“இதை உன்னால் புரிந்துக்கொள்ள முடியாது, நீ இன்னும் சிறுவன்தான். அதனால் உன் வேலையை பார்”, நான் சிறுவயதிலிருந்தே கேட்டு வளர்ந்த சொற்றொடர்கள். இவை பெரும்பாலும் அரசியல் அல்லது மதம் சார்ந்த உரையாடல்களின்போது வெளிவரும். மதமும் அரசியலும் நமது வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவை.
நான் பள்ளிக்கூடத்தில் படித்த உன்னதமான உலகத்தைப் போன்றுதான், உண்மையான நமது உலகமும் இருக்குமென நினைத்து வளர்ந்தேன். வட்டார, மாநில, மத்திய அரசுகள், சுமூகமாக இயங்கி கொண்டிருப்பதாகவும், அது புத்தகத்தின்படி மக்களுக்காக இயங்குவதாகவும் நம்பினேன்.
அது உண்மையென்று நான் எவ்வளவு நம்பினேன் தெரியுமா!
இரண்டாம் முறை மன்மோகன் சிங் பிரதமரான போதுதான் மெய்-உலக அரசியலுக்கான அறிமுகம் எனக்கு கிடைத்தது. எனது பெற்றோர்கள், தாத்தா, பாட்டி, அத்தை, மாமா ஆகியோர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நடந்த பல்வேறு மோசடிகளைப் பற்றி பேசியது எனக்கு நினைவில் இருக்கிறது.
உன்னதமான அரசியல் குறித்த எனது எண்ணக் குமிழி வெடித்த தருணம் அதுதான். அப்போதிலிருந்து அரசியலைப் பற்றி யார் எதைப் பேசினாலும் கவனிக்க ஆரம்பித்தேன். அப்போது சுற்றிலும் ஒருமித்த கருத்துதான் வெளிவந்தது – அது, காங்கிரஸ் ஊழல் அரசியல்வாதிகள் நிறைந்த கட்சி, மன்மோகன் சிங் ஒரு காந்தி குடும்பக் கைப்பாவையே என்பது போன்ற கருத்துகள்தான் அவை.
இந்த கூற்றின் உண்மைத் தன்மையைக் குறித்து எனக்கு எந்த சந்தேகமும் ஏற்படாத அளவிற்கு இதனை நான் பல நேரங்களில் பல இடங்களில் கேட்டிருக்கிறேன்.. கேள்விகளுக்கு அப்பாற்பட்ட நேர்மை கொண்ட மனிதர் என்று தற்போது நான் நம்பும் சிலர் மீது எனக்கு அந்த சமயத்தில் மரியாதையே இல்லை! ஏனெனில் என்னால் அந்த அளவிற்குத் தான் விசயங்களைப் பார்க்கமுடிந்தது.
‘எல்லா அரசியல்வாதிகளும் ஊழலில் ஊறிப்போயிருந்தால், நம் நாட்டிற்கு யார்தான் தலைவராக வருவார்?’ என்று எனது தாயிடம் நான் கேட்டது இன்றும் நினைவில் இருக்கிறது.
இந்தியாவின் அரசியல் போக்கையே மாற்றிய தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் கவர்ந்திழுக்கும் பேச்சினூடாக நம் அனைவருக்கும் இதற்கான பதில் வந்தது. நரேந்திர மோடியின் அபார வெற்றிக்கு மிகப்பெரிய பங்களிப்பு செலுத்தியதில் ஒன்று அவரது பேச்சுத்திறன்தான் என்பதை நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். இது ராகுல் காந்தியிடம் இல்லை.
நம்மைக் கவர்ந்திழுக்க அவர் பயன்படுத்திய அழகான வார்த்தைகளாலும், அவரது வசீகரத்தாலும் நாம் அனைவரும் கவர்ந்து இழுக்கப்பட்டோம். அவர் நம்மை நண்பர்களே, சகோதர சகோதரிகளே என்றுதான் அழைத்தார். அவர் நம்பகமானவர்தான் என்றும் அவரது பேச்சைக் கேட்டு பின்பற்றினால் நாம் விரும்பும் அனைத்தும் நமக்கு கிடைக்குமெனவும் அவர் நம்மை உணரவைத்தார்.
கிரேக்கப் புராணங்களில், ”தங்களது கவர்ச்சிகரமான பாடல், இசையால் ‘மாலுமிகளைக் கவர்ந்திழுத்து கப்பலை விபத்துக்குள்ளாக்கும் சைரன் என்ற ஆபத்தான உயிரினத்தையே நமது பிரதமர் தற்போது எனக்கு நினைவுபடுத்துகிறார்.
“ஆப் கி பார், மோடி சர்க்கார்” என்ற சொல்லை அனைவரின் உதடும் உச்சரித்தது. இறுதியாக “அச்சே தின்” (நல்ல நாளுக்காக) முழு இந்தியாவும் காத்திருந்தது. ஒருமுறை பள்ளியில் நடந்த கட்டுரை போட்டியில், அரசியலுடன் துளியும் சம்பந்தமில்லாத ஒரு தலைப்பில் எனது கட்டுரையின் இறுதியில் “ஆப் கி பார், மோடி சர்க்கார்” என்ற வாசகத்தை எழுதினேன். (பரிசு வெல்வதற்கு எந்த ஒருவகையிலும் அது உதவி புரியவில்லை)
தேசத்தின்மீது மோடி ஏற்படுத்திய விளைவு இதுவே.
♦♦♦
படிக்க :
♦ சுயசார்பு இந்தியா : மோடியின் மற்றொரு பித்தலாட்டம் !
♦ மோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான் !
மே 26, 2014 அன்று நரேந்திர மோடி நமது நாட்டின் பிரதமராக பதவியேற்றபோது, நம் நாட்டின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் வெற்றிகளில் ஒன்றின் பின்னணியில் அது புதியதொரு யுகத்திற்குக் கட்டியம் கூறியது. ஆறு ஆண்டுகளுக்கு பிறகும் இன்னமும் மீட்கப்பட முடியாத அளவிற்கு காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக ஒழித்துக்கட்டப்பட்டது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் புதிய தலைவரிடமிருந்து சிறந்த விஷயங்களை உலகம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது.
அந்த சிறுவன், ஏமாற்றமடைந்தானா?
முதல் பதவி காலம் சர்ச்சையில் சிக்கியது, அப்போதும் அவரைப் பின்தொடர்ந்த பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மாறவில்லை. உண்மையில் அது அதிகரித்தது. அதே நேரத்தில் எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி மற்றும் தலித்துகள் போன்ற சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடும் அதிகரித்தது. குறிப்பாக முஸ்லீம்கள் குறி வைக்கப்பட்டனர்.
மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையால், நாட்டிலுள்ள முஸ்லீம் குடிமக்களை கும்பல் படுகொலை செய்வது அதிகரித்தது. இந்தியாவை பாஜக எந்த திசை நோக்கி நகர்த்தி செல்கிறதென என்னை உட்பட அவரது (மோடி) ஆதரவாளர்கள் சிலர் கேள்வி கேட்கத் தொடங்கிய முதல் தருணம் இதுதான். மத நம்பிக்கைகள் ஒருபுறம் இருக்க, தனியொரு பிரிவினர் எதிர்க்கும் ஒரே காரணத்திற்காக, மக்கள் என்ன சாப்பிட வேண்டும் – சாப்பிடக் கூடாதென ஆணையிடுவது ஜனநாயக விரோதமானது. மாட்டிறைச்சிக்கு தடை விதித்தது, வன்முறை மற்றும் இன கலவரங்கள் அதிகரிப்பதற்கே வித்திட்டது. 2015 முதல் 2019 செப்டம்பர் மாதங்களுக்கிடையில் கும்பல் படுகொலையில் 113 பேர் கொல்லப்பட்டனர் என்பதனை 2019-ஆம் ஆண்டில் குயிண்ட் இணையத்தளம் வெளியிட்டது.
மோடியும், பாஜகவும் ஜிங்கோயிசம் (Jingoism) மற்றும் பின்புலம் தொடர்பான மற்றும் சம்பந்தமற்ற கேள்விகள் (Whataboutery) மூலம் வெகுஜனங்களை அணிதிரட்டவும், ஓட்டு வங்கியைப் பராமரிக்கவும் செய்தனர். ஜிங்கோயிசம் என்பது “தேசிய நலன்களை பாதுகாப்பதற்கான அடாவடி கொள்கைகளின் வடிவத்திலான தீவிர தேசியவாதமாகும். அதே, ஒரு குற்றச்சாட்டை அல்லது மாற்று கருத்தை, எதிர் குற்றச்சாட்டு அல்லது தொடர்பில்லாத விஷயங்கள் மூலம் திசைத்திருப்பும் நுட்பமே ‘Whataboutery’. (வாட்டபோட்டரி – வடக்கு அயர்லாந்து பிரச்சினைகளின் அரசியல் விவாதத்தின் போது முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. இஸ்ரேலிய-பாலஸ்தீன மோதல்களின் தோற்றம் பற்றிய விவாதங்களிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்டது).
இந்த சூழ்ச்சி முறையுடன், ஆளும் கட்சி பயன்படுத்த விரும்பும் மற்றொரு உத்தி ‘நாம்’ எதிர் ‘அவர்கள்’ என்பதுதான். உங்களையும் உங்களது சித்தாந்தத்தையும் மக்கள் பின்பற்றுவதற்கான விரைவான ஒரே வழி ஒரு பொதுவான எதிரிக்கு எதிராக மக்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பதாகும். அப்படியொரு எதிரி இல்லையென்றால், மக்கள்தொகையில் ஒரு பகுதியினரை அரக்கர்களாக்கி அவர்களை “தேச நலனின்” எதிரிகளாக சித்தரிப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது.
இன்று பல இந்தியர்களுக்கு முக்கிய எதிரி, இடதுசாரிகள் மற்றும் தாராளவாதிகள் தான். அவர்களுக்கு கடந்த 2014 ஆண்டிலிருந்து ஆயிரம் புனைப்பெயர்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆட்டு மந்தை மனநிலை, பழமைவாத வலதுசாரிகளின் குருட்டு நம்பிக்கைக்கு இணங்காத, தலைவரை கேள்வி கேட்கும் தைரியம் உள்ளவர்கள் எவரும் தேச விரோதி என போற்றப்படுவர். கொலை மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்களால் தூற்றப்பட்டனர். பின்னர் பாகிஸ்தான் அல்லது சீனாவிற்கு செல்லுமாறு மிரட்டப்பட்டனர்.
பாஜக-வின் இந்துராஷ்டிரிய சித்தாந்தம் மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கையும் (RSS) எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அசிங்கப்படுத்தப்பட்டனர், மிரட்டப்பட்டனர், கைது செய்யப்பட்டனர், கடுமையாகத் தாக்கப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர். அப்பேர்ப்பட்ட குற்றவாளிகளை இந்த அரசாங்கம் ஆதரவளித்து பாதுகாத்து வருகிறது. அவர்களில் சிலரை சம்பளப் பட்டியலில் கூட வைத்திருக்கிறது. தங்களது பேச்சுரிமையையும், அடிப்படை பகுத்தறிவு சிந்தனையையும் பயன்படுத்தி நம் நாட்டின் பிரதமரை கேள்வி கேட்பவர்களைத் தேடி அச்சுறுத்துகிறது பாஜகவின் ஐ.டி. பிரிவு.
இப்போது நான் எழுதும் இந்த கட்டுரை வெளியானதும் என்மீது கட்டவீழ்த்துவிடப்படும் வெறுப்பினை வியப்புடன் எதிர்பார்க்கிறேன்.
அரசாங்கத்தின் மிகப்பெரிய தவறு, அது உந்தித்தள்ளும் வெறுப்புப் பிரச்சாரமோ, மற்றவர்களையும் அதனை முன்னெடுக்க கற்றுக் கொடுப்பதோ அல்லது நமது தொண்டைக்குழியில் இந்துத்துவாவை திணிக்கப்படுவதோ அல்ல. என்னை பொறுத்தவரை, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை அமைதி வழியில் எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீதான கொடூரத் தாக்குதலையே அரசாங்கம் செய்த மிகப் பெரிய தவறென நான் நினைக்கிறேன்.
ஜாமியா மிலியா, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு கல்வி நிலையங்களில் நடந்த வன்முறை சம்பவங்கள், ஐக்கிய முற்போக்கு கூட்டணியை கவிழ்ப்பதற்கு முக்கியப் பங்களிப்பு செய்த அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தைப் போன்ற மிகப்பெரிய போராட்ட இயக்கத்தைத் தூண்டுவதற்கு உதவின.
இவ்விவகாரங்கள் பல இடங்களுக்கு விரைவாக பகிரப்பட்டன. இது இந்தியாவின் அடித்தளத்தை உருவாக்கும் நிறுவனங்களை முறையாக அழிக்க செயல்பட்டுவரும் ஒரு தலைவர் அல்லது ஒரு கட்சியின் மீது தாங்கள் வைத்திருந்த விசுவாசத்தை மறுபரிசீலனை செய்ய பலருக்கும் வழிவகுத்தது.
படிக்க :
♦ பயங்கரவாதிகளுக்கு உதவிய தேவேந்தர் சிங்கிற்குப் பிணை : இதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி !
♦ ஜாமியா பல்கலை மாணவர்கள் மீது இந்துத்துவக் கிரிமினல் துப்பாக்கிச் சூடு ! ஒரு மாணவர் படுகாயம் !
தேசிய பாரம்பரியத்தைக் கண்டு பெருமைப்படுவதாகக் கூறிக்கொள்ளும் இந்த தலைவர்தான், பகத்சிங் போன்ற சுதந்திரப் போராளிகள் செய்ததைப் போல செய்ய துணிந்தவர்களையும், அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேள்வி கேட்பவர்களை சிறையிலடைக்க சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம்(ஊபா) போன்ற கடுமையான சட்டங்களைப் பயன்படுத்துபவர்.
பிரதமரின் விசிறியாக இருப்பவர்கள் அமர்ந்து கவனிக்க – கொரோனா போன்ற பெருந்தொற்று சமயத்திலும்கூட பெண் செயற்பாட்டாளரை அவர் கர்ப்பிணி என்றும் பாராமல், ஜாமீன் மறுத்து சிறையில் அடைத்ததில் இருந்து, பட்டப்பகலில் டெல்லி போலீசார் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஆயுதங்களை வைத்து கலவரம் செய்த கலவரக்காரர்களை விடுவித்தது போன்ற – எண்ணற்ற சம்பவங்கள் பல உள்ளன.
இவை அனைத்தும் நம் நாட்டில் நடந்து வரும் தவறுகளையும், முழு அமைப்பும் நிர்வாகமும் எவ்வாறு உடைக்கப்படுகின்றன என்பதற்கான அறிகுறியாகும். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் இதனை அக்கறையின்மையுடன் பார்த்து வருகிறோம். “பக்ரே கி அம்மா”வில் (Bakre Ki Amma) கவுரவ் காட் மிகச் சரியாக சித்தரித்துள்ளதைப் போல நாம் மற்றவர்களின் துன்பங்களைக் கண்டும் காணாத உணர்ச்சியற்றவர்கள் ஆகிவிட்டோம்.
அரசாங்கத்திற்கு எதிராக கோபம் அதிகரித்து வரும் நிலையிலும், பாஜக ஆட்சியை ஆதரிக்கும் (எனது குடும்ப உறுப்பினர்கள் உட்பட) பலர் இருக்கத்தான் செய்கின்றனர். அத்தகையவர்கள் தொடுக்கும் பொதுவான வாதங்கள் ரிஷிமூலம் தேடி கேள்விகேட்கும் வழிமுறைகளிலும் சம்பந்தமற்றவைகளைக் கோர்த்துக் கேள்வி கேட்பதிலும் உள்ளன. குறிப்பாக ‘காங்கிரஸ் பல ஆண்டுகளாக சிறுபான்மையினரை ஆதரித்து வந்தது. அப்படியிருக்க பாஜக ஏன் பெரும்பான்மையினரை ஆதரிக்கக் கூடாது?’ என கூச்சலிடுகின்றனர்.
ஒரு தவறான செயலுக்கு எதிரான மற்றொரு தவறான செயல் என்றும் சரியானதாக மாறாது, எந்தவொரு சமூகத்திலும் சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும். காங்கிரசின் திருப்திப்படுத்தும் அரசியலுக்காக வெறுத்த அதே மக்கள்தான், இப்போது பாஜக-வை நேசிக்கிறார்கள். பல தசாப்தங்களாக காங்கிரஸ் செய்துவரும் தவறுகளை தற்போது பாஜக மீண்டும் மீண்டும் பெரிய அளவில் செய்து வருவது தவறுகளை சரி செய்யாது.
ஒருபுறம், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தன்னையும் தனது கொள்கைகளையும் எதிர்த்து கறுப்புக் கொடியும், கோஷங்களையும் எழுப்பியவர்களிடம், “நீங்கள் சொல்வதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால், அதைச் சொல்வதற்கான உங்களது உரிமையை நான் மரணிக்கும் வரை பாதுகாப்பேன்” என்று கூறினார். ஆனால் மறுபுறம், தற்போதைய பிரதமரோ, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கருத்து வேறுபாடுகளை நசுக்கவும், அரசாங்கத்தையும் தனது கொள்கையையும் கேள்விக் கேட்கும் அனைவரையும் அச்சுறுத்தி ஒடுக்கி வருகிறார்.
பெரும் தொற்றுநோய் மீதான அரசின் மோசமான நிர்வாகத்திலிருந்து தொடங்க வேண்டாம், ‘கோடி மீடியா’ (Godi Media) (மக்களின் முக்கியமான பிரச்சினையிலிருந்து அவர்களை திசைத்திருப்ப பாஜக செய்யும் உத்திகளில் ஒன்று), சீனா நேபாளத்துடன் அதிகரித்துவரும் எல்லைப் பதட்டங்கள், பல்லாண்டுகளாக போலீசின் வெறிதனத்திற்கெதிராக போராடி வரும் செயற்பாட்டாளர்களை சிறையில் அடைத்ததில் இருந்து இது தொடங்குகிறது.
துளியளவேனும் உங்களிடம் இரக்கமிருந்தால், கடந்த காலத்தில் கற்பிக்கப்பட்ட ஒரு சார்புத் தன்மையை திரும்பிப் பார்க்க விரும்பினால், நமது நாட்டில் நடக்கும் அட்டூழியங்களின் பட்டியல் முடிவுறாமல் நீண்டுக்கொண்டே போவதை பார்ப்பீர்கள்.
உங்களில் அரசியலற்றவர்களாக இருப்பவர்களுக்கு, நீங்களும் பிரச்சினையின் ஒரு பகுதிதான். நீங்கள் நீதிக்காகப் போராடுபவர்களுடன் இல்லை, அநீதியை ஏற்படுத்துபவர்கள் பக்கம் இருக்கிறீர்கள். இந்தப் போராட்டத்தில் நடுநிலை வகிக்க எந்த வழியும் இல்லை. இந்தப் போராட்டம் சமத்துவத்திற்காக மட்டுமல்ல, நமது நாட்டில் கட்டியெழுப்பப்பட்ட ஜனநாயகக் கொள்கைகளைப் பாதுகாப்பதற்காவும்தான்.
கட்டுரையாளர் : நமீத் பாண்டே
தமிழாக்கம் : வெண்பா
செய்தி ஆதாரம் : The Wire