privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாமுசாஃபர் நகர் கலவரம் : காவி வெறியர்கள் மீது வழக்கு இல்லை ! ரவுடி சாமியார்...

முசாஃபர் நகர் கலவரம் : காவி வெறியர்கள் மீது வழக்கு இல்லை ! ரவுடி சாமியார் ஆதித்யநாத் அரசு அதிரடி !

62 அப்பாவி முசுலீம்களைக் கொன்ற கலவரத்தில் பெயரளவுக்கு கைது செய்யப்பட்ட சில குற்றவாளிகளைக் கூட தண்டிக்க வழக்கு நடத்தாமல் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிறது ஆதித்யநாத் அரசு!

-

கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக ஏகபோகமாக வெற்றி பெற்று ஆட்சியில் அமர காரணமாக அமைந்தது முசாஃபர் நகரில் காவிகள் நடத்திய கலவரம். புனையப்பட்ட வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி முசுலீம்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டியது இந்துத்துவ கும்பல். கலவரத்தில் 62 பேர் கொல்லப்பட்டதோடு, 50 ஆயிரத்துக்கும் அதிகமான முசுலீம்கள் தங்கள் சொந்த கிராமங்களை விட்டு, சாதி இந்துக்களுக்கும் காவி கும்பலுக்கும் பயந்து வெளியேறினார்கள்.

அப்போது ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி அரசு, கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது முனைப்போடு நடவடிக்கை எடுக்கவில்லை. எனினும், சிலர் மீது வழக்கு பதிந்தது. இந்த வழக்குகள் மீது இன்னமும் விசாரணை நடந்து வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியோ நிவாரணமோ கிடைக்காத நிலையில், தற்போது ஆட்சியில் இருக்கும் காவி ரவுடி சாமியார் ஆதித்யநாத்தின் அரசு, முசாஃபர் நகர் கலவரத்தில் ஈடுபட்ட காவி வெறியர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவதாக, விசாரணை நடக்கும் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

முசாஃபர்நகர் கலவரம். (கோப்புப் படம்)

2014-ம் ஆண்டு தேர்தலை முன்வைத்து உருவாக்கப்பட்ட இந்தக் கலவரத்தின் மூலமாகவும் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 71 தொகுதிகளில் பாஜக வென்றது. முசாஃபர் நகரை உள்ளடக்கிய தொகுதியையும் பாஜக கைப்பற்றியது. 2019 மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், முசாஃபர் நகர் காவி வெறியர்களை காக்கும் பொருட்டு, அவர்கள் மீதான 38 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்திருக்கிறது ஆதித்யநாத் அரசு.

படிக்க:
இந்துத்துவக் கொடுங்கோன்மையில் முசாஃபர் நகர் முகாம்கள்
ரவுடி யோகி ஆதித்யநாத் : பார்ப்பனிய பாசிசத்தின் ஜனநாயகம்

கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், வெடிபொருட்களை பயன்படுத்துதல், வழிபடும் இடங்கள் மீது தாக்குதல் நடத்தியது, மத உணர்வை தூண்டுவது உள்ளிட்ட வழக்குகள் 100  பேர் மீது போடப்பட்டுள்ளன.  கடந்த ஜனவரி 10-ஆம் தேதி இந்த வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என முசாஃபர் நகர் மாவட்ட நீதிமன்றத்துக்கு ஆதித்யநாத் அரசு கடிதம் எழுதியுள்ளது.

முன்னதாக, சமாஜ்வாதி ஆட்சியில் போடப்பட்ட 131 வழக்குகளில் 18 வழக்குகளை திரும்பப் பெற்றது தற்போது உள்ள அரசு.  இப்போது, ‘ஏழைகள், அவர்களுக்கு வாதாடக்கூட பணம் இல்லை’ என்றும் ‘அப்பாவிகள்’ என்றும் காரணம் கூறி கலவரசம் செய்த காவி குண்டர்களை காப்பாற்றப் பார்க்கிறார் ஆதித்யநாத்.

படிக்க:
குழந்தைகளை அடிக்காத பள்ளிகள் சாத்தியமா ? | வில்லவன்
காந்தி படுகொலைக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். தப்பிப் பிழைத்தது எப்படி ?

தேர்தல் நெருங்குவதற்குள் இந்த கலவர வெறியர்கள் சுதந்திரமாக வெளியே விடப்பட்டு, அடுத்த கலவரத்துக்கு தயார் படுத்தப்படுவார்கள். வேலையில்லா ‘ஏழை’களுக்கு கைகளில் ஆயுதங்களைத் தருவதைத் தவிர, ஆதித்யநாத்தும் மோடி-அமித் ஷா கும்பலும் எதுவும் செய்யப் போவதில்லை.

முசாஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முசுலீம் மக்களின் அகதி முகாம் – கோப்புப் படம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென்று மக்கள் அமைதியாக போராடிய போது என்னவெல்லாம் செய்தார்கள்? சுட்டுக் கொன்றார்கள், கிராமம் கிராமமாக அச்சுறுத்தினார்கள், என்.எஸ்.ஏ வில் கைது செய்தார்கள், மக்கள் அதிகாரம் அமைப்பை தடை செய்யப் பார்த்தார்கள். அப்போது தொலைக்காட்சி விவாதத்திற்கு வந்த பாஜக ஆதரவு பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், நெறியாளர்கள் அத்தனை பேரும் சட்டப்படி போலீசு நடந்தது, சட்ட விரோதமாக மக்கள் நடந்தார்கள், வன்முறை செய்தார்கள் என்று பச்சையாக புளுகினார்கள்.

இதையும் முசாஃபர் நகர் வழக்கையும் ஒப்பிட்டு பாருங்கள்! 62 அப்பாவி முசுலீம்களைக் கொன்ற கலவரத்தில் பெயரளவுக்கு கைது செய்யப்பட்ட சில குற்றவாளிகளைக் கூட தண்டிக்க வழக்கு நடத்தாமல் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிறது ஆதித்யநாத் அரசு! இந்த நாடு பாசிசத்தின் பிடியை நோக்கி பயணிக்கிறது என்பதற்கு வேறு எதுவும் சான்று வேண்டுமா?

அனிதா
செய்தி ஆதாரம் நன்றி: டைம்ஸ்நவ்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க