பாசிச பா.ஜ.க ஆளும் கோவா மாநிலத் தலைநகர் பனாஜியில் 55ஆவது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா (55th International Film Festival of India) நவம்பர் 20 முதல் நடைபெற்று வருகிறது. “இளம் திரைப்பட இயக்குநர்கள் – எதிர்காலம்” (Young Filmmakers: The Future is Now) என்ற தலைப்பில் நடைபெற்று வரும் இந்த சர்வதேச திரைப்படத் திருவிழாவில் 81 நாடுகளிலிருந்து 180 சர்வதேச திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. நவம்பர் 28 வரை இந்த திரைப்படத் திருவிழா நடைபெறும்.
சர்வதேச அளவிலான எழுத்தாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், அறிஞர்கள் பங்கேற்றுள்ள இந்த திரைப்பட விழாவை பாசிச மோடி அரசு முழுமையாகக் காவிமயமாக்கியுள்ளது.
ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (National Film Development Corporation of India – NFDC) தலைமையில் நடக்கும் இந்த சர்வதேச திரைப்பட விழாவை போலிச்சாமியார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் துவங்கி வைத்தார். திரைப்பட விழாவின் திரையிலும், வெளிப்புறத்திலும் ராமர், அனுமான், விஷ்ணு உள்ளிட்ட இந்துக் கடவுள்களின் உருவங்கள் இடம்பெற்றிருந்தன. கோவா சர்வதேச திரைப்பட விழா அரங்கு முழுவதும் காவி நிறத்தில் வண்ணம் பூசப்பட்டு இருந்தது.
பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தவரும், காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான சாவர்க்கரை கதாநாயகனாகச் சித்தரித்த “சுதந்திர வீர் சாவர்க்கர்” (Swatantrya Veer Savarkar) திரைப்படம் இந்திய பனோரமா என்ற பகுதியின் தொடக்கப் படமாக திரையிடப்பட்டுள்ளது. காந்தியை இழிவுபடுத்தியும், நேதாஜி, அம்பேத்கர், பகத்சிங் ஆகியோர் சாவர்க்கரின் அறிவுரைப்படியே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றனர் என்றும் கட்டுக்கதையைப் பரப்புரை செய்யும் விதத்திலான காட்சிகள் இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், வரலாற்றிற்குப் புறம்பான இந்துத்துவா பரப்புரை படமான “ஆர்டிகிள் 370” (Article 370) என்ற இந்தி திரைப்படம், விஷ்ணுவின் அவதாரங்களின் கதையான “மஹாவதார் நரசிம்மா”, கிருஷ்ணனின் அவதாரப் படமான “கல்கி 2898 ஏடி” என்ற தெலுங்கு திரைப்படம், கொங்கனின் விநாயகர் திருவிழாவை மையப்படுத்தும் “கரத் கணபதி” என்ற மராத்தி திரைப்படம் உள்ளிட்ட இந்துத்துவாவை உயர்த்திப் பிடிக்கும் திரைப்படங்களும் திரையிடப்பட்டுள்ளன.
சர்வதேச திரைப்பட விழாவைக் காவிமயமாக்கிய பாசிச மோடி அரசின் செயல்பாட்டிற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ராஜேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram