உத்தரப்பிரதேசத்தின் முசாஃபர்நகர் நகரிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள குப்பாபூர் (Kubbapur) கிராமத்தில் நேஹா பப்ளிக் பள்ளி (Neha Public School) அமைந்துள்ளது. இப்பள்ளியில் இந்து மற்றும் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.
நேற்று (ஆகஸ்ட் 25) இப்பள்ளியைச் சேர்ந்த 7 வயது முஸ்லீம் மாணவர் ஒருவரை கன்னத்தில் அறையுமாறு ஆசிரியர் திரிப்தா தியாகி (Tripta Tyagi) மாணவர்களுக்கு உத்தரவிட்ட கொடூரமான காணொளி ஒன்று வெளியானது. அது காண்போர் அனைவரின் நெஞ்சையும் பதைபதைக்க வைத்தது. ஆகஸ்ட் 24 அன்று இந்த சம்பவம் நடந்ததாக பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் கூறியதிலிருந்து அறிய முடிகிறது.
40 விநாடிகள் ஓடும் அந்த காணொளியில், அழுதுகொண்டு நிற்கும் அந்த மாணவரை மற்ற மாணவர்கள் பலர் அரைகின்றனர். ஒருகட்டத்தில் அம்மாணவரைக் கடுமையாக அடிக்காததற்காக ஆசிரியர் அடித்துவிட்டுச் சென்ற மாணவர் ஒருவரைத் திட்டுகிறார்.
படிக்க: முசாஃபர் நகரில் மோடி – ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மை முகம்
”அனைத்து முஸ்லீம் மாணவர்களும் வெளியேற வேண்டும் என்று நான் ஏற்கெனவே கூறியுள்ளேன்” என்று ஆசிரியர் திரிப்தா தியாகி கூறுவதை அந்தக் காணொளியில் கேட்க முடிகிறது.
”நீங்கள் சொல்வது சரிதான்; கல்வியே பாழடைகிறது” என்று ஒரு ஆண் குரல் பின்னணியில் ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. அவர் அந்த ஆசிரியரின் நடவடிக்கைக்கு உடந்தையாக இருப்பதைக் காண முடிகிறது.
India may have made it to the moon but millions of Muslims still don't have basic rights as Muslims are lynched in public sight.
In this school the teacher asks Hindu children to slap a Muslim child, even berating them if they don't slap hard enoughpic.twitter.com/ci0YVgDpl2
— muslim daily (@muslimdaily_) August 25, 2023
இதுகுறித்து அவரது தாய் ரூபினா கூறுகையில், “நேற்று எனது மகன் அழுது கொண்டே வீட்டுக்கு வந்தான். நாங்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வீட்டுப்பாடம் முடிக்காததற்காக ஆசிரியர் அவனைத் தண்டித்திருக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் அந்தக் காணொளியைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தோம். குழந்தைகளை இப்படியா நடத்துவார்கள்?” என்றார்.
அவரது தந்தை முகமது இர்ஷாத் ”என் மகன் பாடங்களை மனப்பாடம் செய்யவில்லை என்று கூறி ஆசிரியர் தனது செயல்களை நியாயப்படுத்துகிறார். என் மகன் படிப்பில் கெட்டிக்காரன். டியூஷன் கூடச் செல்கிறான். ஆசிரியர் ஏன் அவரை இப்படி நடத்தினார் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆசிரியர் வெறுப்பு நிறைந்தவராக இருக்கிறார்” என்று கூறினார்.
நாட்டில் முஸ்லீம்களுக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பின் விளைவாகத் தான் தனது மகன் மோசமாக நடத்தப்பட்டதாக இர்ஷாத் கூறினார். இர்ஷாத்தின் கூற்று முற்றிலும் சரியானது என்பதை இக்காணொளியில் உள்ள ஆசிரியரின் கருத்துகள் நமக்கு உணர்த்துகின்றன.
சில நாட்களுக்கு முன்பு, இர்ஷாத்தின் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவரையும் இதேபோல் இந்த ஆசிரியர் நடத்தியுள்ளார் என்பதைத் தற்போது அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வாசிரியரைக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று தற்போது அனைவரும் கோரிவருகின்றனர்.
படிக்க: முசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை !
மாணவரின் தந்தை இர்ஷாத், ”இனி ஒருபோதும் தனது மாணவர்களை மோசமாக நடத்தப் போவதில்லை என்று அந்த ஆசிரியர் கூறியுள்ளார். ஆனால் இத்தகைய சூழலில் எனது மகன் கல்வி கற்று வளர்வதை நான் விரும்பவில்லை. அவனை நாங்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்போகிறோம்” என்று கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மக்கள்தொகையில் 20 சதவிகிதத்தினர் முஸ்லீம்கள். காவி பயங்கரவாதம் தலைவிரித்தாடும் அம்மாநிலத்தில் மாணவரிடையே மத நல்லிணக்கத்தைப் போதிப்பதே ஒரு ஆசிரியரின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். ஆனால் இந்த ஆசிரியரோ மதவெறியை உமிழக் கற்றுக்கொடுக்கிறார்.
இந்துத்துவ சித்தாந்தத்திற்கு ஆட்பட்ட ஒருவரால் முஸ்லீம் மாணவர்களை எப்படி சமமாக நடத்த முடியும். அவர் மாணவர்களுக்கு எதைக் கற்றுக்கொடுப்பார்? முஸ்லீம்களை கும்பல் படுகொலை செய்வதைத்தான் கற்றுக்கொடுப்பார்.
சமூகத்தில் பகைமையையும் வெறுப்பையும் இயல்பாகக் கருதும் ஒரு தலைமுறை வளர்ந்து வருகிறது. நாம் பாசிசமயமாகி வரும் ஒரு சமூகத்தில் தான் வாழ்ந்து வருகிறோம் என்பதை இந்தக் காணொளி நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.
பாசிசத்தை நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்க விட்டால், இந்த ஆசிரியரைப் போல இன்னும் பலர் தோன்றுவார்கள். பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சிறுபான்மை முஸ்லீம் மக்களைத் தொடர்ந்து எதிர்மறை வெளிச்சத்தில் வைத்திருப்பதன் மூலம் மத முனைவாக்கத்தை கூர்மைப்படுத்த முயல்கிறது; தனக்கான அடித்தளத்தை பெரிதாக்கிக்கொள்ளப் பார்க்கிறது. இந்த அபாயத்தைத் தடுத்து நிறுத்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலை சமூகத்தில் இருந்து வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்.
பொம்மி