ராவணனையை எரிப்பதுபோல, ஆண்டுதோறும் காந்தியை சுட்டுக் கொல்வோம் : காவி தீவிரவாதிகள் அறிவிப்பு !

ஆர்.எஸ்.எஸ். காவி தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட காந்தியின் நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.  சமூக ஊடகங்களில் காந்தியின் கருத்துக்களில் விமர்சனமும் முரண்பாடும் கொண்டவர்களும்கூட காவிகளின் ஆட்சியில் அவரை நினைத்துப் பார்ப்பதாக பதிவிட்டனர்.

காந்தியை சுட்டுக் கொன்றதை பொது வெளியில் ஒப்புக்கொள்ள மறுத்து வருகிறது பாஜக-ஆர்.எஸ்.எஸ். ஆனால், காவி பரிவாரத்தைச் சேர்ந்த இந்து மகா சபா, தங்களுடைய காவி ஆட்சியின் பலத்தில், காந்தியை மீண்டுமொரு முறை சுட்டு கொன்றிருக்கிறது. இந்து மகா சபா தீவிரவாதிகள் காந்திக்கு செலுத்திய ‘அஞ்சலி’ சமூக ஊடகங்களில் பரபரப்பு செய்தியானது.

காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நாளான ஜனவரி 30-ஆம் தேதியை ‘சவுரிய திவாஸ்’ (வீர தினம்) என்ற பெயரில் அவரை சுட்டுக்கொன்ற கோட்சே-வை கொண்டாடுகிறது இந்து மகா சபை. புதன்கிழமை காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதன் 71-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.  இதையொட்டி இந்து மகா சபா தேசிய செயலாளர் புஜா சகுன் பாண்டே, காந்தியின் உருவத்தை சுட்டு கொண்டாடியிருக்கிறார். இது வீடியோவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

படிக்க :
♦ காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் கோட்சே – ஆதாரங்கள்
♦ துடைப்பத்துக்கு காந்தி கும்பிட கோட்சே – கேலிச்சித்திரம்

காவி தீவிரவாதி புஜா சுட்டவுடன், காந்தியின் உருவப்படத்திலிருந்து ரத்தம் வெளியேறுவது போன்று செட்டப் செய்யப்பட்டிருக்கிறது. வெளியேறிய ரத்தத்தைப் பார்த்து குதூகலம் அடைந்திருக்கிறது இந்த வெறியர் கூட்டம். அதன்பின் இனிப்பு வழங்கியும் கொண்டாடியிருக்கிறார்கள்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்டு வைரலானபின்,  இந்த காவி தீவிரவாதிகள் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

கோட்சேவை கும்பிடும் கொலைகார கும்பல்.

“தசரா விழாவின் போது அரக்கனான ராவணனை எரிப்பதுபோல, இனிமேல் காந்தி கொல்லப்பட்டதை ஒவ்வொரு வருடமும் இப்படித்தான் சுட்டு கொண்டாடப் போகிறோம்” என பகிரங்கமாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார் புஜா பாண்டே.

1915-ஆம் ஆண்டு மதன் மோகன் மாளவியா என்பவரால் தொடங்கப்பட்ட இந்து மகா சபாவில் நாதுராம் கோட்சே உறுப்பினராக இருந்தவர். இதில் செயல்பட்டவர்கள் பின்னாளில் ஆர்.எஸ்.எஸ்.-உடன் இணைந்து கொண்டார்கள். கோட்சேவுமே ஆரம்ப்த்தில் ஷாகா செல்லும் ஸவயம் சேவக்காக இருந்தவர்தான்.  காந்தியை சுட்டுக்கொல்ல இந்துத்துவ காவிகளால் திட்டமிடப்பட்டு அதற்கென்று பணிக்கப்பட்டவர் கோட்சே. தனது கையில் ‘இஸ்மாயில்’ (காவி கும்பல் இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பை கிளறிவிடுவதை இப்படித்தான் காலம்காலமாக செய்துவருகிறார்கள்) என பச்சை குத்திக் கொண்டு, காந்தியை சுட்டுக் கொன்றவர். அப்படி அவர் பச்சை குத்தவில்லை என்று சிலர் விவாதித்தாலும் அன்று இந்த வதந்தி பரவியது உண்மையே. வதந்தியின் நோக்கம் காந்தியை சுட்டவர் ஒரு முஸ்லீம் என்று கலவரத்தை உருவாக்கவே.

47-க்கு பிந்தைய இந்தியாவின் முதல் உண்மையான பயங்கரவாதி என்கிற இழிபெருமையை பெற்ற இந்துத்துவ தீவிரவாதிகள், தங்களுடைய ‘இந்துத்துவ’ ஆட்சி அமைந்துவிட்ட களிப்பில் சுட்டு விளையாடுகிறார்கள். இவர்கள் துப்பாக்கி காந்தியில் ஆரம்பித்து கௌரி லங்கேஷ் வரையான ஏராளமான மாற்றுக்குரல் எழுப்பியவர்களை, விமர்சித்தவர்களை சுட்டுக்கொன்றிருக்கிறது. ஆனாலும் இவர்கள் சுதந்திரமாகவே திரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்து மகா சபாவிற்கும் சங்க பரிவாரத்திற்கும் எந்த தொடர்புமில்லை என்று இவர்கள் வழக்கமாக வாதிடுவார்கள். இன்னொரு புறம் இந்து மகா சபாவின் இத்தகைய நடவடிக்கைகளை மறைமுகமாக ஊக்குவிப்பார்கள். காவிகளின் ஆட்சியில் கலவரம் இல்லை என்றால்தான் ஆச்சரியம்! காந்தியையே கொன்றவர்கள் சாதாரண மக்களை பணயம் வைத்து தமது இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்!


கலைமதி
நன்றி: என்.டி டி.வி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க