காஷ்மீரிலிருந்து இரண்டு பயங்கரவாதிகளை ஆயுதங்களுடன் பாதுகாப்பாக டில்லிக்கு அழைத்துச் செல்ல முயன்ற டி.எஸ்.பி தேவேந்தர் சிங்குக்கும் அவரது கூட்டாளியான இர்ஃபான் மிர்-க்கும் பிணை வழங்கியிருக்கிறது டில்லி நீதிமன்றம்.
கடந்த 2019 ஜனவரி 11-ம் தேதியன்று தெற்குக் காஷ்மீரின் குல்காம் பகுதியில் ஜம்மு காஷ்மீர் – டில்லி இணைப்புச் சாலையில் விரைந்து வந்த ஒரு காரை மிர் பஜார் சோதனைச் சாவடியில் தடுத்து விசாரித்தது போலீசு. காரில் இருந்த டி.எஸ்.பி தேவேந்திர சிங்-கிடம் விசாரித்து காரை சோதனையிட்ட போலீசிடம் இரண்டு ஏகே-47 ரக துப்பாக்கிகள் சிக்கியதைத் தொடர்ந்து, தேவேந்தர் சிங் கைது செய்யப்பட்டார்.

தேவேந்தர் சிங்குடன் அந்தக் காரில் பயணம் செய்த லஷ்கர் – ஈ – தொய்பாவின் முக்கியத் தளபதியான நவீது பாபா மற்றும் ஹிஸ்புல் – முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த அட்லஃப் மற்றும் இர்ஃபான் மிர் என்ற வழக்கறிஞர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து தேவேந்தர் சிங்கின் வீட்டில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதில் இரண்டு கைத்துப்பாகிகளும் ஒரு ஏ.கே. 47 துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டன. தீவிரவாதிகளின் வாக்குமூலங்களின்படி, ஸ்ரீநகர் மற்றும் தெற்குக் காஷ்மீர் பகுதியில் தொடர்ச்சியாக பல தேடுதல்கள் நடத்தி, பல இடங்களிலிருந்து வெடிபொருட்களும், துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன.

தேசபக்தியை குத்தகைக்கு எடுத்து விவாதங்களை நடத்தும் இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள் அனைத்தும் இந்த விவகாரத்தை சாதாரண செய்தியாகக் கடந்து சென்றன.

இந்தக் கைது நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய காஷ்மீர் டிஜிபி விஜயகுமார், பத்திரிகைகளுக்கு அளித்த நேர்காணலில், இது மோசமான குற்றம் என்றும், தேவேந்தர் சிங்கை ஒரு பயங்கரவாதியை விசாரிப்பது போலவே விசாரிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

அவர் கூறிய ஒரே வாரத்தில் இந்த வழக்கை காஷ்மீர் போலீசிடமிருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) அவசர அவசரமாக மாற்றியது மோடி அரசு.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 14, 19 ஆகிய தேதிகளில் தேவேந்தர் சிங் மீதும், இர்ஃபான் மிர் மீதும் தனியாக வழக்குப் பதிவு செய்த டில்லி போலீசின் சிறப்புப் பிரிவு ஜம்முவின் ஹிரா நகர் போலீசு நிலையத்தில் இருந்து டில்லிக்கு அழைத்து வந்தது.
தேவேந்திர சிங், டில்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட இணையதளத்தின் மூலம் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகளுடன் பேசியதாக போலீசு நீதிமன்றத்தில் கூறியது.

இந்திய தண்டனைச் சட்டம் 120B-யின் (கிரிமினல் சதி) கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இவர்கள் இருவரையும் காவலில் எடுத்தது டில்லி போலீசு. காவலில் எடுத்து 90 நாட்கள் ஆன நிலையில், டில்லியைத் தாக்க பயங்கரவாதிகளையும் ஆயுதங்களையும் கொண்டு வந்து கையும் களவுமாக மாட்டிய இருவர் மீது டில்லி போலீசு குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில் தேவேந்தர் சிங் மற்றும் இர்ஃபான் மிர் ஆகிய இருவருக்கும் பிணை கோரி அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் டில்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். பிணை மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவர்கள் இருவருக்கும் சொந்தப் பிணை ரூ. 1 லட்சம் மற்றும் வெளிநபர் பிணையாக இரண்டு பேரிடம் தலா ரூ. 1 லட்சம் பிணை பெற்று அவர்களை வெளியே விட உத்தரவிட்டுள்ளது. எனினும் இவர்கள் மீது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) பதிவு செய்த வேறு ஒரு வழக்கு விசாரணையில் இருப்பதால் இவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளது என்.ஐ.ஏ.

படிக்க:
சாத்தான்குளம் – தந்தை மகன் படுகொலையை கண்டித்து மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
♦ சென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்

கடந்த ஆறு ஆண்டுகளில் தேசிய புலனாய்வு முகமை மோடி – அமித்ஷாவின் வளர்ப்புப் பிராணியாகவே மாறியிருப்பதற்கு ‘முன்னாள்’ பயங்கரவாதியும் இந்நாள் போபால் தொகுதி எம்.பியுமான பிரக்யா சிங்கே சாட்சி. இந்த வழக்கிலும் தேசிய புலனாய்வு முகமை தனது எஜமானரது உத்தரவுக்கு ஏற்பவே நடந்து கொள்ளும் என்பதை நாம் எதிர்பார்க்கலாம்.

கைது நடந்த மூன்றாம் நாளிலேயே ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான சுவராஜ்யா, பண ஆசைக்காகவே தேவேந்தர் சிங் இந்தப் பாதகச் செயலை செய்ததாக உளவுத்துறை விசாரணையை சுட்டிக் காட்டி எழுதியிருக்கிறது. ஐ.பி, ரா உள்ளிட்ட உளவு அமைப்புகளின் விசாரணையின் முடிவில், ரூ. 12 லட்சம் பணத்துக்காக இந்தக் காரியத்தை செய்வதற்கு ஒப்புக் கொண்டதாக தேவேந்தர் சிங் கூறியதாகக் கூறியிருக்கிறது.

அதாவது வெறுமனே பணத்துக்காகத் தான் தேவேந்தர் சிங் இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார் என்பதோடு இந்த விசாரணை NIA-வால் சுருக்கமாக முடிக்கப்பட்டு விடலாம் என்பதை மட்டுமே நம்மால் இப்போதைக்கு அனுமானிக்க முடிகிறது.

காஷ்மீரில் பிரிவு-370 நீக்கத்துக்குப் பிறகு பார்வையிடவந்த, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பாராளுமன்ற எம்.பி-க்களுடன் பாதுகாப்பு அதிகாரியாக பணியில் இருந்த தேவேந்தர் சிங்.

தேவேந்தர் சிங் அழைத்துச் சென்ற பயங்கரவாதி நவீது பாபாவின் தலைக்கு ஜம்மு காஷ்மீர் போலீசால் நிர்ணயிக்கப்பட்ட விலையே ரூ. 20 லட்சம் எனும் போது தேவேந்திர சிங்கிற்கு வெறும் ரூ. 12 லட்சத்துக்காக தனது வாழ்க்கையையே பணயம் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே தேவேந்தர் சிங் வெறுமனே பணத்திற்காக இந்தக் காரியத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்பதையும், அதன் பின்னால் வேறு ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளார், ‘தி வயர்’ இணையதளத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன்.

கடந்த 2020 ஜனவரியில் கைது செய்யப்பட்ட தேவேந்தர் சிங்கின் வரலாறு மிகவும் முக்கியமானது. அப்பாவி காஷ்மீரிகளை கைது செய்து சித்திரவதை செய்வதிலும், பேரம் பேசிக் காசு பறிப்பதிலும் பெரும் கில்லாடி. இதற்காக துறைரீதியான நடவடிக்கைக்கு ஆளானவர்.

கடந்த 2001-ம் ஆண்டு நடத்தப்பட்ட ‘பாராளுமன்றத் தாக்குதலில்’, “தேசத்தின் கூட்டு மனசாட்சிக்காக” தூக்கு தண்டனை வழங்கப்பட்ட அப்சல் குரு எழுதிய கடிதம் ஒன்றை அவரது வழக்கறிஞர் சுஷில் குமார் வெளியிட்டார். அக்கடிதத்தில் தேவேந்தர் சிங் பற்றி அப்சல் குரு குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2001-ம் ஆண்டு தேவேந்தர் சிங் முகம்மது (பாராளுமன்றத் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி) என்பவரை தம்மிடம் அறிமுகப்படுத்தி, அவரை டில்லிக்கு அழைத்துச் சென்று அவருக்கு வீடு பார்த்துக் கொடுத்து உதவி செய்யும்படி தன்னை பணித்ததாக அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார். அதன் படி முகம்மதுவை தன்னோடு டில்லி அழைத்துவந்த அப்சல் குரு, முகம்மதுக்கு வீடு வாடகைக்கு அமர்த்திக் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து பின்னர் ஒருநாள் முகம்மது கேட்டுக்கொண்டதற்கிணங்க கார் வாங்க ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும், டில்லியில் பலரையும் சந்திக்க அழைத்துச் சென்றதாகவும் இந்த இடைப்பட்ட காலத்தில் தன்னிடமும் முகம்மதுவிடமும் தேவேந்தர் சிங் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கடிதம் வெளியான பின்னும் கூட தேவேந்தர் சிங்கின் மீது எவ்வித விசாரணையும் நடத்தப்படவில்லை. ஏற்கெனவே அப்சல் குரு சிறையில் இருந்தபோது நடத்தப்பட்ட விசாரணையின் போதே அவர் இந்த விவகாரங்களை சொல்லியிருக்கக் கூடும். ஆனாலும் தேவேந்தர் சிங் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அடுத்ததாக கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர், கடுமையான பொருளாதார நெருக்கடியையும் வேலையில்லா திண்டாட்டத்தையும் இந்தியா அனுபவித்துக் கொண்டிருந்த சமயத்தில் நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதல் சமயத்திலும் தேவேந்தர் சிங் புல்வாமா பகுதியின் பாதுகாப்புப் பொறுப்பாளராக இருந்திருக்கிறார்.

ஒட்டுமொத்த பகுதியும் படைகளின் நகர்வுக்காக முழுப் பாதுகாப்போடு பேணப்பட்டு வந்த சூழலில், 300 கிலோ வெடிமருந்து கார் எப்படி உள்ளே வந்தது என்ற கேள்விக்கு இன்னும் பதில் கூற மறுக்கிறது இந்திய அரசு.

இறுதியில், கடந்த ஜனவரியில் டில்லி சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், ஆயுதங்கள், தீவிரவாதிகள் சகிதமாக டில்லியை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் போலீசு தேவேந்தர் சிங்கை கைது செய்திருக்கிறது.

மேற்சொன்ன மூன்று சம்பவங்களிலும் பொருட்களையும் ஆட்களையும் பத்திரமாக வழியனுப்பி வைக்கும் வேலையை தேவேந்தர் செய்திருக்கிறார் என்பதை அனுமானிக்க முடிகிறது. தனது போலீசு பதவியின் காரணமாக யாரும் தமது வாகனத்தை சோதனையிட மாட்டார்கள் என்ற கணக்கில் ‘ஒரு திட்டத்தை’ நிறைவேற்ற முன் வந்திருக்கிறார்.

ஒருவேளை தேவேந்தர் சிங் சிக்காமல் தப்பியிருந்திருந்தால், டில்லி தேர்தலில் வேறு முடிவு வந்திருக்கலாம். ‘துரதிர்ஸ்டவசமாக’ சிக்கிவிட்டார். இனி என்னவெல்லாம் நடக்கலாம் என்பதற்கு தற்போது டில்லி போலீசு, டில்லி நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யத் ‘தவறிய’ நிகழ்வே ஒரு சான்று.

சொராபுதீன், இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குஜராத் டி.ஐ.ஜி வன்சாரா, நாட்டின் நலனுக்காகவே தான் தனது பணியைச் செய்ததாகவும், தன்னால் ‘பலனடைந்தவர்கள்’ வெளியே நன்றாக இருப்பதாகவும் கூறினார். அதன் பிறகு அவர் வழக்கு துரிதமாக விசாரிக்கப்பட்டு சிபிஐ-யால் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார். தேவேந்தர் சிங்கும் அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு விரைவில் ‘தேசபக்தராக’ வெளியே வரலாம் ! அந்த நாளும் வெகுதொலைவில் இல்லை !


– நந்தன்
செய்தி ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா, த வயர். 

2 மறுமொழிகள்

  1. அவரோட தேச பக்தி இருக்கட்டும் … சீனா ஆக்கிரமிப்பை பத்தி ஒரு தகவலும் வினவுல காணலையே … அமெரிக்கா ஆப்கானை ஆக்கிரமிப்பு செஞ்சிட்டான் ஏகாதிபத்தியம் அப்டி இப்டி னு கதருவையே …உன்னோட வசதிக்கு நீ செய்தி போடுற …அவனவன் வசதிக்கு அவன் ஆட்டம் போடுறான் …

  2. இவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் ட்ரூப்ஸின் வளர்ப்பும்,எப்படி ஒசாமா சி.ஐ.ஏ வால் பயிற்றுவிக்கப்பட்ட வயோ அதுபோல் இவர்கள் என்.ஐ.ஏ வால் வளர்க்கப்படும் இந்துத்துவா உளவு நோக்கங்கள்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க