• கொரோனா தீவிரமாகும் போது பல்கலைக்கழக தேர்வுகளை நடத்தாதே!
  • பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் தேர்வை ரத்து செய்!
  • நீட் தேர்வை ரத்து செய்! +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை செய்!
  • சி.பி.எஸ்.இ பாடப்பிரிவுகள் நீக்கத்தை திரும்பப் பெறு!
  • கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவர களமிறங்குவோம்!

என்ற கோரிக்கைகளை முன்வைத்து (15/07/2020) அன்று காலை 11 மணிக்கு திருச்சிராப்பள்ளி, மரக்கடை, இராமகிருஷ்ணா பாலம் அருகில், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், வழக்குறைஞர்கள், பிற அமைப்பு பிரதிநிதிகள் என 50-க்கும் மேற்ப்ட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தோழர் சுரேஷ் (புமாஇமு) தலைமை தாங்கினார். தோழர் பேசுகையில், பாஜக  மோடி அரசு  பொதுத்துறைகளை தனியாருக்குத் தாரை வார்க்கும் விதமாக, மக்கள் விரோத நடவடிக்கைகளை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கல்வியையும் தனியாரிடம் முழுவதுமாக ஒப்படைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொரோனா காலத்தில் நிறைவேற்ற முயற்சிக்கிறது. அதை எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது  என பேசினார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அமைப்புசாரா தொழிலாளர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் மகேந்திரன் பேசுகையில் கொரோனா வந்தால் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்கிறார் எடப்பாடி. மருந்தே கண்டுபிடிக்காவிட்டாலும் தனியாரில் சேர்ந்தால் 4 இலட்சம் செலவு ஆகும் என்ற நிலை தான் உள்ளது என்று கூறினார். மேலும், நீட் தேர்வை  நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு மாநில அரசு அடகுபோவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்களைக் கொண்டு தடுத்து நிறுத்துவோம் என கூறினார்.

அகில இந்திய மஜ்ஜிலிஸ் கட்சி மாவட்ட செயலர் சம்சுதீன்  பேசியபோது, சமஸ்கிருதம் படித்தால்தான் டாக்டராக முடியும் என்று சொன்ன காலத்திலேயே தமிழ்நாடுதான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.  அத்தகைய தமிழ்நாட்டில் அப்பன் தொழிலையே செய்யுமாறு, நீ பாடத்திட்டத்தையே மாற்றினால், நான் ஏன் ஏற்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.

தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) மாவட்டத் தலைவர் ஐயா சின்னத்துரை அவர்கள்  பேசுகையில், வாழ்க்கைக்கு இரண்டு விசயங்கள் தேவை. ஒன்று கல்வி, இன்னொன்று விவசாயம்.  இவை இரண்டையும் இந்த சொரணைகெட்ட எடப்பாடி அரசு அழிக்கிறது.  மேலும், இளைய தலைமுறையை தற்குறியாக்கும் வேலையைத் திட்டமிட்டு செய்து வருகின்றனர்.  இதனை எதிர்த்து நாங்கள் (விவசாயிகள்) புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாணவர்களோடு ஒன்றிணைந்து களத்தில் இறங்கி போராடுவோம் என்று கூறினார்.

பள்ளி மாணவி பவித்ரா பேசுகையில், ஆன்லைன் வகுப்பு பாடங்கள் புரிவதில்லை, கண்கள் வலிக்கிறது, வீட்டில் அப்பா குடித்துவிட்டு வந்து படிப்பதை தொந்தரவு செய்கிறார் என்று தனது அனுபவத்தை கூறினார்.

படிக்க:
தமிழக ஊடகவியலாளர்கள் மீதான காவி கும்பலின் தாக்குதல் ! ஃபேஸ்புக்கில் எழும் கண்டன குரல் !
பல்கலைக்கழக தேர்வுகளை இரத்து செய் ! பு.மா.இ.மு கோரிக்கை

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் திருச்சி மாவட்டச் செயலர் தோழர் ஜீவா பேசுகையில், இன்று காமராசரின் பிறந்த நாள். காமராசர் மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்து, குழந்தைகளை படிக்க வைத்தார்.  ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் ஏழை வீட்டுப் பிள்ளைகள் படிக்க கூடாது என எண்ணுகின்றனர்.  இது மாணவர்களின் எதிர்காலத்தை குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும். பெற்றோர்கள் விழித்துக்கொண்டு மாணவர்களோடு இணைந்து போராட வேண்டும் என்று கூறினார்.

கல்லூரி மாணவர் மணிவேல் பேசுகையில், மத்திய அரசு “சிபிஎஸ்இ மாணவர்களுக்கு, சமூகநீதி என்ற கருத்து சென்று சேர்ந்துவிடக்கூடாது” என்ற தீயநோக்கத்தோடுதான் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சமூகநீதி தொடர்பான பகுதிகளை நீக்கியிருக்கிறது.  நீட் தேர்வு எங்களுக்கு எப்போதும் தேவை இல்லை. அரசு பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி என்கிறது இந்த அரசு. அவர்கள் சோத்துக்கே வழியில்லாமல் இருக்கும் தருணத்தில் மொபைல் மடிக்கணினி வாங்க முடியுமா?  இதற்கு அரசு தனி சிறப்பான கவனம் கொடுத்து யோசிக்கவேண்டும்  என்று கூறினார்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் தோழர் மணலி தாசன் பேசும்பொழுது, ஏழைக்குழந்தைகள் படித்தால் அவர்களின் அறிவு வளரும். அறிவு வளர்ந்தால் அவர்கள் கேள்வி எழுப்புவார்கள், புரட்சி செய்வார்கள். அதனாலேயே கொல்லைப்புற வழியாக கொள்ளை திட்டங்களை மத்திய அரசு நுழைத்துவருகிறது. எனவே இத்திட்டங்களை முறியடிக்க மாணவர்களுடன் சேர்ந்து எமது அமைப்பு துணை நிற்கும் எனக் கூறினார்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் திருச்சி மாவட்ட அமைப்பாளர் தோழர் பிருத்திவ் பேசுகையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை  ரத்து செய்தது போல பல்கலைக்கழக தேர்வை ரத்து செய்ய வேண்டும்.  தேர்வு என்பது அறிவை சோதிப்பதற்கானதாகவோ, சமூக மாற்றத்திற்கானதாகவோ அல்லாமல் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் அளவுக்கு மனப்பான்மை உள்ளதா? அடிமைத்தனம் உள்ளதா? என்று சோதிப்பதற்காகத்தான் இங்கு தேர்வு நடத்துகின்றனர். இன்னொரு புறம் தேர்வு நடத்தாவிட்டால் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும் என்கின்றார் பிஜேபி அரசின் மத்திய அமைச்சர். அரசு உருவாக்கிய எம்பிளாய்மெண்ட் ஆபீஸ்லேயே பதிவு செய்த இளைஞர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர்.  அவர்களுக்கு வேலை தர வக்கில்லாத இந்த அரசு, தேர்வு நடத்தாவிட்டால் வேலை வாய்ப்பினை அதிகரிக்கும் என கவலைப்படுகிறதாம்.

மக்களுக்காக அரசு சிந்தித்தால், கொரோனா காலத்தில் தேர்வு வேண்டாம் என்று சொல்லும்.  ஆனால் இந்த அரசு கார்ப்பரேட்டுக்காக யோசிக்கிறது. அதனாலேயே தேர்வு வேண்டும் என்கிறது.  இதே நேரத்தில் ஆர்எஸ்எஸ் பிஜேபி தங்கள் கனவை நிறைவேற்ற, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மதச்சார்பின்மை, பணமதிப்பிழப்பு, பன்முகத்தன்மை, குடியுரிமை பற்றிய பாடங்களை நீக்கியுள்ளது. ஒரே நாடு ஒரே மொழி என்பதைப் போல, கல்வியையும் இந்துத்துவத்திற்கானதாக கொண்டுவர முயற்சிக்கிறது. அதற்கான வெளிப்பாடுதான் இந்த சிபிஎஸ்இ பாடத்திட்ட மாற்றம். ஏற்கனவே புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக கல்வி தொடர்பாக மாநிலங்களின் எல்லா அதிகாரங்களையும் அழிக்க நினைக்கிறது மோடி அரசு.  இது மக்களுக்கான அரசு அல்ல கார்ப்பரேட்டுகளுக்கான அரசு. இனி இங்கு வாழ்வது கடினம்.  போராடுவதுதான் எளிது. எனவே நாம் அமைப்பாய்த் திரள்வோம். போராடுவோம். நமது உரிமையை மீட்டெடுப்போம் என கூறினார்.

திருச்சிராப்பள்ளி அரசு சட்டக்கல்லூரி மாணவர் ஹரிச்சந்திரன் இறுதியாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றியுரை தெரிவித்தார்.

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருச்சிராப்பள்ளி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க