“பாசிஸ்டுகள் எப்போதும் தேர்தல் மூலம்தான் ஆட்சிக்கு வருகிறார்கள். ஆனால், அவர்களை தேர்தல் மூலமாக அப்புறப்படுத்த முடியாது” என்பதை ‘சாதியின் குடியரசு’ எனும் தனது நூலில் ஆனந்த் டெல்டும்டே ஓர் இடத்தில் மேற்கோள் காட்டியிருப்பார்.

ஆனந்த் டெல்டும்டே எழுத்துக்களைக் கண்டு பாஜக அரசு அஞ்சுவதற்கு “சாதியின் குடியரசு – நவீன தாரளமய இந்துத்துவா காலத்தில் சமத்துவம் பற்றி சிந்தித்தல்” மற்றும் “ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்” ஆகிய நூல்கள் ஓர் உதாரணம்.

இந்த நவீன தாராளமய இந்துத்துவா காலத்தில் சங்பரிவார கும்பல்கள் மூலம் அதிகரித்து வரும் சாதிய / மதவாத பிரச்சினைகளும் உலகமயமாக்கலின் விளைவாக தனியார்மயமும் இந்த நாட்டை சமூக பொருளாதார ரீதியாக பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன.

படிக்க :
♦ பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டேவுக்கு பிணை மறுக்கப்பட்டது ஏன் ?
♦ உங்கள் முறை வருவதற்கு முன் நீங்கள் பேசிவிடுங்கள் ! – ஆனந்த் தெல்தும்டேவின் திறந்த மடல் !

இந்த சமூக பொருளாதார சுரண்டல்களை எதிர்த்து போராடக் கூடிய முதன்மை ஆற்றல்களாக கம்யூனிஸ்ட்களையும் தலித்துகளையும் அவர்களின் கூட்டணி சக்திகளாக பிற முற்போக்கு இயக்கங்களையும் முன்நிறுத்துகிறார்.

சாதி குறித்த பார்வையையும் அதை அழித்தொழிப்பதற்கான வழிமுறைகளையும் வெறுமனே கருத்துமுதல்வாத நிலையில் இருந்து அணுகாமல் பொருள்முதல்வாத அடிப்படையில் ஆராய்ந்து சாதியை குறித்தும் சாதிக்கு எதிராக இந்தியாவில் போராடிய இயக்கங்களையும் தனது ஆய்வின் மூலம் விளக்குகிறார் ஆனந்த் டெல்டும்டே.

இங்குள்ள சாதி எதிர்ப்பு இயக்கங்கள், “சாதி உருவானதற்கு காரணம் இந்து மதம் மட்டும்தான், அதை தொடர்ந்து தாக்குவதாலும், மதமாற்றங்களாலும் அழித்தொழிக்க முடியும்” என்று உறுதியாக நம்புவதன் விளைவாக அதிலுள்ள பொருளாயத உறவுகளை பார்க்கத் தவறுகின்றன.

அவருடைய ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும் நூலில் கூறுகிறார்:

“வர்க்கம் என்னும் கருத்தினம் சாதி என்னும் கருத்தினத்தை விட சக்தி வாய்ந்தது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், சாதி என்னும் கருத்தினம் சாதிகளை உட்சாதிகளாக பிரிக்கக் கூடியதும் சமுதாயத்தை ஒன்றையொன்று எதிர்த்து நிற்கும் இரண்டு பகை முகாம்களாகப் பிரிக்கும் ஆற்றலற்றதுமாகும்.

இந்திய வரலாற்றுக்கு அடிப்படையாக இருப்பது பார்ப்பனியக் கருத்து நிலைக்கும் பார்ப்பனியமல்லாத கருத்து நிலைக்கும் இடையிலான போரே என்றும் அது இந்திய சமுதாயத்தை ஒன்றுக்கொன்று பகையான நலன்களைக் கொண்ட சாதிகளாக பிளவுபடுத்துகிறது என்றும் சிலர் கூறலாம். சாதி எதிர்ப்பு முகாம் தர முயலும் விளக்கம் இதுதான்.

இப்படி ‘பார்ப்பனியம்’, ‘பார்ப்பனியமல்லாதது’ எனப் பிளவுபடுத்துவது ஒரு பிரச்சினையை ஏற்படுத்துகிறது. அதாவது ‘பார்ப்பனியம்’, ‘பார்ப்பனியமல்லாதது’ என்னும் இரண்டு விசயங்களும் ஏதோ வரலாற்றில் தொடர்ந்து நிலவுகிற எதார்த்தம் எனக் கருத வைக்கிறது. மேலும், பார்ப்பனிய மேலாண்மையின் தாக்கத்தையும் சென்ற நூற்றாண்டிலிருந்து ஏற்பட்டுள்ள வளர்ச்சிப் போக்குகள் உருவாக்கியுள்ள பொருளாயத முரண்பாடுகளையும் கருத்தில் கொள்ளத் தவறுகிறது.”

இப்படி சாதியை கருத்துமுதல்வாத நிலையில் இருந்து அணுகிய சாதி ஒழிப்பு இயக்கங்கள் சாதிகளின் கருத்துநிலை அடிப்படையை பலவீனப்படுத்தின. ஆனால், சாதிகளின் பொருளாதார அடிப்படையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இயலாமல் விட்டுவிட்டது.

காலனிய ஆட்சி காலத்தில் நடந்த நிலச் சீர்திருத்தங்கள், ஆங்கிலக் கல்விமுறை மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் சூத்திர சாதிகளின் வர்க்க தன்மையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. அந்த பொருளாயத மாற்றங்கள் அரசியல் தளத்திலும் எதிரொலித்தது. சூத்திர சாதி மக்கள் தொகையின் எண்ணிக்கையும் அவர்களது பொருளாதார முன்னேற்றமும் அரசியலில் அவர்களுக்கான பிரதிநித்துவத்தை பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கியது.

ஆனால், மறுமுனையில் தலித்துகள் நிலமற்ற, உடமையற்ற, உழைக்கும் வர்க்கங்களாக சமூக பொருளாதார அரசியல் தளத்தில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

சாதி ஒழிப்பு என்பது பண்பாட்டு தளத்தை சார்ந்தது மட்டுமல்ல அது வர்க்கப் போராட்டத்தையும் உள்ளடக்கியது. வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் கம்யூனிஸ்ட்கள் தங்களது சமூக பகுப்பாய்வு கருவியான மார்க்சியத்தை சாதியை ஒழிப்பதற்கான கோட்பாட்டுருவாக்கத்திற்கும் நடைமுறைக்கும் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்.

மேலும், சாதி ஒழிப்புக்கான போராட்டத்தில் தொடர்ந்து எழுதிக் கொண்டும் செயல்பட்டுக் கொண்டும் இருக்கும் ஆனந்த் டெல்டும்டே-வின் நூல்கள் சாதியமைப்பை குறித்தும், சமூக வரலாற்றுக்கான பகுப்பாய்வுக் கருவியாக மார்க்சியம் எப்படி வெற்றிகரமாக தொடர்ந்து இருக்கிறது என்பதையும் விளக்குகிறது.

மார்க்சியம் ஏன் படிக்க வேண்டும், அது எப்படி சமூக வரலாற்றை ஆய்வு செய்கிறது, சாதியை ஒழிப்பதில் மார்க்சியத்தின் பொருத்தப்பாடு, அதை நடைமுறைப்படுத்துவதில் கம்யூனிஸ்ட்களின் பங்கு என மார்க்சியம் மற்றும் கம்யூனிஸ்ட்களின் தேவையை அவரது ஒவ்வொரு எழுத்துகளும் வெளிப்படுத்துகிறது.

அம்பேத்கருக்கு உரிய மரியாதையையும் அவரது கொள்கைகளையும் நாங்கள்தான் மதிப்பதாகவும் போற்றுவதாகவும் கூறும் இந்துத்துவ பாஜக அரசு, கடந்த ஆண்டு அம்பேத்கர் நினைவு நாளன்றுதான் பீமா கொரேகான் வழக்கில் ஆனந்த் டெல்டும்டேவை UAPA சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது.

படிக்க :
♦ நூல் விமர்சனம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த் தெல்தும்டே | எஸ். காமராஜ்
♦ இந்தியா முழுவதும் செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் மோடி அரசை வீழ்த்துவோம் !

இந்திய நீதித்துறையும் இன்று வரையிலும் அவருக்கு மட்டுமின்றி அவ்வழக்கில் கைது செய்யப்பட்ட எவருக்குமே பிணை வழங்காமல் அரச பயங்கரவாதத்திற்கு துணை நின்று கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவருமே மக்களுக்காக சிந்தித்த, பேசிய, எழுதிய மனித உரிமை செயல்பாட்டாளர்கள்தான்.

“துப்பாக்கி முனையை விட பேனா முனையே வலிமை வாய்ந்தது” என்பதை உணர்ந்துதான் உலகில் உள்ள எல்லா அரசுகளும் மக்களுக்காக சிந்திக்கும் சிந்தனையாளர்களைக் கண்டு அஞ்சுன்றன. தங்களது சுரண்டல் அமைப்பை கேள்விக்குட்படுத்துகிறவர்களை சிறைப்படுத்துகின்றன.

இதையேத்தான் பாசிச பாஜக அரசும் பீமா கொரேகான் வழக்கிலும் செய்து கொண்டிருக்கிறது. UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் பாஜக அரசு விடுதலை செய்ய வேண்டும். UAPA போன்ற ஒடுக்குமுறை சட்டங்களையும் ஒழிக்க வேண்டும்.


முகநூலில் : Vijay Dharanish

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க