இந்துத்துவக் கொடுங்கோன்மையில் முசாஃபர் நகர் முகாம்கள்

10
20

சுமார் 2°C வெப்பநிலை வரை குறைந்து அடிக்கும் குளிர் காற்றிலிருந்து பிறந்து 20 நாட்கள் மட்டுமேயான தனது மகனை காப்பாற்ற இயலாமல் போன தனது தற்போதைய வறுமை நிலைமையை எண்ணி குமுறுகிறாள் மர்சிதா கடூன் (வயது 25). அவளது பிளாஸ்டிக் கூடாரத்தை சுற்றிலும் மனிதக் கழிவுகளும், குப்பைகளுமாக இருக்கின்றன. இது போன்ற கூடாரங்களில் வசிக்கும் அந்த அகதிகள் முகாமின் மொத்த மக்கள் தொகை 4,500. உத்திர பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் மாவட்டம் ஷாம்லி மாவட்ட எல்லைக்கருகில் உள்ள மாலக்பூர் அகதிகள் முகாம் தான் அது. குளிர் கால நோய்களும், கொசுக்களும் அங்கு அதிகமாக உள்ளன.

அசாரா கிராமம்தென்மேற்கு பருவ மழை காலமான செப்டம்பரில் துவங்கிய முசாஃபர் நகர் கலவரத்தில் இதுவரை அதிகாரபூர்வமாக 63 பேர் வரை இறந்துள்ளனர். ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 58 அகதிகள் முகாம்களில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முசுலீம்கள் தான். கடுங்குளிர் அடிக்க துவங்கிய நவம்பரில் ஒவ்வொரு அகதிகள் முகாம்களிலும் அதனைத் தாங்க முடியாத குழந்தைகளும், முதியவர்களும் அதிக அளவில் மரணத்தைத் தழுவி உள்ளனர். அப்படி இறந்த குழந்தைகளில் ஒன்றுதான் மர்சிதா கடூன் உடைய குழந்தையும். அந்த குழந்தை இறந்த பிறகு அவளது குடும்பத்திற்கு தாக்கும் குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஒரு விறகுக் கட்டை தரப்பட்டுள்ளதாம். ”ஏழு பேர் கொண்ட குடும்பத்திற்கு எப்படி இது போதுமானது” என்று ஏமாற்றத்துடன் அப்பாவியாக கேட்கிறாள் அந்த குழந்தையை இழந்த தாய்.

அவள் இருந்த மாலக்பூர் அகதிகள் முகாமில் மட்டும் நவம்பர் மாதம் 28 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மரணமடைந்தவர்களில் 25 பேர் ஒரு மாதத்திற்குட்பட்ட வயதுடைய குழந்தைகள். இங்கு வசிக்கும் குழந்தைகளை இழந்த தாய்களில் தில்சானா பேகமும் ஒருத்தி. கடன் வாங்கியும், தங்களிடமிருந்த மோட்டார் சைக்கிளை ரூ 15 ஆயிரத்துக்கு விற்றும் தனது ஐந்து மாத குழந்தைக்கு முகாமிலிருந்து வெளியே போய் வைத்தியம் பார்த்திருக்கிறாள். கடைசி சொட்டு மீதமிருந்த பணம் வரை செலவிட்ட பேகத்தால் தன் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. முதலில் சாதாரண வயிற்றோட்டமாக துவங்கிய பிரச்சினைதான் குழந்தையில் மரணத்தில் போய் நின்றது.

குர்ஃபன், பதேரி குர்ட், பர்னாபி போன்ற அருகிலுள்ள பிற முகாம்களிலும் சாவு எண்ணிக்கை 8 வரை உயர்ந்துள்ளது. அதில் நால்வர் 30 நாட்களுக்குட்பட்ட குழந்தைகள். உள்நாட்டில் அகதிகளாக இருக்கும் இவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று இறுதி மரியாதை செய்ய முடியாத காரணத்தால் முகாம்களுக்கு அருகில் உள்ள இடுகாடுகளிலேயே இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செய்கின்றனர்.

திறந்த வெளி அகதிகள் முகாம்
திறந்த வெளி அகதிகள் முகாம்

போதுமான குளிர் காக்கும் ஆடைகள் இல்லாததும், ஒழுகாத கூடாரத் துணிகள் வழங்கப்படாததும், முறையான கழிப்பிட வசதி செய்து தரப்படாததும் தான் இந்த மரணங்களுக்கு காரணமாகும். அரசு மருத்துவர் குளிர் காலம் துவங்கிய பிறகு முகாமை பார்வையிட வரவே இல்லையாம். சக்பூர் மற்றும் பாசிக்கான் முகாம்களில் நான்கு மரணங்களும், லாய் முகாமில் 12 மரணங்களும் கடந்த மாதம் நிகழ்ந்துள்ளன. மருத்துவ அலுவலரை கேட்டால் ஒன்றிரண்டு மரணங்கள் வேண்டுமானால் நிகழ்ந்திருக்கலாம் என சர்வ அலட்சியமாக பதிலளிக்கிறார்.

முசாஃபர் நகர் கலவரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விஷ்ணு சகாய் கமிஷனின் விசாரணை காலத்தை இன்னும் ஆறு மாத காலத்திற்கு உத்திர பிரதேச மாநில உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது. இதுவரை 650 பிரமாண பத்திரங்களை பதிவு செய்துள்ள நிலையில் இன்னும் இதே அளவுக்கு பதிவு செய்ய வேண்டும் என நீதிபதி சகாய் அரசிடம் நீட்டிப்புக்கான காரணத்தை விளக்கியிருந்தார். இதுவரை முசாஃபர் நகரில் இருந்து வந்த கமிசனின் விசாரணை அலுவலகத்தை தற்போது லக்னோவுக்கு மாற்றி உள்ளனர்.

தற்போதைய நிலையிலேயே அறிக்கையை வெளியிடலாம் எனக் கூறுகிறார் பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் விஜய் பகதூர் பதக். அதாவது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதான தங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்கள் சங்கீத் சோம், சுரேஷ் ராணா போன்றவர்களுக்கு நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டுள்ளதையும், தற்போது சரண்டராகி உடனடியாக பிணையில் வந்துள்ள பாஜக தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சியையும் மனதில் கொண்டே இப்படி கூறியிருக்கிறார். சாத்வி ஜாட்டுகளின் மகா பஞ்சாயத்துகளில் கலந்து கொண்டு கலவரத்தை தூண்டும் வகையில் பேசினார் என்பதுதான் குற்றச்சாட்டு.

மலக்பூர்
மலக்பூர் திறந்தவெளி கூடாரங்கள்

அதாவது 2014 நாடாளுமன்ற தேர்தலுக்குள் கமிசன் அறிக்கை வெளியானால் தங்களுக்கு சாதகம் என்று பாஜக கருதுகிறது. பாஜக கலவரத்தை தூண்டும் வகையிலான  வீடியோவை முசாராபாத் பகுதியில் அவுட்சோர்சிங் முறையில் வெப்ஸ்ட்ரீக்ஸ் என்ற நிறுவனம் மூலமாக இணைய தளம் மற்றும் செல்பேசிகளில் பரவ விட்ட விசயங்கள் தற்போது கண்டறியப்பட்டு அவர்கள் அம்பலமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் 177 பேர் கைதாகி உள்ளனர். 25 பேர் சரண்டராகி உள்ளனர். பதிவான 538 வழக்குகளின் பேரில் 6,244 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 111 பேர் மீது பாலியல் வல்லுறவு வழக்குகள் உள்ளன. எனினும் இப்பகுதியில் ஜாட்டுகளின் மேலாதிக்கம் காரணமாக வழக்குகளை வாபசு பெறச் சொல்லி முசுலீம்களை ஜாட்டுகள் மிரட்டி வருகிறார்கள்.

தொடர்ந்து நிம்மதியாக வாழ வேண்டுமானால் வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் முசுலீம்கள், அதற்காக தங்களை அணுகும்போது ஏன் என்று கூட போலீசார் விசாரிக்காமல் விட்டு விடுகின்றனர். இப்படி வாபஸ் வாங்கியவர்களில் ஒருவர் சம்யுதீனின் மகன் ஆலம். பொது இடத்தில் குரானை இழிவாகப் பேசியது, எரித்தது மற்றும் மசூதியை இடித்தது போன்ற குற்றச்சாட்டுகளை 16 பேர் மீது அவர்களது முகவரியுடன் சுமத்தியிருந்த இவர் தற்போது முசாஃபர் நகர் சிறப்பு காவல்துறை கண்காணிப்பாளரிடம் சென்று அவர்கள் அனைவரும் அப்பாவிகள் என்று கூறி தனது புகாரை வாபஸ் பெற்றிருக்கிறார்.

அடுத்து, சலீம் என்பவர் தன் மீது தாக்குதல் நடத்தி விட்டு, குடியிருந்த வீட்டுக்கும் தீ வைத்தவர்கள் என்று முன்னர் தன்னால் அடையாளம் காட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட நபர்களை, தவறாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறி இப்போது வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். தப்பித்துள்ளவர்கள் அனைவருமே அவரது அண்டை வீடுகளில் வசித்த ஜாட் ஆதிக்க சாதி இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடாரங்கள்
600-க்கும் மேற்பட்ட கூடாரங்கள்

புகானா கிராமத்தை சேர்ந்த ஜமீல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரது மனைவி அண்டை வீடுகளில் குடியிருந்த ஆதிக்க சாதி இந்துக்களால் கலவரத்தின்போது கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியுள்ளார். அப்போது புகார் அளித்திருந்த ஜமீலுக்கு இப்போது ஆதிக்க சாதி இந்துக்களிடமிருந்து கொலை மிரட்டல்கள் தொடர்ந்து வருகிறதாம். ஏற்கெனவே கலவரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை 63 ஆக குறைத்து காட்டும் நோக்கில் அரசு அதிகாரிகள் பிரேத பரிசோதனை செய்யாமல் பிணங்களை எரிக்கச் சொல்லியிருந்தனர். தற்போது இப்படி கணக்கில் வராமல் இறந்தவர்களுக்கு அரசின் இழப்பீட்டுத் தொகையை பெற முடியாமல் கொலையுண்டவர்களின் குடும்பத்தினர் தவிக்கின்றனர்.

நவம்பர் 21-ம் தேதி விசாரணையை மாநில அரசிடமிருந்து மாற்றக் கோரிய மகா ஜாட் பஞ்சாயத்தின் கோரிக்கையை ஏற்று உச்சநீதி மன்றம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்பியது. முன்னதாக உ.பி மாநில அரசு தாக்கல் செய்த மனுவில் முகாம்களில் இருக்கும் 51 ஆயிரம் பேரில் 41 ஆயிரம் பேரை அவர்களுடைய பழைய குடியிருப்புகளுக்கு அனுப்பி விட்டதாக நீதிமன்றத்தில் சொல்லி இருந்தது. அப்படி முசுலீம்களை அனுப்பும் பட்சத்தில் அவர்கள் சொந்த கிராமத்திற்கு வருவதை ஜாட் சாதியினர் பரவலாக எதிர்க்கின்றனர். பால்டா கிராமம், புதானா பகுதியிலுள்ள சில கிராமங்களில் இத்தகையை எதிர்ப்பை ஆதிக்க சாதி இந்துக்கள் போலீசு ஐ.ஜி. அசுதோஷ் பாண்டே மற்றும் மாவட்ட நீதிபதி காஸல்ராஜிடம் நேரில் தெரிவித்துள்ளனர்.

பசிகலான் அகதிகள் முகாமில் இருப்பவர்கள் தங்களுக்குள் ஒரு கமிட்டி அமைத்துக் கொண்டு சொந்த ஊருக்கு செல்ல முயன்றனர். ஆனால் அங்கு போவதற்கு அவர்களில் பலருக்கும் தயக்கமாக இருந்தது. எனவே அக்கமிட்டி  பால்டாவுக்கு அருகில் நிலத்தை வாங்கி அங்கிருந்த குடும்பங்களுக்கு அந்நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்துக் கொடுத்தது.

முசாஃபர் நகருக்கருகிலுள்ள தியோபந்த் நகரில்தான் இந்தியாவிலேயே பெரிய இசுலாமிய மார்க்க கல்வி நிறுவனம் உள்ளது. அங்குள்ள ஜமியாத் உலெமா இ-ஹிந்த் என்ற அமைப்பு (அர்ஷத் மதானி) முசுலீம் அகதிகளுக்கான நிலத்தின் மதிப்பில் பாதித் தொகையை தருவதாகவும், ஒரு அறை கொண்ட வீடு ஒன்றை தலா ஒரு குடும்பத்திற்கு கட்டித் தருவதாகவும் முன் வந்தது. ஆனால் எதுவும் நடக்கவில்லை என்பதுதான் எதார்த்தம்.

மதரசாக்கள்
அகதி முகாம்களாக மாற்றப்பட்ட மதரசாக்கள் – கண்ட்லா, கைரானா கிராமங்கள்.

சொந்த ஊருக்கு போக விரும்பாத அகதிகளுக்கு ரூ 5 லட்சத்தை முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து அவர்களது புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்புக்காக மாநில அரசு வழங்குகிறது. அப்படி ரூபாய் ஐந்து லட்சத்தை பெற்றுக் கொண்டு கண்காணாத இடத்திற்கு போக நினைத்தாலும் வழக்குகளை வாபஸ் பெறச் சொல்லி அவர்களை தாக்கியவர்கள் நெருக்குகிறார்கள். அரசும், நீதித்துறையும், காவல்துறையும் ஆதிக்கசாதி இந்துக்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது. சொந்த கிராமங்களுக்கு போனால் மீண்டும் தாக்கப்படுவோம் என்று அஞ்சிய 950 குடும்பங்கள் அதனை எழுதிக் கொடுத்துவிட்டன. இவர்களுக்கு இது தவிர எந்த அரசு இழப்பீட்டு தொகையும் கிடைக்காது என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னரே இவர்களுக்கு பணம் கணக்கில் சேர்ந்தது.

இப்போது அகதி முகாம்களில் பல ஜோடிகளின் திருமணங்கள் ஒரே நேரத்தில் நடக்கின்றன. லாய் முகாமில் முன்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பெண்களின் திருமணம் ஒரே நேரத்தில் நடைபெற்றது. கலவரத்தில் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணம், நகைகள், சொத்துக்கள் போன்றவற்றை முழுவதும் இழந்து விட்ட இவர்களைப் போன்ற குடும்பத்தினர் அகதி முகாமில் இருக்கும் ஏதாவதொரு பையனுக்கு திருமணம் செய்து கொடுக்கின்றனர்.

அப்படி உருவாகும் புதிய குடும்பங்களுக்கு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 1 லட்சம் தொகையும், ஒரு பிளாஸ்டிக் கூடாரமும், சில அடிப்படை பாத்திரங்களும் வழங்கப்படும் என்பதால் திருமண வயதை எட்டாத பெண்களுக்கு கூட திருமணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் பெற்றோர்கள் உள்ளனர். ஏனென்றால் ஒரே குடும்பமாக இருந்தால் கிடைக்கும் நிதி உதவி மூலமாக குளிரைத் தாங்குமளவுக்கு உணவு தர இயலாது என்பதுதான் எதார்த்தம்.

மேலும் ”திருமணம் செய்து கொடுத்து விட்டால் அதன்பிறகு பெண்ணை பாதுகாப்பது அவளது கணவனின் கடமை” என்கிறார் தன் 17 வயது மகளை திருமணம் செய்து கொடுத்துள்ள லாய் அகதி முகாமின் 35 வயது தாய் சமீம் கடூன். முகாம்களுக்குள் ஆதிக்க சாதி இந்துக்கள் புகுந்து கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கும் அபாயம் இருப்பதாலும், வெளியில் போகும் பெண்களையும் எப்போதுமே பாதுகாப்பது நடைமுறையில இனி இயலாது என்பதாலும் பையன் நல்லவனா, கெட்டவனா என்று கூட பார்க்காமல் திருமணங்களை நடத்தியாக வேண்டிய சூழலில் முகாம்களில் உள்ள முசுலீம் பெற்றோர்கள் இருக்கின்றனர். ஜேக்கியா கேரி கிராமத்தில் உள்ள அகதி முகாமில் திருமணமான ஒரு இசுலாமிய பெண்ணை கும்பல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றத்திற்காக இரு ஜாட் சாதி இளைஞர்கள் கடந்த மாதம் 4-ம் தேதி கைதாகினர் என்பது போன்ற சம்பவங்களும் முகாமில் உள்ள முசுலீம்களை முடிவில்லாத அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

காந்தா முகாமில் நடந்த மூன்று பெரிய அளவிலான திருமணங்களில் கலந்து கொண்ட ஜோடிகளின் எண்ணிக்கை 400. சபூர் முகாமில் 160, ஜொல்லா முகாமில் 72 என இதுவரை 700-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளதாக சொல்கிறார் இவற்றை நடத்தி வைக்கும் ஜமியாத் உலெமா இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மெஹ்மூத் மதானி. அவர்கள் சார்பாக தலா ஒரு ஜோடிக்கு ரூ 15 ஆயிரம் தருவதாக வாக்குக் கொடுத்துள்ளனர். சில முகாம்களில் தொகையினை தந்தாலும் பெரும்பாலான முகாம்களில் தரப்படவில்லை. சிறுபான்மையாக இருக்கும் கிராமங்களில் உள்ள முசுலீம்கள் முகாம்களில் இருந்து ஊருக்கு திரும்பச் செல்லும் போது அவர்களில் ஏழை இசுலாமியர்களை மட்டுமே குறி வைத்து செயல்படும் இந்த அமைப்பினர் குழந்தைகளுக்குக் கூட திருமணம் செய்து வைக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.

பொதுவாக முகாமில் இருக்கும் பலத்த காயமடைந்த நபர்களுக்கு அரசு தரும் உதவித் தொகை என்பது மாதமொன்றுக்கு ரூ 400 மட்டுமே. உச்சநீதி மன்றமோ முசுலீம்களுக்கு மட்டும் நிவாரணம் தரக் கூடாது, தங்களது இடங்களுக்கு தைரியமாக திரும்பியிருப்பினும் ஜாட்டுகளுக்கும் இழப்பீடு தர வேண்டும் என்று நவம்பர் 21-ம் தேதி உத்திரவிடுகிறது.

பாஜக தான் இந்த கலவரத்தின் அடிக்கொள்ளி என்பது வெள்ளிடை மலை. சிறுபான்மை மக்களின் காவலனாக தன்னைக் காட்டிக் கொண்டிருந்த காங்கிரசு உள்ளிட்ட பல ஓட்டுச்சீட்டு கட்சிகளும் இப்பிரச்சினையில் எப்படி நாடாளுமன்றத்திற்கு ஓட்டுக்களை அறுவடை செய்யலாம் எனக் காத்துக் கொண்டிருக்கின்றன. முலாயம் சிங் யாதவ் சிறுபான்மையினரின் காவலனாக தன்னை இப்போது சொல்லிக் கொண்டாலும் பெரும்பான்மை ஜாட்டுகளை பகைத்துக் கொள்ளாமல் இசுலாமிய ஓட்டுக்களை அறுவடை செய்ய விரும்புகிறார். போலி கம்யூனிஸ்டுகளுக்கும், தலித் அமைப்புகளுக்கும் இந்தப் பகுதியில் செல்வாக்கு இல்லாத காரணத்தால் அவர்கள் தில்லி கருத்தரங்குகள் மற்றும் அறிக்கைகளோடு நிறுத்திக் கொள்கிறார்கள்.

நுஷத் அகமது கான் என்ற பெண் வழக்குரைஞர் உச்சநீதி மன்றத்தில் முசாஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்காக சட்டரீதியாக போராடி வருகிறார். அவர் மீது கடந்த டிசம்பர் 2 அன்று தில்லியில் ஜாட் சாதியினரால் தாக்குதல் நடத்தப் பெற்றுள்ளது. மதியம் 2 மணிக்கு திபாகி தியாகி என்ற ஜாட் சாதியினை சேர்ந்த ரியல் எஸ்டேட் மாஃபியாவும், அவரது 20 கூட்டாளிகளும் சேர்ந்து இத்தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். இதுபற்றி காவல்துறை, சிறுபான்மை கமிசன், பெண்கள் கமிசன், சோனியா காந்தி போன்றோருக்கு அவர் புகார் அனுப்பியுள்ளார்.

திறந்த வெளி முகாம்கள்
தூரத்திலிருந்து வண்ணமயமாக காட்சியளிக்கும் அவல முகாம்கள்

சட்டபூர்வமான அனைத்து பிரிவினரும் ஆதிக்க சாதி ஜாட்டுகளுக்கு ஆதரவாகவே உள்ளனர். முசுலீம்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பது கலவரத்தில் மட்டுமின்றி அவர்களை நடத்தும் அரசின் குறிக்கோளிலும் இருக்கிறது. முசாஃபர் நகர் மாவட்டத்தில் உள்ள ஜாட் சாதி நிலப்பிரபுக்களின் கால்நடைகளை பராமரித்துக் கொண்டிருந்த ஏழை முசுலீம்கள் மீது நிலப்பிரபுக்களின் ஆதிக்கமும், அரசின் கூட்டுக் களவாணித்தனமும், ஜாட் சாதி இளைஞர்களை கொம்பு சீவி விடும் சங் பரிவாரங்களின் நயவஞ்சக அரசியலும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்துகின்றன. ஓரளவு பசையுள்ள முசுலீம்களை தனிக் குடியிருப்புக்கு மாற்றும் வேலையை பாஜக எதிர்பார்ப்பது போல, ஜாட்டுகள் எதிர்பார்ப்பது போல முலாயம்சிங் யாதவ் செய்து முடிக்கிறார்.

எங்கும் போக முடியாமல் பயந்து போய் முகாம்களில் அகதிகளாகவே தொடரும் ஏழை முசுலீம்களுக்கு குளிரை தாங்க முடியாத மரணங்களும், குழந்தை திருமணங்களும், கல்வி மறுப்பும் தொடர் கதைகளாக மீந்துள்ளது. கொசுக்களுக்கும், குளிருக்கும் தோதாக இந்த மரணங்களை அங்கு போகாத அரசு மருத்துவர்கள் தீர்மானிக்கிறார்கள். பிரிவினைக் கால இந்தியாவின் துயரத்தை போலவே ஒரு காட்டுமிராண்டித்தனமான உலகத்திற்குள் ஜாட்டுகளின் மகா பஞ்சாயத்து தேசத்தை இழுக்கிறது. ஜனநாயக சக்திகள் அனைவரும் இதற்கெதிராக போராடியாக வேண்டும் என்பது வரலாற்றுக் கடமை.

–    வசந்தன்

மேலும் படிக்க

படங்கள் : நன்றி இந்தியன் எக்ஸ்பிரஸ்

சந்தா