ஏ.ஐ துறையில் அதானி முதலீடும் பாசிச கும்பலின் கார்ப்பரேட் சேவையும்!

தரவு மையங்களை அமைப்பதற்கு ஏக்கர் கணக்கில் நிலங்கள் கையகப்படுத்தப்படும். அவற்றை இயக்க அதிக அளவிலான மின்சாரம் தேவைப்படும். இதனால் மக்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படும் அபாயம் உள்ளது. இதுதவிர தரவு மையத்தின் சர்வர்களை குளிர்விப்பதற்காகத் தினந்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.

0

பிப்ரவரி 16 ஆம் தேதி அன்று, டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) சர்வதேச மாநாடு தொடங்கி நடந்து முடிந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் முக்கிய தலைவர்களும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் தொழில்நுட்பத் தலைவர்களும் பங்கேற்றனர்.

மாநாடு தொடங்கிய 12 மணி நேரத்திற்குள் அதானி குழுமம் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2035 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியால் இயங்கும் செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட தரவு மையங்களை (Data Centre) உருவாக்க 100 பில்லியன் டாலர் (9 லட்சம் கோடி ரூபாய்) முதலீடு செய்யவும், இதன் மூலம் உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த தரவு மைய தளத்தை உருவாக்கவும் அதானி குழுமம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

“இந்த முதலீட்டால் சர்வர் உற்பத்தி, மேம்பட்ட மின்சார உள்கட்டமைப்பு உள்ளிட்ட தொடர்புடைய துறைகளில் மேலும் 150 பில்லியன் டாலர் முதலீடு ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மொத்தம் 250 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏ.ஐ (AI) உள்கட்டமைப்பு சுற்றுச்சூழலை உருவாக்க முடியும்” என்று அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் பிப்ரவரி 17 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கூகுள், அமேசான், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், இந்தியாவில் ஏ.ஐ தரவு மையங்களை அமைப்பதற்காக பல பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை அறிவித்துள்ளன.

இந்நிலையில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் அமெரிக்க நிறுவனத்துடன் (EdgeConneX) இணைந்து தற்போது 2 ஜிகாவாட் திறன் கொண்ட தேசிய தரவு மையத்தை 5 ஜிகாவாட் வரை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அதானி என்டர்பிரைசஸ் தனது கூட்டு நிறுவனத்தின் (AdaniConneX) மூலம் கூகுளுடன் ஒரு பெரிய கூட்டாண்மையை அறிவித்தது. அதன்படி, கூகுள் 15 பில்லியன் டாலர் (சுமார் ₹1.25 லட்சம் கோடி) முதலீட்டில், விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஏ.ஐ தரவு மையத்தையும் அதற்குத் தேவையான எரிசக்தி உள்கட்டமைப்பையும் உருவாக்க உள்ளது.

மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து ஹைதராபாத் மற்றும் புனேயில் தரவு மைய வளாகங்கள் அமைக்கப்படும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


படிக்க: மஞ்சள் பட்டாணி இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு: அதானி-குஜராத்திகளுக்காக ஒழித்துக்கட்டப்படும் இந்திய விவசாயிகள்


முக்கியமாக அதானி குழுமம் இந்தியா முழுவதும் பெரிய அளவிலான தரவு மைய வளாகங்களை உருவாக்க விரும்பும் மற்ற முக்கிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வால்மார்ட்டின் பிளிப்கார்ட் உடன் இணைந்து, அதன் ஏ.ஐ பணிகளை (workloads) ஆதரிப்பதற்கும், அடுத்த தலைமுறை டிஜிட்டல் வணிகத்தை வலுப்படுத்துவதற்கும் இரண்டாவது ஏ.ஐ தரவு மையத்தை உருவாக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மேலும், அதானி என்டர்பிரைசஸ் 55 பில்லியன் டாலர் முதலீட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை விரிவாக்கி, உலக அளவில் மிகப்பெரிய பேட்டரி சேமிப்பு அமைப்புகளில் ஒன்றை நிறுவத் திட்டமிட்டுள்ளது.

அணுசக்தித் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிக்கும் புதிய அணுசக்தி சட்டத்தை 2025 ஆம் ஆண்டு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் பாசிச கும்பல் நிறைவேற்றியது. இதன் பின்னே அதானி பவர் லிமிடெட் (APL) அதானி அட்டாமிக் எனர்ஜி (AAEL) என்ற துணை நிறுவனத்தைத் தொடங்கி அணுசக்தித் துறையில் நுழைவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதேபோல், தற்போது செயற்கை நுண்ணறிவு சர்வதேச மாநாடு நடைபெற்ற வேளையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்து 100 பில்லியன் டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

முக்கியமாக, தரவு மையங்களை அமைப்பதற்கு ஏக்கர் கணக்கில் நிலங்கள் கையகப்படுத்தப்படும். அவற்றை இயக்க அதிக அளவிலான மின்சாரம் தேவைப்படும். இதனால் மக்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படும் அபாயம் உள்ளது. மின்சாரத்தைத் தரவு மையத்திற்குக் கொண்டு வருவதற்கு டிராண்ஸ்பார்ம்கள், உயர் மின்னழுத்த கேபிள்கள் அமைக்கப்படும். இவை விவசாய நிலங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இதற்காக வழியில் உள்ள மரங்கள் வெட்டப்படும் அபாயமும் உள்ளது. இதுதவிர தரவு மையத்தின் சர்வர்களை குளிர்விப்பதற்காகத் தினந்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.

விசாகப்பட்டினத்தில் அதானி நிறுவனம் தரவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மனித உரிமைகள் மன்றம் “புயல்களுக்கு ஆளாகக்கூடியதும், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடியதுமான கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது விசாகப்பட்டினம். மதுராவாடா மலைப்பகுதிகளும் அதை ஒட்டிய தாழ்வு நிலங்களும் கட்டுப்பாடின்றி நடந்துவரும் நில அபிவிருத்தி காரணமாக மரவெட்டால் பாதிக்கப்பட்டு, இயற்கை நீரேற்ற அமைப்புகள் சீர்குலைந்துள்ளன. இத்தகைய நிலப்பரப்பில் அதிக ஆற்றல் நுகர்வு மற்றும் அதிக வெப்ப உற்பத்தி கொண்ட மிகப்பெரிய தொழில்துறை வளாகத்தை அமைப்பது சுற்றுச்சூழல் ரீதியாகப் பொறுப்பற்ற செயலாகும்” என்று எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே செயற்கை நுண்ணறிவு தரவு மையம் அமைப்பதற்காக மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் அழிப்பதை எதிர்த்து குரல் கொடுக்கின்ற மக்கள் அதானி அம்பானி – மோடி கும்பலின் மக்கள் விரோத கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க