மகத் என்பது என்ன?

 உலகில் எங்குமே நடைபெறாத கொடுங்கோன்மை சாதியின் பெயரால் இன்றளவும் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் காலில் செருப்பு அணியக் கூடாது, சொந்தமாக நிலம் வைத்துக்கொள்ள முடியாது, வீதிகளில் எச்சில் துப்பக் கூடாது கலயத்தை கட்டிக்கொண்டு நடக்க வேண்டும். இப்படி கணக்கற்ற கட்டுப்பாடுகளை சமூக தடைகளை  சாதிப் படிநிலை அமைப்பு விதித்திருந்தது.

ஊருக்குப் பொதுவான நீர்நிலைகளில் தலித் மக்கள் தண்ணீர் எடுக்கக்கூடாது சாதியின் பெயரால் பொருளாதார சமூக அடக்குமுறைகள் உச்ச நிலையில் இருந்த காலகட்டத்தில் தான் உலக வரலாற்றில் முதன்முதலாக பொதுக் குளத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் தண்ணீர் எடுப்பதற்கான உரிமைப் போராட்டம் மகத் நகரில் நடைபெற்றது.

மகத் நகரில் நடைபெற்ற மாநாட்டில் உண்மையில் நடந்தது என்ன? ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் மகத் போராட்டம் ஏற்படுத்திய தாக்கம் என்ன? மனித உரிமைக்காக, சாதி ஆதிக்க அமைப்பை எதிர்த்து,  சமர் புரிந்த போராட்ட வரலாறு சொல்லும் படிப்பினைகள் என்ன?  என்ற கேள்விகளுக்கு தகுந்த ஆதாரங்களோடு இந்த நூலில் முனைவர் ஆனந்த் டெல்டும்டே விளக்கியுள்ளார்.

படிக்க :
♦ சிந்து சமவெளி மக்களின் பிரதான உணவு மாட்டுக் கறியாம் || ஆய்வில் உறுதி
♦ டிசம்பர் 14 : பாஜக அலுவலகங்களை முற்றுகையிடுவோம் – விவசாயிகள் சங்கம் அறைகூவல் !

1927 மார்ச் 19 -20, பம்பாய் கொலாபா மாவட்டத்தின் மகத் நகராட்சி பகுதியில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இரண்டு நாள் மாநாடு பற்றி ஆவண காப்பக தரவுகள், வரலாற்று சான்றாதாரங்கள், உள்ளிட்ட பல மூலாதாரங்களை கொண்டு மகத் போராட்டத்தைப் பற்றிய முழு சித்திரத்தை, 6 ஆய்வுக் கட்டுரைகள், 8 பின்னிணைப்புகள் கொண்ட இந்த நூலில் ஆனந்த் டெல்டும்டே அவர்கள் அளித்துள்ளார்கள்.

இந்தியத் துணை கண்டத்தில் சாதி அமைப்பு என்ன?  என்பதை பற்றி புரிந்து கொள்ளாமல் மகத் போராட்டத்தைப் பற்றி இதன் முழுமையான முக்கியத்துவத்தைப் பற்றி புரிந்து கொள்வது  இயலாது.

சாதிப் படிநிலை அமைப்பும் அதன் கிளையான தீண்டாமைக் கொடுமையும்  மகத் போராட்டத்திற்கு முன்பு,  இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றில் ஒழுங்குஅமைக்கப்பட்ட முறையில் இது போன்ற சவால் எதையும்  ஒருபோதும் எதிர்கொண்டது இல்லை.

பேராசிரியர் ஆனந்த் தெல்தும்ப்டே

மகத் போராட்டத்திற்கு முன்பு பரவலாக நடைபெற்ற சாதி ஆதிக்க,  தீண்டாமை ஒழிப்பு முன்னெடுப்புகள் உள்ளூர் மட்டத்தை தாண்டி வெளி உலகிற்கு செல்லவில்லை.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மகத் நகரிலுள்ள சௌதார் குளத்தில் குளிக்கவும் அந்த தண்ணீரை குடிக்கவும் தடை செய்யப்பட்டிருந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் ஆறுகள் ஏரிகள் குளங்கள் போன்ற நீர் நிலைகளில் இறங்கி தண்ணீரை பயன்படுத்தக்கூடாது என்பது சாதியாதிக்க சட்டம்.

மகத் நகரில் நடைபெற்ற ஒடுக்கப்பட்ட மக்களின் மாநாடு தலித் மக்களின் குடி உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று தீர்மானித்தது. சவுதார் குளத்துக்கு அருகே மனுதர்மத்தை எரிப்பது என்று மாநாடு முடிவு செய்தது.

சாதி ஆதிக்க சக்திகள் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்கியதால் அந்த மனுதர்ம எதிர்ப்பு போராட்டம் நடைபெறவில்லை. “வெடித்தது மகத் சௌதார் குளத்தில் நீர் அருந்தும் போராட்டம்..”

முற்போக்கு படைப்பாளிகள் என்று அறியப்பட்டவர்கள் கூட மகத் போராட்டம் மனித உரிமைக்கான போராட்டம் என்பதை பொதுமைப்படுத்தப்பட்ட வார்த்தைகளில் ஒருபோதும் குறிப்பிடவே இல்லை என்கிறார் ஆசிரியர்.

நவீன கால இந்திய வரலாற்றில் கால் நூற்றாண்டுக்கு முன்பு நடந்த எந்த குடியுரிமை போராட்டத்திற்கும் மகத் நகரில் நடைபெற்ற போராட்டம் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது.

உலக வரலாற்றில் அதிர்வலைகளை ஏற்படுத்திய பிரெஞ்சுப் புரட்சியின் தீவிர நிகழ்வாக பாஸ்டில் சிறை தகர்ப்பு போராட்டம் நடைபெற்றது. பிரெஞ்சுப் புரட்சியுடன் மகத் போராட்டத்தை ஒப்பிட்டு அம்பேத்கர் எழுதியிருக்கிறார்.

பிரஞ்சுப் புரட்சியைப் போல் ஆளுகின்ற அரசை தூக்கி எறிந்துவிட்டு அதிகாரக் கட்டுமானத்தைத் தகர்க்க வேண்டும் என்ற இலக்கை கொண்டது அல்ல மகத் போராட்டம். பிறகு ஏன் மகத் போராட்டத்தை பிரெஞ்சுப் புரட்சியுடன் அம்பேத்கர் ஒப்பிட வேண்டும்? இரண்டுக்குமான தொடர்பு எத்தகையது என்பதை  நூலாசிரியர் தனது ஆய்வின் மூலம் நிறுவுகிறார்.

அம்பேத்கர்

1789-ம் ஆண்டு  நிலப்பிரபுத்துவத்தின் ஒடுக்குமுறைச் சின்னமான பாஸ்டில் சிறையை தகர்த்தெறிந்து விட்டு நிலப்பிரபுத்துவ முடியாட்சி பரம்பரையின் மரணத்தையும், குடியரசின் உதயத்தையும் கண்டது பிரஞ்சு புரட்சி.

பிரெஞ்சு புரட்சியின் முக்கியக் கோட்பாடான சுதந்திரம்- சமத்துவம்- சகோதரத்துவம் என்ற மனித விழுமியங்களுக்கும்  மகத் போராட்டத்திற்கும் ஒற்றுமை உள்ளது என்கிறார் ஆசிரியர்.

அடிமைத்தனத்தை விடவும் படு மோசமானது தீண்டாமை. சுதந்திரமான ஒரு மனிதராக தன்னைத்தானே விடுவித்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பு ஒரு அடிமைக்கு கிடைக்கும். ஓர் அடிமையின் உணர்வு, அடிமைத் தனத்திற்கு எதிராக  கலகம் செய்யத் தூண்டி உந்தித் தள்ளும் வாய்ப்பு உள்ளது.

வருணாசிரம நெறிப்படி, ஒரு சாதிய மனிதப்பிறவி தனது விதியிலிருந்து ஒருபோதும் தப்பிச் செல்ல முடியாது. ஒருமுறை அடிமையானவர் எல்லா காலங்களிலும் அடிமையே என்பது அடிமைகளின் விதி அல்ல, ஆனால் தீண்டப்படாதவர்கள் எல்லா காலங்களிலும் தீண்டப்படாதவராகவே இருத்தப்பட்டிக்கின்றனர்.

இனவாதமும் சாதியவாதமும் என்ற கட்டுரை, இனம் மற்றும் சாதி உறவுகளின் கட்டமைப்புகள் ஒரே அளவுகோலால் அளவிட முடியாதவை என்பதையும் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டையும் தெளிவாக விளக்குகிறது.

ஒரு மாபெரும் வலிமை படைத்த மற்றவர்களை அச்சுறுத்தக் கூடிய சாதி ஆதிக்க அமைப்புக்கு எதிராக சமூகத்தின்  கடைசி அடுக்கில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் கலக எழுச்சியை மகத் குறியீடாக வைத்தது.

இந்திய வரலாற்றில் சாதிஅமைப்பு முறைக்கு எதிரான போராட்டங்கள் காலனிய ஆட்சிக் காலத்தில்தான் முளைவிடத் தொடங்கின. காலனிய ஆட்சிக் காலத்தின் சாதகமான சூழ்நிலையில் நகர்புற தலித்துகளின் ஒரு பிரிவினர் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றனர். பொருளாதாரம் சார்ந்த வாய்ப்புகள் பெற்று, பொருளாதார ரீதியான உயர்வு அடைந்ததன் விளைவாக சாதி ஆதிக்கத்திற்கு எதிராகவும்,  தீண்டாமை கொடுமைக்கு எதிராகவும் போராட முற்பட்டனர்.

மகத்தின் போராட்ட முன்னணி வீரர்களின் வாழ்க்கை சித்திரங்கள் பின்னிணைப்பாக நூலாசிரியர் தொகுத்துத் தந்துள்ளார். மாபெரும் தலித் மக்களின் உரிமை போருக்குப் பின் உள்ள போராளிகளின் வாழ்க்கை குறிப்புகள் போராட்ட உணர்வுக்கு உத்வேகம் ஊட்டுவதாக உள்ளது.

வாழ்க்கையின் அனைத்து தளங்களிலும் பின்னிப் பரவியுள்ள சாதிப் படிநிலை அமைப்பை ஒட்டுமொத்தமாக ஒழிப்பது நடக்காமல் இந்திய நாட்டை ஜனநாயக சமூகமாக மாற்றும் பணி நிறைவடையாது.

தீண்டாமை என்கின்ற மனிதகுல விரோத கொடுமை எப்படி தோன்றியது? என்பது குறித்த அறிவும் தெளிவும் சாதி ஒழிப்பு செயல்பாட்டிற்கு நமக்கு தேவை. சாதி என்பது சமூகத்தின் மேல் கட்டுமானம் என்ற கருதுகோள்  என்றும் உண்மையில்லை.

சாதியப் படிநிலை அமைப்பு சமுதாயத்தின் அடித்தளத்திற்கும்,  மேல் கட்டுமானத்திற்கும் தொடர்புடைய விஷயம். பொருளியல் ரீதியான உற்பத்தி உறவாகவும், கருத்தியல் நிலையாகவும் சாதியப் படிநிலை அமைப்பு விளங்குகிறது. அந்தக் கருத்தியலை வருணாசிரம சதுர்வர்ண முறை கோட்பாடாக பாதுகாக்கிறது.

உற்பத்தியும் நுகர்வும் உலகமயம் ஆகிவிட்டதால் நவீனமயமாக்கல் உடன்,  சமூக வளர்ச்சிப்போக்கில் சாதிப் படிநிலை அமைப்பு தானாகவே மெல்ல மெல்ல மறைந்துவிடும் என்ற புரிதலை சிலர் திட்டமிட்டு உருவாக்குகின்றனர். இது தவறானதாகும்.

இந்திய சமூக அமைப்பின் இயங்கியல் மிகவும் சிக்கலானது. இந்திய சமூக பொருளாதார அமைப்பில் நிலவுடைமை அமைப்பை தகர்த்து எறியாமல் இந்திய தரகு முதலாளித்துவம் முதலாளித்துவ அமைப்பை நிறுவுவதில் ஈடுபட்டுள்ளது.

சொல்லிக் கொள்ளப்படும் இந்திய ஜனநாயகம் அடித்தள மக்களுக்கு சம வாய்ப்புகளை வழங்கவில்லை. அம்பேத்கர் நடத்திய ஜனநாயகப் போராட்டம் இன்னும் முற்றுப்பெறவில்லை.

படிக்க :
♦ ரஜினி ரசிகர்களே ! இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை !
♦ டெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல ! வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி !

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முகவரி அற்றவர்களாக ஆக்கப்பட்டு முகங்கள் சிதைக்கப்பட்ட தலித் மக்களின் மீதான தீண்டாமைகொடுமை, வன்முறைதாக்குதல்கள் இன்றைய காலகட்டத்திலும் சற்றும் குறையாமல் நடைபெற்று வருகிறது.

மத்திய மாநில அரசுகள் கிராமப்புற முன்னேற்றத்திற்காக, வளர்ச்சிக்காக அறிவிக்கும் திட்டங்களின் பயன்கள் கிராமப்புற ஆதிக்க சாதி பணக்கார விவசாயிகளை மட்டுமே சென்று சேர்கிறது. கிராமப்புற இந்தியாவில் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் ஒடுக்கப்பட்ட நிலையிலேயே வாழ்கின்றனர்.

“இந்து மதம் கொடுமையான பயங்கரங்கள் நிறைந்த இருட்டு அறை” என்றார் அம்பேத்கர். இந்தியாவில் சாதிகள் என்ற கட்டுரையில் அம்பேத்கர் சாதியை ஒரு அகமணப் பிரிவு என்றும், அடைக்கப்பட்ட வர்க்கம் என்றும் வரையறுக்கிறார். சாதி முறைமை என்பது மரியாதையின் மேலேறும் ஏணி- வெறுப்பின் கீழிறங்கும் ஏணி என்றும் விவரித்தார்.

ஏடறிந்த வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்ட வரலாறு என்றார் மாமேதை மார்க்ஸ். இந்தியத் துணைக் கண்டத்தில் வர்க்கப் போராட்டம், சாதி எதிர்ப்பு – தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான போராட்டத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. ஒடுக்கப்பட்ட சாதி மக்களே உழைக்கும் வர்க்கம் ஆகவும், ஆதிக்க சாதிகளே சுரண்டும் வர்க்கமாகவும் இங்கு உள்ளனர். விதிவிலக்குகளாக வெகு சிலரே இருக்கின்றனர்.

இந்தியத் துணைக் கண்டத்தில் வர்க்கப் போராட்டத்திற்கு இணையாகவும் துணையாகவும் சாதி ஆதிக்க எதிர்ப்பு,  தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தை நடத்தவேண்டிய வரலாற்றுத் தேவை நம்முன் உள்ளது. நவீன பார்ப்பனியத்தை வேரறுத்து, மனிதனை மனிதனாக மட்டும் மதிக்கின்ற ஒரு சமுதாயத்தை ஏற்படுத்தும் மாபெரும் பணி பொதுவுடமையாளர்கள் முன் உள்ளது.

சாதி ஒழிப்பின் மீது அக்கறை உள்ள ஜனநாயக சக்திகள், சமூக மாற்றத்திற்காக போராடும் போராளிகள் அனைவருக்கும் இந்த நூல் ஒரு புதிய வெளிச்சத்தை காட்டும். சமூக நீதி- சாதி ஒழிப்பு போராளிகளுக்கு இந்த நூல் சிறந்த கருத்து ஆயுதமாய் பெரிதும் பயன்படும்.

 

நூல் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்
ஆசிரியர் : ஆனந்த் டெல்டும்டே

தமிழாக்கம் :  கமலாலயன்
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்
விலை : ரூ. 550/
நூல் விமர்சனம் :  எஸ் காமராஜ்

 

disclaimer

1 மறுமொழி

  1. எல்லோரும் சாதியை வைத்துதான் பிழைப்பையும் அரசியலையும் நடத்துகிறார்கள் .மேல்சாதின்னு சொல்லிக்கொள்பவனும் கீழ்சாதின்னு சொல்லிக் கொள்பவனும் சாதிங்கரதை வைத்து பாமர மக்களை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க