65 பேர் கொல்லப்பட்ட முசாஃபர் நகர் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை

த்தரப் பிரதேச மாநிலத்தில் 2013-ம் ஆண்டு முசுலீம் மக்கள் மீது இந்துத்துவ காவிக் குண்டர்களால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட முசாஃபர் நகர் கலவரத்தில் 65 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி, அகதிகளாக முகாம்களில் குடியேறினர். 65 பேர் கொல்லப்பட்டிருந்தாலும் 10 கொலைகள் மட்டுமே வழக்குகளாக பதியப்பட்டு, விசாரணை செய்யப்பட்டன.

2013, செப்டம்பர் 8-ஆம் தேதி, ஷாம்லி மாவட்டத்தில் 65 வயதான இஸ்லாம் காவி குண்டர்களால் துரத்தி படுகொலை செய்யப்பட்ட மசூதி இது…

இந்த 10 கொலை வழக்குகளின் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜனவரி 2017 முதல் பிப்ரவரி 2019 வரையான நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் அனைவருமே விடுவிக்கப்பட்டுள்ளனர். சாட்சியங்களின் அடிப்படையிலும், பெரும்பாலும் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் பிறழ்சாட்சிகளாக மாறிவிட்ட நிலையில், குற்றவாளிகளை விடுவித்தது நீதிமன்றம்.

# குற்றப்பத்திரிகையில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களான ஐந்து அரசு தரப்பு சாட்சியங்கள் நீதிமன்றத்துக்கு வரவேயில்லை.

# ஆறு அரசு தரப்பு சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறினர். போலீசு தங்களிடம் வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கியதாகவும் கூறினர்.

# ஐந்து வழக்குகளில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை நீதிமன்றத்தில் போலீசு ஒப்படைக்கவில்லை.

# அரசு தரப்பு ஒருபோதும் காவல்துறையினரை குறுக்கு விசாரணை செய்யவில்லை.

# இறுதியில், அனைத்து சாட்சிகளும் பிறழ் சாட்சியமாக மாறினர்.

உண்மையில், 2017 முதல் முசாஃபர் நகர் நீதிமன்றங்கள், இந்தக் கலவரம் தொடர்பான 41 வழக்குகளில் ஒரே ஒரு வழக்கில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டது. முசுலீம்கள் தாக்கப்பட்டது உள்ளிட்ட மற்ற 40 வழக்குகளிலிருந்தும் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

கலவரத்தில் எரிக்கப்பட்டு சேதமடைந்த ஒரு வீட்டை பார்க்கும் சிறுவன். (படம் : இந்தியன் எக்ஸ்பிரஸ்)

அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு அனைத்து வழக்குகளையும் பதிந்து விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணைகள் அகிலேஷ் ஆட்சியிலும் தற்போதைய பாஜக ஆட்சியிலும் தொடர்ந்தன. ஒரே ஒரு வழக்கில் அமர்வு நீதிமன்றம் முசாமில், முஜாஸ்மின், ஃபர்கான், நதீம், ஜஹாங்கீர், அப்சல் மற்றும் இக்பால் ஆகிய ஏழு பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. 2017 ஆகஸ்ட் 27-ம் தேதி, கவால் கிராமத்தில் கவுரவ், சச்சின் ஆகியோரை கொன்றதற்காக ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம். இதுதான் கலவரத்தை தூண்டியதாக நீதிமன்றம் சொன்னது. அதாவது காவி நீதிமன்றம் முசுலீம்களை மட்டுமே தண்டித்திருக்கிறது.

பத்து கொலை வழக்குகள் என்னென்ன என்பது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் வழக்கு விவரங்களை ஆராய்ந்து எழுதியுள்ளதில், நீதிமன்றமும் போலீசும் காவிகளின் கைக்கூலிகளாக இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஒரு குடும்பமே உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கு முதல், நண்பர்கள் வெளியே இழுத்து வரப்பட்டு கொல்லப்பட்டது, ஒரு குடும்பத்தில் தந்தை வாளால் கொல்லப்பட்டது, மண்வெட்டியால் அடித்து கொல்லப்பட்ட ஒருவர் என பத்து வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் 53 பேர், விடுதலை செய்யப்பட்டனர்.

நான்கு கூட்டு வல்லுறவு வழக்குகளும் 26 கலவர வழக்குகளிலும் இதே நீதி தான் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆதித்யநாத் தலைமையிலான காவி அரசு, காவி குண்டர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ‘அனைவருக்குமான அரசு’ என்கிற வகையிலும்கூட மேல்முறையீடு செய்யமாட்டோம் என அறிவித்துள்ளது. பிறழ் சாட்சியங்களாக மாறியவர்கள் மீது 344-வது பிரிவின்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க:
♦ முசாஃபர் நகர் கலவரம் : காவி வெறியர்கள் மீது வழக்கு இல்லை ! ரவுடி சாமியார் ஆதித்யநாத் அரசு அதிரடி !
♦ ஜாட் சாதி வெறியர்களோடு சங்க பரிவாரம் நடத்தும் முசாஃபர் நகர் கலவரம் !

10 வழக்குகளில் விடுவிக்கப்பட்டவர்கள் குறித்து விசாரணையில் தெரியவந்த முக்கியமான விசயங்கள்…

# புகாரில் 69 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், 24 பேரின் மீது மட்டுமே விசாரணை நடந்தது.

# ஒவ்வொரு முதல் தகவல் அறிக்கையிலும் கொலை ஆயுதங்கள் குறித்த பதிவு இருந்தபோதும், போலீசு ஐந்து வழக்குகளில் மட்டுமே ஆயுதங்களை கைப்பற்றியது. 2013-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி புதானாவில் அம்ரோஜ், மெகர்பென், அஜ்மல் ஆகிய மூவர் கொல்லப்பட்ட வழக்கை மூன்றாக பிரித்து, குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்தது நீதிமன்றம். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரிடமிருந்து கொலை ஆயுதமாக அரிவாளை கைப்பற்றியது போலீசு. ஒரு வழக்கில் இது நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை. இன்னொரு வழக்கில் கொலை ஆயுதத்தில் ரத்தக்கறை இல்லை என்றது. மூன்றாவது வழக்கில் ரத்தக்கறை இல்லாததால் அறிவியல் ஆய்வுக்கு அனுப்பவில்லை எனக்கூறியது. இந்த ஆயுதத்தை கைப்பற்றிய போலீசிடம் எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை.

# அசிமுதீன் மற்று ஹலிமா என்ற இணையர் புகானாவில் கொல்லப்பட்ட வழக்கில் போலீசு இரண்டு சாட்சியங்களின் முன்னிலையில் சாட்சியங்களை கைப்பற்றியதாக கூறியது. ஆனால் அவர்கள் இருவரும் எந்தவித சாட்சியங்களும் கைப்பற்றப்படவில்லை என்றும் வெற்றுத்தாளில் தங்களை போலீசு கையெழுத்து இடச் சொன்னது என்றும் கூறினர்.

இதேபோல, ரோஜுதீன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கிலும் சாட்சியங்கள் போலீசுதான் அனைத்து ஆவணங்களையும் எழுதி கையெழுத்து வாங்கியதாகக் கூறினர்.

# மிராபூரில் ஷாரீக், டிதாவியில் ரோஜுதீன், மிராபூரில் நதீம் கொல்லப்பட்ட வழக்கில் உடல்கூராய்வு செய்த மருத்துவர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தன். ஆனால், நீதிமன்றத்தில் மருத்துவர்களிடம், மருத்துவ ஆவணங்கள் உண்மையா இல்லையா என்பது மட்டும் கேட்கப்பட்டது. மரணத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரிக்கவில்லை.

# அசிமுதீன், ஹாலிமா கொலை வழக்கில் அரசு தரப்பில் உடல்கூராய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. புகாரும் அதன் பின் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையும் உடல்கள் கைப்பற்ற இடம் குறித்த தகவலும் மட்டும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. வேறு எந்த ஆவணங்களும் சமர்பிக்கப்படவில்லை என நீதிமன்றம் சொன்னது.

முசாஃபர் நகர் கலவரத்தினால் அகதி முகாம்களில் பலர் தஞ்சமடைந்தனர். (படம் : இந்தியன் எக்ஸ்பிரஸ் – கோப்புப் படம்)

இந்த பத்து வழக்குகளில், 65 வயதான இஸ்லாம் கொல்லப்பட்ட வழக்கும் ஒன்று. இஸ்லாமின் மகன் ஸாரிஃப் பதிந்த முதல் தகவல் அறிக்கையில், “ஹர்பால், சுனில், பிரமன் சிங், ஸ்ரீபால், சம்ஸ்வீர், வினோத், சுமித், குல்தீப், அரவிந்த் ஆகியோர் மதவாத முழக்கங்களை எழுப்பிக்கொண்டு எங்கள் குடும்பத்தினரை ஆயுதங்களால் தாக்கினர். ஸ்ரீபால் கூரான ஆயுதம் கொண்டு என் தந்தையின் தலையில் தாக்கினார். மற்ற ஆறுபேரும் கத்தியால் அவரை தாக்கினர். எங்கள் வீட்டை அவர்கள் கொளுத்தினர். என்னுடைய சகோதரர் தந்தையை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். அங்கே அவர் இறந்துவிட்டதாக சொன்னார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், வழக்கு விசாரணையின்போது ஸாரிஃப், “என்னுடைய தந்தை கொல்லப்பட்டார், என்னுடைய உறவினர் குல்சார் எழுதிய புகாரில் நான் கையெழுத்து மட்டுமே போட்டேன். குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் உள்ளவர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பில்லை” என பிறழ் சாட்சியாக மாறினார். மற்ற மூன்று சாட்சியங்களும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நடந்த கொலையில் தொடர்பில்லை என்றனர்.

ஒரு தொழிலாளியாக உள்ள ஸாரிஃப், தான் எப்போது புகார் அளித்தோம், எப்போது பிறழ் சாட்சியாக மாறினோம் என்கிற விவரமெல்லாம் நினைவில் இல்லை என்கிறார். நீதிமன்ற ஆவணங்களின்படி, அவர் குற்றவாளிகளை அடையாளம் காட்டத் தவறிவிட்டார்.

ஆனால், தன்னுடைய தந்தையின் கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களை அப்படியே கூறுகிறார்.

கிராமத்தின் பெரியவர்கள் எங்களை மசூதிக்குள் அழைத்துச் சென்று பாதுகாத்தனர். வழிபாட்டிடத்தில் அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நாங்கள் நம்பினோம். நாங்கள் யாரை நம்பினோமோ அதே நபரகள் எங்கள் தந்தையை கொன்றனர். (படம் : இந்தியன் எக்ஸ்பிரஸ்)

“இந்த கிராமத்தைச் சேர்ந்த முசுலீம் குடும்பங்கள் அனைவரும் வெளியேறிவிட்ட நிலையில் நாங்கள் மட்டுமே இங்கேயே இருந்தோம். கிராமத்தின் பெரியவர்கள் எங்களை மசூதிக்குள் அழைத்துச் சென்று பாதுகாத்தனர். வழிபாட்டிடத்தில் அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நாங்கள் நம்பினோம்.

ஆனால், சில மணி நேரத்திலேயே நிலைமை மோசமாவதை உணர்ந்தோம். எங்கள் தந்தை தானே பொறுப்பாளரை அழைத்தார். உள்ளூர் அரசியல்வாதி ஒருவரை உதவிக்கு அழைத்தோம். அவர் இராணுவம் வந்துகொண்டிருப்பதாக சொன்னார். அதற்குள் நாங்கள் யாரை நம்பினோமோ அதே நபரகள் எங்கள் தந்தையை கொன்றனர்” என்கிறார் ஸாரிஃப்.

பிறகு ஏன் நீதிமன்றத்தில் இதைச் சொல்லவில்லை என்கிற கேள்விக்கு ஸாரிஃபின் பதில், “கொலையில் விடுவிக்கப்பட்டவர்கள்தான் கொன்றவர்கள். எங்களுடைய பலவீனத்தின் காரணமாக நாங்கள் சமரசம் செய்துகொண்டோம். எங்களுக்கு திராணி இருந்திருந்தால் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றத்துக்கும் சென்றிருப்போம். ஆனால், எங்களுடைய குடும்பத்துக்கு உணவிடவே எங்களால் முடியவில்லை என்னும்போது, நீதிமன்றத்திடம் நீதி கேட்டு எங்களால் எப்படி போராட முடியும்?”.

படிக்க:
♦ பாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி குண்டர்கள் ரகளை !
♦ மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம் !

இஸ்லாமின் வழக்கில் அவருடைய குடும்பத்தாரின் நிலைமை மட்டும் காரணமில்லை. முரண்பட்ட விசாரணை தகவல்களாலும் குற்றவாளிகள் தப்பினர்.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எட்டு பேரில் ஐந்து பேர் மீது மட்டுமே விசாரணை நடத்தப்பட்டது. அதோடு, இஸ்லாம் இறப்பதற்கு முன் போலீசு அவருடைய வாக்குமூலத்தை பதிவு செய்ய மறுத்திருக்கிறது.

“என்னுடைய தந்தை சில மணி நேரம் உயிரோடு இருந்தார். மோசமாக தாக்கப்பட்டிருந்தாலும் தன்னுடைய வாக்குமூலத்தை பதிவு செய்யும்படி போலீசிடம் கேட்டார். தன்னை தாக்கியவர்களை அடையாளம் தெரியும் எனவும் சொன்னார். ஆனால், அவர்கள் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றார்கள். ஏனெனில் குற்றவாளிகளை பாதுகாக்கவே போலீசு ஆரம்பம் முதல் முயன்றது” என்கிறார் ஸாரிஃப்.

மோடியை ஆட்சியில் அமர வைக்க காவிகளால் திட்டமிட்டு கட்டவிழ்க்கப்பட்ட முசாஃபர்நகர் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை பாதிக்கப்பட்டவர்களுக்கே இல்லை. அவர்களே முன்வந்து பிறழ்சாட்சியாக மாறியுள்ளனர். எவரும் கொல்லப்படவில்லை, உயிரோடு எரிக்கப்படவில்லை, வல்லுறவு செய்யப்படவில்லை. இப்படி ஒரு கலவரமே நடக்கவில்லை என சொல்லக்கூடிய அவலநிலையும் அவர்களுக்கு வரக்கூடும்.


செய்திக்கட்டுரை: Kaunain Sheriff M , Manish Sahu
கலைமதி
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க