கடந்த டிசம்பர் 26 அன்று மத்திய பிரதேச அமைச்சரவை மதச் சுதந்திரச் சட்டம் 2020 என்ற பெயரில் “லவ் ஜிகாத் தடுப்புச்” சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இச்சட்டத்தின்படி, திருமணம் அல்லது வேறு எவ்வழியிலோ மதமாற்றம் செய்தால், பத்தாண்டுகள் சிறை மற்றும் 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
கடந்த 26.01.2020 அன்று அமைச்சரவையில் இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் பெற்ற பிறகு, இந்தச் சட்டம் குறித்துப் பேசிய மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, இச்சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டால், ஆசைகாட்டி, மிரட்டி மதமாற்றம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கான நாட்டிலேயே கடுமையான சட்டமாக இதுதான் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இச்சட்டம் இயற்றப்படும் முன்னர் அதிகபட்சம் ஐந்தாண்டு சிறை தண்டனை வழங்கப்படும் எனக் கூறிய ம.பி அரசு, தற்போது இச்சட்ட வரைவில் அதை பத்தாண்டுகளாக் காட்டியிருக்கிறது.
படிக்க :
♦ பாஜகவினர் மீதான முசாஃபர்நகர் கலவர வழக்கை வாபஸ் வாங்க யோகி அரசு முடிவு !
♦ விவசாயிகள் போராட்டத்தை திட்டமிட்டு கொச்சைப்படுத்தும் பி.ஜே.பி ட்ரோல்கள் !
அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு இந்தச் சட்டம் சட்டமன்றத்தில் முன் வைக்கப்படும். சட்டமன்ற ஒப்புதலுக்குப் பிறகு இந்தச் சட்டம் 1968-ம் ஆண்டு இயற்றப்பட்ட மதச் சுதந்திரச் சட்டத்திற்கு மாற்றாக நடைமுறைப்படுத்தப்படும். நிறைவேற்றப்படப் போகும் இச்சட்டத்தின்படி, மத மாற்றத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட எந்த ஒரு திருமணமும் செல்லுபடியாகாது. மதம் மாற விரும்புபவர்கள், அதற்கான கோரிக்கையை இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே மாவட்ட நிர்வாகத்திடம் வைக்க வேண்டும், என்றார் நரோட்டம் மிஷ்ரா
மோடி மத்தியில் ஆட்சியில் அமர்ந்த பின்னர், சமீபகாலம் வரை “லவ் ஜிகாத்” என்ற சங்க பரிவாரங்கள் பயன்படுத்தும் வார்த்தை, இந்தியாவின் சட்ட அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட சொல் அல்ல. அப்பாவி இந்துப் பெண்களை மதம் மாற்றுவதற்காக முசுலீம் ஆண்கள் மேற்கொள்ளும் சதியாக சங்க பரிவாரங்கள் கட்டிவிட்ட கற்பனைக் கதைதான் “லவ் ஜிகாத்”.
இந்திய அரசியல் சாசன சட்டத்தின்படி திருமணத்திற்கு யாரையும் தெரிவு செய்து கொள்வதற்கான உரிமை ஒரு நபருக்கு இருக்கும் சூழலிலும், இத்தகைய லவ் ஜிகாத் சட்டங்களை ஏற்கெனவே உ.பி மற்றும் அரியானா மாநிலங்கள் நிறைவேற்றியுள்ளன. இவை அனைத்துமே பாஜக ஆளும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு கொண்டுவந்துள்ள “லவ் ஜிகாத்”-க்கு எதிரான அவசரச் சட்டம், பல முசுலீம் இளைஞர்களை சட்டவிரோதமாகக் கைது செய்ய பயன்படுத்தப்பட்டது. மேலும் மாற்று மதத்தைச் சேர்ந்த ஜோடிகளை துன்புறுத்தவும் பயன்படுத்தப்பட்டது.
திருமணமாகப் போகும் ஜோடிகளின் குடும்பத்தினருக்கும் திருமணத்தில் சம்மதம் இருந்தாலும், இத்தகைய திருமணங்கள் தடுத்து நிறுத்தப்ப்பட்டுள்ளன. இந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 11-க்கும் மேற்பட்ட முசுலீம் இளைஞர்களை மத மாற்றத் தடை அவசரச் சட்டமான “லவ் ஜிகாத்” சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது.
கடந்த வாரத்தில் உ.பியின் பிஜ்னோர் மாவட்டத்தில் ஒரு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை முடித்துவிட்டு இந்து மதத்தைச் சேர்ந்த தனது தோழியோடு நடந்து வந்த பதின்பருவ முசுலீம் மாணவர் மீது போலிப் புகார் பதிவு செய்து கைது செய்துள்ளது போலீசு. தனது பெண்ணை லவ்ஜிகாத் செய்து மதம் மாற்ற முயன்றதாக அப்பெண்ணின் தந்தை புகார் அளித்ததாக போலீசு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. ஆனால் அதனை அப்பெண்ணின் தந்தையே மறுத்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் இந்துத்துவக் கும்பலின் பங்கு மிகவும் முக்கியமானது. சாதாரணமாக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இருவரை அடித்து இழுத்துச் சென்று போலீசு நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்தே இந்தக் கைது சம்பவம் நடந்துள்ளது. அந்த 16 வயதுப் பெண்ணும் இந்துத்துவக் கும்பலின் மீதுதான் குற்றம்சாட்டியிருக்கிறார்.
“மதமாற்றத்தைத் தடுக்க” ஒரு சட்டம் என்பதே அரசியல் சாசனவிரோதமானதுதான். ஆனால் இந்தச் சட்டம் மதமாற்றத்தை தடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்டது அல்ல. மாறாக முசுலீம்கள் இந்துக்களுக்கிடையே இயல்பாக இருக்கும் இணக்கத்தையும் உடைப்பதற்காகவும், மத நல்லிணக்கத்தைப் பேணும் இந்துக்களிடம் அச்சத்தை உண்டாக்கவும் தான் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது வட இந்தியாவோடு நின்றுவிடும் விவகாரம் அல்ல. முசுலீம் வெறுப்பை சமூக எதார்த்தமாக்குதற்கான சங்கபரிவாரத்தின் முயற்சி. இதனை எதிர்த்து முறியடிக்க வேண்டியதன் அவசியம் நமக்கும் உள்ளது.
கர்ணன்
நன்றி : The Wire Indian Express