ட்டுமொத்த நாட்டையே உலுக்கிய முசாபர்நகர் கலவரத்தைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்த பாஜக எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி மற்றும் சாமியார் உள்ளிட்டவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற உத்தரப் பிரதேச யோகி அரசு முடிவெடுத்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முசாஃபர் நகர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறத்தில் ஷானவாஸ் குரேசி என்று முசுலீம் இளைஞரை சச்சின் மற்றும் கவுரவ் ஆகிய இரண்டு ஜாட் சமூக இளைஞர்கள் கொலை செய்தனர். அதனைத் தொடர்ந்து அவ்விருவரையும் ஆகஸ்ட் 27, 2013 அன்று முசுலீம் இளைஞர்கள் பலர் ஒன்று கூடி கொலை செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து முசுலீம் மதத்தினருக்கும் அங்குள்ள ஜாட் சமூகத்தினருக்கும் இடையே மோதல் நிலை உருவானது. இதன் காரணமாக முசாபர்நகர் முழுவதும் வன்முறை பரவியதோடு அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் பரவியது.

படிக்க :
♦ முசாஃபர் நகரில் மோடி – ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மை முகம்
♦ முசாஃபர் நகர் : கிழிந்தது சமூகநீதி ஆட்சியின் கருணைமுகம் !

இந்த மோதல் சூழ்நிலைமைகளில், அன்றைய உ.பி. அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனையும் மீறி நாக்லா மண்டூர் எனும் கிராமத்தில்  ஜாட் சமூகத்தினரின் மகா பஞ்சாயத்து கூட்டப்பட்டது. இந்த மகாபஞ்சாயத்து கூட்டத்தில்  பாஜக-வைச் சேர்ந்த கிரிமினல்களும், இந்து மதவெறி சாமியார்களும் கலந்து கொண்டனர்.

அந்தக் கூட்டத்தில் பாஜகவின் சர்தானா தொகுதி சட்டமன்ற உறுப்பினரான சங்கீத் சோம், தானா பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான சுரேஷ் ரானா, முசாஃபர்நகர் சதர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினரான கபில்தேவ் ஆகியோரும், முன்னாள் பாஜக எம்.பி. கரேந்திரசிங் மாலிக், பெண் சாமியார் பிராச்சி ஆகியோர் கலந்து கொண்டு இந்து மதவெறி ஊட்டும் விதத்திலும், முசுலீம்களுடன் இந்துக்களை மோத விடும் நோக்கிலும் பேசியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்தும் பல பகுதிகளில் கலவரங்களும் வன்முறையும் தொடர்ந்தன. இந்த மோதல்களில் சுமார் 65 பேர் கொல்லப்பட்டன. சுமார் 40,000 பேர் வரை இடம்பெயரும் சூழல் ஏற்பட்டது. இது தொடர்பாக 175 குற்றப்பத்திர்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

சங்கீத் சோம்

இத்தகைய வெறுப்புப் பேச்சைப் பேசிய இந்த பாஜக கும்பல் உட்பட சுமார் 40 பேர் மீது கடந்த செப்டம்பர் 7, 2013 அன்று ஷிகேடா போலீசு நிலையத்தின் போலீசு அதிகாரியான சரண் சிங் என்பவரால் வழக்கு பதியப்பட்டது.

இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 188 (மரணத்தை விளைவிக்கும் ஆயுதங்களோடு சட்டவிரோதமாக ஒன்றுகூடுவது) பிரிவு 353 (அரசுப் பணியாளரை தடுக்கும் வகையில் அடிப்பது அல்லது தாக்குதல் தொடுப்பது), 153A (மதம் மற்றும் பிறவற்றின் அடிப்படையில் பகைமையைத் தூண்டுவது) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டது.

ஒரு சிறிய பிரச்சினையை ஊதிப் பெருக்கி மிகப்பெரும் கலவரமாக மாற்றியதன் பயனாக, மத்தியில் பாஜக பெருவாரியான இடங்களையும், உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியையும் பிடித்தது.

இந்த கலவரம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்துவந்த நிலையில், கடந்த பிப்ரவரி 2018-ல் பாஜக எம்.பி சஞ்சீவ் பல்யான் தலைமையில் முசாஃபர் நகர்  கலவரத்தில் இந்துக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்களை அணிதிரட்டி கோரிக்கையும் விடுக்கப்பட்டது.

படிக்க :
♦ டெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் !!
♦ குற்றவியல் சட்டத் திருத்தம் : மறுகாலனியாதிக்கத்துக்கு ஏற்ப மறுவார்ப்பு !

தற்போது இந்த வழக்குகளை வாபஸ் பெறுவதற்கு உ.பி அரசு முடிவெடுத்திருப்பதை முசாஃபர் நகர் மாவட்ட அரசு வழக்கறிஞர் ராஜூவ் சர்மா தெரிவிக்கிறார். உரிய நீதிமன்றத்தில் அரசு சார்பில் வழக்கை வாபஸ் பெறுவதற்கான கோரிக்கை மனு வழங்கப்பட்டிருப்பதாகவும், அவ்விவகாரம் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார் அவர்.

இது தொடர்பாக முசாபர் நகர் , ஷாம்லி ஆகிய மாவட்ட நிர்வாகங்கள், மாவட்ட ஆட்சியர், எஸ்.பி மற்றும்  மூத்த அரசு அதிகாரி ஆகியோரிடமும் கருத்து கேட்டுள்ளது உ.பி அரசு.

மொத்தத்தில் இனி நீதியின் ஆட்சி என்பது எதுவும் கிடையாது. ஆனதைப் பாருங்கள் என்று பகிரங்கமாக பிரகடனப்படுத்தி ஆட்சி செய்கிறார் யோகி ஆதித்யநாத். இது வெறுமனே உ.பி.-யின் பிரச்சினை என்று சுருக்கிப் பார்க்க முடியாது. ஏனெனில், இது சங்க பரிவாரம் அமைக்கவிருப்பதாகக் கூறும் இந்து ராஷ்டிரத்தின் முன்மாதிரி வடிவம் !!


கர்ணன்
நன்றி :  இந்தியன் எக்ஸ்பிரஸ்