கேரளாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் பெய்யத் துவங்கிய கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு மற்றும் இடுக்கி ஆகிய அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வந்தன. இச்சூழலைக் காரணமாக வைத்து முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும் அதனால் அதனை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்றும் முல்லைப் பெரியாறு அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர் மட்டத்தை குறைக்க வேண்டும் என்றும் கேரள அரசியல் கட்சிகள் பரப்புரையைத் துவக்கின. அதன் தொடர்ச்சியாக #DecommisionMullaPeriyarDam என்ற பெயரோடு பல்வேறு பதிவுகள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்தன.
சமூக வலைத்தளங்களில் இத்தகைய கருத்துக்கள் வரும் முன்னரே, கடந்த அக்டோபர் 16-ம் தேதி, கேரளத்தைச் சேர்ந்த ஜோ ஜோசப் என்பவரும் “சுரக்ஷா சாரிட்டபிள் ட்ரஸ்ட்” என்ற தன்னார்வ நிறுவனமும் அணையின் பாதுகாப்புக் குறித்து உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர்.
அதில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில், மழை நீர்வரத்து அதிகரித்திருக்கும் நிலையில் அணையின் நீர்மட்டத்தை குறைக்கவேண்டும் என்றும் அப்படிச் செய்யத் தவறினால், முல்லைப் பெரியாறு அணையின் தாழ்வாரத்தில் இருக்கும் பலநூறு குடும்பங்கள் பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். மேலும் அணை மிகவும் பலவீனமாக இருப்பதால் மக்களின் பாதுகாப்பு கருதி புதிய அணை கட்ட உத்தரவிடவும் கோரியிருந்தனர்.
இவ்வழக்கு அக்டோபர் 28 அன்று நீதிபதி கான்வில்கர் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பிலும், கேரள அரசின் சார்பிலும் இந்த வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
படிக்க :
முல்லைப் பெரியாறு அணை மீதான பொய்ப் பிரச்சாரம் || மக்கள் அதிகாரம் கண்டனம்
நூல் அறிமுகம் : முல்லை பெரியாறு அணை – வரலாறும் தீர்வும்
அதில் கேரள அரசு, தாக்கல் செய்த அறிக்கையில், ரூல்கர்வ் முறையில் மேற்பார்வைக் குழு அனுமதித்த அணை மட்டத்தை நவம்பர் 10 வரையில் 138.3 அடியாக மாற்றியமைக்க அறிவுறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர்,  “நவம்பர் 10- தேதி வரையில் அணையின் மட்டத்தை 139-ஆக பராமரிக்கும் பட்சத்தில் எங்களுக்குப் பிரச்சினை ஏதும் இல்லை. ஆனால் கேரளாவைப் பொருத்தவரையில் ஒவ்வொரு ஆண்டும் 142 அடிக்குக் கீழ் அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க முயற்சித்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன” என சுட்டிக் காட்டினார்.
உச்சநீதிமன்றமும் மனுதாரர்களின் ‘அச்சத்தைக்’ கருத்தில் கொண்டு தமிழக வல்லுனர் குழுவால் தரப்பட்டுள்ள ரூல்கர்வ் அட்டவணையில் உள்ளபடி நீர் மட்டத்தை பராமரிக்க தமிழ்நாடு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
வழக்கை நவம்பர் 13-ம் தேதிக்கு தள்ளிவைத்த உச்சநீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கை குறித்து நவம்பர் 8-ம் தேதிக்குள் விரிவான பதிலளிக்கும்படி கேரள அரசுக்கு உத்தரவிட்டது. அதுவரைக்கும் அணையில் நீர் தேக்கும் அளவை ரூல்கர்வ் முறையில் கணக்கிட்டு தமிழக அரசுப் பொறியாளர்கள் கொடுத்திருக்கும் அட்டவணையின்படி அணையின் நீர்மட்டத்தை பராமரிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
அதன்படி, அக்டோபர் 30-ம் தேதி வரை அணையின் நீர்மட்டத்தை 138 அடியாகவும், நவம்பர் 10-ம் தேதிவரை 140 அடியாகவும், நவம்பர் இறுதி வரை 142 அடி வரையிலும் நீர்மட்டத்தை பராமரித்தது தமிழக அரசு.
அக்டோபர் 28 அன்று உச்சநீதிமன்ற உத்தரவு வந்த சமயத்தில் கேரளாவில் கடும் மழைப் பொழிவு இருந்தது. அக்டோபர் 29-ம் தேதியே அணையின் நீர்மட்டம் 138 அடியை அடைந்தது. தண்ணீர்வரத்து அதிகரித்த  நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின் படி 138 அடியில் நீர்மட்டத்தை பராமரிக்க 29-ம் தேதியே அவசர அவசரமாக உபரிநீரை தமிழ்நாட்டுப் பகுதிக்கும் இடுக்கி அணைப் பகுதிக்கும் தமிழக பொதுப்பணித்துறை திறந்துவிட்டது.
ரூல்கர்வ் அட்டவணையின் படி, நவம்பர் 1-ம் தேதி முதல் நீர்திறப்பு குறைக்கப்பட்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், 140 அடியாக பராமரிக்கப்பட்டது. நவம்பர் 10-ம் தேதிக்குப் பின்னர் 142 அடியாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நவம்பர் 8-ம் தேதி விரிவான அறிக்கையை கேரள அரசு தாக்கல் செய்தது. அதில் தமிழக அரசு, தமக்கு நீர்மட்டம் குறித்து தேவையான தகவல்களைத் தரவில்லை எனவும், நிலநடுக்கம் குறித்த எவ்வித முன்னேற்பாடும் தமிழக அரசிடம் இல்லை என்றும் வாதிட்டது. மேலும் அணை கட்டப்பட்டு 125 ஆண்டுகள் நிறைந்த நிலையில் அணை பலவீனமாக இருப்பதால் புதிய அணையைக் கட்ட அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.
இதற்கு 12-ம் தேதி பதிலளித்த தமிழக அரசு, முல்லைப் பெரியாறு அணையை கேரள அரசு பிரச்சினைக்குரியதாகக் காட்டுவதாகவும், ஆனால் அணை உறுதியாக இருப்பதாகவும் பதில் மனு தாக்கல் செய்தது. மேலும், தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்னர், முறையாக உரிய அதிகாரிகளுக்கு தகவல் தருவதாகவும், அணையின் நீர்மட்டம் குறித்த அறிக்கைகள் முறையாக வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், கேரள அரசு தொடர்ச்சியான மனுக்கள் மூலம் தமிழகத்தை துன்புறுத்துவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
தமிழக அரசு அளித்துள்ள மனுவிற்கு பதிலளிக்க கூடுதலாக 24 மணிநேரம் அவகாசத்தை கேரள அரசு கேட்ட நிலையில், இந்த வழக்கை நவம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். நவம்பர் 22-ம் தேதி கூடிய நீதிமன்ற அமர்வில், இந்த வழக்கில் அணையின் பாதுகாப்பு பராமரிப்பு தொடர்பாக அளிக்கப்பட்ட பல்வேறு மனுக்கள் தீர விசாரிக்கப்பட வேண்டியது இருப்பதாலும், ஒவ்வொரு மனுதாரர்களுக்கு தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பி விசாரித்தால் அது மைய விசாரணையை தாமதிக்கும் என்பதாலும், மையமான வழக்கை மட்டும் விசாரிப்பதாகவும் அதில் மனுதாரர்கள் தங்கள் வாதத்தை முன்வைக்கலாம் எனவும் கூறி வழக்கை டிசம்பர் 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. அதுவரை, அணையின் நீர்மட்டம் தொடர்பாக அக்டோபர் 28-ம் தேதி நீதிமன்ற உத்தரவே செல்லுபடியாகும் என்றும் கூறி உத்தரவிட்டது. இந்த அடிப்படையில் டிசம்பர் 10 வரை அதிகபட்ச நீர்மட்டமாக தமிழ்நாடு 142 அடி நீரை தேக்கிக் கொள்ளலாம்.
மேலும், கடந்த அக்டோபர் 28-ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவில் முல்லை பெரியாறு அணையுடன் இருக்கும் பேபி அணையை வலுப்படுத்துவதற்காகவும், அதன் அருகே உள்ள மரங்களையும் வெட்டுவதற்கும் தமிழ்நாடு அரசுக்கு ஆவண செய்து தரவேண்டும் என கேரள அரசுக்கும், கேரள வனத்துறைக்கும் உத்தரவிட்டது.
இதனையொட்டி, கேரள வனத் துறையின் தலைமை வனக் காவலரான பென்னிசன் தாமஸ், குறிப்பிட்ட மரங்களை வெட்ட தமிழக அரசு அதிகாரிகளுக்கு அனுமதியளித்து கடந்த நவம்பர் 5-ம் தேதி கடிதம் அனுப்பினார். அதனை ஒட்டி நவம்பர் 6-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 6-ம் தேதி கேரள முதல்வருக்கு நன்றிக் கடிதம் எழுதினார்.
இதனை கேரள எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துக்கொண்டு பினராயி விஜயன் அரசு தமிழக அரசுடன் கூட்டு சேர்ந்து கேரளத்தை வஞ்சிப்பதாகக் கண்டன அறிக்கைகள் விடத் தொடங்கின.
உடனடியாக நவம்பர் 7-ம் தேதி, மரம் வெட்ட வழங்கப்பட்ட அனுமதி உத்தரவை ரத்து செய்யுமாறு  கேரள வனத்துறைக்கு உத்தரவிட்டது கேரள் அரசு. மேலும் அனுமதியளித்த தலைமை வனக் காவலர் பென்னிசன் தாமஸ், முக்கியத்துவமிக்க இந்த விவகாரத்தை அமைச்சர்களுக்குத் தெரிவிக்காமல் முடிவெடுத்ததாகக் கூறி அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது கேரள அரசு.
மரம் வெட்ட உச்சநீதிமன்றம் கொடுத்த உத்தரவைச் செயல்படுத்திய ‘குற்றத்திற்காக’ பென்னிசன் நீக்கப்பட்டார். அதற்கு நன்றி சொன்ன ‘குற்றத்திற்காக’ தமிழ்நாடு அரசுக்கு மரம் வெட்ட அனுமதி மறுக்கப்பட்டது. கேரள அரசும், கேரள எதிர்க்கட்சிகளும் ஏன் அவசர அவசரமாக அந்த மரங்கள் வெட்டப்படுவதை தடுத்தன ?
அந்த மரங்கள் வெட்டப்பட்டால்தான் பேபி அணையை வலுப்படுத்துவதற்கான கட்டுமானப் பணிகளை தமிழக அரசால் துவங்க முடியும். பேபி அணையை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே தமிழகத்தின் உரிமையான 152 அடி வரையிலான நீர்மட்டத்திற்கு நீரைத் தேக்க முடியும்.
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக நீலிக் கண்ணீர் வடிக்கும் கேரள அரசு, பேபி அணையை வலுப்படுத்துவதற்கான தமிழக அரசின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது ஏன் ? இதற்கு விடைகாண, சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு வரலாற்று நிகழ்வு குறித்து சுருக்கமாகப் பார்க்கலாம்..
கடந்த 1979-ம் ஆண்டு வரையில் 152 அடி உயரத்திற்கு நீர்மட்டம் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், அப்பகுதியில் ஏற்பட்ட சிறிய நில அதிர்வை பூதாகரமான பிரச்சினையாக்கி, அணையில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாக மலையாள மனோரமா நாளிதழும் அன்றைய கேரள போலி கம்யூனிஸ்ட் அரசும் கட்டுக்கதையை கிளப்பிவிட்டன. முல்லைப் பெரியாறு அணையை அகற்ற வேண்டும் என்று கூப்பாடு போட்டன. முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் பணியாற்றிய தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டனர்.
அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., இவ்விவகாரம் தொடர்பாக கேரள அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மை குறித்து அறிவியல்ரீதியாக வாதிடாமல், அணையின் நீர்மட்டத்தை 152 அடியில் இருந்து 136 அடியாகக் குறைத்துக் கொள்ள ஒத்துக் கொண்டு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இளைத்தார். மேலும் அணையில் மீன் பிடிக்கவும், படகு விடவும் தமிழகத்திற்கு இருந்த உரிமையை கேரளாவிற்குத் தாரைவார்த்தார்.
1979-ம் ஆண்டிலிருந்து 2006-ம் ஆண்டுவரை அணையின் நீர்மட்டம் 136 அடியாக பராமரிக்கப்பட்டது. இதில் குறிப்பாக ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். அணையில் நீர்மட்டம், 152 அடிக்கு உயர்த்தப்படும்போது, நீர்ப்பரப்பு 8,591 ஏக்கர் அளவிற்கு விரிவடையும். எம்.ஜி.ஆர்-இன் துரோகத்தால் 136 அடி உயரத்துக்கு நீர்மட்டம் குறைக்கப்பட்ட பின்னர் நீர்ப்பரப்பு 4,678 ஏக்கராக சுருங்கியது. இதன் விளைவாக 1979-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுவரையில் 3,913 ஏக்கர் நிலப்பரப்பு நீரில் மூழ்காமல் இருந்தது. இக்காலகட்டத்தில் இப்பகுதிகளில் எக்கச்சக்கமான விடுதிகளும் கட்டிடங்கலும் கட்டப்பட்டுள்ளன.
இப்போது பேபி அணையை தமிழ்நாடு அரசு வலுப்படுத்தினால், அதன் பின்னர் 2014-ம் ஆண்டு தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு 152 அடி நீர்மட்டத்திற்கு நீரை தேக்கிக் கொள்ளலாம். அச்சமயத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் கட்டப்பட்ட விடுதிகளும் கட்டிடங்களும் தண்ணீரில் மூழ்கும்.
விடுதி மற்றும் கட்டிட முதலாளிகளின் நலனுக்காகவே 152 அடிக்கு தண்ணீரை தமிழகம் ஏற்ற முடியாதபடிக்கு கேரள அரசும், எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நின்று முட்டுக்கட்டை போட்டுவருகின்றன. அதற்காகத் தான் நன்றாக இருக்கும் முல்லைப் பெரியாறு அணையை பலவீனமானது என்று கூறி உடைக்க வேண்டும் எனக் கூப்பாடு போடுகின்றன. அணை உடைந்தால் கேரளாவில் இடுக்கிக்கு கீழே உள்ள மாவட்டங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக அழிந்துவிடும் என்று காணொலிகள் மூலமாக கேரள மக்களுக்கு பீதியூட்டுகின்றன.
சுமார் 50 கிமீ இடைவெளியில் உள்ள முல்லைப் பெரியாறு அணையை விட ஏழு மடங்கு பெரிய அணையான இடுக்கி அணையைத் தாண்டித் தான் முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீர் கீழே உள்ள கேரள மாவட்டங்களுக்குச் செல்ல முடியும். அதாவது இவர்களது வாதப்படி பார்த்தாலுமே இடுக்கி அணை உடைந்தால் மட்டுமே கேரள மக்களுக்கு பெருவித பாதிப்பு ஏற்படும். தனது கொள்ளளவை விட ஏழுமடங்கு குறைவான கொள்ளளவு கொண்ட ஒரு அணையின் நீரைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்குத்தான் இடுக்கி அணை இருக்கிறது என்றால், பலவீனமானது இடுக்கி அணையா, முல்லைப் பெரியாறு அணையா ? நியாயப்படி இடுக்கி அணையைத் தானே கேரளா அரசு மராமத்து  பார்க்கவோ அல்லது இடித்துவிட்டு புதிய அணை கட்டவோ வேண்டும் ?
கேரள சட்டமன்றத்தில் அக்டோபர் 26-ம் தேதி முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாகவும், அது குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்த பினராயி விஜயன், உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் அணை பலவீனமாக இருப்பதாகக் கூறியிருக்கிறார். இவ்விவகாரத்தில் இரட்டை வேடமிடுகிறது கேரளத்தை ஆளும் பினராயி அரசு.
அணை பலவீனமாக உள்ளது என்ற கட்டுக்கதையை எவ்வித ஆதாரமும் இல்லாமல் திரும்பத் திரும்ப பரப்பி கேரள மக்களை பயபீதிக்கு உள்ளாக்கியிருக்கிறது. 2018-ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ள இழப்புகள், இந்த பயத்தை அதிகரித்துள்ளன.
முல்லைப் பெரியாறு அணையின் மீதான தமிழகத்தின் உரிமையை முற்றாகத் தகர்த்தெறிவதுதான் கேரள ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகள் அனைத்தின் நோக்கமாக உள்ளது. அதன் காரணமாகத்தான் 999 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டிற்கு குத்தகைக்கு விடப்பட்ட முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகப் பொய்கூறி, புதிய அணையைக் கட்ட வேண்டும் என்று கூறிவருகிறது கேரள அரசு.
புதிய அணை கட்டி, தமது கட்டுப்பாட்டில் அணை இருக்கும்போது எவ்வகையிலும் அணையின் நீர்மட்டத்தை உயராமல் பார்த்துக் கொள்ள முடியும் என்பதாலேயே தொடர்ந்து அணை குறித்து வதந்திகளைப் பரப்பி வருகிறது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை விட கேரள முதலாளிகளின் வாழ்வாதாரம்தான் கேரள போலி கம்யூனிஸ்ட் அரசுக்கு முக்கியமானதாக விளங்குகிறது.
படிக்க :
கேரள வெள்ளத்திற்கு முல்லைப் பெரியாறு நீர் காரணமல்ல : மத்திய நீர் ஆணையம்
முல்லைப் பெரியாறு அணை குறித்த மர்மக் கதை
இதன் காரணமாகவே, முல்லைப் பெரியாறு அணை குறித்த அச்சத்தை கேரள மக்களுக்கு ஏற்படுத்தி அதை ஊதிப் பெருக்கி, அதனையே பொதுக் கருத்தாக்க முயற்சிக்கிறது, கேரள அரசு. “கேரள மக்களுக்குப் பாதுகாப்பு – தமிழ்நாட்டிற்கு தண்ணீர்” என்ற தேன் தடவிய தோட்டாக்களை அள்ளித் தெளித்து முல்லைப் பெரியாறு அணையை அகற்றிடவும், அணை மீதான நமது உரிமையைப் பறித்திடவும் திட்டமிடுகிறது.
பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசின் இரட்டை வேடத்தை நீதிமன்றத்திலும், இரு மாநில மக்கள் மத்தியிலும் தோலுரிக்காமல், கேரள அரசு நீதிமன்றத்தில் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் பின்னால் செல்வது என்பது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை நிரந்தரமாக 136 அடிக்குக் கீழானதாக இருத்தி வைப்பதற்கும், கேரள அரசு புதிய அணையைக் கட்டி அதனை முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்வதற்குமே வழிவகுக்கும்.
மேலும், காலங்காலமாக கர்நாடகத்துடன் காவிரி நீருக்கு மல்லுக்கட்டும் வேலையைச் செய்வது போல இனி முல்லைப் பெரியாறுக்கும் மல்லுக்கட்டும் நிலைமைக்கு தமிழகத்தை இட்டுச் செல்லும்.
எம்.ஜி.ஆர் செய்த துரோகத்தால் அணையின் நீட்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்டது. மீண்டும் அத்தகைய சூழலை ஏற்படுத்துவதை நோக்கி நம்மை உந்தித் தள்ளுகிறது பினராயி அரசு. 1979-ஐப் போன்ற துரோகம் மீண்டும் அரங்கேறாமல் தடுக்கப்பட வேண்டுமானால் அதை முளையிலேயே கிள்ளி எறிவது தான் நம்முன் உள்ள முக்கியக் கடமையாகும்.

சரண்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க