தோழர் ஆனந்த் தெல்தும்ப்டே-வுக்கு எதிராக மகாராட்டிர பாஜக அரசு புனைந்திருக்கும் பொய்வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி அவர் தாக்கல் செய்த வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

பீமா கோரேகான் நிகழ்வைத் தொடர்ந்து, “மோடியைக் கொல்ல மாவோயிஸ்டு சதி” என்ற பெயரில் புனையப்பட்ட பொய்வழக்கில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஏற்கனவே 9 பேர் சிறையில் இருக்கின்றனர். அதே பொய் வழக்கில்தான் ஆனந்த் குறி வைக்கப்பட்டிருக்கிறார்.

சென்னையில் மக்கள் அதிகாரம் நடத்திய ”அச்சுறுத்தும் பாசிசம்” அரங்கக் கூட்டத்தில் பங்கேற்ற ஆனந்த் தெல்தும்டே

“தனக்கெதிரான எந்தக் குற்றச்சாட்டுக்கும் அடிப்படையே இல்லை” என்று நிறுவி, முதல் தகவல் அறிக்கையையே ரத்து செய்யக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு செய்திருந்தார். விசாரணையின் போது, “மூடி முத்திரையிடப்பட்ட கடித உறை” ஒன்றை மகாராட்டிர போலீசு நீதிமன்றத்திடம் கொடுத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து, தெல்தும்ப்டேயின் மனுவை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அதையே உச்ச நீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது.

“திறந்த நீதிமன்றம்” என்றழைக்கப்படும் நமது நீதிமன்றங்களில், (ரஃபேல் வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில்) மூடி முத்திரையிடப்பட்ட உறை ஒன்றை அரசு தரப்பு நீதிபதிகளிடம் கொடுக்கிறது. அதில் இருப்பது என்ன என்று அரசு தரப்புக்கு எதிர் தரப்பான குற்றம் சாட்டப்பட்டவருக்கோ, மனுதாரருக்கோ தெரிவிக்கப் படுவதில்லை. அதில் கூறப்பட்டுள்ள விவரத்தையோ, குற்றச்சாட்டையோ மறுப்பதற்குக் கூட வாய்ப்பில்லாத நிலையில்தான் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. ரஃபேல் கொள்ளை முதல் தூத்துக்குடி படுகொலை வரை எல்லா வழக்குகளிலும் இத்தகைய “மூடி முத்திரையிடப்பட்ட நீதி” ஒரு புதிய நடைமுறையாக மாறி வருகிறது. இந்த வழிமுறையே பாசிசத்துக்கு கூறப்படும் கட்டியமாகும்.

“எல்லா நம்பிக்கைகளும் தகர்ந்து விட்ட நிலையில், உங்களின் உதவியை நாடி நிற்கிறேன்” என்று தன்னுடைய சார்பிலும், இதே வழக்கில் சிறையில் இருக்கும் சுதா பரத்வாஜ், வரவர ராவ் உள்ளிட்ட 9 பேரின் சார்பிலும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் தெல்தும்ப்டே.

பார்ப்பன பாசிசத்தின் கொலைக்கரங்களுக்கு முஸ்லிம்களும், தலித் மக்களும், தொழிலாளர்களும், அறிவுத்துறையினரும், புரட்சியாளர்களும் அன்றாடம் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். எண்ணற்ற போராளிகள் சிறை வைக்கப்படுகிறார்கள். பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான போராட்டங்களின் கூர்முனையாக விளங்கும் அமைப்புகளும் அறிவுத்துறையினரும் மாநகர நக்சல்கள் என்று முத்திரை குத்தி வேட்டையாடப் படுகிறார்கள்.

மோடி அரசும் சனாதன் சன்ஸ்தாவும் வேறு வேறல்ல. இது சட்டபூர்வ அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் சனாதன் சன்ஸ்தா. கொல்லப்பட வேண்டிய ஜனநாயக சக்திகளின் பட்டியலை அவர்கள் கையில் வைத்திருக்கிறார்கள். சுட்டுக் கொல்வதும், சிறை வைப்பதும் இவர்களுக்கு இடையிலான வேலைப்பிரிவினை மட்டுமே.

”நகர்ப்புற நக்சல்கள்” என்ற பட்டத்துடன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பிற அறிவுத்துறையினர்

எழுபது வயதை நெருங்கும் ஆனந்த் தெல்தும்டேவையும், எண்பதைக் கடந்து விட்ட வரவரராவையும், சுதா பரத்வாஜ் போன்ற பெண்களையும், சக்கர நாற்காலியை விட்டு அகல முடியாத தோழர் சாய்பாபாவையும் ஊபா சட்டத்தில் சிறை வைப்பதற்கும், அவர்களைச் சுட்டுக் கொல்வதற்கும் பாரிய வேறுபாடு இல்லை. இது சித்திரவதைக் கொலை.

கோழைகளாகவும் அறிவுத்துறை கூலிகளாகவும் ஆகப்பெரும்பான்மையான அறிவுத்துறையினர் மாறியிருக்கும் சூழலில், தம் வாழ்நாளை மக்கள் விடுதலைக்கே அர்ப்பணித்திருக்கும் ஆனந்தைப் போன்றவர்களின் சுதந்திரத்தைக் காப்பாற்றுவதென்பது நமது சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்வதாகும்.அவர் நம்மிடம் “உதவி” கோருவதாக தனது கடிதத்தில் கூறியிருப்பது நம்மைக் கூசச் செய்கிறது.

ஒவ்வொரு முன்னணியாளர் கொல்லப்படும்போதும், சிறை வைக்கப்படும்போதும் இந்தச் சமூகம் மென்மேலும் இருண்ட காலத்துக்குள் தள்ளப்படுகிறது. இது நம்முடைய உரிமையை, சுதந்திரத்தை, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதற்கான போராட்டம் என்ற உணர்வுடன் ஆனந்த் தெல்தும்ப்டேவுக்காக குரல் கொடுப்போம். ஊபா உள்ளிட்ட ஆள்தூக்கிக் கருப்பு சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுப்போம். பார்ப்பன பாசிசத்துக்கு எதிராக குரல் கொடுப்போம்!

மருதையன்
பொதுச்செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.

*********

“அச்சுறுத்தும் பாசிசம்”  என்ற தலைப்பில் சென்னையில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் ஆனந்த் தெல்தும்டே ஆற்றிய உரை :

சென்னையில் தோழர் ஆனந்த் தெல்தும்டே-விடம் மகஇக பொதுச் செயலர் தோழர் மருதையன் எடுத்த நேர்காணல் காணொளி (ஆங்கிலம்) :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க