மாநகர பயங்கரவாதி ! – மனுஷ்ய புத்திரன்

மனுஷ்யபுத்திரன்
மனுஷ்ய புத்திரன்

ன்று எனக்கு ஒரு புதிய பெயர் கிடைத்தது
மாநகர நக்சலைட்
மாநகர பயங்கரவாதி

இந்த நகரம் எனக்கு
இதற்குமுன் ஏராளமான
பெயர்களைக் கொடுத்திருக்கிறது
நான் ஒரு மாநகர கவிஞன்
நான் ஒரு மாநகர அன்னியன்
நான் ஒரு மாநகர குடிகாரன்
நான் ஒரு மாநகர வந்தேறி
நான் ஒரு மாநகர சிறுபான்மையோன்
நான் ஒரு மாநகர உல்லாசி
நான் ஒரு மாநகர தொழிலாளி
நான் ஒரு மாநகர பெண்பித்தன்
நான் ஒரு மாநகர அனார்கிஸ்ட்
நான் ஒரு மாநகர பைத்தியம்
நான் ஒரு மாநகர தெய்வ நிந்தனையாளன்

அவர்கள் இப்போது சொல்கிறார்கள்
நான் ஒரு மாநகர பயங்கரவாதி என்று
நான் ஒரு மாநகர நக்சலைட் என்று
இந்தப் பெயர் புதுமையாக இருக்கிறது
கவர்ச்சியாக இருக்கிறது
எனது பிற மாநகர பெயர்கள் போல் இல்லாமல்
இந்தப் பெயர் கம்பீரமாக இருக்கிறது
அவர்கள் கோழைகள்
எல்லா அதிகாரமும்
அவர்கள் கையில் இருந்தும்
என்னைக்கண்டு அவர்கள்
பயந்து சாகிறார்கள்
எனக்கு ஒரு அபாயகரமான
பெயரைச் சூட்டிவிட்டால்
என்னை அழிப்பது
சுலபம் என்று நினைக்கிறார்கள்
நான் கரையானைப்போல
பூமிக்கடியில் பரவியிருக்கிறேன்
அவர்கள் அதிகாரத்தை
கண்ணுக்குத் தெரியாமால் அரித்துக்கொண்டிருக்கிறேன்

இன்று ஐந்து
மாநகர பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்

அதில் ஒருவன்
எரிமலைகளை
உற்பத்தி செய்யும் கவிஞன்

அதில் ஒருவன்
புனித முகமூடி அணிந்த திருடனின்
மூடு துணியை அகற்றும்
பத்திரிகையாளன்

அதில் ஒருத்தி
விவசாயிகளின் நிலத்தைக் காக்க
தெருவுக்கு வந்தவள்

அதில் ஒருவன்
நீதியைக் கற்பித்த
ஆசிரியன்

அதில் ஒருவன்
ஒடுக்கப்பட்டவர்களின் குரலை
நீதி மன்றங்களில் உரத்து முழங்கியவன்

எல்லோருக்கும் இப்போது
ஒரே பெயர்
மாநகர பயங்கரவாதி
மாநகர நக்சலைட்

இதற்கு முன்பும்
பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்
நரேந்திர தபோல்கர் என்றொரு பயங்கரவாதி
கோவிந் பன்ஸாரே என்றொரு பயங்கரவாதி
கல்புர்கி என்றொரு பயங்கரவாதி
கெளரி லங்கேஷ் என்றொரு பயங்கரவாதி
அவர்கள் ரத்தவெள்ளத்தில் மெளனமாக்கப்பட்டார்கள்

உங்களுக்கு எல்லா வாய்ப்புகளும்
தரப்படுகின்றன
முதலில் மென்மையாக எச்சரிக்கப்படுகிறீர்கள்
நீங்கள் மெளனம் காப்பதில்லை
நீங்கள் அவதூறு செய்யப்படுகிறீர்கள்
நீங்கள் வாயை மூடுவதில்லை
நீங்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறீர்கள்
நீங்கள் அபாயமற்ற விஷயங்களை நோக்கி நகர்வதில்லை
நீங்கள் பொய்வழக்கில் கைது செய்யப்படுகிறீர்கள்
நீங்கள் உங்கள் நாவை துண்டித்துக்கொள்வதில்லை
எல்லா வாய்ப்புகளும் உங்களுக்கு தரப்படுகின்றன
நீங்கள் எதையும் பயன்படுத்திக்கொள்வதில்லை
அவர்கள் என்னதான் செய்வார்கள்
கடைசியில் உங்கள் நெஞ்சில்
இரண்டு துப்பாக்கி ரவைகளை
செலுத்துகிறார்கள்
உங்களை மெளனமாக்க
அதுதான் ஒரே வழி

ஒருவரை
பயங்கரவாதியாக்க
எந்த குற்றமும் தேவையில்லை
ஒருவரை நக்சலைட்டாக்க
எந்த ஆதாரமும் தேவையில்லை
ஒரு போலி சதிக்கடிதத்தை
நூறு பிழைகளுடன் தயாரிக்கவேண்டும்
அதில் அழிக்கவிரும்புகிறவர்களின் பெயரை
வரிசையாக எழுத வேண்டும்
அதை எங்காவது தானே தெருவில்போட்டு
தானே கண்டெடுக்க வேண்டும்
இப்படித்தான் மாபெரும் தேசவிரோத குற்றங்கள்
கண்டுபிடிக்கப்படுகின்றன
மாநகர நக்சலைட்டுகள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள்

மாநகரத்தின் பேரிருள்
எல்லோர் முகங்களிலும் படிகிறது
அந்த இருளில் ஒளிந்திருக்கிறார்கள்
வழிபாட்டு தலங்களை இடிக்கும் பயங்கரவாதிகள்
மாட்டு மாமிசம் உண்பவர்களைக் கொல்லும்
பயங்கரவாதிகள்
உங்கள் பணத்தை செல்லாமலாக்கி
ஒரே இரவில் உங்களை தெருவில்
பித்துப் பிடித்து அலையச் செய்த பயங்கரவாதிகள்

இந்த நகரமெங்கும்
வாழ்வின் சங்கீதங்கள் இறந்துவிட்டன
பேய்களின் ஊளைச் சத்தம் மட்டுமே
எங்கெங்கும் கேட்கிறது
நள்ளிரவு சோதனைகள்
நள்ளிரவு கைதுகள்
ஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள்
எதிர்த்துப் பேசும்
ஒவ்வொரு குரல்வளையாக நெறிக்கப்படுகின்றன

இந்த நாட்டில் காந்தி என்றொரு
பயங்கரவாதி இருந்தார்
இந்த நாட்டில் பகத்சிங் என்றொரு
நக்சலைட் இருந்தான்
அவர்கள் கொல்லப்பட்டார்கள்
நாங்கள் கொல்லப்படுகிறோம்
நீதியின் பாதை எப்போதும் ஒன்றுதான்
ஒடுக்குமுறையின் பாதை
எப்போதும் ஒன்றுதான்

நிராயுதபாணிகளின் கைகளில்
விலங்குகள் பூட்டப்படுகின்றன
நிராயுதபாணிகளின் நெஞ்சில்
துப்பாக்கிக்குண்டுகள் இறங்குகின்றன
இந்தக் காலம் கொடுமையானது
இதுவரை இருந்ததிலேயே
இதுதான் இதயமற்றது

எங்கும் பொழிகிறது
இரத்தத்தை உறையச் செய்யும்
கொடும் பனி

நன்றி : மனுஷ்ய புத்திரன் 

2 மறுமொழிகள்

  1. தேவாரம் என்ற போலீஸ் DGP நக்சலைட் என்று கூறி பல போலி என்கவுன்டர் படுகொலைகளை நிகழ்த்தி தமிழகத்தில் நக்சலைட்களே இல்லை ஒழித்து விட்டோம் என்று கொக்கறித்தார்.ஆனால் வரலாறு மீண்டு வருகிறது நக்சலைட் என்பது ஆளும் வர்க்கத்தின் “போய்க்கனவு”….
    அந்த பேய்க்கனவு நனவாகும் வெகுவிரைவில் 👍

  2. பயங்கரவாதபட்டம்நல்லாஇருக்கு பாமரன்முதல் பல்துறைவல்லுனர்கள்அதை எளிதில் வாங்கமுடிவதுபெருமையாஇருக்கு மருத்துவம், பொறியியல், சட்ட பட்டம் நல்லவிலையில்நாட்டுசந்தையில் கிடைக்குது. காவிபுழுதியும், கார்ப்பரேட் கழுதையும்ஆளும் தேசத்தில் பணம் கொடுத்து பெறும் பட்டம் பக்கோடாவிற்கவேபயன்படும் முப்படைஇருந்தும்மூத்திரசந்தில் ஓடிஒழியவைத்த பயங்கரவாதபட்டமே பெருமைவாய்ந்தது. விலைஇல்லாதது.அறம் விரும்புவோருக்கும் நாளையபொழுதுக்கும் அதுநல்லது!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க