பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே மீது புனே காவல்துறை போட்டுள்ள பொய் வழக்கைத் திரும்பப் பெறக் கோரியும், ஆனந்த் தெல்தும்டேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் ஜனவரி 22-ம் தேதி நான்கு ஐ.ஐ.டி-களில் மாணவர்கள் போராட்டங்களையும் கூட்டங்களையும் நடத்தினர்.

ஐஐடி காந்திநகரில் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே மீதான பொய்வழக்குகளைக் கண்டிக்கும் மாணவர்கள்.

ஐஐடி சென்னையில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டமும், ஐஐடி மும்பையில் அம்பேத்கர் பெரியார் பூலே படிப்பு வட்டமும், ஐஐடி கரக்பூரில் அம்பேத்கர் பகத்சிங் படிப்பு வட்டமும் , ஐஐடி காந்திநகரில் மாணவர்களும் இப்போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இப்போராட்ட கூட்டத்தில் பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். ஐஐடி சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

முனைவர் ஆனந்த் தெல்தும்ப்டே, பொறியியல், கார்ப்பரேட்டு நிர்வாகம், சமூகவியல் என பல துறைகளில் பல உயர்ந்த பொறுப்புகளில் பணியாற்றியவர். ஐஐடி கரக்பூரில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். உழைக்கும் வர்க்கத்தினரின் நலனை மையப்படுத்திய அவரது எழுத்துகள் மற்றும் செயல்பாட்டிற்காக மோடி அரசால் ஆனந்த் தெல்தும்ப்டே பழிவாங்கப்படுகிறார்.

படிக்க:
♦ என்னுடைய நம்பிக்கை நொறுங்கிய நிலையில் இருக்கிறேன் : ஆனந்த் தெல்தும்ப்டே கடிதம்
♦ ஆனந்த் தெல்தும்ப்டேவுக்கு எதிரான பொய் வழக்கை ரத்து செய் ! ஊபா உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை ரத்து செய் !

இந்நிகழ்வில் மாணவர்களும் பேராசிரியர்களும் பேசுகையில், மோடி அரசு பார்ப்பனிய-கார்ப்பரேட் அடிவருடித்தன அரசியலை எதிர்க்கும் எவரையும் ஒடுக்கவே செய்யும் என்பதையும் நாடு முழுவதும் உள்ள மக்கள் நலன் சார்ந்து செயல்படும் அறிவுஜீவிகளை ஒடுக்குவது என்பது மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்கான ஜனநாயக வெளி சுருங்கி வருவதை வெளிக்காட்டுகிறது என்பதையும் சுட்டிக் காட்டினர்.

மேலும், தங்களது அரசியல் மற்றும் பொருளாதார நிலைப்பாடுகளை எதிர்ப்போர் அனைவருக்கும் தேசதுரோகி என பட்டம் வழங்கும் பாஜக அரசு, காலனிய காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கருப்புச் சட்டங்களின் தொடர்ச்சிகளைக் கொண்டுதான் இன்று வாழ்வாதாரங்களை இழந்து போராடும் மக்கள் மீதும் ஒடுக்குமுறை செய்கிறது என்பதை வந்திருந்த பேராசிரியர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.

அரசுக்கு எதிரான கருத்துகளைச் சிந்திப்பதே தவறு எனக் கூறி தன் கருப்புச் சட்டங்களை மக்கள் மீது பாய்ச்சுகிறது இந்த அரசு என்று பேசினார் மற்றொரு பேராசிரியர். மாணவர் ஒருவர் தெல்டும்டே எழுதிய ‘சாதியக் குடியரசு’ (‘Republic of Caste’) என்ற புத்தகத்தில் இருந்து தற்போதைய இந்தியாவில் புதிய தாராளவாதக் கொள்கைகளை அமல்படுத்தப்படும்போது அடித்தட்டு மக்கள் மீது நடத்தப்படும் அரச வன்முறை பற்றிய சில பக்கங்களை வாசித்தார்.

ஐஐடி சென்னை அம்பேத்கர் பெரியார்  படிப்பு வட்டத்தினர் ஒருங்கிணைத்த விவாதக் கூட்டம்

ஐஐடி மும்பையைச் சேர்ந்த அம்பேத்கர் பெரியார் பூலே படிப்பு வட்டத்தினர் ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டம்

ஐஐடி காந்திநகர் மாணவர்கள் ஒருங்கிணைத்த விவாதம் மற்றும் கையெழுத்து பதாகை

ஐஐடி கரக்பூரில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்ட போராட்டம்

# ஐஐடி சென்னை, ஐஐடி மும்பை, ஐஐடி வாரணாசி, ஐஐடி கரக்பூர், ஐஐடி கான்பூர், ஐஐடி காந்திநகர், IIEST சிவ்பூர் மற்றும் IMS-BHU ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர் அமைப்புகள் வெளியிட்ட கூட்டறிக்கையின் இணைப்பு (ஆங்கிலத்தில்) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தகவல் :
அம்பேத்கர் பெரியார்  படிப்பு வட்டம்,
சென்னை ஐஐடி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க