கத்தார் மன்னர் தமிம் பின் ஹம்மத் தானி (Tamim bin Hammad Thani) பிப்ரவரி 17 அன்று இந்தியா வந்தார். ஆனால், அவரது வருகைக்கு முன்னதாகவே அதானியின் நிறுவனத்திற்கும் கத்தார் நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.
இரண்டு நாடுகளின் தலைவர்களிடையே சந்திப்பு நடக்கிறதென்றால் அதன் பின்னணியில் எப்போதும் அந்தந்த நாடுகளின் கார்ப்ரேட்களின் நலன்கள் ஒளிந்திருக்கும் என்பது தான் எதார்த்த உண்மையாகும். அதேபோல் தான், கத்தார் – இந்தியா சந்திப்பிற்குப் பின்பு மோடியின் ’உற்ற தோழன்’ என்று கூறப்படும் அதானியின் நலன் இருக்கிறது.
அதானி ஹார்பர் சர்வீசஸ் (Adani Harbour Services) நிறுவனத்தின் துணை நிறுவனமான அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் லிமிடெட் (APSEZ) நிறுவனமும், சீ ஹாரிசான் ஆஃப்சோர் மரைன் சர்வீசஸ் (Sea Horizon Marine Services) நிறுவனமும், இணைந்து “அல் அன்னபி மரைன்” என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர். இந்நிறுவனம் கத்தார் மன்னரின் வருகைக்கு 5 நாட்களுக்கு முன்பு (பிப்ரவரி 12) உருவாக்கப்பட்டுள்ளது. கத்தாரில் இருக்கும் ஜாபல் யாஃபி என்ற நபரும் இந்நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார்.
அல் அன்னபி மரைன் கப்பல்களின் செயல்பாடுகளையும் நிர்வாகத்தையும் கவனிக்கும். சீ ஹாரிசான் தனது இணையதளத்தில், இந்நிறுவனம் கடலோர திட்டங்கள், கப்பல் இழுக்கும் பணிகள் மற்றும் கடலில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இடமளிக்கும் படகுகளை வழங்குதல் போன்ற சேவைகளை வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தில் அதானி ஹார்பர் சர்வீஸ் 49 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது. அல் அன்னபி நிறுவனத்தை உருவாக்கியதை அறிவித்தவுடன் பங்குச் சந்தையில் அதானியின் APSEZ நிறுவனத்தின் பங்குகள் கணிசமாக உயர்ந்தது. துபாயில் ஆஸ்ட்ரோ ஆஃப்சோர் கப்பல் நிறுவனத்தை கையகப்படுத்தியதன் மூலமும் இஸ்ரேலில் ஹைஃபா துறைமுகத்தை இயக்குவதன் மூலமும் ஏற்கெனவே மத்திய கிழக்கில் அதானி நிறுவனம் தனது கரங்களை விரிவுபடுத்தியுள்ளது.
படிக்க: அதானியின் லஞ்ச ஊழல்: அம்பலமாவது அதானியின் மின்சாரத்துறை ஆதிக்கம்
பிப்ரவரி 17 ஆம் தேதி, கத்தார் மன்னர் இந்திய வந்தபோது நரேந்திர மோடி பாதுகாப்பு நெறிமுறைகளை எல்லாம் மீறி அவரை விமான நிலையம் சென்று வரவேற்றார். இந்தியப் பிரதமர்கள் அரச தலைவர்களை விமான நிலையத்தில் வரவேற்பது என்பது அரிது. இதுவரை பிரதமர் மோடியே நான்கு பேரைத் தான் விமான நிலையத்தில் வரவேற்றுள்ளார். அதில், அமெரிக்க அதிபர்கள் பராக் ஒபாமா, டொனல்டு டிரம்ப்; ஜப்பான் பிரதமர் சின்சோ அபே; ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் ஆகியோர் அடக்கம். இந்திய வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெஸ்வால் கத்தார் மன்னரை மோடி வரவேற்றதை, “சிறந்த நண்பருக்குச் சிறந்த உபசரிப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வங்கதேசத்திலிருந்து கிரீஸ் வரை, இலங்கையிலிருந்து இஸ்ரேல் வரை எந்த நாட்டுக்கு மோடி சென்றாலும் அதானியின் நிறுவனங்கள் அங்கு தடம் பதித்து விடுகின்றன. குறிப்பாக, அதானியின் சூரிய ஆற்றல் நிலையங்களைத் தொடங்குவதற்காக குஜராத்தில் உள்ள இந்திய – பாகிஸ்தான் எல்லை கண்காணிப்பு விதிகளை மோடி அரசு தளர்த்தியது. கத்தார் மன்னர் வருகையின் போதும், இருநாடுகளும் தங்களது பரஸ்பர உறவுகளை உயர்த்துவதற்காக மூலோபய கூட்டாண்மைக்கு கையெழுத்திட்டுள்ளன; சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகின்றன. இந்திய – கத்தார் இருதரப்பு வணிகம் 15 பில்லியன் டாலராகும். இதில் கத்தார் எல்.பி.ஜி (Liquefied Petroleum Gas) மற்றும் எல்.என்.ஜி (Liquefied Natural Gas) ஏற்றுமதி செய்வதில் தான் நடைபெறுகிறது.
இதற்கு முன்பு கத்தார் எட்டு இந்தியக் கடற்படை வீரர்களை 18 மாதங்கள் சிறைபிடித்திருந்தது. ஆகஸ்ட் 2022லிருந்து பிப்ரவரி 2024 வரை இதுகுறித்து இருதரப்பு அரசுகளும் பேசவில்லை. மோடி பிப்ரவரி 2024ல் கத்தார் செல்வதற்கு முன்பாக தான் 7 பணயகைதிகளை கத்தார் விடுதலை செய்தது. இருப்பினும், ஒருவரை இன்னும் விடுதலை செய்யவில்லை. ஆனால், வீரர்கள் தனிமை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் போது தான் கத்தார் முதலீட்டு ஆணையம் அதானி கீரின் எனர்ஜி நிறுவனத்தில் 4,300 கோடி முதலீடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய உணர்வு எல்லாம் சாமானிய மக்களுக்கு மட்டும் தான் போலிருக்கிறது.
இலங்கையில் சூரிய நிலையங்கள் அமைப்பது ரத்தானது; வங்கதேசத்தில் ஆட்சி கவிழ்ப்பிற்குப் பிறகு மின்சார ஏற்றுமதி தடையானது; அமெரிக்காவின் குற்றச்சாட்டு என பல்வேறு நெருக்கடிக்குப் பிறகு கத்தார் உடனான ஒப்பந்தம் அதானிக்கு சற்று ஆறுதல் அளிக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அதானிக்கு இந்த ஆறுதலைப் பெற்றுத்தந்த மகிழ்ச்சியில்தான் பிரதமர் மோடி கத்தார் மன்னரை வரவேற்க விமான நிலையம்வரை சென்றுள்ளார்!
ஹைதர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram