அடாவடித்தனமாக எதிர்கட்சிகளின் ஆலோசனைகளை கருத்துக்களை, விமர்சனங்களைக் காலில்போட்டு மிதித்து மூன்று வேளாண் சட்டங்கள், நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு சட்டங்கள் போன்ற மசோதாக்களை – சட்டங்களை பாசிச ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் பெரும்பான்மை என்ற பெயரில் மாநிலங்களின் உரிமை மற்றும் உழைக்கும் மக்களுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றி வருவதை நாடே நன்கு அறியும்.
கடந்த 02.12.2021 அன்று மாநிலங்களைவையில் பாசிச மோடி கொண்டு வந்த அணைப் பாதுகாப்பு மசோதாவை திமுக, சி.பி.எம். உள்ளிட்ட பிற எதிர்கட்சியினர் அனைவரும் “அவசரகதியில் கொண்டு வரப்பட்டுள்ள அணைப் பாதுகாப்பு மசோதா என்பது அரசியல் சட்டம் தந்துள்ள கூட்டாட்சி தத்துவத்தின், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்” ; “மாநில அரசுகளின் அடிப்படை உரிமைகள் – அதிகாரங்களைப் பறித்து ஒன்றிய அரசிடம் அதிகாரத்தைக் குவித்துக் கொள்ளுதல்;” ; “அணைகள் மாநிலங்களுடையவை, அவற்றின் பாதுகாப்பும் மாநிலங்களுடையவை என்ற அரசியல் சாசனத்தின் விதி 252-ஐ மீறுவதோடு மாநிலங்களின் அதிகாரத்திற்கே குழி பறிக்கிறது” என்பதை சுட்டிக்காட்டி விமர்சித்திருக்கிறது திமுக. இதனை அதிமுக, சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகள் அங்கீகரித்தன.
ஆனால், மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தனக்குள்ள பெரும்பாண்மையைப் பயன்படுத்தி அணைப் பாதுகாப்பு மசோதாவை மாநிலங்களைவை தேர்வுக் குழுவிற்கு அனுப்பத் தேவையில்லை என முடிவு செய்து சர்வாதிகாரமாக மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றிவிட்டனர்.
படிக்க :
முல்லைப் பெரியாறு அணையை தகர்க்கத் துடிக்கும் கேரள அரசு !
முல்லைப் பெரியாறு அணை மீதான பொய்ப் பிரச்சாரம் || மக்கள் அதிகாரம் கண்டனம்
இந்த அடாவடித்தனத்தை விமர்சித்த திமுக, இம்மசோதாவானது மாநில – ஒன்றிய அரசுகளுக்கு இடையில் முரண்பாட்டைத் தீவிரப்படுத்துவதோடு எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் உதாசீனப்படுத்தியதையும், நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளை மதிக்காமல் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் சர்வாதிகாரச் செயல் என கண்டனம் செய்துள்ளது.
ஆனால், இதற்கு பதிலளித்த ஒன்றிய அரசின் இணை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “இந்த மசோதா தண்ணீர், அணை மற்றும் மின்சாரம் போன்றவைகளின் மீதான மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கவில்லை. மாறாக அணைப் பாதுகாப்பு விதிமுறைகளை உறுதிப்படுத்தவும் அணை தொடர்பான பேரழிவுகளைத் தடுக்கவும் மட்டுமே முயற்சிக்கிறது.” என்று கூறி மாநிலங்களின் எதிப்பை – ஆட்சேபணையை மறுத்துள்ளார்.
இதனடிப்படையில் குரல் வாக்கெடுப்பு மூலம் அணைப் பாதுகாப்பு மசோதாவை அடாவடித்தனமாக நிறைவேற்றிவிட்டது பாசிச மோடி அரசு.
அணைப் பாதுகாப்பு மசோதாவானது அரசியல் சட்டத்திற்கு – மாநில சுயாட்சி உரிமைக்கு எதிரானது – கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமானது !
இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவில் 17-வது பிரிவின் 2-வது பாராவின் படி தண்ணீர் மாநில பட்டியலுக்குரியது. இதன்படி தண்ணீர் விநியோகம், விவசாயம், மின் உற்பத்தி ஆகியவை மாநில உரிமைக்குட்பட்டவை. ஆனால், அணைப் பாதுகாப்பு என்ற பெயரில் தண்ணீருக்குள்ள மாநில உரிமையை இப்போது ஒன்றிய அரசு இச்சட்டத்தின் மூலம் பறிக்கிறது. மேலும் இச்சட்டம், தண்ணீர் மற்றும் அணைக்கான மாநில அரசின் அதிகாரத்தைப் பறித்து ஒன்றிய அரசிடம் குவிக்கிறது.
இதன்மூலம் மாநில சமூக அமைப்பிற்கும் அதன் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் அணைகள் மீதான ஆற்றுமையை – நீரின் மேலாண்மையை மாநிலங்களிடமிருந்து பறித்து ஒன்றிய அரசிடம் குவித்துக் கொள்கிறது. தமக்குச் சாதகமில்லாத மாநிலங்களைப் பழி வாங்குவதற்கும் அம்மாநிலங்களுக்குத் தேவையான நீர் கொடுக்கப்படாமல் பரிதவிக்க விடப்படும். இதன்மூலம் நீருக்காக ஒன்றிய அரசிடம் கையேந்தி பிச்சையெடுக்கும் நிலையை உருவாக்கி, மாநிலங்களை தனதுக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது தான் இந்த பாசிசக் கும்பலின் திட்டம்.
இதன்மூலம் மாநிலங்கள் அதனதன் தர நிர்ணயம், தொழிற்நுட்பம் அடிப்படையில் கட்டப்பட்ட அணைகளை இம்மசோதாவின் ஓட்டைகளைப் பயன்படுத்தி அணைகள் குறித்த மதிப்பீட்டை தனக்கு தேவையான வகையில் கட்டியமைப்பதை ஒன்றிய அரசால் செய்யமுடியும். “ஒரு பானைச் சோத்துக்கு ஒரு சோறு பதம்” என்பதுபோல இதன் ஒரு சில அம்சங்களை பரிசீலித்தாலே பாசிச மோடி அரசின் நோக்கத்தையும் இவை உருவாக்கப்போகும் கேட்டையும் புரிந்துக் கொள்ள முடியும்.
ஒன்றிய அரசு, தேசிய அளவில் “தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையத்தை” உருவாக்கும். இதற்கான நபர்களை ஒன்றிய அரசே நியமிக்கும். இதன் தலைவராக ஒன்றிய நீர்வள ஆணையரே இருப்பார். இதேபோல் மாநில அளவிலும் அணைப் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்கும். அவற்றிலும் ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் இடம்பெறுவர்.
இதன்படி மாநிலங்களின் அணைகள் எப்படி கட்ட வேண்டும்; எவ்வளவு நீரை தேக்க வேண்டும்; குடிநீர், விவசாயம், இதர தேவைகளுக்கு எவ்வளவு நீரைப் பயன்படுத்த வேண்டும் என்பதை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் தீர்மானிக்கும். இவற்றை ஏற்கும்படி மாநில அணைகள் பாதுகாப்புக் குழுக்களில் மோடி அரசால் நியமிக்கப்படும் ‘அடிப்பொடிகள்’ மூலம் நிர்பந்திக்கும். இதன்மூலம் மாநிலங்களின் நீர் மேலாண்மையை நீர்வழித்தடத்தைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை – மாநிலங்களுக்கான உரிமையைப் பறித்து அணை – நீர் ஆகிய அனைத்திலும் ஒன்றிய அரசு தனது அதிகாரத்தைக் குவித்துக் கொள்கிறது.
பழைய அணைகளையும், புதிய அணைகளையும் தரம் உட்பட அனைத்தையும் தேசிய அணை பாதுகாப்பு கமிட்டி சோதிப்பதற்கும், அதனைடிப்படையில் அணைகளை தொடர்ந்து பராமரிப்பதா? இல்லை இடிப்பதா? என்பதை தீன்மானிப்பதற்கும் உரிமையை வழங்குகிறது.
இது மாநில அளவில் அணைகளின் தேவை, நீர்ப் பரப்பு, நிலப் பரப்பு, அணைகளுக்கான பகுதிகள் – அதற்கான கட்டுமானப் பணிகள் அனைத்தையும் தீர்மானிக்கும் சுதந்திரத்தையும் – மாநில சுயாட்சிக்கான ஜனநாயக உரிமைகளையும் பறித்துவிடும். மேலும், அணைகள் கட்டுமானப் பணியை – அதை பராமரிக்கும் பணியை – நீரை தேக்குவதை – நீரை விநியோகிப்பதை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் நிலைமை வரலாம். நாட்டையே கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கியிருக்கும் மோடி, அணைகளை வழங்க மாட்டாரா என்ன?
இதற்கு தண்ணீர் தனியார்மயமாக்கம் எனும் உ-த-தா கொள்கையும் அடித்தளமாக அமைந்துள்ளது. இயற்கைச் செல்வமான நீரை விநியோகிக்கும் வணிகத்தை கோவை, திருப்பூர் மாவட்டங்களின் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துள்ளதே இதற்குச் சாட்சியாக அமைகிறது. இவற்றை எதிர்த்து போராடும் சக்திகளை தேசிய அணைப் பாதுகாப்புக் கமிட்டியை செயல்பட விடாமல் தடுத்ததாகக் குற்றம் சுமத்தி சிறையில் அடைக்கவும் முடியும்.
அந்தந்த மாநிலங்களில் உள்ள அணைகளுக்கு அந்தந்த மாநிலங்களே உரிமையாளர்கள் என்ற அம்சமும் இந்த மசோதாவில் உள்ளது. சமீபத்தில் நடந்துவரும் முல்லைப் பெரியாறு நீர் பங்கீட்டு பிரச்சினையில் இது தமிழக விவசாயிகளுக்கு விரோதமாகவே முடியும்.
முல்லைப் பெரியாறு மட்டுமல்ல பிற மாநிலங்களில் அமைந்துள்ள தமிழகத்தின் அணைகளுக்கு ஆபத்தானதாகவே அமையும். முல்லைப் பெரியாறு, பெருவாரிப் பள்ளம், பரப்பிக்குளம், சிறுவாணி போன்ற அணைகளை இடிக்க வேண்டும் என்று – முல்லைப் பெரியாது அணையை இடிக்க வேண்டுமென்று கேரள அரசு நிர்பந்திப்பதைப் போல – இதர மாநில அரசுகளும் உருவாக்கலாம் அல்லது அணையில் எவ்வளவு நீரை தேக்க வேண்டும் எவ்வளவு நீரை வெளியேற்ற வேண்டும் என்பதையும் தீர்மானித்து அவற்றை நிறைவேற்றி நிர்பந்திக்கவும் செய்யலாம் அல்லது காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணைக் கட்டுவது, முல்லைப் பெரியாறு அணைக்கு குறுக்கே அணைக் கட்டுவது, பாலாறுக்கு குறுக்கே அணைக் கட்டுவதை ஒன்றிய அரசால் செய்யமுடியும்.
இனி நதிநீர் பங்கீடு தொடர்பாக வழக்குகளை பொது நல அமைப்புகள் நீதிமன்றத்தில் தொடுக்க முடியாது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் போல, தேசிய அணை பாதுகாப்புக் கமிட்டி தான் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டது.
படிக்க :
மேக்கேத்தாட்டு அணை : கர்நாடகம் நோக்கி மக்கள் அதிகாரம் பேரணி !
மேக்கேதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்து || மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
மாநிலங்களின் சுயாட்சியைப் பறிப்பதும் நீர் மேலாண்மைக்கு உலை வைப்பதும், இதன் மூலம் மாநிலங்களின் சமூக அமைப்பிற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் – குறிப்பாக தமிழகத்திற்கு – ஊறு விளைவிக்கும் இந்த அநீதியான அணைப் பாதுகாப்பு மசோதாவை எதிப்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரைக் குத்தும் வேலையை காவிகள் தொடங்கிவிட்டனர். இதற்கு எதிராக தமிழக அரசும் தமிழக கட்சிகளும் ஜனநாயக, புரட்சிகர சக்திகளும் இந்த அணைப் பாதுகாப்பு மசோதாவானது மாநிலங்களிடம் சுயாட்சி உரிமையைப் பறித்து, கூட்டாட்சி தத்துவத்திற்கு குழிப்பறிக்கும் என்பதை முன் வைத்து சட்டரீதியாகவும் வீதியிலும் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே பேரவை என்ற இவர்களின் ஒற்றைப்பார்வை இதற்கேற்ப காவி – கார்ப்பரேட் பாசிசத்தை கட்டியமைப்பதில் ஆர்.எஸ்.எஸ். – பாஜக வகையறாக்களின் நோக்கத்தை முறியடிப்பது அவசியம் என்பதையும் பிரச்சாரமாக முன்னெடுக்க வேண்டும். பெரும் போராட்டங்களைக் கட்டியமைத்து இந்த மசோதாக்களை திரும்பப் பெறச் செய்ய வேண்டும். இதுதான் இன்று நம் முன் நிற்கும் பெரும்பணி !

கதிரவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க