பேராசிரியர் சத்யநாராயணா

“உங்கள் கணவர் ஒரு தலித். அதனால் அவர் எந்த ஒரு கலாச்சாரத்தையும் பின்பற்றுவதில்லை. ஆனால் நீங்கள் ஒரு பிராமணர்தானே, பின்னர் ஏன் நீங்கள் எந்த ஒரு நகையோ பொட்டோ அணிவதில்லை? நீங்கள் ஏன் ஒரு பாரம்பரிய மனைவியைப் போன்று உடையணிவதில்லை? மகளும் தந்தையைப் போலவே இருக்க வேண்டுமோ?”

இவை அனைத்தும் ஐதராபாத்தில் உள்ள ’ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகள் பல்கலைக்கழகத்தின்’ (EFLU, Hyderabad) கலாச்சாரக் ஆய்வுத்துறையின் துறைத்தலைவர் சத்திய நாராயணாவின் மனைவி பவனாவிடம் போலீசு அதிகாரி கேட்ட கேள்விகளில் சில. பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்திருந்த அவர்களது வீட்டில் கடந்த செவ்வாய்க் கிழமையன்று (28.08.2018) தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது நடந்த சம்பவம் இது.

எல்கர் பரிஷத் கருத்தரங்கத்திற்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையிலிருப்பதாகக் கூறப்படும் தொடர்பு குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக கடந்த செவ்வாய்க்கிழமை 5 சமூகச் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுல் ஒருவரான பிரபல எழுத்தாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளருமான வரவரராவின் மகள்தான் பவனா.

புனே போலீசாலும், தெலுங்கானா சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசாலும் தமது வீட்டில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கை குறித்து சத்யநாராயணா (பவனாவின் கணவர்) கூறுகையில் அதனை ஒரு அதிர்ச்சியூட்டக்க்கூடிய அவமானப்படுத்தக்கூடிய அனுபவமாகக் குறிப்பிட்டார். போலீசு தம்மிடமும் தமது மனைவியிடமும் ஆத்திரமூட்டக்கூடிய மற்றும் முட்டாள்தனமான பல கேள்விகளைக் கேட்டதாகக் கூறுகிறார்.

இது குறித்து சத்தியநாராயணா கூறுகையில்,

”முதலில் அவர்கள் எனது மாமனாரான வரவரராவைத் தேடி வந்திருப்பதாகக் கூறினர். அவர் இங்கு இல்லாததை அறிந்த பிறகு, அவர்கள் புத்தக அலமாரிகள், அலமாரிகள் மற்றும் பரண்களிலும் தேட ஆரம்பித்தனர். என்னை மாவோயிஸ்டுகளோடு தொடர்புபடுத்தக்கூடிய ஏதேனும் கிடைக்குமா எனத் தேடுவதாக அவர்கள் கூறினர். வரவரராவ் எனது வீட்டில் எதையாவது மறைத்து வைத்திருக்கிறாரா எனக் கேட்டனர். புனே மற்றும் தெலுங்கானா போலீசைச் சேர்ந்த 20 போலீசார், காலையில் 8.30 மணியிலிருந்து, மாலை 5:30 மணி வரையில் வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டு அனைத்தையும் வாரி இறைத்தனர்.”

”ஏன் உங்கள் வீட்டில் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன? அனைத்தையும் நீங்கள் படித்துவிட்டீர்களா? ஏன் இத்தனை புத்தகங்களை வாங்கியிருக்கிறீர்கள்? ஏன் இத்தனை புத்தகங்களை வாசிக்கிறீர்கள்? மாவோ மற்றும் மார்க்ஸ் குறித்த புத்தகங்களை ஏன் படிக்கிறீர்கள் ? சீனாவில் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களை ஏன் படிக்கிறீர்கள்? கத்தாரின் பாடலை ஏன் வைத்திருக்கிறீர்கள்? பூலே, அம்பேத்கரின் புகைப்படங்கள் ஏன் உங்கள் வீட்டில் இருக்கின்றன ? கடவுள் படங்கள் எதுவும் உங்கள் வீட்டில் இல்லையே ஏன்? என்று கேட்டனர்”

ஒரு போலீசு அதிகாரி புத்தகங்களைச் சுட்டிக்காட்டி, “நிறைய புத்தகங்களைப் படித்து மாணவர்களை கெடுக்கிறீர்கள்” எனக் கூறியதாகக் கூறுகிறார் சத்யநாராயணா.

மேலும் கூறுகையில் ”ஒரு தலைசிறந்த பல்கலைக்கழகத்தின் கல்வியாளராக, ஒரு பேராசிரியராக நான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் கேலிக்குள்ளாக்கப்பட்டதாகவும் உணர்கிறேன். கல்வியாளர்களாக நாங்கள் பல்வேறு வகையான புத்தகங்களைப் படிக்கிறோம். அது இடதுசாரி, வலதுசாரி, தலித் பற்றிய புத்தகங்களாக இருக்கலாம். அவர்கள் தலித் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், சிவப்பு அட்டை கொண்ட ஒவ்வொரு புத்தகங்கள் குறித்தும் கேள்வி கேட்டனர்.” என்று கூறினார்.

தலித் இலக்கியங்கள் குறித்த தமது ஆராய்ச்சித் தரவுகள், இணையத்தில் தாம் வாங்கிய மின்னூல்கள், இலக்கிய ஆய்வறிக்கைகள், தமது புதிய இரண்டு நூல்களுக்கான முன்வரைவுகள் உள்ளிட்டு தமது புற சேமிப்பு வன்தட்டு (External Hard Disk) மற்றும் கணிணி, மடிக்கணிணி ஆகியவற்றை எல்லாம் சேர்த்து தமது இருபதாண்டு இலக்கியப் பணிகளை மொத்தமாக போலீசு வாரிச் சென்றுவிட்டது என்று கூறினார்.

”அவர்கள் எனது கல்விப் பணியை இருபது – இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னால் தள்ளிவிட்டனர். இதிலிருந்து நான் மீண்டுவரமுடியுமா என்பது எனக்குத் தெரியாது. கணினியில் சேமிக்கப்பட்ட அனைத்தையும் அவர்கள் எடுத்துச் சென்று விட்டனர். அதன் பிரதி எதுவும் என்னிடம் கிடையாது. அவர்கள் எடுத்துச் சென்ற எனது ’மேக் புக் ப்ரோ’ மடிக்கணிணியில், தென்னிந்தியாவைச் சேர்ந்த 40 தலித் எழுத்தாளர்களின் எழுத்துக்களைத் தொகுத்து நான் கொண்டு வரவிருக்கும் புத்தகங்களான “No Alphabet In Sight” மற்றும் “Steel Nibs Are Sprouting” ஆகியவற்றின் மேம்படுத்தப்பட்ட முன்வரைவுகள் இருந்தன. அதனை எப்போது திரும்பத் தருவார்கள் எனக் கேட்டபோது, அதற்காக மனுச் செய்து பின்னர்தான் அதனைப் பெற்றுக் கொள்ள முடியும் எனக் கூறிவிட்டார்கள்” என்று சத்திய நாராயணா கூறினார்.

மேலும், ”கலாச்சாரப் படிப்பில் ஆய்வு முறைகளைப் பற்றிய ஒரு புதிய பாடப் பிரிவை நான் கற்பித்துக் கொண்டிருக்கிறேன். இதுகுறித்த கற்பித்தலுக்காக சுமார் 50 புத்தகங்களை எனது மாணவர்களுடன் மின்னஞ்சல் மூலமாகவும், இணையதள சேவைகள் மூலமாகவும் பகிர்ந்து வந்து கொண்டிருந்தேன். அத்தனை தரவுகளும் அடங்கிய வன்தட்டை (Hard Disk) அவர்கள் எடுத்துச் சென்று விட்டனர். நான் அவை அனைத்தையும் மீண்டும் திரட்டி மாணவர்களுக்குக் கற்பிக்கவே சில மாதங்கள் எடுக்கும்.” என்றார்.

போலீசாரிடம் தனது வீட்டை ஏன் அவர்கள் சோதனையிடுகிறார்கள் எனக் கேட்டபோது, தாம் வரவரராவின் மருமகன் என்பதால்தான் என போலீசு கூறியதாகக் கூறினார்.

“ஒரு மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தில் ஒரு மதிப்புமிக்க பேராசிரியராக என்னுடைய சொந்த அடையாளத்தை அவர்கள் உதறித் தள்ளிவிட்டார்கள். என்னை வீட்டில் எதையோ மறைத்து வைத்துள்ள ஒரு குற்றவாளியைப் போல் உணரச் செய்தனர். அவர்கள் எனது மின்னஞ்சல் முகவரிகளின் கடவுச் சொற்களைக் கூறும்படி என்னை வற்புறுத்தினார்கள். அவர்கள் கேட்பதையெல்லாம் நான் செய்யவில்லையெனில், தேடுதலுக்கு நான் ஒத்துழைக்கவில்லை என அறிக்கை கொடுக்கப் போவதாகவும் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தனர். மாவோயிச சித்தாந்தத்தை ஆதரிக்கவோ அல்லது பின் தொடர்வோ வேண்டாம் என எனது மாமனாருக்கு நான் ஏன் உபதேசம் செய்யக் கூடாது எனக் கேட்டு எனக்கு வகுப்பெடுத்தனர். அவர்கள் வரவரராவுக்கு வயதாகிவிட்டதால் அவர் தற்போது ஓய்வெடுத்து சந்தோசமாக வாழ வேண்டும் எனக் கூறினர்.” என்றார் சத்யநாராயணா.

போலீசாரால் கேட்கப்பட்ட இத்தகைய கேள்விகள் குறித்து புனே இணைக் கமிஷனர் சிவாஜி போட்கேவிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் கேட்டபோது, இவையனைத்தும் தவறான குற்றச்சாட்டுகள் என்றும் இத்தகைய கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை என்றும், முறைப்படியே இந்த தேடுதல் நடவடிக்கை நடைபெற்றது என்றும் கூறினார்.

போலீஸ் கமிஷனர் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது இதில் மட்டுமல்ல இந்த கைது விசாரணை நடவடிக்கை அனைத்திலும் இருப்பதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. வீட்டில் அம்பேத்கர், மார்க்ஸ் படம் வைத்திருப்பதைக் கூட குற்றமாக கருதுகிறது போலீசு. பொட்டு வைக்காததையும், நகை அணியாததையும் குற்றமென கேள்வி கேட்கிறது. இது எமர்ஜென்சியை விடவும் அதிகப்படியான அடக்குமுறை! கணவர் தலித், மனைவி பார்ப்பனர் என்பதெல்லாம் இவர்களது கண்ணை உறுத்துகிறது. ஏனெனில் பார்ப்பன இந்துமதவெறியிரின் பார்வையில் சூத்திர-பஞ்சம மக்கள் மட்டுமல்ல, சாதி மறுப்பு மணம் புரிந்தோரும் கூட குற்றவாளிகள்தான். மோடி அரசின் காட்டு தர்பாரை முறியடிக்க நாம் அனைவரும் அணிதிரளவேண்டிய தருணமிது!

– வினவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க