காந்தி, 1948 ஜனவரி 30-ஆம் தேதி அன்று நாதுராம் கோட்சேவால் டெல்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.  இந்த படுகொலை நடந்து நான்கு நாட்கள் கழித்து பிப்ரவரி 3-ஆம் தேதி கோல்வாக்கர் கைது செய்யப்பட்டார். மறுநாள் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது. அரசின் அறிவிக்கை, ஆர்.எஸ்.எஸ். ஏன் தடை செய்யப்பட்டது என விளக்கியது. “விரும்பத்தகாத மற்றும் மிக மோசமான ஆபத்தான நடவடிக்கைகளில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ஈடுபட்டார்கள்” என கூறியது அந்த அறிக்கை. விவரமாக அந்த அமைப்பின் படுபயங்கரமான நடவடிக்கைகளை பட்டியலிட்டது.

“ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் கலவரம் செய்தல், கொள்ளை, கொலை, வழிப்பறி, சட்டவிரோதமாக ஆயுதங்களை வெடிபொருட்களை சேகரித்தல் போன்ற வன்முறைகளில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவர்கள் தீவிரவாத செயல்களைத் தூண்டுவிதமாக துண்டுச்சீட்டு விநியோகித்து மக்களை கொலை செய்யவும் ஆயுதங்களை சேகரிக்கவும் அரசு, போலீசு மற்றும் ராணுவத்துக்கு எதிராக அதிருப்தியை தூண்டியதும் தெரியவந்துள்ளது” என்றது அரசின் அறிவிக்கை.

golwalkar
எம்.எஸ்.கோல்வால்கர்

அரசின் நடவடிக்கைகள் ஆர்.எஸ். எஸ். இருப்புக்கு சவாலாக இருந்தது. அப்போது ஆர்.எஸ்.எஸ்ஸின் சர்சங்சலக் (அகில இந்தியத் தலைவர்)-ஆக இருந்த எம்.எஸ்.கோல்வால்கர், இந்த நெருக்கடி நிலையிலிருந்து இந்த அமைப்பை காப்பாற்றத் திறமையுடன் காய் நகர்த்தினார். அடுத்த ஆண்டுக்குள் அந்த அமைப்பு பழைய நிலைக்கு வந்தது. இதைச் செய்ய, அறிக்கைகள், விவாதங்கள் மற்றும் அரசியல் ரீதியிலான முயற்சிகள் மூலம் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கலவையான அணிதிரட்டல்களை பயன்படுத்தினார்.  அப்போதைய துணை பிரதமர் வல்லபாய் பட்டேல், இந்த அமைப்பின் இருப்பை தக்கவைத்ததில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.

ஆர்.எஸ். எஸ். தடைசெய்யப்பட்ட அடுத்த நாள், கோல்வால்கர் கவனமாக வார்த்தைகளைப் பயன்படுத்தி, அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “ஆர்.எஸ்.எஸ். சட்டத்துக்கு கட்டுப்பட்டே அனைத்து செயல்பாடுகளையும் செய்கிறது” என்றார்.

“அரசு, ஆர்.எஸ்.எஸ்-ஐ சட்டவிரோத அமைப்பாக அறிவித்த நிலையில், தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் ஆர்.எஸ்.எஸ்-ஐ கலைத்து விடுவதே நல்லது. ஆனால் அதே நேரத்தில் இந்த அமைப்புக்கு எதிராக சொல்லப்பட்ட அனைத்து குற்றச் சாட்டுக்களையும் மறுக்கிறோம்” என்றது கோல்வால்கரின் அறிக்கை.

‘ஆர்.எஸ்.எஸ்-சின் ஆரம்ப நாட்கள்’ என்ற நூலில் வால்டர் ஆண்டர்சன் மற்றும் ஸ்ரீதர் டி தம்லே, “இந்த அறிவுத்தல் மற்றும் தடையையும் மீறி, அதிக எண்ணிக்கையிலான சுவயம் சேவக்குகள் (ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள்) சந்தித்துக் கொள்வதைத் தொடர்ந்தார்கள்” என்று பதிவு செய்திருக்கின்றனர்.  இந்த அமைப்பின் அனைத்து மட்ட அதிகாரிகளும் கைது செய்யப்பட்ட நிலையில், இளம் உறுப்பினர்கள் அமைப்பின் ரகசிய இயந்திரத்தை கட்டியெழுப்பி, பராமரித்தார்கள் என்கிறது அந்த நூல்.

படிக்க:
♦ ஆண்டு தோறும் காந்தியை சுட்டுக் கொல்வோம்: காவி தீவிரவாதிகள் அறிவிப்பு!
♦ காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் கோட்சே – ஆதாரங்கள்

காந்தி படுகொலைக்கான  உடனடி திட்டம் இந்து மகாசபையின் ஒரு பிரிவினரால் தீட்டப்பட்டு,  குற்றம் நடப்பதற்கான சூழலை உருவாக்கியதில் ஆர்.எஸ்.எஸ். முக்கிய பங்காற்றியது சில நாட்களில் தெளிவாக தெரிய வந்தது.

1948 ஜூலை 18-ஆம் தேதியிட்டு, இந்து மகா சபையின் முன்னாள் தலைவர் சியாம் பிரசாத் முகர்ஜி,  உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு எழுதிய கடிதத்தில் காந்தி படுகொலையில் இந்து மகா சபை மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் பங்கை எழுதியிருந்தார்.

காந்தி – கோட்சே

“இந்த இரண்டு அமைப்புகளின் செயல்பாடுகளின் விளைவாக,  குறிப்பாக அந்த முன்னாள் உறுப்பினர் (கோட்சே) மூலம் நாட்டில் இத்தகைய சூழல் உருவாகி, இந்த சோகம் நடக்க காரணமாகி விட்டது. இந்து மகா சபையில் தீவிரமாக இயங்கிய ஒரு பிரிவு இந்தச் சதியில் ஈடுபட்டது குறித்து எனக்கு சந்தேகம் ஏதுமில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்பாடுகள் அரசுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. நாங்கள் திரட்டிய தகவல்களின்படி, தடை செய்யப்பட்டிருந்தாலும் கூட இந்த செயல்பாடுகளை நிறுத்தியிருக்க முடியாது.” என சியாம் பிரசாத்தின் கடிதம் சொன்னது.

ஆர்.எஸ்.எஸ். வன்முறையை தூண்டியதற்கு இவை ஆதாரங்களாக இருந்த போதிலும் ஆர்.எஸ்.எஸ்-சின் உறுப்பினர்களுக்கு காந்தி படுகொலையில் நேரடியாக தொடர்பிருந்ததற்கான சாட்சியங்கள் எதுவும் அரசுக்கு கிடைக்கவில்லை. எனவே, பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டனர்.

பொது நிகழ்ச்சிகளில் பேசக்கூடாது, அரசு ஒப்புதல் இல்லாமல் எதையும் அச்சிட்டு வெளியிடக் கூடாது போன்ற நிபந்தனைகளுடன் கோல்வால்கரும் ஆகஸ்டு மாதம் விடுவிக்கப்பட்டார்.  அதே ஆண்டின் இறுதியில் பட்டேல், ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகள் குறித்து கோல்வாக்கருக்கு எழுதினார். அதில், “இந்துக்களை ஒருங்கிணைப்பது அவர்களுக்கு உதவுவது ஒரு விசயம். ஆனால், இவர்களுடைய துன்பங்களுக்காக அப்பாவியான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை பழிவாங்குகிறேன் என்பது வேறு விசயம்” என்றார் பட்டேல்.

“காங்கிரசை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நச்சுத்தனமான கருத்துக்களை எந்தவித நாகரிகமும் பாராமல் ஆளுமைகளை அவமதிக்கும் விதமாக ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் செய்வது மக்களிடம் அமைதியின்மையை ஏற்படுத்தியிருக்கிறது” எனவும் அந்தக் கடித்ததில் எழுதுகிறார்.

இந்த அமைப்பைச் சேர்ந்த தலைவர்களின் பேச்சு முழுமையும் “மத விசத்தை” பரப்புக் கூடியவை என்கிற பட்டேல், இந்துக்களை கவரவும் அவர்களை பாதுகாக்கவும் இத்தகைய விசத்தை பரப்ப வேண்டிய அவசியமில்லை என்கிறார்.

“இதன் விளைவாகத்தான் காந்தியின் மதிப்பில்லா உயிரை தியாகம் செய்து நாடு துயரப்படுகிறது. இப்போது அரசும் மக்களும் ஆர்.எஸ். எஸ்-ஐ எதிர்க்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் காந்திஜியின் கொலையை இனிப்புகள் வழங்கிக் கொண்டாடியதைக் கண்டு எதிர்க்கட்சிகள் தீவிரமாக இருக்கின்றன.” (பட்டேலின் உள்ளே இருக்கும் இந்துத்துவம் வெளிப்படுவதை இதில் காணலாம்.)

“இந்த நிலையில் அரசு, ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாதது. ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய வழிகளை மாற்றிக்கொள்ளும் எனக் கருதியது அரசு. ஆனால், பழையபடி அவர்கள் தங்களுடைய செயல்பாடுகளை தொடர்கிறார்கள் என்றே எனக்கு தகவல் வருகிறது” என்றது பட்டேலின் கடிதம்.

அக்டோபர் மாதம், கோல்வால்கருக்கு விதிக்கப்பட்ட பயண தடை நீக்கப்பட்டது. டெல்லிக்குச் சென்று அரசுடன் விவாதித்தார், ஆனால் பலன்கள் ஏதும் கிடைக்கவில்லை. கோல்வாக்கார் மீண்டும் கைதுசெய்யப்பட்டார், நாக்பூருக்கு திரும்பினார்.

இந்த இக்கட்டான மற்றும் குழப்பான சூழ்நிலையில், கோல்வாக்கர்  ஆர்.எஸ்.எஸ்ஸின் எதிர்காலத்துக்காக திட்டமிட்டார். ஆர்.எஸ்.எஸ்-ஆதரவாளர்களிடமிருந்து ஒரு கோரிக்கை வந்தது. அதில், “ஆர்.எஸ்.எஸ்-ஐ அரசியல் கட்சியாக மாற்றும் யோசனை தெரிவிக்கப்பட்டது. அதாவது அரசியல் கட்சியாக மட்டுமே செயல்படும். பக்தியுடனான கலாச்சார பணிகள் எதையும் செய்ய முடியாது என்பதே அந்த யோசனை. இது ஏற்றுக் கொள்ள முடியாதது” என்ற கோல்வால்கர், “கலாச்சார பணிகள், அரசியலை விட்டு விலகி இருக்க வேண்டும். எந்த அரசியல் கட்சியோடு இணைந்திருக்கக் கூடாது. எனவே, இந்த யோசனை மக்களுக்கு விருப்பமானது அல்ல என தெரிவிக்கிறேன்” என நிராகரிக்கிறார்.

ஆர்.எஸ். எஸ். மீதான தடையை நீக்க சத்தியாகிரக போராட்டத்தை டெல்லியில் டிசம்பர் 9-ஆம் தேதி தொடங்கினார் கோல்வாக்கர். இது அவருக்கு கைக் கொடுத்தது. கிட்டத்தட்ட 6000 பேர் அதில் கலந்துகொண்டார்கள் என ஆர். எஸ்.எஸ். கூறுகிறது.  பட்டேலும் அதனுடன் நெருக்கம் காட்டுவதில் ஆர்வமாக இருந்தார்.

அந்த சமயத்தில் அரசுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். மத்திய குழு உறுப்பினராக இருந்த ஏக்நாத் ரனாடே-விடம் பட்டேல், ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் காங்கிரசில் இணைந்து அக்கட்சியின் அமைப்பு ரீதியிலான கட்டுமானத்துக்கு உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டதாக  ஆண்டர்சன் மற்றும் தம்லே தங்களது நூலில் சுட்டிக் காட்டுகிறார்கள்.  நேருவின் சில கொள்கைகளை எதிர்க்க ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை பட்டேல் பயன்படுத்திக் கொள்ள நினைத்தார் என அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அம்மைப்பின் தலைவர் சொன்னதாக நூலாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் சில உண்மைகள் இருக்கலாம். ஆர்.எஸ்.எஸ். பற்றி கூறிவரும் கருத்துக்கு ஆதாரம் தரும்படி கோல்வால்கர், தொடர்ந்து பட்டேலுக்கு எழுதிக் கொண்டிருந்தார்.  துணை பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்த பட்டேலுக்கு அரசிடமிருந்த ஆதாரங்கள் குறித்து தெரியும். ஆனால், ஏன் அவர் அதை கோல்வால்கருக்கோ அல்லது வெளிப்படையாகவோ தெரிவிக்கவில்லை என்பது புலனாகவில்லை.

ஆர்.எஸ். எஸ். மீதான பட்டேலின் ஆர்வம், அடுத்த ஆண்டு, ஆர்.எஸ்.எஸ். மீதான தடை நீக்கப்பட்டதில் தெரிந்தது. நேரு வெளிநாட்டில் இருந்த போது, ஆர்.எஸ். எஸ். உறுப்பினர்கள் காங்கிரசில் இணைய அக்கட்சி அனுமதித்தது.  இந்த முடிவு பட்டேலின் ஆதரவாளர்களால் ஆதரிக்கப்பட்டது, நேருவின் ஆதரவாளர்களால் எதிர்க்கப்பட்டது. ஒரு மாதம் கழித்து, நேரு நாடு திரும்பியவுடன் ஆர்.எஸ். எஸ்-சிலிருந்து விலகினால் மட்டுமே கட்சியில் சேர முடியும் என்ற திருத்ததுடன் அந்த முடிவு நடைமுறைக்கு வந்தது.

ஆர்.எஸ். எஸ். மீதான தடையை நீக்க அரசு ஒரு நிபந்தனையை விதித்தது. அந்த அமைப்பு தனது கொள்கை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என்பதே அது. அப்போது கோல்வாக்கர், “இந்த சங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. சமூக, கலச்சார துறைகளில் மட்டுமே இது சேவை செய்யும்” என எழுதினார். அதோடு, அமைப்பின் உறுப்பினர்கள், தனி நபர்களாக எந்த அரசியல் கட்சியிலும் சேரலாம் என்றும் தேசிய நலன்களை தவிர்த்து, வன்முறை அல்லது தலைமறைவு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் மத, இன வெறுப்பை தூண்டும் விதமாக நடந்து கொள்ளக்கூடாது என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

சிறையில் அடைத்த ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்த சாவர்க்கர் வழி வாரிசுகள், தங்களுடைய தடையை நீக்க இந்திய அரசிடமும் சரணடைந்து ஒரு பம்மாத்து அறிவிப்பை கொடுத்திருக்கிறார்கள். காந்தி கொலையை திட்டமிட்டார்கள், அதை விரும்பினார்கள் என்பதும் இயக்கம் மீதான தடை வந்த பிறகு தடை செய்தவன் காலில் விழுவதும் ஒரு பாசிஸ்டின் குணநலன்கள். மேலும் காங்கிரசின் இந்துத்துவ சார்பும் இந்த பிரச்சினையில் இருக்கிறது. அதனால்தான் ஆர்.எஸ்.எஸ்-ஐ ஆதரித்த வல்லபாய் பட்டேல் அன்று ஆர்.எஸ்.எஸ் மீதான தடை நீக்க பாடுபட்டதும், இன்று குஜராத்தில் அவருக்கு மோடி அண்ட் கோ சிலை எழுப்புவதும் நடந்திருக்கிறது. 

மேலும் தடையை நீக்க நாங்கள் அரசியல் கட்சியாக மாற மாட்டோம், காங்கிரசிடம் சேருவோம் என்றெல்லாம் இந்த ‘வீரர்க்ள்’ ஜெயா காரில் விழும் ஓபிஎஸ்-ஐ போல விழுந்திருக்கிறார்கள். எமர்ஜென்சி காலத்தில் இந்திராவால் தடை செய்யப் பட்ட போதும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் தேவரஸ் இதே போன்றதொரு கடிதத்தை இந்திரா காந்திக்கு அனுப்பியிருந்தார். அதில் இந்திராவை காளி, துர்க்கை, பாரதமாதா என்றெல்லாம் புரட்சித் தலைவியை வழிபடும் ஈ.பி.எஸ் போல கவிதை பாடியிருக்கிறார். இப்படி ஆளும் வர்க்கத்தின் ஆதரவோடு காந்தியை கொலை செய்து அதை ஒட்டிய தடையை ’சாமர்த்தியமாக’ நீக்கி பிறகு இந்திய வரலாற்றில் நாடெங்கும் பார்ப்பனியத்தின் பேரில் கலவரங்களும் படுகொலைகளும் நிகழ்த்தி வருகிறார்கள். இந்த வரலாற்றுக்கு பொருத்தமாகத்தான் காந்தி கொலைக்கு பிறகு இவர்கள் மீதான தடை நீக்கம் நடந்திருக்கிறது.

– வினவு


கட்டுரை : ஹர்தோஷ் சிங் பால்
தமிழாக்கம் : கலைமதி
நன்றி: கேரவன் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க