ட்ரோன் மூலம் பழங்குடி கிராமங்களின் மீது குண்டு வீசும் மோடி அரசு!

பழங்குடி மக்களை அச்சுறுத்தி, அவர்கள் வாழும் இடங்களை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதே இத்தகைய பாசிச பயங்கரவாத தாக்குதல்களின் நோக்கமாக உள்ளது.

மூன்று வருடங்களாக, பழங்குடி மக்கள் வாழும் கிராமங்கள் மீது ஆளில்லா கலன்கள் (ட்ரோன்) மூலம் குண்டுகளை வீசி பாசிச பயங்கரவாத தாக்குதல் நடத்தி வருகிறது மோடி அரசு. கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி, சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள பட்டும், கவுருகட்டா, மீனாகட்டா, ஜப்பாகட்டா ஆகிய கிராமங்களின் மீதும் ட்ரோன் மூலம் குண்டுகளை வீசியுள்ளது.

ரஷ்யா போன்ற நாடுகள், போரில்தான் ட்ரோன் மூலம் குண்டுகளை வீசுகின்றன. ஆனால் மோடி அரசு, நம் நாட்டு மக்கள் மீதே ட்ரோன் மூலம் ஈவிரக்கமற்ற முறையில் குண்டுகளை வீசுகிறது.
நான்கு கிராமங்களில் குண்டுகள் வீசப்பட்ட பிறகு, இந்திய விமானப் படையினர் மூன்று ஹெலிகாப்டர்களிலிருந்து துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளனர். இது பழங்குடி மக்கள் மீதான மோடி அரசின் பாசிச பயங்கரவாத தாக்குதல் ஆகும். இத்தாக்குதல்களில் பலர் காயமடைந்துள்ளனர். குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன; பயிர்கள் அழிந்துள்ளன. உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

மோடி அரசு, பழங்குடி கிராமங்களின் மீது ட்ரோன் மூலம் குண்டுகளை வீசுவது இது நான்காவது முறையாகும். 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தலா ஒரு முறையும், 2023 ஆம் ஆண்டில் இதுவரை இரண்டு முறையும் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. கடந்த ஜனவரி 11 அன்று நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதலில், தெலுங்கானா- சத்தீஸ்கர்- ஒடிசா எல்லைப்புற கிராமங்களை, சி.ஆர்.பி.எப். கிரேஹவுண்ட் மற்றும் கோப்ரா கமோண்டோக்கள் மாவட்ட ரிசர்வ் படையுடன் கூட்டு சேர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

பழங்குடி மக்களை அச்சுறுத்தி, அவர்கள் வாழும் இடங்களை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதே இத்தகைய பாசிச பயங்கரவாத தாக்குதல்களின் நோக்கமாக உள்ளது.


படிக்க: மேற்கு சிங்பூமில் ஜார்க்கண்ட் அரசை எதிர்த்து பழங்குடிகள் போராட்டம்!


சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளுக்கு கீழே கோடிக்கணக்கான டன் அளவில் புதைந்து கிடக்கும் கனிம வளங்களை, அம்பானி, அதானி, வேதாந்தா, ஜிண்டால் போன்ற கார்ப்பரேட் கும்பல்கள் சூறையாடுவதற்கு பழங்குடி மக்கள் தடையாக இருக்கிறார்கள். போராட்டங்களை கட்டியமைக்கிறார்கள். எனவேதான் மோடி அரசு பழங்குடி மக்களின் மீது போர் தொடுத்துள்ளது. இது, கார்ப்பரேட்டுகளின் கனிமவளக் கொள்ளைக்கான போராகும்.

இதனை மக்கள் மத்தியில் நக்சலைட் பீதியூட்டி மறைக்கிறது மோடி அரசு. கடந்த மார்ச் மாதத்தில் பஸ்தருக்கு வந்த அமித்ஷா, போராளிகளை ஒழிப்போம் என்று முழங்கினார். அதன் பிறகு தான் பஸ்தர் மாவட்ட கிராமங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. இப்பாசிச பயங்கரவாத தாக்குதல்கள் ஆபரேஷன் சமதன் – ப்ரஹார் (Operation Samadhan – prahar) திட்டத்தின் ஒரு பகுதியாகும். உச்சநீதிமன்றத்தால் சல்வாஜூடும் சட்டத்திற்கு புறம்பானது எனக் கூறி நிறுத்தப்பட்ட பிறகு, பழங்குடி மக்கள் மீதான பாசிச பயங்கரவாத தாக்குதல் பல்வேறு வடிவங்களில் தொடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்று தான் சமதன் – ப்ரஹார் திட்டம் ஆகும்.

துணை இராணுவப் படைகள் மூலமாக ஆபரேஷன் கிரீன் ஹண்ட் என்ற பெயரிலும், சல்வாஜூடும் மூலமாக காங்கிரஸ் ஆட்சியிலும் பழங்குடி மக்கள் மீது பயங்கரவாத தாக்குதல் கட்டவிழ்த்துவிடப்பட்டது. போலி எண்கவுண்டர்களில் நூற்றுக்கணக்கானோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

தற்போது மோடி அரசு, பழங்குடி மக்கள் மீது பயங்கரவாத தாக்குதல்களை தொடுப்பதில் ஒரு புதிய வடிவத்தை கையில் எடுத்துள்ளது. அது, ட்ரோன் மூலம் குண்டுகளை வீசுகிறது. தற்போது பழங்குடி மக்களை அச்சுறுத்தி வெளியேற்றுவதற்காக குண்டுகள் வீசப்பட்டாலும், வருங்காலங்களில் மக்களை கொல்லும் நோக்கத்தில் குண்டுகளை வீசவும் வாய்ப்பு உள்ளது.


படிக்க: ஒடிசா: ஜிண்டால் எஃகு ஆலைக்காக இடிக்கப்பட்ட பழங்குடி மக்களின் வீடுகள்!


பழங்குடி மக்களுக்கு ஆதரவாக போராடும் சமூக செயற்பாட்டாளர்களும் மோடி அரசால் பாசிச ஒடுக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர். பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா, மகேஷ் திக்ரிம் ஹேம் மிஸ்ரா, பிரசாந்த் ராஹி மற்றும் விஜய் திக்ரி ஆயுள் தண்டனைகளை அனுபவித்து வருகின்றனர். பழங்குடி மக்களுக்காக போராடிய ஸ்டேன் சாமி சிறையில் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

மேற்கூறிய மோடி அரசின் பாசிச பயங்கரவாத தாக்குதல்களால் பழங்குடி மக்களை ஒடுக்கிவிட முடியாது. கனிம வளங்களை சூறையாட முடியாது. மோடி அரசின் பாசிச பயங்கரவாத தாக்குதல்களையும், அம்பானி – அதானி போன்ற கார்ப்பரேட்டுகளின் கனிமவள சூறையாடலுக்கு எதிராகவும் உறுதியாக போராடி வருகின்றனர், பழங்குடி மக்கள். அவர்களுடன் தோளோடு தோள் நிற்பது நம் கடமை.

ஆயிஷா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க