• அடாவடியாக பெண்களை மிரட்டும் நுண்கடன் நிறுவனங்கள்! இரத்தக்கண்ணீர் வடிக்கும் பெண்கள்!
  • பெண்களை துணிவோடு எதிர்கொள்ள வைக்கும் மக்கள் அதிகாரம்!

கொரோன ஊரடங்கால் முடங்கி கிடக்கும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை “வாழ்வா சாவா” என்கிற நிற்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் நுண் கடன் நிறுவனங்கள் பெண்களை மிரட்டி, அவமானப்படுத்தி, வெளியே சொல்ல முடியாத அளவிற்கு கூனிகுறுக வைத்துள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கி கடன் தவணைகளை கட்டாயப்படுத்தி வாங்கக்கூடாது என்று உத்தரவிட்டதையும் மீறி கொடூரமான வசூல் வேட்டையை நுண்கடன் நிறுவனங்கள் விடுவதாயில்லை.

இதை கண்டித்து பெண்கள், மக்கள் அதிகாரம் உட்பட பல ஜனநாயக இயக்கங்கள் அரசின் கவனதிற்கு கொண்டு சென்ற பிறகு பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் ஆகஸ்டு 31 வரை எந்த நுண்கடன் நிறுவனமும் பெண்களை கட்டாயப்படுத்தக்கூடாது என உத்தரவிட்டனர்.

ஆனால் ‘அதெல்லாம் எங்களை கட்டுபடுத்தாது’ என்கிற திமிரில் நுண்கடன் நிறுவனங்கள் தொடர்ச்சியாக தங்கள் அடாவடி தனத்தை அதிகப்படுத்திக்கொண்டே சென்றனர். இந்த நிலையில் மக்கள் அதிகாரம் சார்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பு கொள்ளுங்கள் என்று தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

அதற்கு பிறகு தினந்தோறும் சராசரியாக ஒரு நாளைக்கு 50 நபர்களுக்கு மேல் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தும், ஆலோசனைகள் பெற்றும் வருகின்றனர். இதுவரை பல 100 பேர் தொடர்பு கொண்டும் பேசியுள்ளனர். பலர் தொடர்பு கொண்டு கதறி அழுகின்றனர், சில ஆண்களும் கதறி அழுது புலம்புகின்றனர்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுபள்ளியில் உள்ள பெண்கள் மக்கள் அதிகார தோழர்களுடன் இணைந்து கலெக்டரிடம் மனுக்கொடுத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் பெண்கள் இணைந்து மனுக்கொடுத்தனர், தஞ்சை கீழவாசலில் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து, நிறுவனங்கள் யாரும் பெண்களை ஆகஸ்டு 31 வரை பணம் கட்ட வற்புறுத்தக்கூடாது என எழுதி வாங்கப்பட்டது.

தஞ்சை, கீழவாசல் காவல்நிலையத்தில் பெண்கள் முன்னால் “ஆகஸ்டு 31 வரை” வசூல் செய்யக்கூடாது என எழுதி வாங்கப்பட்டது.

ஆனால் மற்ற இடங்களில் உள்ள காவலர்கள் “கடன் வாங்குனா கட்டி தானே ஆகனும்” என்று திமிராக நிறுவனங்களுக்கு ஆதரவாகவே நடந்து கொண்டனர். நிறுவன மேலாளர்கள், ஏஜென்டுகள் நடந்து கொள்வது ‘சட்டவிரோமானது’ என பேசியும், வலியுறுத்தியும் வழக்கு பதிய மறுக்கின்றனர்.

பல பெண்கள் அழுது புலம்பி, கண்ணீர் வடிக்கும் போது தொலைபேசியிலேயே “நீங்கள் ஒன்றும் அடிமையில்லை, நியாயம் உங்கள் பக்கம் உள்ளது, எதிர்த்து சண்டைபோடுங்கள்” என்கிற வகையில் ஆலோசனைகள் கொடுக்கும் போது அதன் அடிப்படையில் நம்பிக்கையோடு பெண்கள் எதிர்கொண்டதை பார்க்க முடிந்தது.

ஆகவே அனைத்து பெண்களையும் கடன் நிறுவனங்களை எதிர்கொள்ளும் வகையில் அடுத்த கட்டமாக பல நூறு சுவரொட்டிகள் 3 மாவட்டங்கள் முழுக்க பரவலாக ஒட்டப்பட்டன.

இந்த சுவரொட்டி ஒட்டிய இடங்களில் எல்லாம் பெண்கள் தைரியமாக எதிர்கொண்டு போராடினர்.

நிதி நிறுவன ஏஜென்டுகளும், மேலாளர்களும், “கொரோனா வந்து செத்தா போயிட்ட?”, “சோற திங்குறீயா வேற எதுனா திங்குறீயா?”, “தவண கட்டுலனா OD போட்டுருவேன்”, “நீ இனிமே எங்கயும் கடன் வாங்க முடியாது, ஓ பேங்க் அக்கவன்ட தடை செஞ்சிருவேன்”, “கலெக்டர், ரிசர்வ் பேங்க கேட்டா கடன் வாங்குன?” என்றும் சில இடங்களில் “குச்சிகாரி, தே….” என்று இன்னும் வெளியோ சொல்ல முடியாத வார்த்தைகளால் கூனிகுறுக செய்வதும், பல இடங்களில் இரவு வரை வீட்டின் முன்னால் உட்கார்ந்து விடுவது என்றும் நிகழ்வதை போராடும் பெண்கள் எங்களிடம் தொடர்ச்சியாக தெரிவித்தனர்.

மக்கள் அதிகாரம் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டி.

நுண் கடன் நிறுவனங்களை எதிர்கொள்ள இன்னும் பல இடங்களுக்கு விரிவாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக பல்லாயிரம் துண்டு பிரசுரங்களை 3 மாவட்டங்களிலும் பல நூறு கிராமங்களுக்கு நேரிடையாக சென்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

அந்த துண்டு பிரசுரத்தை பார்த்து பலர் கண்கலங்கி விட்டனர்.  “நாளைக்கு குழுக்கடன் சார் வருவாரு எனக்கொன்னு குடுங்க” என கேட்டு பெற்று சென்றனர். சிலர் தோழர்களின் வீடுகளை தேடி வந்து, “குழுகடன் நோட்டீஸ் ஒன்னு குடுங்க” என கேட்டு சென்றதை பார்க்க முடிந்தது. பல ஆண்கள் தொடர்பு கொண்டு “என்னையும் உங்க அமைப்பல சேத்துக்கோங்க, போராட்டம் எதுனா கூப்பிடுங்க” என்றனர். தற்போது பல கிராமங்களை சேர்ந்த பெண்கள் தொடர்ச்சியாக தொடர்பு கொண்டு வருகின்றனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

எனினும் எங்கள் பிரச்சாரம் சென்றது ஆயிரக்கணக்கான கிராமங்களில் சில நூறுகளில் மட்டும் தான். கும்பகோணம் திருபனந்தாள் எனும் இடத்தில் ஒரு பெண் தற்கொலை செய்து இறந்துவிட்டார், திருவாரூர் அருகில் பேரளம் என்ற ஊரில் பெண் ஒருவர் தனக்கு தீவைத்துக்கொண்டார்.

முடங்கியுள்ள மக்கள் வாழ்வாதாரம் மறு சீரமைய பல மாதங்கள் ஆகும், ஆகஸ்டு 31 முடிந்த பிறகும் இந்த பிரச்சனை தீராது. காவல்துறை, அரசு நிர்வாகிகள் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பதையே பார்க்க முடிகிறது. பெண்களும் இதை உணர்ந்து வருகின்றனர். “வெறும் 2000 ரூபாய் காசுக்காக உயிரை மாய்த்துக்கொள்ளும்” நிலையில் தான் கிராமப்புற பெண்கள் உள்ளனர். ஆகவே நாம் அமைதியாக இருந்தால் பல பெண்கள் தற்கொலை செய்துக்கொள்வதை தடுக்க முடியாமல் போய்விடும், ஆகவே அனைத்து பெண்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் விரிவாக பிரச்சாரம் முன்னெடுத்து செல்ல வேண்டியதும், பெண்களை துணிச்சலாக எதிர்கொள்ள வைக்க வேண்டியதும் அவசர தேவையாக உள்ளது.

படிக்க:
தமிழக ஊடகவியலாளர்கள் மீதான காவி கும்பலின் தாக்குதல் ! ஃபேஸ்புக்கில் எழும் கண்டன குரல் !
நுண்கடன் நிறுவனங்களின் அடாவடிக்கு முடிவு கட்டுவோம் ! மக்கள் அதிகாரம்

***

டெல்டா மாவட்டங்களில் உள்ள அடித்தட்டு வர்க்க பெண்களின் நிலை :

டித்தட்டு வர்க்க பெண்கள் 100 நாள் வேலை, சித்தாள் வேலை, விவசாயி கூலி வேலை, வீட்டு வேலைக்கு செல்வது, சிறு, குறு நிறுவனங்களில் வேலை செய்வது என்று பெரும்பாலும் அனைவரும் வேலைக்கு சென்று குறைந்த வருமானத்தையாவது ஈட்டி வருகின்றனர்.

கணவன்மார்கள் பெரும்பாலும் தொடர்ச்சியாக உள்ளுரில் இருப்பதில்லை, வேலைக்காக திருப்பூர், கோவை, சென்னை, கேரளா, வெளிநாடு என்று சென்றுவிடுகின்றனர். பல கணவன்மார்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கோடைகாலம் வந்தால் குடிநீருக்காக சாலையில் குடத்துடன் உட்கார்ந்து விடுவது, டாஸ்மாக்கை எதிர்த்து போராடுவது, 100 நாள் வேலைக்காக, ஊதியத்திற்காக போராடுவது, நுண்கடன் நிறுவனங்களை எதிர்த்து போராடுவது என்று தங்கள் வாழக்கையை போராட்டுத்துடன் ஊடாகவே நடத்தி வருகின்றனர்.

திருத்துறைப் பூண்டி பகுதியில் நமது பிரச்சாரத்தின் விளைவாக பெண்கள் நடத்திய போராட்டம் :

திருமணம், காதுகுத்து, குழந்தைகள் கல்வி இன்னும் அத்தியாவசிய தேவைகளுக்கு கடன் வாங்குவது என ஒட்டுமொத்தமாக குடும்ப தலைவராக இருந்து குடும்பங்களை பராமரித்து வருகின்றனர். எல்லா பிரச்சனைகளையும் நேரிடையாக எதிர்கொள்பவர்கள் இவர்கள் தான். அதனால் தான் போராட்டங்களில் முன்னிலை வகிப்பதற்கும், ரோட்டிற்கு வந்து போராடுவதற்கும் நிலப்பிரபுத்துவ குடும்ப உறவு தடையாக இருப்பதில்லை.

இந்த நுண்கடன் பிரச்சனையில் பல பெண்கள் தொடர்பு கொண்டு ‘முன்ன பின் முகம் தெரியாத நபரிடம்’ கதறி அழுகிறார்கள் என்றால், தங்களின் வலியை, தங்களின் பிரச்சனையை சொல்வதற்குக் கூட இந்த சமூகத்தில் யாரும் இல்லை, எந்த ஒரு தளமும் இல்லை என்பதையே உணர்த்துகிறது. அப்படி பட்ட தேவையை நாம் பூர்த்தி செய்ய வேண்டியது தார்மீக கடைமையாக உணர்கிறோம்.

பெண்களின் கண்ணீரை துடைப்பதற்கு தமது கரங்களை நீட்டுவதோடு பெண்களிடம் கொட்டி கிடக்கும் ஆற்றலையும், முன்முயற்சியையும் கட்டவிழ்த்துவிடும் வேலையையும் மக்கள் அதிகார தோழர்கள் முன்னெடுத்துச் செல்கின்றனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை மண்டலம்.

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க