எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளின் செயல்பாட்டை முடக்கும் மோடி அரசு – பாகம் 1

பாகம் 2 :

மாநில அரசுகளை முடக்குவதே மோடி அரசுக்கு முழுநேர பணியாம்

ஒன்றிய அரசின் அதிகார வரம்பிற்குள் வரும் சிபிஐ(CBI) மற்றும் அமலாக்கத்துறை(ED) ஆகியவற்றை தனது ஆளுமைக்குள் வராத அரசியல் கட்சிளை மற்றும் அரசியல் ரீதியாக எதிர்க்கும் மாநில அரசுகளை அச்சுறுத்தும் ஆயுதமாக மோடி பயன்படுத்துவது என்பது நாடறிந்த ஒரு செய்தி. அதற்கு ஏராளமான ஆதாரங்களை தரமுடியும். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஒரு ரூ.2000-க்காக மக்கள் வங்கி வாசலில் மணி கணக்கில் வரிசையில் நின்றபோது தமிழ்நாட்டில் சேகர்ரெட்டியின் வீட்டில் ரெய்டு மூலம் எடுக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளாக ரூ.32 கோடி பற்றி ரிசர்வ் வங்கியே நற்சான்று தந்தது மறக்க முடியாது.

அதன் தொடர்ச்சியாக இன்றளவும் எந்த கட்சியிலிருந்தாலும் சரி, என்ன குற்றங்கள் செய்திருந்தாலும் சரி, பாஜக-வில் ஐக்கியமாகிவிட்டால் கங்கையில் குளித்து புனிதபடுத்தியது போல என்று கேலி சமூக ஊடகங்களில் வைரலாக இருக்கிறது. குதிரை பேரங்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் கேவலமான முறையில் பயன்படுத்தி தாங்கள் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் பல மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்திருப்பதை முதலாளித்துவ ஊடகங்களே அம்பலப்படுத்தியுள்ளன.

ஜிஎஸ்டி வரியை மாநிலங்கள் மூலம் வசூல் செய்து கொண்டு அவற்றுக்கு உரிய பங்கினை தராமல் இழுத்தடிப்பது அதன்மூலம் மாநில அரசுகளை நிதிபற்றாக்குறையில் நிறுத்தி உரிய திட்டங்களை அமுல்படுத்தவிடாமல் செயலற்ற அரசாக குறை சொல்லுவது என்று நரித்தனமாக நடந்து கொள்கிறது மோடி அரசு. புயல் வெள்ள நிவாரணங்களை எதிர்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு உரிய நேரத்தில் உரிய தொகையை தராமல் வேண்டுமென்றே சிக்கலில் மாட்டிவிடுவது என்ற பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறது.

படிக்க :

நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் ! பாஜக ஸ்டைல் !!

” லவ் ஜிகாத் ” சட்டத்தை அமல்படுத்தும் பாஜக மாநில அரசுகள் !

தன்னை எதிர்க்கும் மாநில அரசுகள் மீது அமைப்பு ரீதியாகவும் மோடி அரசு பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது. அதற்கு ஏற்றவாறு ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம் நயவஞ்சகமான முறையில் விசுவாசத்தை சோதனை செய்கிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகளை தனிப்பட்ட முறையிலும் கொள்கை ரீதியாகவும் தங்களிடம் கீழ்படிந்து விசுவாசமாக நடக்க வேண்டும் என்பதாக நிர்பந்திக்கப்படுவதை வெளிப்படையாக பல நேரங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.

தங்களின் கட்சி பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள குறிப்பாக மகாராஷ்டிரா மேற்குவங்கம் ஆகியவற்றிலுள்ள ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஒன்றிய அரசின் கட்சியின் கொள்கைகளுக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென மிகப்பெரிய நிர்பந்தத்துக்கு உள்ளாவதை வெளிப்படுத்தியுள்ளனர். இப்படிப்பட்ட நடைமுறை இயல்பாகவே சுயாட்சி மனப்பான்மையுள்ள மாநில அரசுகளை வக்கிரமான முறையில் நிர்வாக ரீதியாக முடக்கி போட்டு செயல்பாடற்றதாக்க வேண்டும் அல்லது தங்களுக்கு பணிய செய்யவேண்டும் என்பதற்காகவே செய்யப்படுகிறது. ஒருபுறம் இந்திய அரசியல் சட்டத்தை மதிப்பதாக காட்டிக் கொண்டே அதற்கு எதிரான நடவடிக்கைகளை செய்வதன் மூலம் ஒன்றிய அரசின் அடிப்படையையே தகர்த்து கொண்டிருக்கிறது மோடி அரசு.

மோடி – அமித்ஷா அரசு எதிர்கட்சி ஆளும் மாநிலங்களை ஆளுநர்கள் மூலம் நிர்வாக சீர்குலைவு வேலைகளை செய்து வருகிறது. பாண்டிச்சேரியில் அதன் ஆளுநர் கிரண்பேடி நடத்திய போட்டி அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மாண்பினை தகர்த்தது. மேற்குவங்கத்தில், மகராஷ்டிராவில் என ஆளுநர்கள் மூலம் அந்தந்த மாநில அரசுகளை செயல்படவிடாமல் குடைச்சல் கொடுத்து வருவது நாளும் வருகிற செய்திதான்.

பாஜக பெரும்பான்மை பெறாத மாநிலங்களிலும் அதிகாரத்தை கைப்பற்ற அரங்கேற்றும் குதிரை பேரங்கள், ஆள்கடத்தல், சிபிஐ மிரட்டல் போன்றவற்றுக்கு உறுதுணையாக பாஜக ஆட்சியை பிடிக்க என்ன அக்கிரமம், அநியாயம் நடந்தாலும் வாயே திறக்காமல் பாஜக-வின் கட்சிகாரர் போல நடக்கும் ஆளுநர்கள் எதிர்கட்சி மாநிலங்களில் பொறுப்பை காட்டுவதாக வம்படியான கோமாளித்தனங்களை அரங்கேற்றுகின்றனர். இப்போது தமிழ்நாட்டிலும் ஆளுநர் மூலம் மோடி – அமித்ஷா கூட்டணி தனது வேலையை காட்டிக் கொண்டிருக்கிறது. இந்தியா குடியரசான பின் முன்னெப்போதும் இல்லாத வகையில் கேவலமான முறையில் அரசியல் சட்டம் ஆளுநர்களை கொண்டு மீறப்படுகிறது.

மோடி பிம்பத்தை ஊதி பெருக்க மக்களின் வரிப்பணம்!

மாநில மத்திய அரசுகளின் கூட்டாட்சி என்ற இந்திய அரசியல் சட்டத்தின் மாண்பினை கேலி செய்யும் வகையில் எந்த பிரதமருக்கும் செய்யாத வகையில் மோடியின் பிம்பத்தை ஊதிபெருக்கி காட்ட அரசின் கஜானா தாராளமாக திறந்துவிடப்பட்டுள்ளது. மாநில அரசு பட்டியலில் இருக்கும் துறைகளில் திட்டங்கள் நிறைவேற்றபடும்போது கூட மோடியின் உருவப்படம் வருவது மோடியின் விளம்பர மோகம் மற்றும் மொத்த நாட்டுக்கே தான்தான் சர்வாதிகாரம் படைத்த தலைவன் என்ற அதிகாரத்துவத்தை நிலைநாட்டுவதாக உள்ளது.

பிரதமர் மோடியை சுற்றி செயற்கையாக போடப்படும் ஆளுமை வழிபாட்டுமுறைகள் அவரை சுற்றி ஒரு ஒளிவட்டம் போட்டு பாராளுமன்றம், நீதிமன்றங்கள், கட்சிகள், ஆட்சிகள் எல்லாவற்றுக்கும் மேலானவராக காட்டுவதற்காகும் செலவினங்கள் யாவும் மாநில மக்கள் வரிப்பணத்திலிருந்து கணக்குகாட்டப்படாத வகையில் பிடுங்கியெடுக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு பி.எம் கேர்ஸ் நிதி அமைப்பை கொரோனா பெருந்தொற்றையொட்டி பிரதமர் மோடி ஏற்படுத்தினார். ஏற்கனவே பேரிடர் நிதி என்ற தனி அமைப்பும் ஒன்றிய அரசிடம் உள்ளது. இந்த பி.எம் கேர்ஸ் என்பது எவரும் கேள்வி கேட்க முடியாத உள்நுழைந்து செயல்பாடுகளை ஆராய முடியாத வகையில் சீலிடப்பட்டுள்ளது. இது உண்மையில் இந்திய அரசின் பிரதமர் பேரில் இருந்தாலும் நாட்டின் எந்த சட்டத்திட்டங்களுக்கும், ஆடிட் வகைகளுக்கும் உட்படுத்தபட முடியாது.. இந்த நிதிக்கு தரப்படும் பணத்திற்கு வரிவிலக்கு உண்டு. அதுவும் கார்ப்பரேட் சமூக பொறுப்பு என்ற பெயரில். அதே சமயம் மாநில அரசுகள் ஏற்படுத்தியிருக்கும் நிவாரண நிதியகங்களில் செலுத்தப்படும் நன்கொடைகளுக்கு வரிவிலக்கு செய்யப்பட்டுள்ளது. ஒரு கூட்டாட்சி என்ற கொள்கையை தகர்க்க மோடி வைத்திருக்கும் ஆயுதங்களில் இதுவும் ஒன்று.

கூட்டாட்சி ஒன்றியத்தில் சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட அரசுகளை உண்மையில் ஒழித்த ஒரே பிரதமர் மோடி தான். கோவா, அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய யூனியன் பிரதேசங்கள் மாநிலங்களாக மாற்றப்பட்டன. அதே வேளையில் மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாயின. இது மத அடிப்படையில் மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்த வலிந்து திணிக்கப்பட்ட ஒன்று. 370 சட்ட பிரிவை நீக்கி முஸ்லீம் மக்கள் ஏதோ சலுகைகளை அனுபவித்து வந்ததை போன்ற அவதூறுகளை நாடு முழுக்க பரப்பியது. இதன் மூலம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான பெரும்பான்மை வெறுப்புணர்வை வளர்க்கும் தொனியுடன் கூடிய அழிவுக்கு வழிவகுக்கும் செருக்கு மற்றும் அடாவடித்தனத்துடனும் அதிகார போதையுடனும் செய்த செயலாகும். வேறெந்த இந்தியப் பிரதமரும் கூட்டாட்சிக் கொள்கை  அரசியல் சட்டத்தின் மீது இதை போன்றதொரு மிகக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தொடுத்ததில்லை.

ஜம்மு மற்றும் காஷ்மீரை போலவே அதற்கு வெளியேயும், நரேந்திர மோடியும், அமித்ஷாவும் மாநிலங்களின் உரிமைகளை பலவீனப்படுத்துவதற்கு 356-வது பிரிவை விட அப்பட்டமான மற்றும் கொடூரமான நுட்பமான கருவிகளைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பதுதான் நடைமுறையில் கண்கூடாக தெரிவது.

நாட்டின் மொத்த ஊடகங்களையும் அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு உடந்தையாக செயல்படவைத்து மக்களின் வரிபணத்தில் உருவாகி மிகச் சிறப்புடன் செயல்பட்டு வரும் பல்கலைக் கழகங்களின் மாண்புகளை குலைத்து சீரழிப்பது இராணுவத்தை அரசியல்மயமாக்கி தங்களது காவி எண்ணத்தோடு செயல்பட தூண்டுவது; அதை அம்பலபடுத்தி பேசுபவர்களை தேச விரோதிகள் என தூற்றுவது; பெரும்பான்மை மதவாதத்தை வெறித்தனத்துடன் கூடிய வன்முறைகளாக செயல்படுத்த பிரதமரே அதே மத நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று முழுஆதரவு கொடுப்பது என்று இந்திய குடியரசின் கூட்டாட்சி கொள்கையின் மீது பன்முக தாக்குதலை திட்டமிட்டு அரங்கேற்றி வெற்றிகரமாக செயல்படுத்துவதே இத்தனை ஆண்டுகால மோடி – அமித்ஷா ஆட்சியின் சாதனைகளாகும்.

படிக்க :

மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் அணைப் பாதுகாப்பு மசோதா !

நூல் அறிமுகம் || 1974 : மாநில சுயாட்சி || ஆழி செந்தில்நாதன்

இந்த சாதனைகளுக்காக மக்கள் பெருமைபட எதுவும் இல்லை. மாநில அரசுகளும் தேர்தல்கள் மூலம் சட்டப்பூர்வமாக அமைகின்ற அரசுதான். ஆனால், மாநில அரசுகளின் உரிமைகளை பறித்து நிதி ஆதாரங்களை முடக்கி எதற்கெடுத்தாலும் தன்னை நோக்கி கையேந்தும் நிலையில் வைப்பதன் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகளை முக்கியமாக ‘வாக்களிப்பதால் கிடைக்கும் சிறப்பான உரிமையை’ கேலிக் கூத்தாக்குகிறது.

மாநில சுயாட்சி கோரிக்கை மாநில அரசுகளின் ஓட்டாண்டித்தனத்தால் வலுவிழந்து இருப்பதும் மோடியின் காட்டுதர்பார் ஆட்சிக்கு காரணமாகும். மாநில சுயாட்சி கோரிக்கையின் மீது மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் அனைத்து அமைப்புகளும் கவனம் செலுத்தி மக்கள் இயக்கங்களை முன்னெடுத்து மாநில அரசுகளுக்கு நிர்பந்தத்தை உருவாக்க வேண்டும்.

மோடி அரசின் செயல்பாடுகளை தனி தனியான செயல்பாடுகளாக பார்க்காமல் ஒரு திட்டமிட்ட முறையில் கட்டமைக்கப்படும் பாசிசத்திற்கான ஊற்றின் மூலமாக மக்களுக்கு புரியவைக்கும் வகையில் தொடர்ந்து அம்பலபடுத்தி விளக்க வேண்டியது ஜனநாயக உணர்வுள்ள செயற்பாட்டாளர்களது கடமையாகிறது.

(முற்றும்)


மணிவேல்
மூலக்கட்டுரை : ராமச்சந்திர குஹா
நன்றி : ஸ்க்ரால்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க