மேக் இன் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா என மோடியால் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்ட இந்தியாக்களெல்லாம் பல்லிளித்துவிட்ட நிலையில், சுயசார்பு இந்தியா என்றொரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார், மோடி.
அவரது அரசால் திணிக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கை உள்ளூர் தொழில்களை ஒழித்துக்கட்டிவரும் நிலையில் வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பு, இந்தியாவை உலக பிராண்டாக மாற்றப் போவதாகக் கூறிக் கொள்கிறது.
சுயசார்பு இந்தியா அறிவிப்புக்கு இணையாக, எல்லைப்புறத்தில் இந்தியா சீனா இடையேயான மோதலைக் காட்டி, சீனப் பொருட்களைப் புறக்கணிக்கக் கோரும் போராட்டங்களை சங்கப் பரிவார அமைப்புகள் நடத்தி வருகின்றன. மேலும், மைய அரசின் சில அமைச்சகங்கள் சீனாவுடன் செய்துகொண்ட முதலீட்டு ஒப்பந்தங்களை ரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளன. இவற்றுக்கெல்லாம் முன்னரே, புதிய சீன முதலீடுகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது, மைய அரசு.
ஆர்.எஸ்.எஸ். கம்யூனிச வெறுப்பும், சீன எதிர்ப்பும் புரிந்துகொள்ளக் கூடியதுதான். ஆனால், சுயசார்பு பொருளாதாரக் கொள்கைக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கும் ஒட்டும் இருந்தது கிடையாது, உறவும் இருந்தது கிடையாது.
சுதேசி, சுயசார்பு என்பவையெல்லாம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்துடன் தொடர்புடைய தேசியப் பொருளாதாரக் கொள்கைகள். இந்திய மக்கள் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தபோது ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை உள்ளிட்ட பார்ப்பன இந்து மதவெறிக் கும்பல் ஆங்கிலயே ஏகாதிபத்தியவாதிகளின் காலை நக்கிக் கொண்டிருந்தது உலகமே அறிந்த வரலாற்று உண்மை.
மன்னர் மானிய ஒழிப்பையும், வங்கி தேசியமயமாக்கப்பட்டதையும் எதிர்த்த கட்சிதான் பா.ஜ.க.வின் மூதாதையரான ஜனசங்கம். அக்கட்சி பா.ஜ.க.வாக மறுஅவதாரம் எடுத்த பிறகு, காந்திய சோசலிசம் எனப் பிதற்றிக் கொண்டு திரிந்தது. காங்கிரசு கட்சி நேருபாணி சோசலிசத்தைக் கைவிட்டுத் தனியார்மயம் ஏற்றுக்கொண்டவுடன், தனது பொருளாதாரக் கொள்கையை காங்கிரசு திருடிக்கொண்டுவிட்டதாகப் புலம்பியது, பா.ஜ.க. இன்னொருபுறத்திலோ சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கித் தனியார்மய எதிர்ப்பு கபட நாடகத்தையும் நடத்தி வந்தது.
வாஜ்பாயி தலைமையில் அமைந்த பா.ஜ.க. கூட்டணி அரசோ, உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைகளை ஏற்று அந்நியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இருந்துவந்த கட்டுப்பாடுகளை நீக்குவதில் புதிய சாதனை படைத்தது. ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கும் இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் சேவை செய்வதில் வாஜ்பாயி எட்டடி பாய்ந்தாரென்றால், மோடியோ பதினாறு அடி பாயக் கூடியவர் என்பதை குஜராத்தில் நிரூபித்துக் காட்டி, அதன் மூலமாகத்தான் பிரதமர் நாற்காலியையே பிடித்தார். இதுதான் பா.ஜ.க.வின் பொருளாதாரக் கொள்கை வரலாறு.
படிக்க:
♦ அடாவடி நுண்கடன் நிறுவனங்கள் ! பெண்களை துணிவோடு எதிர்கொள்ள வைக்கும் மக்கள் அதிகாரம் !
♦ தமிழக ஊடகவியலாளர்கள் மீதான காவி கும்பலின் தாக்குதல் ! ஃபேஸ்புக்கில் எழும் கண்டன குரல் !
இப்படிப்பட்ட பின்னணி கொண்ட பா.ஜ.க.வின் சுயசார்பு அறிவிப்பு குறித்து நாம் சந்தேகங்கொள்வது இருக்கட்டும். தமது இந்த அறிவிப்பின் மீது மேற்குலக ஏகாதிபத்தியங்கள் சந்தேகம் கொண்டுவிடக் கூடாது என்ற கவலையில், சுயசார்பு இந்தியாவை அறிவித்த கையோடே, “சுயசார்பு இந்தியா உலகப் பொருளாதாரத்துடன் முழுமையாக ஒருங்கிணைந்தே செயல்படும்” என விளக்கமளித்தார் மோடி.
இந்த விளக்கத்திற்குப் பொழிப்புரை எழுதியிருக்கும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, சுதந்திரப் போராட்ட காலப் பின்னணி காரணமாக, சுதேசி என்றால் வெளிநாட்டுப் பொருட்களை பகிஷ்காரம் செய்வது என்கிற எதிர்மறை அர்த்தம் இருப்பதால், சுயசார்பு (ஆத்ம நிர்பர்) என்கிற காலத்துக்கேற்ற ஆக்கப்பூர்வமான பதத்தைப் பயன்படுத்தியிருக்கிறார் மோடி. உள்நாட்டுப் பொருட்களை உலக பிராண்டுகளாக மாற்றும் முயற்சிதான் “இச்சுயசார்பு இந்தியா” எனக் குறிப்பிடுகிறார்.
இப்பொழிப்புரையின்படி ஆங்கிலேய காலனி எதிர்ப்புப் போராட்டத்தின்போது முன்வைக்கப்பட்ட சுதேசிக்கும் மோடி அறிவித்திருக்கும் சுயசார்பு இந்தியாவிற்கும் இடையே எந்தவொரு தொடர்பும் கிடையாது என்றாகிறது. அவ்வாறென்றால், இப்புதிய அறிவிப்பின் உண்மையான பொருள்தான் என்ன?
***
1947 பிறகு இந்தியா தன்னை சுயசார்பு கொள்கை கொண்ட நாடாகக் காட்டிக் கொள்வதற்கும், உணவு உற்பத்தி உள்ளிட்டுப் பல்வேறு துறைகளில் ஓரளவு தன்னிறைவு கொண்ட நாடாகப் பரிணமிப்பதற்கும் அடிப்படையாக இருந்தவை அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்தான். மோடி அரசு அறிவித்திருக்கும் சுயசார்பு இந்தியா திட்டமோ பொதுத்துறையை, அதன் சுவடே தெரியாமல் அழித்துவிடும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. அதாவது, அனைத்தும் கார்ப்பரேட்மயம் என்பதுதான் மோடி அறிவித்திருக்கும் சுயசார்பின் பொருள்.
கேந்திரமற்ற துறைகளில் செயல்பட்டு வரும் அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களும் தனியார்மயமாக்கப்படும் என்றும், கேந்திரமான துறைகளில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கை நான்காகக் குறைக்கப்படுவதோடு, அவற்றிலும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் பங்கேற்க அனுமதிக்கப்படும் என அறிவித்து, சுயசார்பு இந்தியா என்ற போர்வையில் பொதுத்துறையே இல்லாத இந்தியாவை உருவாக்கிட முயலுகிறார், மோடி.
பாரத் பெட்ரோலியம், எல்.ஐ.சி., தொடங்கி ரயில் வழித்தடங்கள் வரையிலுமான பொதுத்துறைகளைத் தனியாருக்கு விற்பதன் மூலம் இந்த நிதியாண்டில் மட்டும் ஏறத்தாழ இரண்டு இலட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டவுள்ளதாக அறிவித்திருக்கிறது, மைய அரசு. பொதுச் சொத்துக்களை விற்றுக் கிடைக்கும் இந்தப் பணத்தை பட்ஜெட் பற்றாக்குறையை ஈடு செய்து கொள்ளவே மோடி அரசு பயன்படுத்தும்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மென்மேலும் வரிச் சலுகைகளை அளிப்பதாலும், கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் வரி ஏய்ப்புகளில் ஈடுபடுவதாலும், அக்கும்பல் தாம் வாங்கிய வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த மறுப்பதாலும்தான் நாடு பெரும் பற்றாக்குறையில் சிக்கியிருக்கிறது. அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்தும் கார்ப்பரேட் வரி விகிதங்களை அதிகரித்தும் இப்பற்றாக்குறையை ஈடுகட்ட மறுக்கும் மோடி அரசு, சுயசார்பு என்ற போர்வையில் நாட்டின் வளங்களை அடிமாட்டு விலைக்கு அக்குற்றவாளிகளுக்கு பட்டா போட்டுக் கொடுக்கவிருக்கிறது.
இத்தனியார்மயத்திற்கு அப்பால், தொலைத் தொடர்பு, மோட்டார் வாகன உற்பத்தி, உரம் தயாரிப்பு உள்ளிட்ட இரசாயனத் துறை, ஜவுளித் துறை, விமான போக்குவரத்து, காபி, தேநீர் எஸ்டேட்டுகள், சுரங்கத் துறை, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, ஆயுதத் தளவாட உற்பத்தி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, தொடர்வண்டித் துறையின் அடிக்கட்டுமானங்கள், தொழிற் பூங்காக்கள், மொத்த வியாபாரம், மருந்து உற்பத்தி, மின்னணு வர்த்தகம் ஆகியவற்றில் 100 சதவீத அந்நிய முதலீட்டிற்கும்; தனியார் வங்கித் துறையில் 74 சதவீத அந்நிய முதலீட்டிற்கும்; காப்பீடு துறையில் 49 சதவீத அந்நிய முதலீட்டிற்கும் அனுமதி அளிக்கும் தாராளமய சீர்திருத்தங்களை அறிவித்திருக்கிறது, மோடி அரசு.
கேந்திரமான துறைகளை அந்நிய முதலீட்டிற்குத் திறந்துவிட்டுவிட்டு, சுயசார்பு இந்தியா என முழங்குகிறார், மோடி. படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் போலும்!
***
இந்தத் தனியார்மய, தாராளமய சீர்திருத்த நடவடிக்கைகளின் மூலம் இந்தியா இறக்குமதியைச் சார்ந்திராமல் தன்னிறைவு அடையும் என நியாயப்படுத்தும் சங்கிகள், அதற்கு உதாரணமாக நிலக்கரித் துறையைக் காட்டுகிறார்கள். இந்தியாவில் நிலக்கரி வளம் அபரிதமாக இருந்தும், இன்னமும் நமது தேவைக்கு அந்நிய இறக்குமதியைச் சார்ந்திருக்கிறோம் என்றும், இந்த நிலைமையை மாற்றத்தான் நிலக்கரி சுரங்கத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.
இந்நடவடிக்கைளின் மூலம் நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கக் கூடும். அதனால் இந்திய மக்களுக்கு ஏதேனும் நன்மை கிட்டுமா என்பதுதான் கேள்வி. உதாரணத்திற்கு, உணவு உற்பத்தியை எடுத்துக் கொள்வோம். அத்துறையில் இந்தியா தன்னிறைவு அடைந்துவிட்டதாகக் கூறப்பட்டாலும், சத்தான உணவு கிடைக்காமல் அரைகுறைப் பட்டினியால் நோஞ்சான்களாக உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில், போதிய ஊட்டச்சத்து இன்றி இரத்த சோகையால் பீடிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கையில் இந்தியா உலக அளவில் முன்னணியில் இருந்துவருகிறது.
வெறும் 105 கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் கடந்த ஆண்டு மட்டும் 21 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அரசின் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறது (பிரண்ட்லைன், ஜூலை 17, 2020). வருடாவருடம் பல்லாயிரம் கோடி இலாபம் ஈட்டும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து இப்படிப்பட்ட பங்களிப்பை எதிர்பார்க்க முடியுமா? ஆபத்தான, நெருக்கடியான காலக்கட்டங்களில்கூடத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது இலாபத்தை விட்டுக் கொடுக்க முன்வருவதேயில்லை என்பதே உண்மை.
எடுத்துக்காட்டாக, இந்தியாவில் உள்ள மொத்த மருத்துவமனை படுக்கைகளில் (13,70,000) 8,33,000 படுக்கைகள் தனியார் மருத்துவமனைகள் வசம் உள்ளன. ஏறத்தாழ 60 சதவீதத்திற்கும் மேலான படுக்கை வசதிகளைத் தம்வசம் வைத்திருக்கும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் கரோனா தொற்றைக் கொள்ளை இலாபம் அடிக்கக்கூடிய வாய்ப்பாகத்தான் கருதுகின்றனவேயொழிய, அவை ஏழை, எளிய மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில்கூட சிகிச்சை அளிக்க முன்வரவில்லை.
எனவே, உற்பத்தித் துறையை, சேவைத் துறைகளை இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கும் தாரை வார்ப்பதன் வழியாக கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் தமக்குக் கிடைக்கும் இலாபத்தில் தன்னிறைவு அடைவார்களேயொழிய, இந்தியா தன்னிறைவு அடையப் போவதில்லை. மேலும், கேந்திரமான துறைகளில் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் 100 சதவீதம் முதலீடு செய்ய அனுமதி அளித்திருப்பதன் மூலம் இந்தியாவின், இந்திய மக்களின் எதிர்காலத்தை மேற்குலக ஏகாதிபத்தியங்களிடம் முழு அடமானம் வைக்கும் துரோகத்தை நிகழ்த்தியிருக்கிறது, பார்ப்பன பாசிசக் கும்பல்.
படிக்க:
♦ அந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா ? – ஒரு வேடிக்கைப் பேச்சு
♦ பல்கலைக்கழக தேர்வுகளை இரத்து செய் ! திருச்சியில் பு.மா.இ.மு போராட்டம் !
***
மோடியின் சுயசார்பு ஒருபுறம் மேற்குலக ஏகாதிபத்தியங்களிடம் முழுச் சரணாகதி அடைகிறது; இன்னொருபுறத்திலோ சீன முதலீடுகளையும், சீனப் பொருட்களையும் புறக்கணிக்கும் குறுகிய தேசிய வெறியைத் தூண்டிவிடுகிறது.
இன்றைய இந்தியாவின் தொழிற்துறை உற்பத்திக்குத் தேவைப்படும் மூலப்பொருட்கள், இடைநிலைப் பொருட்களில் பெரும்பகுதியும்; செல்போன் உள்ளிட்ட பல்வேறு விதமான நுகர்பொருட்களும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலையில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் சீனப் பொருட்களைப் புறக்கணிக்குமாறு அறைகூவல் விடுத்திருப்பது கேலிக்கூத்தாகவே முடிவடையும்.
இந்த உண்மை ஆளும் பா.ஜ.க. கும்பல் அறியாததல்ல. ஆனாலும், சீனாவை இந்தியாவின் உடனடியான, அபாயகரமான எதிரியாக ஆர்.எஸ்.எஸ். கும்பல் கட்டமைக்க முயலுவதற்குக் காரணம், பா.ஜ.க.வின் அமெரிக்க அடிமைத்தனம். ஆசியப் பகுதியில் அமெரிக்காவின் நம்பகமான அடியாளாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளுவதற்கு சீன எதிர்ப்பை உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொள்ளத் திட்டமிடுகிறது, ஆளும் பா.ஜ.க. அதனால்தான் அமெரிக்காவில் மழை அடித்தால் இந்தியாவில் குடை பிடிக்கிறது, ஆர்.எஸ்.எஸ். இந்திய எல்லைப்புறத்தில் இரு நாடுகளுக்குமிடையே காணப்படும் பதற்றத்தையும் இந்தப் பின்னணியிலிருந்துதான் காண வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால், மோடியின் சுயசார்பு நாட்டைத் தன்னிறைவு அடையும் பாதையில் அழைத்துச் செல்லப் போவதில்லை. மாறாக, இந்திய நாட்டையும், மக்களையும் மறுகாலனியாக்கம் என்ற மரணக்குழிக்குள் இன்னும் ஆழமாக இழுத்துச் செல்லக்கூடிய தீமையாகவே அமையும்.
– இளமுருகு
புதிய ஜனநாயகம், ஜூலை – 2020