வம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் வட இந்தியாவில் இருக்கும் 400-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள், சமூக செயல்பாட்டு இயக்கங்கள் இணைந்து மூன்று விவசாய சட்டங்களையும் மின்சார சட்டம் 2020-ஐயும் திரும்பப் பெறக்கோரி டெல்லியை நோக்கி “டெல்லி சலோ” என்ற முற்றுகை-பேரணியை அறிவித்திருந்தனர்.

இதனை ஒட்டி பஞ்சாப், ஹரியானா, உத்தர்காண்ட், உத்திரப் பிரதேசம், இராஜஸ்தான் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி புறப்படுதற்கு தங்களைத் தயார்படுத்தியும் அணிதிரட்டியும் வந்தனர். 400-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து அமைத்திருந்த கூட்டமைப்பின் மூலம் பிரதமருக்கு எழுதியிருந்த கடிதத்தில், அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய டெல்லிக்குள் அனுமதிக்குமாறு கேட்டிருந்தனர். விவசாயிகளுடன் மோதல் அணுகுமுறையைக் கைவிடுமாறும் ராம்லீலா மைதானத்தில் கூடுவதற்கு அனுமதிக்குமாறும் விவசாய சங்கத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும், “உங்கள் அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்களுடன் மூன்று விவசாய சட்டங்கள், மின்சாரச் சட்டம் 2020 திருப்பப் பெறுவது தொடர்பான எங்களது கோரிக்கை குறித்து நேர்மையான விவாதத்தை நடத்துவதற்கு இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளையும் அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்தக் கடிதத்தில் பிரதமருக்கு தெரிவித்திருந்தனர்.

படிக்க :
♦ விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை !
♦ இன்றைய பாசிச நிலை குறித்து மோடியின் முன்னாள் பக்தர் !

இருப்பினும் விவசாயிகளை ஒடுக்க வேண்டும் என்ற பாசிசத் திமிருடன்தான் மோடி அரசு விவசாயிகள் டெல்லியில் நுழைவதற்கு அனுமதி மறுத்தது. விவசாய சட்டங்கள் மூலமாக தங்களது வாழ்வாதாரமே பறிபோய்விடும் என்பதை உணர்ந்த விவசாயிகள் பேரணிக்கு அனுமதி மறுத்ததற்காக கவலைப்படவில்லை.

விவசாயிகள் டெல்லியில் குவிவதைத் தடுக்கும் வகையில், போராட்டத்தை ஒடுக்கும் நோக்கத்தில், அரியானா, உத்தர்காண்ட், உத்திரப் பிரதேச மாநிலங்களில் ஆட்சி புரியும் பா.ஜ.க. கூட்டணி அரசுகள் முன்னதாக விவசாய சங்கத் தலைவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தன. இருப்பினும் இந்த கைதுகளை கண்டு விவசாயிகள் அஞ்சவோ, பின்வாங்கவோ இல்லை.

நவம்பர் 26 அன்று அதிகாலை முதலே ஹரியானா, பஞ்சாப், உத்திரப் பிரதேசம், உத்தர்காண்ட், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு பல திசைகளில் இருந்து விவசாயிகள் பேரணியாக வரத்தொடங்கினர். டிராக்டர், லாரி மற்றும் இருசக்கர வாகனங்களில் இலட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி புறப்பட்டனர்.

ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் தலைமையில் உத்திரப் பிரதேசம் வழியாக வந்த விவசாயிகள் போலீசால் தடுக்கப்பட்டதை அடுத்து பிளாஸ்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு அங்கேயே நிரந்தரமாக அமர்ந்தனர். டெல்லி-அரியானா, பஞ்சாப்-அரியானா ஆகிய இரண்டு எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் நுழைவதற்கு போலீசார் ஏற்படுத்தியிருந்த தடைகளை அகற்றி, டெல்லிக்குள் நுழைவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசு தடையை ஏற்படுத்திய போது அரியானா விவசாயிகளின் ஒருபிரிவினர் டெல்லியின் எல்லையில் உள்ள பானிபட் சுங்க வளாகத்தின் அருகிலும், பஞ்சாப் விவசாயிகள் கர்னாலில் முகாமிட்டனர்.

இதனால், ஆங்காங்கே முகாமிட்டிருந்த ராஜஸ்தான் மற்றும் உத்திரப் பிரதேச விவசாயிகள் பிரதம மந்திரி மோடியின் உருவ பொம்மைகளை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின்னர் பானிபட்-சோனிபட் எல்லையில் குவிந்திருந்த விவசாயிகள் போலீசின் தடையரண்களை வீசியெறிந்தும், அகற்றியும் டெல்லியை நோக்கி விரைந்தனர். இதேபோல கானூராய் பகுதியில் முகாமிட்டிருந்த விவசாயிகள் பஞ்சாப் – அரியானா எல்லையில் இருக்கும் தடையரண்களை அகற்றுவதற்காக போலீசுடன் நேருக்கு நேர் மோதி முன்னேறினர்.

அரியானா-டெல்லி எல்லையில் சின்குனூர் பகுதியில் முகாமிட்டிருந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முயற்சித்தது போலீசு. ஆனால், கண்ணீர் குண்டுகளை வீரத்துடன் எதிர்க்கொண்டு போராடினர். பஞ்சாப் அரியானா எல்லையில் போலீசு அனுமதி மறுத்ததால் அங்கு குவிந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், ஒரு கட்டத்தில் போலீசார் எழுப்பியிருந்த தடையரண்களை தூக்கியெறிந்து முன்னேறினர்.

கண்ணீர் புகை குண்டுகளை வீசுதல், குளிர்ந்த தண்ணீரை விவசாயிகள் மீது பீய்ச்சி அடித்தல், தடியடி நடத்துதல், தடுப்பரண்களை அமைத்து விவசாயிகள் நுழைய விடாமல் தடுத்தல், முள்வேலிகளை அமைத்து தடுத்து நிறுத்துதல், புல்டோசர்களைக் கொண்டுவந்து விவசாயிகளை முன்னேறவிடாமல் தடுத்தல்; சாலைகளில் பாறைகளை போட்டு விவசாயிகள் வரும் வாகனங்கள் செல்லவிடாமல் தடுத்தல், சாலைகளில் பள்ளம் தோண்டி வைத்தல் போன்ற போலீசின் அனைத்து அடக்குமுறைகள், தடைகளையும் மீறி இலட்சக்கணக்கில் விவசாயிகள் அணிதிரண்டு வந்தனர்; போலீசின் தடைகள் அனைத்தையும் முறியடித்தனர்; பல இடங்களில் போலீசுடன் மோதலில் ஈடுபட்டனர்.

பஞ்சாபில் இருந்து வந்த விவாயிகள் குர்தா-பைசாமா அணிந்த விவசாயிகள் தலையில் பச்சை வண்னத்தில் டர்பன் அணிந்திருந்தனர். மற்ற பகுதிகளில் இருந்து செங்கொடியையும் விவசாய சங்கக் கொடிகளையும் ஏந்தி விவசாயிகள் வந்தனர்.

பஞ்சாபில் இருந்து அரியானா எல்லைக்குள் நுழைய முயன்ற விவசாயிகளை அரியானா போலீசு தடுத்து நிறுத்திய போது “நாங்கள் எல்லாம் டெல்லியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். அரியானா அரசு எங்களைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கிறது. அவர்கள் எங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு என்னவேண்டுமானாலும் செய்ய முயற்சிக்கலாம், நாங்கள் துப்பாக்கிக் குண்டுகளை எதிர்கொள்வதற்கும் தயாராக இருக்கிறோம். என்ன நடந்தாலும் எங்களுக்கு பொருட்டல்ல, நாங்கள் டெல்லியை அடைந்தே தீருவோம்” என்று அவர்கள் ஆவேசமாகத் தெரிவித்தனர்.

இலட்சக்கணக்கில் விவசாயிகள் தொடர்ந்து திரள்வதைக் கண்டு அஞ்சிய மோடி அரசு, விவசாயிகளை டெல்லிக்குள் விட்டு, சில மைதானங்களில் வைத்து அவர்களைக் கைது செய்துவிடலாம் என்று கருதியது. ஆனால், டெல்லியில் ஆளும் கெஜ்ரிவால் அரசு அதற்கு ஒத்துழைக்க மறுத்ததால் இந்தத் திட்டம் பயனளிக்கவில்லை. விவசாயிகள் கோரிய மைதானத்திற்கு அனுமதி கொடுக்காமல் வேறு இடங்களைக் காட்ட முயற்சித்தது. அதனையும் விவசாய சங்கத் தலைவர்கள் ஏற்கவில்லை.

விவசாயிகளின் போராட்டத்திற்கு சமூகத்தின் அனைத்து பிரிவு உழைக்கும் மக்களும் தங்களது ஆதரவை வழங்கத் தொடங்கினர். டெல்லியில் இருக்கும் முசுலீம்கள் மசூதிகளில் விவசாயிகளுக்கு உணவு தயாரிக்கப்பட்டது. பல இடங்களில் விவசாயிகளுக்கு தங்குமிடங்களை மக்கள் வழங்கினர். “அன்னதாதா” என்று விவசாயிகளை மரியாதையாகவும் உயர்வாகவும் மதிப்பு தெரிவித்தனர்.

விவசாயிகள் இலட்சக்கணக்கில் குவிந்ததை அடுத்து டெல்லி முதல்வரான கெஜ்ரிவாலும் மேற்குவங்க முதல்வாரான மம்தா பேனர்ஜியும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அறிவிப்பை வெளியிட்டனர்.

நவம்பர் 26-ம் தேதி அகில இந்திய தொழிற்சங்கங்கள் மோடி அரசின் தொழிலாளர் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும் பொதுத்துறைகள், வங்கிகளை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதை எதிர்த்தும் நடத்திய அகில இந்திய வேலை நிறுத்தம் இந்த விவசாயிகள் போராட்டத்திற்கு மேலும் உத்வேகத்தை அளித்தது.

விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டத்தின் ஒரு பகுதியாக, விவசாய சட்டங்களையும் மின்சார சட்டம் 2020-ஐயும் திரும்பப் பெறக்கோரி வடமாநிலங்களின் பல பகுதிகளில் விவசாயிகள் போராட்டங்களில் இறங்கினர். குறிப்பாக, பா.ஜ.க-வின் செல்வாக்கிற்கு உட்பட்ட ‘பசுவளையம்’ என்றழைக்கப்படும் மாநிலங்களின் விவசாயிகள்தான் இதில் முக்கியமான பங்காற்றினர்.

உத்திரப் பிரதேசத்தில், லக்னௌ உள்ளிட்ட பல இடங்களில் விவசாயிகள் குடில் அமைத்து தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர். முசாபர் நகர், மீரட், பாக்பட், கௌதம் புத்நகர், ஜான்சி, ஜலௌன்  போன்ற இடங்களில் போராட்டங்கள், சாலை மறியல்கள் நடந்து வருகின்றன. டெல்லியை நோக்கி குடும்பம் குடும்பாகவும் பெண்களும் திரண்டு முகாமிட்டுள்ளனர். விவசாய சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை ஊர் திரும்பப் போவதில்லை என்று முழங்குகின்றனர்.

000

மங்கா சாராய் பகுதியில் இருந்து வந்திருக்கும் செக்சாகெனரியன் பல்கர் சிங் என்ற விவசாயி, “எங்கள் குரல் எதிரொலிக்கும் வரை நாங்கள் டெல்லியிலேயே இருப்போம். இது எங்களுக்கான போராட்டம் மட்டுமல்ல, எதிர்கால தலைமுறையினருக்கான போராட்டம். இன்று நான் போராடத் தவறினால், நான் எனது குழந்தைகளின் முகத்தையும் அவர்களது சந்ததிகளின் முகத்தையும் பார்க்க முடியாது. நாங்கள் இந்த தர்ணாவை நடத்துவதில் உறுதியாக இருக்கிறோம். இதற்காக ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் 20-25 பேர் அணி அணியாக திரண்டு வந்திருக்கிறோம். இதற்காக 20 நாட்களுக்கும் மேலாக கிராமங்களில் தங்கி வேலை செய்தோம். ஒருகால், இப்போது செல்லும் விவசாயிகள் சொந்த ஊருக்கு செல்ல விரும்பினால் இன்னொரு அணியினர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வருவார்கள்” என்று தெரிவித்தார்.

தனது தந்தையுடன் டெல்லியை நோக்கிச் சென்று கொண்டிருந்த நவ்ஜித் சிங் என்ற 15 வயது பள்ளி மாணவன், புதிய விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருக்கின்றன என்பதில் அவன் உறுதியாக இருந்தான். “நான் எவ்வளவு நாட்கள் தேவையோ அவ்வளவு நாட்கள் டெல்லியிலேயே தங்கியிருப்பேன். எனது பள்ளி திறந்து நான் சென்றாலும் தேவைப்படும் போது திரும்பவருவேன். நான் எனது குடும்பம் மற்றும் விவசாயிகளுடன் யுத்தக் களத்தில் இருக்கிறேன். இன்று எங்களுக்கு வந்திருக்கின்ற இந்த பிரச்சினைக்கு எதிராக நான் போராடாவிட்டால், வேறு யார் போராடுவார்கள்?” என்று அம்மாணவன் வினவுகிறான்.

நவ்ஜித் சிங்கைப் போலவே பல இளைஞர்கள் மாணவர்கள் போராட்டத்தில் மிகவும் ஆர்வமாக இருந்தனர். மத்திய அரசுக்கு எதிரான ஒரு நீண்ட போராட்டத்திற்கு அவர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

சுர்ஜித் கவுர் என்ற 85 வயது மூதாட்டி விவசாயி பெண்களை அணிதிரட்டிய அனுபவத்தை பி.பி.சி. தொகுப்பறிக்கை விளக்குகிறது. அந்தப் பகுதியில் இருக்கும் விவசாய பெண்களை வீடுவீடாக சென்று அணிதிரட்டுகின்றனர். டெல்லியிலேயே பல நாட்கள் தங்கி போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வீடுவீடாக சென்று உணவுதானியங்கள், பொருட்களை சேகரிக்கின்றனர். இந்தப் போராட்டம் நமது நிலத்தையும் வாழ்வாதரத்தையும் காப்பதற்காக நடக்கும் போராட்டம் என்று அந்த பகுதியில் உள்ள இளம்பெண்களுக்கு விளக்குகின்றனர் இந்த விவசாய சங்கத்தின் பெண்கள். “இன்று நாங்கள் போராடுகிறோம்; நாளை எங்களது மகள்களும் மருமகள்களும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். எங்களது நிலத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் வரை ஊர் திரும்ப மாட்டோம்” என்று முழங்குகிறார் சுர்ஜித் கவுர்.

மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், விவசாயிகள் போராட்டம் அதிகரிக்கத் துவங்கிவிட்டது. குறிப்பாக, கடந்த ஆண்டு, குறைந்தபட்ச ஆதரவிலை, நில கையகப்படுத்தும் சட்டம் போன்றவற்றிற்காக அப்போது விவசாயிகள் போராட்டத்தை நடத்தினர். இலட்சம் விவசாயிகள் டெல்லியை நோக்கி அணிதிரண்டனர். உடனடியாக மோடி அரசு பணிந்தது.

இப்போது, மூன்று விவசாய சட்டங்கள் மற்றும் மின்சார சட்டம் 2020 ஆகியவை விவசாயிகளை முற்றிலுமாக விவசாயத்தை விட்டு விரட்டியடித்துவிடும் என்று உணர்த்தியுள்ளது. அதனால், பா.ஜ.க. செல்வாக்குள்ள மாநிலங்களிலேயே பா.ஜ.க.விற்கு எதிராக விவசாயிகள் திரும்பியுள்ளனர் என்பதை நாம் உணர வேண்டும். மத ரீதியாக உழைக்கும் வர்க்கத்தை பிரித்துவிடலாம் என மனப்பால் குடித்துக் கொண்டிருந்த மோடிக்கு, வர்க்கரீதியா அணிதிரண்டு மரண அடியைக் கொடுத்துள்ளனர் விவசாயிகள்.

பா.ஜ.க. ஆளும் அரியானா, உத்திரப் பிரதேசத்தில் இருந்து இலட்சக்கணக்கான விவசாயிகள் மோடி அரசுக்கு எதிராக அணிதிரள்வதை அந்த மாநில அரசுகளாலும் இந்து மதவெறியர்களாலும் தடுக்க முடியவில்லை.

பாசிச மோடி அரசை உலுக்கியிருக்கும் விவசாயிகளின் இந்தப் பேரெழுச்சி, தன்னெழுச்சியாக உருவானது அல்ல. வர்க்கக் கோரிக்கைக்காக வர்க்கரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி இது. நவம்பர் 26 அன்று நடத்தப்பட்ட தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கம் நேரடியான ஆதரவு தருவதும், விவசாயிகளின் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் நேரடியாக ஆதரவு தருவதும் ஆளும்வர்க்கத்தை அச்சமுறச் செய்திருக்கிறது.

பாசிசத்தை வீழ்த்துவதையும், பணியச் செய்வதையும் – கட்சிகளுக்கிடையிலான ஐக்கியம் என்பதைத் தாண்டி – வர்க்கரீதியிலான அணிதிரட்டலின் மூலம்தான் சாதிக்க முடியும் என்பதை விவசாயிகளின் இந்தப் போராட்டம் நிரூபித்துள்ளது.

மகேஷ்

செய்தி ஆதாரம் : The Wire, பிபிசி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க