அதானியின் லஞ்ச ஊழல்: அம்பலமாவது அதானியின் மின்சாரத்துறை ஆதிக்கம்

பத்தாண்டுகால பாசிச ஆட்சியில் இந்திய உழைக்கும் மக்களை உறிஞ்சிக் கொழுத்து வளர்ந்த அதானி குழுமம், இன்று உலகின் பல நாடுகளில் தனது ஆக்டோபஸ் கரங்களை விரிவுப்படுத்தி வருகின்றது.

ஹிண்டன்பர்க், ஓ.சி.சி.ஆர்.பி., ஃபைனான்சியல் டைம்ஸ் என பல்வேறு அமைப்புகளும் பத்திரிகைகளும் அதானியின் மோசடிகளை அம்பலப்படுத்தி அறிக்கைகளை வெளியிட்டுவந்த நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் அதானியின் லஞ்ச ஊழல் மோசடியை அம்பலப்படுத்தி குற்றப்பத்திரிகையை வெளியிட்ட அமெரிக்க நீதிமன்றம் அதானிக்கு கைது ஆணையை பிறப்பித்திருந்தது.

இது சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளானதையடுத்து, அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்து ரூ.2.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதனைக் கண்டு பதறிப்போன அதானி குழுமம், அமெரிக்க நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது என மறுத்தது.

அதானி குழுமத்தின் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் வெளியானவுடன் எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் மத்தியிலிருந்து எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழத்தொடங்கின. எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, “அதானி மற்றும் செபி தலைவர் மாதபி பூரி புச் ஆகியோரை கைது செய்ய வேண்டும்; இந்த விவகாரத்தை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டன. சிலர் அதானி அமெரிக்க அரசால் கைது செய்யப்படலாம் என்று கூட கருத்து தெரிவித்தனர்.

ஆனால், விழியை இமை காப்பது போல அதானியை காத்துக்கொண்டிருக்கும் மோடி அரசோ, நாடாளுமன்றத்தில் அதானி மீதான குற்றச்சாட்டுகளை விவாதிக்க மறுப்பது; அதானி மீது குற்றவழக்கு பதிவு செய்யாமல் இருப்பது; அதானியின் லஞ்ச ஊழல் முறைகேடுகளை பற்றி பேசுபவர்களை தேசத்திற்கு எதிரானவர்களாக சித்தரிப்பது என தனக்கே உரிய பாசிசத் திமிருடன் அதானி குழுமத்தைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

அதானியின் லஞ்ச ஊழலும் பாதுகாக்கும் மோடி அரசும்

இந்திய பொதுத்துறை நிறுவனமான “சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திற்கு” (SECI – Solar Energy Corporation of India) 12 ஜிகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரித்துத் தருவதற்கான ஒப்பந்தம் ஒன்று கடந்த 2019 டிசம்பர் முதல் 2020 ஜூலை இடைப்பட்ட காலத்தில் கையெழுத்தாகிறது. இந்த ஒப்பந்தமானது, அதானிக்கு சொந்தமான “அதானி கிரீன் எனர்ஜி” (Adani Green Energy) நிறுவனத்திற்கும் இந்தியாவில் சூரிய ஒளி மின்சார உற்பத்தி தொழிற்சாலையைக் கொண்டுள்ள அமெரிக்காவைச் சார்ந்த “அசூர் பவர்” (Azure Power) நிறுவனத்திற்கும் வழங்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தில், 12 ஜிகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பில் எட்டு ஜிகாவாட் மின்சாரத்தை அதானி நிறுவனமும் நான்கு ஜிகாவாட் மின்சாரத்தை அசூர் பவர் நிறுவனமும் உற்பத்தி செய்துத்தர வேண்டும் எனவும் ஒன்றிய அரசின் எஸ்.இ.சி.ஐ. நிறுவனம் அம்மின்சாரத்தை மாநில மின் பகிர்மானக் கழகங்களுக்கு விற்பனை செய்யும் எனவும் உடன்பாடு எட்டப்படுகிறது.

ஆனால், மின்சாரத்தின் அநியாய விலை காரணமாக “மாநில மின் பகிர்மானக் கழகங்கள்” எஸ்.இ.சி.ஐ-யிடமிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய முன்வராமல் ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டது. இதனால், அதானி நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி உள்ளிட்டு அதானி குழுமம் மற்றும் அசூர் பவர் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் அடங்கிய குழு ஒன்று, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகள், அரசியல்வாதிகளை சந்தித்து சுமார் ரூ.2,200 கோடியை (260 மில்லியன் டாலர்) லஞ்சமாகக் கொடுத்து, எஸ்.இ.சி.ஐ-யிடமிருந்து அதிக விலைக்கு சூரிய ஒளி மின்சாரத்தை வாங்க வைத்துள்ளது.

இவ்வாறு லஞ்சம் வழங்குவதை அசூர் பவர் நிறுவனத்தின் சார்பாக அதானி நிறுவனமே மேற்கொண்டுள்ளது. இந்த லஞ்சப் பணத்தை, அசூர் பவர் நிறுவனம் 7 மில்லியன் டாலர்கள் பணமாகவும், 2.3 ஜிகாவாட் மின்சார உற்பத்திக்கான ஒப்பந்தமாகவும் அதானிக்கு திருப்பி செலுத்தியிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தை எஸ்.இ.சி.ஐ. அதிகாரிகளிடம் பேசி அதானி நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ளது.

மேலும், ஒப்பந்தப்படி சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக மூன்று பில்லியன் டாலர்களை (ரூ.20,000 கோடி) அமெரிக்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து அதானி நிறுவனம் கடனாகப் பெற்றிருக்கிறது.

எனவே, லஞ்சமானது இந்தியாவில் உள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தாலும் அமெரிக்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டத்தின்படி அமெரிக்க நீதிமன்றம் இவ்வழக்கை தொடுத்துள்ளது. மேலும், அமெரிக்காவின் கிராண்ட் ஜூரியின் முன்அனுமதியைப் பெற்று தற்போது கௌதம் அதானி உள்ளிட்ட எட்டு பேர் மீது கைது ஆணையையும் பிறப்பித்துள்ளது.

அதேபோல், அதானி கிரீன் மற்றும் அசூர் பவர் நிறுவனத்தின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்த அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையம் (US Securities and Exchange Commission) இந்நிறுவனங்களிடம் இதற்கு முன்னரே சில விளக்கங்களை கேட்டிருக்கிறது.

ஆனால், லஞ்சப் பரிவர்த்தனைகளை மறைத்து இந்நிறுவனங்கள் தவறான ஆவணங்கள் மூலம் விளக்கமளித்துள்ளன. மேலும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது நடத்தப்பட்ட தொலைபேசி, மின்னஞ்சல் உரையாடல்கள், யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது போன்ற தகவல்களை அழித்து தடையை விசாரணைக்கு ஏற்படுத்தின என்று அமெரிக்க நீதிமன்றம் குற்றஞ்சாட்டுகிறது.

ஓராண்டிற்கு முன்பே அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையம் மற்றும் பிற அமெரிக்க நிறுவனங்கள் அதானி குழுமத்தின் மீது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இவ்விவகாரமே இப்போதுதான் தெரியவந்தது போல் நாடகமாடுகிறது இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (செபி). ஏற்கெனவே, அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மோசடிகளுக்கு செபியின் தலைவரான பூரி மாதபி புச் உடந்தையாக இருந்தது ஹிண்டன்பர்க் அறிக்கையின் மூலம் அம்பலமாகியிருக்கும் நிலையில், தற்போது இவ்விவகாரம் அதானி குழுமத்தின் தொங்குசதையாக செபி மாறியுள்ளது என்பதைக் காட்டுகிறது.

அதேபோல், இம்முறைகேட்டில் முக்கியப் பங்காற்றிய எஸ்.இ.சி.ஐ. அமெரிக்க நீதிமன்றக் குற்றப் பத்திரிகையில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்த எந்த ஆவணமும் தமக்குக் கிடைக்கவில்லை என்றும் ஒப்பந்தங்கள் ஏதேனும் மீறப்பட்டதா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும் அப்பட்டமாக பொய்யுரைத்துள்ளது.

ஒருபுறம் அதானிக்கு எதிராகப் பேசுவதை தேசவிரோத செயலாக சித்தரிக்கும் காவிக்கும்பல், மறுபுறம் அதானியின் லஞ்ச ஊழல் குறித்து அமெரிக்காவுடன் எந்த விவாதங்களும் மேற்கொள்ளவில்லை என்றும் அதானி மீதான வழக்கை அமெரிக்க நீதித்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், தனிநபர்களுக்கு இடையேயான வழக்காகவே பார்ப்பதாகவும் ஒன்றிய வெளியுறவுத்துறை மூலம் திமிர்த்தனமாக அறிவித்துள்ளது.

மேலும், அதானியின் லஞ்ச ஊழல் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை துளி அளவுகூட மதிக்காத மோடி-அமித்ஷா கும்பல், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுகிறார்கள் எனக்கூறி நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஆறு நாட்களுக்கு ஒத்திவைத்தது. அதானி பற்றி விவாதிப்பதற்கு பதிலாக அமெரிக்க கார்ப்பரேட் முதலாளியான ஜார்ஜ் சோரஸுடன் இணைந்து இந்தியாவை சீர்குலைக்க ராகுல் காந்தி முயற்சிப்பதாக விவகாரத்தை திசைதிருப்பியது பாசிச மோடி அரசு.

அதானிக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் எதிர்க்கட்சிகள்

ஹிண்டன்பர்க் அறிக்கை உள்ளிட்ட அதானி நிறுவனத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவரும் போதெல்லாம் ஒன்றிய மோடி அரசும் செபி உள்ளிட்ட அதன் அடியாள் நிறுவனங்களும் நெருக்கடிக்கு உள்ளாவதும் அக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு எதிர்க்கட்சிகள் ஏக குரலில் முழங்குவதும்தான் வழக்கம்.

ஆனால், தற்போதைய அமெரிக்க நீதிமன்றத்தின் குற்றச்சாட்டு வெளிவந்தபோது தி.மு.க., ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட பா.ஜ.க-வின் எதிர்க்கட்சிகளும் நெருக்கடிக்கு உள்ளானது கவனிக்கத்தக்கதாகும்.

ஏனெனில், அதானியிடமிருந்து லஞ்சம் வாங்கியப் பட்டியலில் காங்கிரஸ் ஆட்சி செய்த சத்தீஸ்கர், தி.மு.க. ஆட்சியிலிருக்கும் தமிழ்நாடு, நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஆட்சி செய்த ஒடிசா, ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி செய்த ஆந்திரா மற்றும் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருந்த ஜம்மு காஷ்மீர் ஆகிய அரசுகள் இடம்பெற்றிருந்தன. அதில் ஆந்திரா மின்சார வாரிய அதிகாரிகளுக்கு மட்டும் ரூ.1,750 கோடி லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது. மீதிபணம் மற்ற மாநில மின்சார வாரிய அதிகாரிகளுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த லஞ்ச ஊழல் விவகாரம் அம்பலமாகிய நிலையில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் என்ன விளக்கம் கொடுப்பது என்று தெரியாமல் விழிபிதுங்கின. தெலுங்கானாவை ஆளும் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு, தன்னுடைய மாநிலத்தில் திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்க அதானி குழுமம் அளித்த ரூ.100 கோடி நன்கொடையை திருப்பியளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, முதல்வர் ஸ்டாலினும் அதானியும் இரகசியமாக சந்தித்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, சட்டமன்றத்தில் பேசிய ஸ்டாலின், “அதானி விவகாரத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை வந்து அவர் சந்திக்கவும் இல்லை; நானும் அவரைப் பார்க்கவில்லை” என்றார்.

ஆனால், அதானி ஊழல் விவகாரம் குறித்து விளக்கமளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “கடந்த மூன்று ஆண்டுகளாக, அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியம் எந்த ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை. தமிழ்நாடு மின்வாரியத்தின் தேவையை கருத்தில்கொண்டு ஒன்றிய அரசின் மின்சார வாரியத்தின் மூலம் சுமார் 1,500 மெகாவாட் மின்சாரம் பெறுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது” என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அமெரிக்க நீதிமன்றத்தின் குற்றச்சாட்டே, ஒன்றிய மின்சார வாரியத்திடமிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதுதான். அப்படியெனில், செந்தில் பாலாஜி அவர்களே ஒன்றிய அரசின் மின்சார வாரியத்திடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது, பேச்சுவார்த்தை நடத்தி அதானியுடன் முறைகேட்டிற்கு துணைபோனதை மறைத்துவிட்டு பொய்யுரைக்கிறது தி.மு.க. அரசு.

ஒருபுறம் இக்குற்றச்சாட்டுக்கு நேர்மையாக பதில் அளிக்காத அதேவேளையில் மறுபுறம் தனது இணையப்படை மூலம் “ராமதாஸ் மோடி அரசை விமர்சிக்காமல் இருப்பது ஏன்?”, “கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஒரு யூனிட் ஏழு ரூபாய்க்கு அதானியுடன் போட்டுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய குரல் கொடுப்பார்களா”, “நுங்கு தின்றவனை விட்டுவிட்டு அதை நோண்டித் தின்றவனை பிடித்துக் கொண்டார்கள்” என விவாதத்தை திசைதிருப்பியது தி.மு.க.

ஆனால், அதானி விவகாரத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும் அதேவேளையில் தமிழ்நாட்டின் மின்சாரத்துறையில் அதானியின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது என்ற உண்மையை நாம் அறிந்துக்கொள்ள வேண்டியுள்ளது. தற்போது, வீடுகளில் மின்சார பயன்பாட்டை அளவிட ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் ஏலமும் அதானிக்குத்தான் வழங்கப்படப்போகிறது என்று முதலாளித்துவ ஊடகங்களே அம்பலப்படுத்துகின்றன. எரிசக்தி மற்றும் மின்சாரத்துறையில் ஏகபோகமாக வளர வேண்டுமென்று துடித்துக்கொண்டிருக்கும் அதானிக்கு சிவப்புக் கம்பளம் விரித்துக்கொண்டிக்கின்றன எதிர்க்கட்சிகள். இதற்கு முட்டுக்கொடுப்பதென்பது மக்களை பாசிசத்திற்கு பலியிடுவதன்றி வேறில்லை.

அதானிமயமாகும் மின்சாரத்துறை

தற்போது அம்பலமான அதானியின் லஞ்ச ஊழல் முறைகேடு மின்சாரத்துறையில் அதானி தனது ஆதிக்கத்தை பகாசுரமாக விரிவுப்படுத்தி வருவதை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

கடந்த பத்தாண்டுகால பாசிச மோடி அரசின் ஆட்சிக்காலத்தில் சூரிய ஒளி, காற்று உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் அதானி குழுமம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து நாள்தோறும் 11 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இந்த அளவை 2030-ஆம் ஆண்டிற்குள் 50 ஜிகாவாட்டாக அதிகரிக்க வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளது. இதற்காக குஜராத் மாநிலத்திலுள்ள கவ்தா பகுதியில் இங்கிலாந்து நாட்டின் பாரிஸ் நகரத்தை விட ஐந்து மடங்கு பெரிய பரப்பளவில் 30 ஜிகாவாட் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆலையை அமைத்து வருகிறது.

மோடி அரசும் 2030 ஆண்டிற்குள் நாட்டின் மொத்த மின்சார உற்பத்தியில் சூரிய ஒளி, காற்று உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் மூலம் 500 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளது. இந்த இலக்கை நிறைவேற்றுவதற்கு ஒன்றிய மற்றும் மாநில மின்சார வாரியங்களை ஊக்குவிப்பதற்குப் பதிலாக கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டு இலக்கை நிறைவேற்றவே உறுதி பூண்டுள்ளது. அந்த இலக்கில் பெரும்பகுதியை அதானி குழுமத்திற்கே ஒப்பந்தங்களாக வழங்கும் வகையில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதானியின் லஞ்ச ஊழல் விவகாரங்களும் அதற்கு சிறந்த சான்றாகும்.

அதேபோல், அதானி கிரீன் நிறுவனத்திற்கும் இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திற்கும் இடையிலான 8 ஜிகாவாட் ஒப்பந்தமானது, மாநில மின் பகிர்மானக் கழகங்களினூடான ஒப்பந்தமின்றி ஏற்பட்ட முதல் பெரிய ஒப்பந்தமாகும். 30 ஜிகாவாட் சூரிய ஒளி மின்னுற்பத்திக்கான ஒப்பந்தங்கள் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் எஸ்.இ.சி.ஐ-யால் ஏற்படுத்தப்பட்டு அந்த மின்சாரத்தை வாங்க யாருமின்றி இருப்பதாக எஸ்.இ.சி.ஐ.-யின் தலைவர் கூறும் நிலையில், அதானி கிரீன் மற்றும் அசூர் பவர் நிறுவனங்களுடான 12 ஜிகாவாட் சூரிய ஒளி மின்சாரத்திற்கான ஒப்பந்தம் அதானியின் நலனுக்காகவே மோடி அரசால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அதுபோல, ஒன்றிய மற்றும் மாநில மின்சார வாரிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததற்கு கைமாறாக அசூர் பவர் நிறுவனம் அதானி நிறுவனத்திற்கு வழங்கிய 2.3 ஜிகாவாட் சூரிய ஒளி மின்சாரத்திற்கான ஒப்பந்தமும் சட்ட விதிகளை மீறியே அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 2.3 ஜிகாவாட்டிற்கான ஏலம் புறக்கணிக்கப்பட்டு அந்த ஒப்பந்தம் நேரடியாக அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இது பொதுத்துறை நிறுவனமான எஸ்.இ.சி.ஐ. அரசு நிறுவனத்திலிருந்து அதானியின் நிறுவனமாக மாறிப் போயுள்ளதற்கான சான்றாகும்.

மேலும், மாநில மின்வாரியங்கள் சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்யத் தயங்குவதற்கு விநியோக மற்றும் சேமிப்புக் கட்டமைப்பு இல்லாதது முக்கியக் காரணமாகும். அக்கட்டமைப்பை மேம்படுத்த எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாத மோடி அரசானது இருக்கின்ற கட்டமைப்பையும் மின்சார சட்டத்திருத்தம்-2023 மூலம் அதானிக்கு தாரைவார்க்க விழைந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, மின்சார சட்டம்-2003 இன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநில மின் வாரியங்கள் தங்களின் தேவையில் குறைந்தபட்சம் 10 சதவிகிதத்தை சூரிய ஒளி மின்னுற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது; அடிமாட்டு விலைக்கு நிலங்கள், வரிச்சலுகைகள், மானியங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலமும் மின்சாரத் துறையில் அதானியின் ஆதிக்கத்தை நிறுவுவதற்கு மோடி-ஷா கும்பல் வேலை செய்துக் கொண்டிருக்கிறது.

சூரிய ஒளி, காற்று உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சார உற்பத்தியில் மட்டுமின்றி, அனல் மின்சார உற்பத்தியிலும் அதானியின் ஆதிக்கத்தை நிறுவும் வகையில் மோடி அரசு வேலை செய்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் பல மாநிலங்களுக்கு அதானி குழுமம் அனல் மின்சாரத்தை விநியோகம் செய்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகள் அனல் மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரிக்கு அதானி குழுமத்தைத்தான் சார்ந்து இருக்கவேண்டிய நிலைமை மோடியின் பத்தாண்டுகால ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மோடி அரசானது நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோகம், துறைமுகங்கள், விமான நிலையங்கள் பராமரிப்பு உள்ளிட்ட பல துறைகளில் அதானியின் ஆதிக்கத்தை நிறுவுவதற்கான வேலையில் ஈடுபட்டு வருவதைப் போல மின்சாரத் துறையிலும் அதானியின் ஆதிக்கத்தை நிறுவுவதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறது.

ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலின் பாசிசத்தை எதிர்ப்பதாக கூறிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளும் மின்சாரத்துறை மட்டுமின்றி தங்கள் மாநிலங்களுக்குள் பல துறைகளில் அதானியின் ஆதிக்கத்தை நிறுவும் வகையில் வேலை செய்து வருகின்றன.

உழைக்கும் மக்களின் எதிரி அதானி!

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் மின்சாரத் துறையில் அதானியின் ஆதிக்கம் நிறுவப்படும் நடவடிக்கையானது இந்திய உழைக்கும் மக்களுக்கு எதிரான நடவடிக்கையாகும். மின்சாரத் துறையில் ஆதிக்கத்தை நிறுவுவதன் மூலமும் அதானி கொள்ளையடிக்கும் பணம் உழைக்கும் மக்களின் பணமே ஆகும்.

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் போது அதற்கு மின்சார வாரியத்தின் கடனை காரணமாகக் கூறுகின்றன. ஆனால் மின்சார வாரியத்தின் கடனிற்கே அதிக விலைக்கு மின்சாரத்தை அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளிடம் இருந்து கொள்முதல் செய்வது, மறுபுறம் அந்த மின்சாரத்தை குறைந்த விலைக்கு தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றுக்கு விற்பனை செய்வது என்ற கொள்கையே காரணமாகும்.

மேலும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் ஆண்டுதோறும் மின்கட்டணம் உயரும் என்ற முறைக்கு மக்களைப் பழக்கப்படுத்துகின்றனர். இதன்மூலம் மின்சாரத்துறையில் அதானியின் ஆதிக்கம் நிறுவப்படும் போது ஒரு யூனிட் மின்சாரத்திற்கு அதிகப்படியான பணத்தை அதானி மக்களிடம் இருந்து கொள்ளையடிக்க முடியும்.

அதேபோல, மின்சார சட்டத் திருத்தம் 2023-இல் உள்ள கூறுகளை மறைமுகமாக அமல்படுத்துவது, நேரத்திற்கேற்ப மின்கட்டணம் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது அனைத்தும் அதானியின் இலாப நோக்கத்திற்கே ஆகும். இந்தியா முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுவதும் அதானியின் நலனிலிருந்தே ஆகும்.

அதுமட்டுமின்றி, உலகப்பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க் உடன் இணைந்து இந்திய மக்களை சுரண்டுவதற்காகவும் அதானி குழுமம் தயாராகி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றவுடன் அதானி வாழ்த்து தெரிவித்ததும் அமெரிக்க உற்பத்தி மற்றும் எரிசக்தித் துறையில் முதலீடு செய்வதாக தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. இது அமெரிக்க நீதிமன்றத்தில் உள்ள வழக்கிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கான நடவடிக்கை என்று பலரும் கருத்து தெரிவித்தாலும், இந்தியாவில் மின்சார வாகன விற்பனை சந்தையைக் கைப்பற்றத் துடிக்கும் எலான் மஸ்க்கிற்கு விடப்படும் தூதும் ஆகும்.

இவையன்றி, பத்தாண்டுகால பாசிச ஆட்சியில் இந்திய உழைக்கும் மக்களை உறிஞ்சிக் கொழுத்து வளர்ந்த அதானி குழுமம், இன்று உலகின் பல நாடுகளில் தனது ஆக்டோபஸ் கரங்களை விரிவுப்படுத்தி வருகின்றது. கென்யா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அதானி நிறுவனத்திற்கு எதிராக நடக்கும் மக்கள் போராட்டங்கள் இதற்கான சான்றுகளாகும்.

இந்தச் சூழலில் இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிகள் அதானிக்கெதிராக மக்கள்திரள் போராட்டங்களைக் கட்டியமைப்பதற்கு பதிலாக நாடாளுமன்ற வரம்புக்குள் தங்களை சுருக்கிக்கொள்கின்றன. அதானியை எதிர்ப்பதிலும் இக்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்கவில்லை.

மேலும் இக்கட்சிகளுடைய அதானி எதிர்ப்பும் பெயரளவிற்கானதே ஆகும். தாங்கள் ஆளும் மாநிலங்களில் அதானியுடன் எந்த ஒப்பந்தங்களையும் இட்டுக்கொள்ளமாட்டோம் என்று அறிவிக்கக் கூட இக்கட்சிகள் தயாராக இல்லை. எனவே, அதானி குழுமத்திற்கெதிரான மாபெரும் மக்கள்திரள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டிய கடமை புரட்சிகர, ஜனநாயக சக்திகளிடமே உள்ளது.

மேலும், அதானியின் சொத்து மதிப்பு என்பதே நாட்டின் கோடானுகோடி உழைக்கும் மக்களைக் கொள்ளையடித்து சேர்த்த சொத்து என்பதால் அதனை பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவதே சரியான நடவடிக்கையாகும். ஆகவே, அதற்கான போராட்டங்களை புரட்சிகர, ஜனநாயக சக்திகள் கட்டியமைக்க வேண்டும்; அப்போராட்டங்களை மின்சாரத்துறையில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் அதானியின் ஆதிக்கத்தை அறுத்தெறியும் வகையில் வளர்த்தெடுக்க வேண்டும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க