எழுத்தாளரும் சமூக செயல்பாட்டாளருமான ஆனந்த் தெல்தும்ப்டே மீது 2018 ஜனவரி மாதம் பீமா கோரேகானில் வன்முறையை தூண்டியதாக மகாராஷ்டிர அரசு புனையப்பட்ட குற்றச்சாட்டில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது. இதிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி ஆனந்த் தெல்தும்ப்டே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். கடந்த திங்கள்கிழமை தெல்தும்ப்டே-வின் மனுவை நிராகரித்தது நீதிமன்றம். நான்கு வாரங்களுக்கு அவரை கைது செய்ய தடையும் விதித்தது. இந்நிலையில் தான் கைதாகும் சூழலே அதிகமாக உள்ளது என தெரிவிக்கும் தெல்தும்ப்டே, தனக்கு ஆதரவளிக்கும்படி பொதுமக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கடிதத்தின் தமிழாக்கம் இங்கே…

“புனே காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட என்மீதான பொய்யான முதல் தகவல் அறிக்கையை தள்ளுபடி செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு ஜனவரி 14-ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது. இதுபற்றி ஊடகங்கள் வாயிலாக நீங்கள் அறிந்திருப்பீர்கள்.  நல்லவேளையாக, பிணை பெறும் பொருட்டு எனக்கு நான்கு வார கால அவகாசமும் நீதிமன்றம் அளித்திருக்கிறது.

காவல்துறை சொன்ன குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் புனையப்பட்டவை என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுவிடும் என  இதுவரை உறுதியாக நம்பிக்கொண்டிருந்தேன்.  அதனால் உங்களிடம் பேச வேண்டிய தேவையிருக்காது என கருதினேன்.

ஆனால், இப்போது என்னுடைய நம்பிக்கை முற்றிலும் நொறுங்கியிருக்கிற நிலையில் புனே நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றம் வரை பிணையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.  உடனடி கைதிலிருந்து என்னைக் காப்பாற்ற, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடமிருந்து ஆதரவு பிரச்சாரத்தை கட்டமைக்கும் தேவை எழுந்துள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் கைதானால் பல ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவிக்க நேரிடும் என்பதை நம்மில் பலர் அறிந்திருக்க முடியாது. கொடுஞ்செயல்கள் புரிந்த குற்றவாளிகூட ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்று தப்பிவிட முடியும். ஆனால்,  அரசியல்வாதிகளுக்காக  வேலை செய்யும் காவல்துறை, அப்பாவிகளுக்கு எதிராக தங்களிடம் வலுவான ஆதாரம் இருப்பதாகக் கூறினால், அந்த நபர் ஆண்டு கணக்கில் சிறையில் இருக்க நேரிடும்.

என்னைப் பொறுத்தவரை இந்தக் கைது என்பது கடுமையான சிறை வாழ்க்கை மட்டுமல்ல, அது என்னுடைய உடலில் ஒரு பகுதியாகிவிட்ட லேப் டாப் – இடமிருந்து என்னை பிரித்து வைக்கும், என்னுடைய வாழ்வின் பகுதியாக உள்ள நூலகத்திடமிருந்து என்னை பிரித்துவிடும்.  பதிப்பகத்தாரிடம் தருவதாக ஒப்புக்கொண்ட பாதி முடிக்கப்படாத நூலின் பிரதிகள், முடிக்கப்படாமல் வெவ்வேறு கட்டங்களில் உள்ள என்னுடைய ஆய்வுத்தாள்கள், என் தொழில்முறை நற்பெயரை  நம்பி தங்களுடைய எதிர்காலத்தை பணயம் வைத்திருக்கும் மாணவர்கள், என்னுடைய கல்வி நிறுவனம் (கோவா இன்ஸ்ட்டியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்) என்னை நம்பி பல வசதிகளை செய்துகொடுத்திருக்கிறது. சமீபத்தில் என்னை நிர்வாகக்குழுவில் சேர்த்துள்ளது, மேலும் எண்ணற்ற நண்பர்கள் மற்றும் என்னுடைய குடும்பத்திடமிருந்தும் இந்த கைது என்னை பிரித்துவிடும். பாபாசாகேப் அம்பேத்கரின் பேத்தியான என்னுடைய மனைவி, கடந்த ஆகஸ்டு மாதத்திலிருந்து, எனக்கு நடந்துகொண்டிருப்பவற்றை அறிந்து மிகுந்த துயருற்றிருக்கிறார்.

ஏழ்மையிலும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வருகிற நான், அறிவார்ந்த சாதனைகள் மூலம் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் தேர்ச்சி பெற்றேன்.  என்னை சூழ்ந்துள்ள சமூக முரண்பாடுகளை கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் மிகப்பெரிய கல்வி நிறுவனமான அகமதாபாத் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் படித்த எனக்கு, ஆடம்பரமான வாழ்க்கை எளிதாகவே கிடைத்திருக்கும்.

இருப்பினும்,  மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான உணர்வுடன், குடும்பத்தை இயக்குவதற்கான பொருளீட்டினால் போதும் என முடிவு செய்து, என்னுடைய நேரத்தை அறிவார்ந்த பங்களிப்பு செய்வதற்கு ஒதுக்கினேன். இந்த உலகத்தை சற்றே மேம்படுத்த என்னால் சாத்தியமானது இதுதான்.  இந்த உள்ளுணர்வின் காரணமாக, என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் நான் இயல்பாக ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழு போன்ற அமைப்புகளில் சேர்ந்து இயங்கத் தொடங்கினேன். இப்போது இந்த இயக்கத்தின் பொது செயலாளராகவும் உள்ளேன்.  கல்வி உரிமைகளுக்கான அனைத்திந்திய மன்றத்தின் தலைமை உறுப்பினராகவும் உள்ளேன். என்னுடைய எழுத்துக்களிலோ அல்லது சுயநலமற்ற செயல்பாடுகளிலோ கடுகளவும் சட்டவிரோத நடவடிக்கை இருந்ததில்லை.

அதுபோல, என்னுடைய முழு கல்வி பணியிலும் நாற்பதாண்டு கால பெருநிறுவன பணியிலும் சிறு களங்கமும் இல்லாமல் நேர்மைக்கான உயர்ந்த முன்னுதாரணமாக இருந்திருக்கிறேன். எனவே, எந்த நாட்டுக்காக என்னுடைய தொழில்முறை வாழ்க்கை முழுவதும் உழைத்தேனோ அதே நாட்டின் அரசு இயந்திரம் எனக்கு எதிராகத் திரும்பும் என்று மோசமான கனவிலும்கூட நான் நினைத்து பார்த்ததில்லை.

பீமா கோரேகான் நிகழ்வு.

இந்த நாட்டை சமத்துவமற்ற உலகமாக மாற்றிக்கொண்டிருக்கும் திருடர்களையும் கொள்ளையர்களையும் பாதுகாக்கும் அரசு இயந்திரம், அப்பாவி மக்களை குற்றவாளிகளாக்கி பழிவாங்குகிறது என்பது மட்டுமல்ல, டிசம்பர் 31, 2017-ஆம் ஆண்டு புனேயில் நடந்த எல்கர் பரிஷத் நிகழ்வை குற்றப்பின்னணி உடையதாகவும் மாற்றிவிட்டது. இதன் மூலம் மாற்றுக்குரலை ஒலிக்கும் குறிப்பிட்ட மனித உரிமை பாதுகாவலர்கள், அறிவு ஜீவிகள் மற்றும் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னணியாளர்களை சிறையில் அடைக்கப்பார்க்கிறது. இது முன்னெப்போதும் இல்லாத வெளிப்படையாக மேற்கொண்டிருக்கும் அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.

சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவில், ஜனநாயகத்தின் அத்தனை கண்ணியத்தையும் பின் தள்ளிவிட்டு அரசை விமர்சிப்பவர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு சுமத்தப்படும் மிக மோசமான சதி குற்றச்சாட்டு இதுவாகத்தான் இருக்கும்.

மிக மோசமான சதி

உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.பீ. சாவந்த் மற்றும் மும்பை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பீ.ஜி. கோல்சே பட்டேல்  ஆகியோர்  1818-ஆம் ஆண்டு பீமா கோரேகானில் நடந்த ஆங்கிலோ – மராத்தா போரின் 200-வது ஆண்டை நினைவு கூறும்வகையில் தற்போது நடந்துகொண்டிருக்கும் பாஜக ஆட்சியின் மத மற்றும் சாதி ரீதியிலான கொள்கைகளை எதிர்க்க மக்களைத் திரட்டும் யோசனையை முன்வைத்தனர். அவர்கள் செயல்பாட்டாளர்களையும் முற்போக்கு அறிவுஜீவிகளையும் இந்த யோசனையை திட்டமிட்டு செய்ய அழைத்தனர்.

எனக்கும் ஒருவரின் மூலம் சாவந்த் அழைப்பு விடுத்தார், கோல்சே பட்டேலும் பிறகு அழைத்தார்.  கல்விப் பணிகள் இருந்தமையால் அந்தக் கூட்டத்துக்குச் செல்ல முடியவில்லை என வருத்தம் தெரிவித்திருந்தேன். ஆனால், நிகழ்வின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்க அழைத்திருந்த அவருடைய அழைப்பை ஏற்றுக்கொண்டேன்.  எல்கர் பரிஷத் தொடர்பான வாட்ஸப் துண்டுபிரசுரத்தை பார்க்கும் வரை என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது.

பேஷ்வாக்களின் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்த  மகர் வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவிடத்தில் அவர்களின் தியாகத்தை நினைவுகூற நான் ஆதரவாக இருந்தேன். அதே நேரத்தில், பேஷ்வாக்களின் பார்ப்பனிய அடக்குமுறைக்கு எதிராக பீமா கோரேகானில் போரிட்ட மகர் வீரர்களின் வெற்றியாக எல்கர் பரிஷத் காட்டப்பட்டதில் எனக்கு சங்கடம் இருந்தது.

வரலாற்றை இப்படி சிதைத்து படிப்பது, தலித்துகளை அடையாள அரசியலுக்குள் தள்ளி, பரந்துபட்ட மக்களுடன் அவர்களை ஒன்றிணைப்பதை மேலும் கடினமாக்கும் என நான் கருதினேன்.  இதையொட்டி த வயரில் நான் எழுதிய கட்டுரை தலித்துகளிடையே கோபத்தை உண்டாக்கியது. அதன் பிறகு, இந்த முழு விவகாரத்தையும் நான் மீண்டும் சிந்தித்து என்னுடைய முடிவில் ஒரு உண்மையான அறிவுஜீவிக்குரிய தன்மையுடன் நின்றேன்.

தற்செயலாக, இந்தக் கட்டுரை, அதற்கு பதிலளிக்கிறது. யாரோ ஒருவருக்காக தலித்துகளை தூண்டிவிடுகிறேன் என்ற குற்றச்சாட்டை மறுப்பதாக என்னுடைய கருத்தை மறுபரிசீலனை செய்திருக்கிறேன். ஆனால், பகுத்தறிவு முதன்மையாக இல்லாத இடத்தில், இத்தகைய பகுப்பாய்வுகள் அரசு அல்லது போலிசுடனான  இடைவெளிகளை குறைக்க உதவாது.

தலித்துகளுடன் முன்னெப்போதும் ஒன்றிணைந்திராத மராத்தா அமைப்புகள் உள்பட 250-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்த நிகழ்வில் பங்கெடுத்தன.

மராத்தா பேரணி.

2014-ஆம் ஆண்டு பார்ப்பன முதலமைச்சரின் கீழ், பாஜக – சிவ சேனா இணைந்து மாநிலத்தில் அரசு அமைத்தபின், மராத்தாக்கள் தங்களுடைய அதிருப்தியை வெவ்வேறு விதங்களில் காட்டத் தொடங்கினர். மராத்தாக்கள் மிகப்பெரும் பேரணிகளை நடத்தினர்.  அப்படிப்பட்ட பேரணி ஒன்றில் விரும்பத்தகாத நிகழ்வொன்று நடந்தது. 2016-ஆம் ஆண்டு கோர்பாடி என்ற இடத்தில் நடந்த பேரணியில் மராத்தி சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். சிறுமியை வன்கொடுமை செய்தவர்களில் ஒரு தலித்தும் இருந்தார். நிர்வாகம் உடனடியாக செயல்பட்டது. பாதிக்கப்பட்டவருக்கான சட்டரீதியான நீதி, பட்டியல் இன மற்றும் பழங்குடியினருக்கான எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதில் வந்து முடிந்தது.

இதுபோன்ற பெருந்திரளான மக்கள் திரட்டல் மூலம்,  இடஒதுக்கீடு கேட்க மராத்தாக்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். தலித்துகளுடன் ஒன்றிணைந்தால்தான் பார்ப்பன அரசை அகற்ற முடியும் என மராத்தாக்கள் புரிந்துகொள்ள தொடங்கினார்கள். இது மராத்தாக்களின் இளைஞர் அமைப்புகள், எல்கர் பரிஷத் நிகழ்வில் பங்கேற்றபோது ‘பேஷ்வாக்களை புதையுங்கள்’ என்னும் முழக்கத்தில் எதிரொலித்தது.

இது வெறும் குறியீட்டு முழக்கமாக இருந்தாலும் பாஜகவின் வளைக்குள் விழும் அபாயத்தை உண்டாக்கியது.  கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர்களும் மராத்தாக்களாக இருந்தனர். அரசு அதிகாரத்தில் தீவிர பற்றுதலுடன் இருந்த பாஜகவுக்கு அது பயத்தை கொடுத்தது.  மிலிந்த் எக்போடேயின் சமஸ்தா ஹிந்துத்துவா அகாடி மற்றும் சாம்பாஜி பிடேயின் சிவ் சக்ரபதி ப்ராசிஸ்தான் ஆகியவற்றில் உள்ள தன்னுடைய ஏஜெண்டுகள் மூலம் தலித்துகள் மற்றும் மராத்தாக்களுக்கிடையே பிரச்சினையை உண்டாக்க திட்டமிட்டது பாஜக.  சிவாஜியின் மகனான சம்போஜி மகராஜின் சமாதி, பீமா கொரேகானிலிருந்து 4 கி.மீ. தள்ளியிருக்கிறது. இதை வைத்து ஒரு சர்ச்சையை உருவாக்கினார்கள்.

மொகலாய சக்ரவர்த்தி அவுரங்க சீப், சம்பாஜியை கொன்று துண்டுத்துண்டாக உடலை வெட்டி போட்டதாகவும்  கோவிந்த மகர் என்பவர் உடலின் பாகங்களை எடுத்து, சம்போஜிக்கு மரியாதைக்குரிய இறுதிச் சடங்கை செய்ததாகவும் 300 ஆண்டு கால பிரபலமான வரலாறு சொல்கிறது. தன்னுடைய நிலத்தில் சம்போஜிக்கு நினைவிடம் எழுப்பினார் கோவிந்த மகர். அவர் இறந்த பின் சம்போஜிக்கு அருகிலேயே அவருக்கும் நினைவிடம் எழுப்பியுள்ளது அவருடைய குடும்பம்.

சூரத்தில் நடைபெற்ற சிவாஜி ஜெயந்தி விழாவில்…

மேலே சொன்ன இரண்டு சதிகாரர்களும் ஒரு புனைகதையை சொன்னார்கள். அதாவது சம்போஜிக்கு நினைவிடம் கட்டியது ‘சிவாலே’ என்ற மாரத்தி குடும்பம், கோவிந்த் மகர் அல்ல என்பதே அந்தக் கதை. இது மராத்தாக்களை தலித்துகளுக்கு எதிராக திருப்பியது.  இந்தப் பிரச்சினையை பயன்படுத்தி மராத்தாக்களை வாடு படாட்ரூக் என்ற இடத்தில், 2018 ஜனவரி 1-ஆம் தேதி பீமா கொரேகானில் கூட இருந்த தலித்துகளுக்கு எதிராகத் தூண்டிவிட பார்த்தார்கள். இதற்கான ஏற்பாடுகள் சுற்றுப்புற கிராமங்களில் வெளிப்படையாக தெரிந்தது. ஆனால், நிர்வாகம் தெரியாதுபோல் நடந்துகொண்டது.

2017, டிசம்பர் 29-ஆம் தேதி, கோவிந்த மகரின் சமாதியும் அங்கிருந்த தகவல் பலகையும் சேதப்படுத்தப்பட்டிருந்ததை தலித்துகள் கண்டார்கள். இது முன்பே திட்டமிட்டதுபோல சமூகங்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், சதிகாரர்களின் துரதிருஷ்டம் காரணமாக, அடுத்த நாள் கிராமத்தினர் ஒன்றாக இணைந்தனர்.

திட்டமிட்டதுபோல, 2017 டிசம்பர் 31-ஆம் தேதி ஷானிவர்வாடா என்ற இடத்தில் எல்கர் பரிஷத் நிகழ்வு தொடங்கியது. இந்த மாநாட்டின் முடிவில், குழுமியிருந்த மக்கள் பாஜகவுக்கு எப்போதும் வாக்களிக்க மாட்டோம் என்றும் இந்தியாவின் அரசியலமைப்பை காப்போம் என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.  மாநாட்டின் அத்தனை நிகழ்வும் காவல்துறையாலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களாலும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

படிக்க:
மோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார்
ஆனந்த் தெல்தும்ப்டேவுக்கு எதிரான பொய் வழக்கை ரத்து செய் ! ஊபா உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை ரத்து செய் !

மாநாட்டில் வேறு எதுவும் நடக்கவில்லை. மாநாட்டின் அனைத்து பிரதிநிதிகளும் அமைதியாக கலைந்து சென்றனர். என்னுடைய நெருங்கிய நண்பரின் மகனின் திருமணத்துக்காக டிசம்பர் 31-ஆம் தேதி காலை 10.55 மணிக்கு புனே சென்றேன்.

புனேயில் ஸ்ரேயால் ஹோட்டலில் தங்கியிருந்து, திருமணத்துக்குச் சென்றோம். அடுத்த நாள் இரவு 12.40 மணிக்கு ஹோட்டலிலிருந்து வெளியேறி கோவா சென்றோம்.  புனேவுக்கு வந்த காரணத்தால் என்னுடைய மனைவி அங்கிருந்த உறவினர்கள் சுஜாத் அம்பேத்கர் மற்றும் அஞ்சலி அம்பேத்கரை காண விரும்பினார். செல்லும் வழியில் கார் டயரை மாற்றுவதற்காக 5-10 நிமிடங்கள் அலைந்திருபோம்.

அதிருஷ்டவசமாக, எல்கர் பரிஷத் நிகழ்வில் முழுநேரமும் இல்லை என்பதற்கு என்னிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. புனேவுக்கு வந்த பிறகு, நான் முழுநேரமும் மாநாட்டில் இருந்திருக்க முடியும். ஆனால், மாநாட்டின் பொருளில் எனக்கு உவப்பில்லை என்பதோடு பணிக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் இருந்ததால், நான் கிளம்பிவிட்டேன்.

பீமா கொரேகான் வெற்றித் தூண்.

2018, ஜனவரி 1-ஆம் தேதி, பீமா கொரேகானின் தலித்துகள் ஒன்று கூடிய போது, இந்துத்துவ அடியாட்கள்  திட்டமிட்டதுபோல கூடினார்கள்.  பீமா கொரேகான் நினைவிடத்துக்குச் செல்லும் தெருவில் உள்ள வீடுகளின் மாடிகளில் ஏறி கற்களால் தாக்கத் தொடங்கினார்கள், மக்களை அடிக்கத் தொடங்கினார்கள்; கடைகளை எரித்தார்கள். போதிய காவலர்கள் இல்லாத நிலையில் நடப்பதை  இருந்த சில காவலர்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இந்துத்துவ குண்டர்களின் தாக்குதலுக்கு அரசு நிர்வாகமும் உடந்தையாக இருப்பது தெளிவாகத் தெரிந்தது. இந்தப் பகுதியில் சில குழப்பங்கள் நடந்துவருவதை பொதுமக்களும் அறிந்திருந்தனர்.

2017 டிசம்பர் 29-ஆம் தேதி சம்பாஜியின் சமாதியில் நடந்த நிகழ்வுகள் இந்த வதந்திகளை உறுதிபடுத்தின. ஆனால், நிர்வாகம் அதைக் கண்டுகொள்ளாமல் கலவரங்களை நிகழ்த்தி பார்த்தது.  அப்போது எடுக்கப்பட்டு வாட்ஸப்பில் வெளியான வீடியோக்களில் காவி கொடி பிடித்தவர்கள் எக்போடே மற்றும் பிண்டே-இன் பெயர்களைச் சொல்லி முழக்கங்கள் எழுப்பியதையும் தலித்துகளை அடித்து விரட்டுவதையும் காட்டின.  பல தலித்துகள் காயமுற்றனர், அவர்களுடைய வாகனங்கள் சேதமாக்கப்பட்டன; கடைகள் எரித்து சாம்பலாக்கப்பட்டன; இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.

எல்கர் பரிஷத்தின் போது என்ன நடந்தது என்பது பற்றி எனக்கு முழுமையாக எதுவும் தெரியவில்லை.  தாக்குதல் நடந்த ஜனவரி 1-ஆம் தேதி மதியம் வரை எனக்கு எதுவும் தெரியாது. அதன்பிறகு, த வயரின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் இமெயில் வழியாக தெளிவாக சொன்னபிறகுதான் அங்கு நடந்ததை அறிந்தேன்.  அதன்பிறகு ஜனவரி 2-ஆம் தேதி இணையதளத்தில் கட்டுரை எழுதினேன்.

போலீசின் கை

2018 ஜனவரி 2-ஆம் தேதி, பகுஜன் ரிபப்ளிக் சோசியலிஸ்ட் பார்டி என்ற கட்சியின் உறுப்பினரும் சமூக செயல்பாட்டாளருமான அனிதா ரவீந்திர சால்வே,  முந்தைய தினம் நடத்தப்பட்ட தலித்துகள் மீதான தாக்குதலுக்கு எக்போடே மற்றும் பீடே என்ற இரண்டு கயவர்கள்தான் காரணம் என சிக்ராபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  ஜனவரி 3-ஆம் தேதி பிரகாஷ் அம்பேத்கர், மகாராஷ்டிராவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தார். ஜனவரி 4-ஆம் தேதி எந்தவித வேண்டத்தகாத சம்பவங்களும் நிகழாமல் முழு அடைப்பு நடந்தது. அதன்பிறகு, வன்முறையில் ஈடுபட்டதாக தலித் இளைஞர்களை போலீசு கைது செய்யத் தொடங்கியது.

பீமா கொரேகான் : இலட்சக்கணக்கில் திரண்டு வந்த மக்கள் கூட்டம்

2018 ஜனவரி 8-ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்தவரும் சம்பாஜி பீடேவின் அடியாளுமான துஷார் தம்காடே, கபீர் கலா மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த செயல்பாட்டாளர்கள் மீது எல்கர் பரிசாத் நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தார்.  எல்கர் பரிசத்தில் பேசப்பட்ட  சர்ச்சைக்குரிய பேச்சுக்களே ஜனவரி 1-ஆம் தேதி வன்முறையை தூண்டின என அதில் குற்றம்சாட்டியிருந்தார். அபத்தமான குற்றச்சாட்டுக்கு அதுவே முகாந்திரமாக அமைந்தது.

முதலாவதாக, எல்கர் பரிசத்தில் என்ன பேசப்பட்டது என்பதற்கு போலீசாரே சாட்சியாக இருந்தனர், அவர்களே எடுத்த வீடியோவில் அதை சரிபார்த்திருக்கலாம். அதில் உண்மையாகவே சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் இருந்திருந்தால், அவர்களாகவே பேசியவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கலாம். யாரோ ஒரு நபர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் வரை காத்திருக்க வேண்டிய தேவையே இல்லை.

அடுத்து, எல்கர் பரிசத்தில் ஆத்திரமூட்டும் படியான பேச்சு தலித்துக்களுக்காக மட்டுமே பேசப்பட்டதாக வைத்துக்கொண்டால், அவர்கள் அடிவாங்கியிருக்க மாட்டார்கள்.  இந்த கலவரத்தில் ஒரு இளைஞர் தன் உயிரை இழந்தார்; அது ஒரு தலித் உயிர். ஆனாலும்கூட, காவலர்கள் திட்டமிட்ட திரைக்கதை செயல்படுத்த முனைந்தார்கள்.

அவர்கள் பெயர்களை வைத்துக்கொண்டு வீடுகளில் சோதனையிட்டார்கள். எல்கர் பரிசத்தின் ஒருங்கிணைப்பாளர்களான நீதிபதி கோல்சே பட்டேல் மற்றும் நீதிபதி பி.பீ.சாவந்த் ஆகியோர் வெளிப்படையாக இந்த நிகழ்வுக்கு எந்தவித நிதியுதவியும் தேவையில்லை என அறிவித்தபோதும் கூட, எல்கார் பரிசத் நிகழ்வுக்கு மாவோயிஸ்டுகள் நிதியுதவி செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக மறைமுகமாக சொல்லத் தொடங்கினார்கள்.

இதுநாள் வரை, இந்த நிகழ்வை மாவோயிஸ்டுகளின் மிகப் பெரும் சதித்திட்டமாகச் சொல்லி  இந்த பொய்யை நம்பும்படி நீதிமன்றத்திடம் சொல்லி வருகிறார்கள். நிகழ்ச்சி ஏற்பாடு செய்த இரண்டு நீதிபதிகளையும் விசாரிக்கவில்லை.  குற்றப்பத்திரிகையில் நீதிபதி சாவந்த் கூறியதாக ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்கள், அதை அவர் பகிரங்கமாக மறுத்துவிட்டார்.  இத்தகைய கடுமையான குற்றமும்கூட நீதிமன்றங்களால் புறக்கணிக்கப்படுகிறது.

மாவோயிஸ்டுகள் நிதியளிக்கிறார்கள் என்கிற கோட்பாட்டை சாக்காகச் சொல்லி, புனே காவல்துறை, நாக்பூர், மும்பை மற்றும் டெல்லி காவல்துறையுடன் இணைந்து ஐந்து செயல்பாட்டாளர்களின் வீடுகளில் 2018 ஜூன் 6-ஆம் தேதி சோதனை நடத்தி, கைதும் செய்தது. அவர்களுக்கும் எல்கர் பரிசத்துக்கும் எந்த வழியிலும் தொடர்பே இல்லை.

இந்த கைதுகளுக்குப் பின், காவல்துறை கதைகளை புனைய ஆரம்பித்தது. பீமா கொரேகான் நினைவிடத்தில் நடந்த வன்முறைக்கு இந்த ஐந்து நபர்களே காரணம் என்பதில் தொடங்கி, நக்சல் செயல்பாட்டுக்கு அவர்கள் உதவுகிறார்கள், பிரதமர் நரேந்திர மோடியை ‘ராஜீவ் காந்தி மாதிரியான’ படுகொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதுவரை பலகதைகளை போலீசு சொல்லிக்கொண்டிருக்கிறது. வாதாடுவதற்கு எந்தவித வாய்ப்பும் அளிக்காத, குற்றம்சாட்டப்பட்டவரை பல ஆண்டுகள் சிறையில் அடைக்கக்கூடிய கொடூரமான, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தை செயல்படுத்த போலீசால் இந்தக் கதைகள் அனைத்தும்  பயன்படுத்தப்பட்டன.

பொதுவாக, இதுபோன்ற சோதனைகளில் பாதிக்கப்பட்டவர்களின் எலக்ட்ரானிக் பொருட்களை கையகப்படுத்தி, அதன் மூலம் தங்களுக்கு என்ன வேண்டுமோ அதை போலீசார் சொல்லிக் கொள்வார்கள். ஆனால், இந்த சோதனைகள் விசித்திரமாக இருந்தன. டெல்லி, நாக்பூர், மும்பையில் சோதனை செய்யும் போலீசார் புனேவிலிருந்து இரண்டு சாட்சிகளை கையோடு அழைத்து வந்தது, சோதனைக்கான செயல்முறையே கேலி செய்வதாக இருந்தது.  அந்த வீட்டில் இருப்பவர்களை ஒரு அறையில் அடைத்து வைத்துவிட்டு, இன்னொரு அறையிலிருந்து சீல் இடப்பட்ட கைப்பற்றப்பட்ட பொருட்களை கொண்டு வந்தார்கள்.

வெர்னோம் கொன்சாவே -இன் வீட்டை சோதனையிட்டபோது, அவருடைய மனைவி சூசன் ஆபிரஹாம், வழக்கறிஞராக இருப்பவர், இந்த சோதனை முறைகளை கண்கூடாக பார்த்திருக்கிறார்கள். போலீசாரே கம்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்களோடு வந்ததாக அவர் தெரிவிக்கிறார். தங்களுடைய சோதனையை வீடியோ பதிவு செய்திருப்பதாக நீதிமன்றத்தில் போலீசாரே தெரிவிக்கின்றனர், அதையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

எலக்ட்ரானிக் சாதனங்களில் தொலைவிலிருந்து இயக்கி மாற்றமுடியும், சில நொடிகளில் எண்ணற்ற கோப்புகளை ஏற்ற முடியும் என்பதை நீதிபதிகள் கருத்தில் கொள்ளவே இல்லை. எலக்ட்ரானிக் சாதனங்களின் உண்மைத்தன்மையை வீடியோ பதிவு மூலம் நிரூபிக்க முடியாது. தகவல் தொடர்பு துறையில் எனக்கு நிபுணத்துவம் உள்ளது என்பதால் நானே இதை மோசடி என நிறுவ முடியும்.

எலக்ட்ரானிக் சாதனங்களின் உண்மைத்தன்மையை நிரூபிக்க நீண்ட காலம் ஆகும். வழக்கு விசாரணை என்ற நீதிமன்றம் சொன்னாலும் வழக்கு விசாரணை நடக்கும் பல வருடங்களில் அப்பாவி நபர்களும் அவர்களுடைய குடும்பமும் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கும்.

கவுதம் நவ்லகா கைது செய்யப்பட்டபோது…

கைதான ஒருவரின் கம்யூட்டரிலிருந்து மாவோயிஸ்டுகள் எழுதிய கடிதங்களை கைப்பற்றி இருப்பதாக (இமெயில்கள் அல்ல; ஏனெனில் மெயில்கள் ஏற்கத்தக்கவை அல்ல) போலீசு கூறுகிறது. உண்மையான பெயர்கள், அவர்களுடைய தொலைபேசி எண்கள் என பல வினோதங்கள், கைப்பற்றதாக சொல்லப்பட்டு அளிக்கப்பட்ட கடிதங்கங்களில் உள்ளன.

இந்தக் கடிதங்கள் முற்றிலும் போலீசால் புனையப்பட்டவை என கடிதத்தின் வார்த்தை பிரயோகங்கள் சொல்கின்றன.  அதன் அடிப்படையில், மாவோயிஸ்டுகள் ஒரு அரசாங்க அமைப்பை நடத்துகின்றனர், அந்த அமைப்பு தங்களுடைய திட்டங்கள் குறித்து விளக்கமாக எழுதுகிறது. அதோடு,  தங்கள் கடிதங்களை பெறுபவர்களிடம் ரசீதுகளை பெற்று தணிக்கைக்காக ஆவணப்படுத்தவும் செய்கின்றது. அவர்கள் தங்களுடைய ரகசியத்துக்காக பெயர் பெற்றவர்கள், மனிதர்களை மட்டுமே தொடர்புக்கு பயன்படுத்துகிறவர்கள், செய்திகளை படித்த பிறகு அவற்றை அழிக்க வலியுறுத்துகிறவர்கள்.  அப்படிப்பட்ட அமைப்பு அவர்களுடைய நிர்வாகிகளுடன் கடிதங்கள் வழியாக தொடர்பு கொள்ள முடியாது.

பொது தளத்துக்கு வந்த இந்தக் கடிதங்களை ஏராளமான மக்கள் அலசி ஆராய்ந்து இவற்றின் போலித்தன்மையை தோலுரித்துவிட்டனர். இதுபோன்ற அமைப்புகளை படித்து வரும் மோதல் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் (Institute of Conflict Management) செயல் இயக்குனராக உள்ள அஜய் சகானி என்ற நிபுணர், இந்தக் கடிதங்கள் போலியானவை என சொல்லிவிட்டார்.

ரோமிலா தாப்பர் உள்ளிட்ட அறிவுஜீவிகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் மாற்றுக்கருத்து சொன்ன ஒரே ஒரு நீதிபதியான சந்திர சூட், போலீசின் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட கடிதங்களை ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு இந்த முழு வழக்கையும் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என்றார். ஆனால், வினோதமான சட்டத்தின் செயல்முறை இந்த சர்ச்சைக்குரிய ஆதாரத்தை நகர்த்த போதுமானதாக இல்லை. அதே நேரத்தில் அப்பாவி மக்களின் வாழ்க்கையை தியாகம் செய்ய இந்த சட்டத்தின் செயல்முறை தயாராகிவிட்டது. உண்மையில் இது தண்டனையைக் காட்டிலும் மோசமானது.

இந்தக் கடிதங்களில் மாவோயிஸ்டு திட்டங்களின் கூட்டாளிகளாக ராகுல் காந்தி, பிரகாஷ் அம்பேத்கர், திக்விஜய் சிங் போன்றோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.  இந்தத் தலைவர்களை மோசமான முறையில் சித்தரிக்க அரசியல் நோக்கத்தோடு இது செய்யப்பட்டிருக்கிறது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.  போலீசோ, நீதிமன்றமோ இந்த பிரபலங்களிடம் என்ன நடந்தது என்பது குறித்து சோதிக்கவும் விரும்பவில்லை, கேட்கவும் இல்லை.

எனக்கெதிரான வினோத குற்றச்சாட்டுகள்!

ஆறு செயல்பாட்டாளர்களுடன் சேர்த்து, (அதில் ஐந்து பேர் ஆகஸ்டு 28-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்) என் வீட்டையும் புனே போலீசு சோதனை செய்தது. நாங்கள் இல்லாதபோது, கல்வி நிறுவனத்தில் இருந்த பாதுகாவலரிடம் மாற்று சாவியைப் பெற்று வாரண்ட் ஏதும் இல்லாமல் என்னுடைய வீட்டை அவர்கள் திறந்துள்ளனர்.

என் வீட்டின் உள்புறத்தை வீடியோவில் பதிவு செய்து, பிறகு பூட்டிவிட்டதாக போலீசு தகவலில் எழுதப்பட்டுள்ளது.

அப்போது நாங்கள் மும்பையில் இருந்தோம். டிவி சேனல்கள் எங்கள் வீட்டைத் திறந்து சோதனையிட்டதை முக்கிய செய்தியாக அறிவித்தன. அப்போதுதான் எங்களுக்கு இந்த விசயம் தெரிய வந்தது. என்னுடைய மனைவி உடனடியாக விமானம் மூலம் சென்றார், பிகோலிம் காவல் நிலையத்தில் புகார் அளித்து, போலீசு ஏதேனும் கேட்க வேண்டுமெனில் எங்களுடைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளச் சொல்லி எண்களை அளித்துவிட்டு வந்தார்.

ஆகஸ்டு 31-ஆம் தேதி ஏடிஜிபி பர்மேந்தர் சிங், மேலும் சிலருடன் புனேயில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது என்னுடைய தொடர்பு இருப்பதாகக்கூறி அதற்கு ஆதாரமாக ஒரு கடிதத்தையும் வெளியிட்டார். அந்தக் கடிதம் மாவோயிஸ்ட் என சொல்லப்படுபவரால் எழுதப்பட்டது, அவரை என்னை ‘காம். ஆனந்த்’ என விளித்து 2018-ஆம் ஆண்டு நடந்த பாரீஸ் கருத்தரங்கு குறித்து பேசுகிறார், அது உண்மை போலவே உள்ளது. கல்வி தொடர்பான அந்தக் கருத்தரங்கில் உலகெங்கிலும் உள்ள மற்ற கல்வியாளர்களைப் போல கலந்துகொண்டேன். கருத்தரங்கை பாரீசில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

மாவோயிஸ்டுகள் இந்த பல்கலைக்கழகத்துக்கு பணம் கொடுத்து என்னை கருத்தரங்கில் பேச அழைத்திருந்தார்கள் என கடிதம் விவரிப்பது நகைப்புக்குரியது.  அதோடு, அவர்கள் ‘காம். எடினே பாலிபர்’ என்ற மதிப்பிற்குரிய பிரெஞ்சு மார்க்சிய ஆய்வாளருடன் சந்திப்பை ஏற்பாடு செய்ததாகவும் அப்போது அவர் என்னையும் ‘காம். அனுபமா ராவ் மற்றும் சைலஜா பேய்க்’ (பர்னார்டு கல்லூரி மற்றும் சின்சினாடி பல்கலைக்கழக பேராசிரியர்கள்) ஆகியோரையும் நேர்காணல் செய்வார் எனவும் அவர்கள் தாங்கள் பணியாற்றும் கல்லூரிகளில் என்னை பேச அழைப்பார் எனவும் கடிதம் சொல்கிறது.

என்டிடிவி-யிலிருந்து இந்தக் கடிதத்தைப் பெற்று பாலிபருக்கும் இந்த கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் லிசா லிங்கனுக்கும் இமெயிலில் அனுப்பி வைத்தேன். அவர்கள் இந்தக் கதையைப் படித்து அதிர்ச்சியானார்கள்; எனக்கு பதில் எழுதினார்கள். பாலிமர் கண்டனக் கடிதத்தை அனுப்பியதோடு, பிரெஞ்சு தூதரகத்துக்கும் இதுகுறித்து எழுதினார். லிங்கன் எப்படி இந்த கருத்தரங்குக்கு என்னை அழைத்தார் என்பது குறித்து விளக்கினார்.

உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் பரம்ஜித் சிங் மீது அவதூறு வழக்கு தொடுக்க முடிவு செய்தேன். செயல்முறையின் பகுதியாக மகாராஷ்டிர அரசுக்கு செப்டம்பர் 5-ஆம் தேதி கடிதம் எழுதி,  அனுமதியும் கேட்டேன். இதுநாள் வரை அதுகுறித்து ஒரு பதிலும் இல்லை.

படிக்க:
மோடியைக் கொல்ல சதியாம் !
பா.ஜ.க. மோடி அரசின் பாசிச அடக்குமுறைகள் | மக்கள் அதிகாரம் கண்டனம்

அதேவேளையில், என்மீது எந்த வழக்கும் இல்லாதபட்சத்தில், என்னுடைய கடிதம் அவர்களுக்கு குற்றவுணர்வை ஏற்படுத்தியிருக்கலாம். எனவே, முதல் தகவல் அறிக்கையில் உள்ள என்னுடைய பெயரை நீக்குமாறு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். நீதிமன்ற அமர்வு என் மீதுள்ள குற்றச்சாட்டுகளின் பட்டியலை சமர்பிக்கச் சொல்லி போலீசுக்கு உத்தரவிட்டது. போலீசு தாக்கல் செய்த அஃபிடவிட்டில் என்மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டிருந்தன, ஐந்து நீண்ட கடிதங்களும் (மேலே விவரித்த ஒன்றும் அதில் அடங்கும்) சமர்பிக்கப்பட்டன. நாங்கள் அவர்களின் குற்றச்சாட்டுக்களை மறுத்தோம், கடிதங்கள் உண்மையென்று கொண்டால்கூடாமல் அதை வைத்து வழக்கு தொடுக்க முடியாது. அந்த நான்கு கடிதங்களும் இவைதான்…

முதல் கடிதம் யாரோ ஒருவர் யாருக்கோ எழுதியது. அதில் ஏதோ ஒரு ஆனந்த், அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2015-ஆம் ஆண்டு சென்னை ஐஐடி நிர்வாகம் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தை அங்கீகரிக்க மறுத்தது செய்தியானது. நான் அப்போது கரக்பூரில் உள்ள ஐஐடி மேலாண்மை பள்ளியில் பேராசிரியராக பணியாற்றினேன். சென்னையிலிருந்து அது 2000 கிமீ தள்ளி இருக்கிறது. மாணவர்களை ஒருங்கிணைக்கும் தேவை இருந்திருந்தால் வெகு தூரத்தில் உள்ள ஐஐடி-யைக் காட்டிலும்  என்னுடைய ஐஐடியிலேயே செய்திருப்பேன்.  இதுகுறித்து அறிந்த அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் நிறுவன உறுப்பினர், எனக்கும் அந்த அமைப்பு நிறுவப்பட்டதற்கும் அதனுடைய செயல்பாடுகளுக்கும் தொடர்பே இல்லை என கடிதம் எழுதினார்.

மாவோயிஸ்டுகள் எழுதியதாக கூறப்படும் கடிதம்

இரண்டாவது கடிதம், மீண்டும் யாரோ ஒருவர் யாருக்கோ எழுதிய கடிதத்தில் ஏதோ ஒரு ஆனந்த், அனுராத கண்டி மெமோரியல் கமிட்டியை சந்திப்பதை ’சிறந்த பரிந்துரை’யாக சொல்கிறார் என்கிறார். அந்த ஆனந்த் நானே என்று வைத்துக்கொண்டாலும், இன்னும் சில மதிப்பிற்குரிய நபர்களுடன் நானும் அந்த அறக்கட்டளையின் உறுப்பினராக இருக்கிறேன். அது பத்தாண்டுகளாக செயல்பட்டு வரும் பதிவு பெற்ற அமைப்பு, அதற்கு நிரந்த கணக்கு எண்ணும் வங்கி கணக்கும் உண்டு.  சமீர் அமீன் மற்றும் ஏஞ்சலா டேவிஸ் போன்ற முக்கியமான ஆய்வாளர்களின் ஆய்வுரைகளை இந்த அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து பத்திரிகை செய்திகளும் பரவலாக வந்துளது. இந்த அறக்கட்டளை அல்லது கமிட்டியின் கூட்டத்துக்கோ, ஆய்வுரைகளை கேட்கவோ என்னால் சமீப ஆண்டுகளில் போக முடியவில்லை. ஏனெனில் கடந்த பத்தாண்டுகளாக ஐஐடி கரக்பூரிலும் அதற்கடுத்து கோவாவிலும் என நான் தொலைவில் வசிக்கிறேன்.

மூன்றாவது கடிதத்தில், மீண்டும் யாரோ ஒருவர் யாருக்கோ எழுதிய கடிதத்தில் ஏதோ ஒரு ஆனந்த், 2018 ஏப்ரல் மாதம் கட்சிரோலியில் நடந்த என்கவுண்டர் குறித்து உண்மை அறியும் குழுவுக்கு பொறுப்பேற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அது நானாகவே எடுத்துக்கொண்டாலும் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு கமிட்டியின் பொது செயலாளராக இருக்கும் என்னால், மனித உரிமை மீறல் நடந்திருக்கும் வழக்குகளில் உண்மை அறியும் குழு அமைக்க முடியும். ஆனால்,  இந்த குழுவை நான் அமைக்கவோ, பங்கேற்கவோ இல்லை என்பதே உண்மை. மகாராஷ்டிராவிலிருந்து தள்ளியிருந்தாலும் கடைசியாக பொது செயலாளராக இருந்த பி.ஏ. செபாஸ்டியனின் விருப்பத்தின் பேரில் நான் பொது செயலாளர் ஆனேன். உறுப்பினர்களும் அதை வலியுறுத்த அந்தப் பதவியில் தொடர்கிறேன்.

நான்காவது… ஒரு குறிப்பு, யாரோ ஒருவருடைய கணினியிலிருந்து கைப்பற்றப்பட்டது. அதில் சுரேந்தர் என்பவர் மிலிந்த் மூலமாக எனக்கு ரூ. 90 ஆயிரம் கொடுத்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. கற்பனை திறன் குறைந்த, அபத்தமான குற்றச்சாட்டு இது.  ஒவ்வொரு மாதமும் அந்த அளவிலான பணத்தை வருடக்கணக்கில் வரியாக செலுத்தும் நான் பணம் பெறுகிறேன் என சொல்வது அபத்தமாக உள்ளது. அதோடு, இத்தகைய குறிப்பு சட்டத்தின் முன் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படாது.

போலீசு அஃபிடவிட்டில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் பதிலுக்கு பதில் மறுத்துவிட்டேன். ஆனால், இறுதியாக போலீசு ‘முத்திரை’ வைக்கப்பட்ட உறைகளில் நீதிபதிகளிடம் எதையோ அளித்தது. நீதிமன்றம் என்னுடைய மனுவை நிராகரித்தது. நான் அளித்த எந்த விளக்கத்தையும் ஏற்கவில்லை, என்னுடைய தனிப்பட்ட மதிப்பு மரியாதை எதையும் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. போலீசு சொன்னதற்கும் என்னுடைய சுயவிவரத்துக்கும் தொடர்பிருக்கிறதா என்பதையும் பார்க்கவில்லை.

என்னுடையது வினோதமான வழக்கு எனக் கருதி, நான் உச்சநீதிமன்றத்தை அணுகினேன். ஆனால், நீதிமன்றம், இந்த நிலையில் போலீசின் புலனாய்வில் தலையிட முடியாது எனக் கருதியது. கைதிலிருந்து தப்பிக்க பிணை பெறும்படி எனக்கு அறிவுறுத்தியது.

இப்போது இந்த வழக்கு மிக முக்கியமான கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது. என்னுடைய அப்பாவித்தனமான நம்பிக்கைகள் அனைத்தும் உடைந்து போயுள்ளன. நான் உடனடியாக கைது செய்யப்படலாம் என்பது துயரத்தைத் தருகிறது. என்னை போன்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே ஒன்பது பேர் சிறையில் இருக்கிறார்கள். சட்ட நடைமுறைகளால் அவர்கள் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள்.  என்னைப் போல அல்லாமல், அவர்கள் உங்களிடம் உதவி கேட்கும் வாய்ப்பைப் பெறவில்லை. நீங்கள் எனக்கு ஆதரவாக என்னுடன் நிற்பது எனக்கு மட்டுமல்ல, என்னுடைய குடும்பத்துக்கும் ஆற்றலை அளிக்கும். அதோடு, இந்தியாவில் தங்களுக்கு எதிராக குரல் எழுப்பும் மக்களை சித்திரவதை செய்யும் பாசிச ஆட்சியாளர்களுக்கு செய்தியைச்  சொல்லும்.

எனவே, தயவுசெய்து கையெழுத்து இயக்கத்தை ஒருங்கிணையுங்கள், அறிக்கைகளை வெளிவிடுங்கள், கட்டுரைகள் எழுதுங்கள் …  உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு வழிமுறையில் இந்த படுமோசமான செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் எனக்கு ஆதரவளிக்கும் வகையிலும் பொதுமக்களின் சீற்றத்தை வெளிப்படுத்துங்கள்.”


ஆங்கில மூலம்: scroll
தமிழாக்கம்: அனிதா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க