட சொல்லி உள்ளனர். முக்கியமான அலுவல் கூட்டம் இருந்ததால் பேராசிரியர் லத்தா அங்கிருந்து அகன்றுள்ளார். அதன் பிறகு வீடு திறக்கப்பட்டதா என்று தெரியவில்லை.

எனது வீட்டின் எதிர்புறம் வசிக்கும் பேராசிரியர் விஷ்ணுவுடன் பேசினேன். அவரும் இதே கதையை தான் சொன்னார். கூடுதலாக, துப்புரவு தொழிலில் ஈடுபடும் பெண்மணி ஒரு பிளாஸ்டிக் பெட்டியை போலீஸ் தூக்கி சென்றதை பார்த்ததாக கூறியதையும் சொன்னார்.

எனது மனைவி கோவா சென்று எங்கள் வீட்டின் பாதுகாப்பாளருடன் பேசிய போது போலீஸ் சோதனையில்  நடந்தவற்றின் மிகப் பயங்கரமான பரிமாணத்தை அவர் விளக்கி உள்ளார். காலையில், ஒரு போலீஸ் ஊர்தி அதனுடன் கூடவே மேலும் இரண்டு போலீஸ் வாகனங்கள் எங்கள் நிறுவன வளாகத்தின் வாயில் கதவை இடித்து கொண்டு வந்து நின்றுள்ளது. பாதுகாப்பாளர்கள் அனைவரின் அலைபேசிகளையும் பிடுங்கியதோடு தொலைபேசி இணைப்புகளை துண்டித்து விட்டு எங்கள் வீட்டை அடைந்திருக்கிறார்கள். பின்னர் பாதுகாப்பாளரை மிரட்டி சாவிகளை எடுத்து வர பணித்துள்ளனர். அவரிடமிருந்த படி சாவிகளை பெற்றுக் கொண்டு மேலே விவரித்த முறையில் வீட்டை திறந்துள்ளனர்.

ஒட்டுமொத்த நிகழ்வும் நடந்த முறை நான் ஏதோ அச்சம் கொள்ளத்தக்க ஒரு பயங்கரவாதி அல்லது கிரிமினல் போன்ற சித்தரிப்பை கொண்டிருந்தது. தங்களுக்கு வேண்டியதை போலீஸ் என்னிடம் நேரடியாகவோ, அல்லது ஒரு போலீஸ் அதிகாரியை அனுப்பியோ அல்லது காவல் நிலையத்துக்கு என்னை வரவழைத்தோ கேட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் நடவடிக்கையின் முழு நோக்கமும் என்னவென்றால் ஒரு அச்சம் கலந்த சூழலை உருவாக்குவதும், நான் ஏற்கனவே பயங்கரமான குற்றத்தை இழைத்து விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும் தான். என்னிடமுள்ள தகவல் அனைத்தும் மக்கள் மத்தியில் இருப்பவை.

நான் ஒரு சிறந்த மாணவனாக கற்றல் காலம் முழுவதிலும் இருந்து வந்துள்ளேன். இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பயின்றவன். புகழ் பெற்ற ஆமதாபாத் மேலாண்மை நிறுவனமும் அதில் ஒன்று. சைபர்நெட்டிக்சில் (மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையேயான தானியங்கி தொடர்பாடலின் அறிவியல் – மொர்.) முனைவர் பட்ட ஆய்வு செய்து ஒட்டுமொத்த பணிவாழ்வையும் கார்ப்பரேட் நிறுவனங்களில் கழிப்பவன். பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராகவும், அதனை தொடர்ந்து பெட்ரோநெட் இந்தியா லிமிடட் என்ற சார்புவைப்புக் குழுமத்தில் (holding company) மேலாண்மை இயக்குநராகவும், முதன்மை நிர்வாக அதிகாரியாகவும் (CEO) உயர்வு பெற்றவன்.

வழக்கத்துக்கு மாறானதாக என்னுடைய கார்ப்பரேட் வாழ்க்கையை வாழ்ந்த போது 20க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை மதிப்புமிக்க இதழ்களில் எழுதினேன். என்னுடைய கார்ப்பரேட் கால வாழ்க்கைக்கு பிறகு காரக்பூர் ஐ.ஐ.டி.யில் பேராசிரியர் வேலைக்கு அழைக்கப்பட்டேன். அங்கு தொழில் மேலாண்மை பாடங்களை ஐந்து வருடங்களுக்கு மேலாக கற்பித்தேன். அதன் பிறகு ஜுலை 2016-லிருந்து கோவா மேலாண்மை நிறுவனத்தில் (Goa Institute of Management) முதுநிலை நிர்வாகவியல் பேராசிரியராக உள்ளேன். பெரு தரவு பகுப்பராய்ச்சித் துறையின் தலைவராகவும் இருக்கிறேன். இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த பாடப்பிரிவில் முதுநிலை கல்வி இந்த வருடம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

என்னுடைய இந்த தொழில்முறை வாழ்க்கை வசீகரிக்கிற வகையில் ஒரு நீதியான சமூகத்தை படைக்கின்ற நோக்கத்துக்கு உதவுகின்ற முறையில் இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும். என்னுடைய அறிவுசார் பங்களிப்பை கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக எழுத்திலும், பேச்சிலும் வழங்கி வந்துள்ளேன். இந்த வழிமுறையில் 26 நூல்கள் எழுதியுள்ளேன். அவற்றை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் முன்னணி வெளியீட்டு நிறுவனங்கனான ஜெத் புக்ஸ், ரூட்லஜ் மற்றும் பென்க்வின் ரேண்டம் ஹவுஸ் ஆகியவை வெளியிட்டுள்ளன.  இது போக நூற்றுக்கணக்கான கட்டுரைகள், ‘விளிம்பு உரை’ என்ற தலைப்பில் தொடர் பத்திகள் பெருமதிப்புமிக்க  ‘எக்கனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ என்ற இதழில் எழுதி வந்துள்ளேன். என்னுடைய எழுத்துகள் அனைத்தும் தொடர்ச்சியாக இந்திய மொழிகளிலும், வெளிநாடுகளிலும் மொழிபெயர்க்கப்படுகின்றன.

இவற்றில் பெரும்பாலானவை இணையத்தில் படிக்கக் கிடைக்கின்றன; மக்கள் மன்றத்தில் இருக்கின்றன. நூற்றுக்கணக்கான விரிவுரைகள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வழங்கி உள்ளேன். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களால் இரு முறை விரிவுரை நிகழ்த்து சுற்றுப்பயணங்களுக்காக அழைக்கப்பட்டுள்ளேன். ஒரு பொது அறிவுஜீவியாக இந்த பணிகளை நான் இவ்வளவு காலமும் செய்து வருவது பல பாராட்டுக்கள், விருதுகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கவுரவ முனைவர் பட்டங்கள் ஆகியவற்றை பெற்று தந்துள்ளன.

என்னுடைய புகழ் நிர்வாகவியல் சார்ந்த எனது சொந்த துறையில் தனித்துவமான ஒரு சான்றோனாகவும்; தொழில் ரீதியில் என்னுடைய புகழ் முதன்மை நிர்வாக அதிகாரியையொத்த கார்ப்பரேட் நிர்வாகியாகவும், ஒரு நூலாசிரியராக என்னுடைய புகழ் அனைவராலும் விரும்பித் தேடப்படும் ஒரு எழுத்தாளராகவும், ஒரு பொது அறிவுஜீவியாக என்னுடைய புகழ் அனைவராலும் விரும்பி அழைக்கப்படுகின்ற மனிதராகவும் நாடு முழுக்க இருக்கிறது. மாணவர் பருவத்திலிருந்தே நான் ஒரு சமூக செயல்பாட்டாளன். மாணவர் தலைவராகவும், பின்னர், குடிமை உரிமை செயல்பாட்டாளனாகவும் அது இருக்கிறது. கால ஓட்டத்தில் பல அமைப்புகளுடன் எனக்கு தொடர்பேற்பட்டது. அவை எதுவும் வன்முறையை போதிப்பதுவோ அல்லது சட்டவிரோத காரியங்களை செய்வதோ கிடையாது. உதாரணத்துக்கு ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு குழுவின் செயலாளராகவும், ஜனநாயக உரிமைகள் ஒருங்கிணைப்புக் குழுவின் நிர்வாக உறுப்பினராகவும், கல்வி உரிமைக்கான அகில இந்திய அமைப்பின் அவை உறுப்பினராகவும் உள்ளேன்.

நிச்சயமாக, ஒரு பொது அறிவுஜீவியாக என்னுடைய விமர்சனங்கள் இந்த அரசின் திட்டங்களை விமர்சிப்பதாக தான் இருக்கின்றன. அவை மேலோட்டமாக அல்லாமல் ஒரு அறிவுத்துறை ஒழுங்குடன் இருப்பவை. நான் சந்தேகம் இல்லாமல் இந்த அரசு மீது கடுமையான விமர்சனத்தை கொண்டுள்ளவன். அதே நேரத்தில் வேறு பலரை போலல்லாது, இந்த அரசின் தோற்றத்துக்கு காரணமான பின்-காலனிய அரசு கட்டமைப்பை பழிப்பவன்.

பீமா-கோரேகான் அல்லது எல்கர் பரிஷத்தில் எனது தொடர்பு குறித்து கூறப்படுவனவற்றின் மீது சொல்ல வேண்டும் என்றால் பீமா – கோரேகான் நிகழ்வு தொடர்பாக நான் எழுதிய கட்டுரை வயரில் ([https://thewire.in/caste/myth-bhima-koregaon-reinforces-identities-seeks-transcend) வெளிவந்து நாடு முழுவதுமுள்ள  தலித்களின் கோபாக் கணைகளுக்கு தான் ஆளானேன். மாவோயிஸ்ட் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக சொல்வதென்றால் வன்முறை மீது அவர்கள் கொண்டிருக்கின்ற சாய்வு மற்றும் அவர்கள் கடைபிடிக்கின்ற வழிமுறை ஆகியவற்றை விமர்சித்து எழுதி உள்ளேன். ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சாதியொழிப்பு, லெஃப்ட் வேர்ட் வெளியிட்ட அம்பேத்கரின் இந்தியாவும், கம்யூனிசமும் என்ற நூலுக்கு எழுதிய முன்னுரை, நவயானா வெளியிட்ட சாதியின் குடியரசு ஆகிய நூல்களை உதாரணம் காட்ட முடியும்.

இப்போது குறி வைக்கப்பட்டிருக்கும் மற்ற பலரை போல நான் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளவும் கூட இல்லை. இந்த கற்பனையின் விரிவிலிருந்து பார்த்தால் இப்போது பகிரப்படும் செய்திகள் விவரிக்கும் சம்பவங்களில் எனக்கு ஏதாவதொரு தொடர்பிருக்கும் என்று நம்ப முடிகிறதா? இதன் மொத்த அத்தியாயமும் போலீஸ் சமர்ப்பித்த ஒரு கடிதத்தை அடிப்படையாகக் கொண்டது. அதன் உண்மைத்தன்மை இன்னும் நிலைநாட்டப்படவில்லை. அதன் வாய்மை நிலை குறித்து பலத்த சந்தேகங்களை பலர் எழுப்பி விட்டனர். இதனை அடிப்படையாக கொண்டு நாட்டில் வாழ்கின்ற அனைத்து அறிவுத்துறையினரையும் குறி வைத்துள்ளது போலீஸ். ஊபா போன்ற கொடுஞ்சட்டங்கள் மூலம் மக்களை பீதிக்குள்ளாக்கி மவுனமாக்கி விட்டு, தேர்ந்தெடுத்த சில அறிவுத்துறையினரையும், செயல்பாட்டாளர்களையும் தாக்குதல் இலக்கில் கொண்டு வருவது தான் திட்டம்.

நான் நீதித்துறையை வேண்டுவது ஒரு படுபயங்கரமான மன உளைச்சலுக்கும், சித்திரவதைக்கும் ஆளாகியிருக்கிறோம். எந்த சிறு குற்றமும் இழைக்காத என்னை போன்ற அப்பாவி மனிதர்களின் நிலையை நீதித்துறை கணக்கில் கொள்ள வேண்டும். அதே போல இந்த நாட்டு மக்களிடமும் நான் வேண்டுவது இப்போது நான் நடத்தப்படுகின்ற விதத்தில் நடத்தப்பட வேண்டியவனா என்பதை சிந்திக்க கேட்டுக் கொள்கிறேன்.

Dr. ஆனந்த் தெல்தும்டே

BE (Mech), PGDM (IIM, ஆமதாபாத்), Ph D (Cybernetics), FIE (I), FACS (USA), D.  Litt (Hon)
முன்னாள் நிர்வாக இயக்குநர், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடட், முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் CEO, பெட்ரோநெட் இந்தியா லிமிடட், மும்பை.
முன்னாள் பேராசிரியர், ஐ.ஐ.டி காரக்பூர்.
முதுநிலை பேராசிரியர் மற்றும் துறை தலைவர்- பெருதரவு பகுப்பாய்வுத் துறை, கோவா நிர்வாகவியல் நிறுவனம்.

தமிழாக்கம்: ராஜ்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க