குழந்தைகளை அடித்து வளர்ப்பது குறித்த இருவேறு கருத்துக்கள் ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் இருக்கின்றன. ஆனால் யதார்த்தத்தில் ஆகப்பெரும்பான்மையோரால் அடிக்காமல் பிள்ளைகளை வளர்க்க முடிவதில்லை. பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது சட்டபூர்வமாக தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் என் அறிவுக்கு எட்டியவரை எல்லா பள்ளிகளிலும் ஆசிரியர்கள் குழந்தைகளை அடிக்கும் வழக்கம் இருக்கிறது. (அதி மேட்டுக்குடி பள்ளிகளில் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்) வீடுகளிலும் இதே நிலைதான்.
இன்றைய பெற்றோர்கள் பலரும் அடிவாங்கி வளர்ந்தவர்கள். அடிக்காமல் வளர்க்க வேண்டும் எனும் உன்னத நிலைக்கும் அடிக்காமல் வளர்க்கத் தெரியாத யதார்த்த நிலைக்கும் இடையே இன்றைய பெற்றோர்கள் அல்லாடுகிறார்கள். ஆகவே அவர்களில் பலர் ஒரு புதிய நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறார்கள் ”பிள்ளைகளை வேறு யாரும் அடிக்கக்கூடாது” என்பதுதான் அது. இப்படியான குழப்பங்கள் ஆசிரியர்களிடம் இல்லை. அடிக்கக்கூடாதுங்கறது கருத்தளவில் சரிதான், ஆனால் இன்றைய பிள்ளைகளை அடிக்காமல் திருத்த முடியாது எனும் தீர்மானத்தில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். பள்ளிகளில் தண்டனை கடுமையாக இருந்த காலத்தில் கல்வித் தரம் சிறப்பாக இருந்ததாக அவர்கள் தீர்மானமாக நம்புகிறார்கள்.
இப்போது பிள்ளைகள் வீட்டில் அடிவாங்குவது பிரச்சினையாவதில்லை, ஆசிரியர்கள் அடிப்பதில்தான் பல சிக்கல்கள் வருகிறது. மாணவனை அடித்து மெமோ வாங்கிய ஆசிரியர்களை பார்த்திருக்கிறேன். ஒரு காவல்துறை அதிகாரி தன் மகனை அடித்து தண்டித்த ஆசிரியரை அடிக்க பள்ளி வாசலில் அடியாட்களை நிறுத்திய சம்பவத்தை கேட்டிருக்கிறேன். பத்து வயது சிறுமி தன்னை அடித்த ஆசிரியருக்கு பாடம் கற்பிக்க கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டைவிட்டு ஓடியிருக்கிறார் (நான் காணாமல் போக போகிறேன். என்னை $%@ மிஸ் திட்டிவிட்டார் – இதுதான் கடிதம்). கடுமையாக அடித்துவிட்டு அறைக்கு வந்த பின் பயந்து புலம்பிய ஆசிரியர்களை பார்த்ததுண்டு (இனிமே எதுவும் பண்ணக்கூடாது சார். யாரு எக்கேடு கெட்டா என்னன்னு இருக்கணும்).
இதைத்தவிர வேறு பல சிக்கல்களும் வருகின்றன. அடிக்கு மட்டுமே அடங்கிப் பழகிய மாணவர்கள் பூஞ்சையான, அடிக்க யோசிக்கும் ஆசிரியர்கள் வரும்போது கட்டுப்பாடற்று குறும்பு செய்கிறார்கள். அடித்தால்தான் இங்கே குப்பை கொட்ட முடியும் எனும் எண்ணத்தை அது வலுப்படுத்துகிறது. அடி வாங்க துணிந்துவிட்ட மாணவர்களை கட்டுப்படுத்த எந்த டெக்னிக்கும் பள்ளிகளில் இல்லை. ஆரம்பப்பள்ளியில் அடித்து மாணவர்களை கட்டுப்படுத்துவது எளிதாக இருக்கிறது. அதே மாணவர்கள் மேல் வகுப்புக்களுக்கு வரும்போது அடிப்பது பெருமளவு உதவுவதில்லை.
குழந்தைகளை அடிப்பது எனும் செயலை மூன்று வேறுபட்ட கோணங்களில் நம்மால் விவாதிக்க இயலும்.
• உடல்ரீதியாக தண்டிப்பதை ஏன் நம்மால் தவிர்க்க முடியவில்லை?
• அடிக்காமல் வளர்ப்பது சாத்தியமா?
• அடித்து வளர்ப்பதன் பின்விளைவுகள் என்ன?
உடல்ரீதியான தண்டனைகளே பிள்ளைகளை திருத்தும் எனும் அழுத்தமான நம்பிக்கை நம் சமூகத்தில் இருந்தது. ஆகவே அதனை எந்த குற்ற உணர்வும் இன்றி நாம் செய்து வந்திருக்கிறோம். இப்போது அது தவறோ எனும் சந்தேகம் பரவலாக எழுந்திருக்கிறது. இவை அறிவியல்பூர்வமான தரவுகளை மட்டுமே வைத்து எழுபவை அல்ல. குடும்பத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை ஒன்று அல்லது இரண்டாக சுருங்கியிருக்கிறது. அவர்கள் மீது செய்யப்படும் முதலீடு கணிசமாக உயர்ந்திருக்கிறது. அதீத எதிர்பார்ப்பு மற்றும் அதீத பயம் ஆகியவை மிகை முதலீட்டின் தவிர்க்க முடியாத பக்கவிளைவுகள். பிள்ளைகளை அடிப்பதால் எதிர்பார்த்தது கிடைக்காமல் போய்விடுமோ அல்லது முதலீட்டுக்கு சேதம் வந்துவிடுமோ எனும் அச்சம் வருகிறது (அடிச்சு ஏதாவது ஆயிடுச்சுன்னா? அடிச்சதால கோபப்பட்டு ஏதாவது பண்ணிக்கிட்டான்னா?). கூடுதலாக, அடிப்பது நல்லதல்ல எனும் செய்தியும் அவர்களை அரைகுறையாகவேனும் வந்தடைகிறது.
மிகை முதலீடு, மிகை எதிர்பார்ப்பு ஆகியவை பெற்றோருக்கு கடுமையான பதட்டத்தை உருவாக்குகிறது. முன்பிருந்த இணக்கமான சமூக சூழல் இன்று இல்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்புகூட குழந்தைகள் தெருவில் அதிக நேரம் விளையாடவும் அருகே வசிக்கும் குடும்பத்தவரால் பார்த்துக்கொள்ளப்படவுமான சூழல் இருந்தது. இப்போது பார்த்துக்கொள்வது என்பது முற்று முழுதாக பெற்றோர்களின் சுமை. தெருக்கள் விளையாட உகந்ததாக இல்லாத பாதுகாப்பற்ற இடமாகியிருக்கிறது. ஆகவே சிறார்கள் தமது குறும்பை முழுமையாக வீட்டுக்குள்ளேயே காட்டவேண்டிய நிலை உருவாகிறது. இவை எல்லாம் சேர்ந்து பெற்றோரின் மன அழுத்தத்தை உச்சத்துக்கு கொண்டு செல்கின்றன.
பிள்ளைகள் வீட்டில் அடிவாங்குவது பிரச்சினையாவதில்லை, ஆசிரியர்கள் அடிப்பதில்தான் பல சிக்கல்கள் வருகிறது. மாணவனை அடித்து மெமோ வாங்கிய ஆசிரியர்களை பார்த்திருக்கிறேன். ஒரு காவல்துறை அதிகாரி தன் மகனை அடித்து தண்டித்த ஆசிரியரை அடிக்க பள்ளி வாசலில் அடியாட்களை நிறுத்திய சம்பவத்தை கேட்டிருக்கிறேன்.
இத்தகைய பெற்றோர்கள் மிக சுலபத்தில் கோபப்பட்டு குழந்தைகளை அடிக்கிறார்கள் (காரணம் அவர்கள்தான் எளிய இலக்கு). மிகச்சிறு வயதிலேயே உடல்ரீதியாக தண்டிக்கப்படுவதால் அடிவாங்கினால் மட்டுமே கட்டுக்குள் வரும் பிள்ளைகளை கணிசமாக உருவாக்கி பள்ளிக்கு அனுப்புகிறது நமது சமூகம். இப்படியான பிள்ளைகளை கட்டுப்படுத்த எல்.கே.ஜி. ஆசிரியருக்கு மாற்று வழிகள் இல்லை. ஒருவேளை அவர் மிகைக் குறும்பு குழந்தைகளை மன்னித்து அவகாசம் கொடுத்து திருத்த முற்பட்டால், அந்த குழந்தைகளால் பாதிக்கப்படும் மாணவர்களின் பெற்றோர்கள் அந்த ஆசிரியரை தொலைத்துவிடுவார்கள் (மற்ற பிள்ளைகளை முரட்டுத்தனமாக அடிக்கின்ற குழந்தைகள் எல்லா பள்ளிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். யாராவது அடித்தால் நீயும் திருப்பி அடி என பெற்றோர் சொல்லிக்கொடுப்பதால் ஆரம்ப வகுப்புக்களிலேயே சண்டைகள் தீவிரமாகிறது என்கிறார் 21 ஆண்டுகளாக கேஜி வகுப்புகளைக் கையாளும் மூத்த ஆசிரியர் ஒருவர்).
முன்பு குறிப்பிட்ட கடுமையான புறச்சூழல் பெற்றோருக்கு மட்டுமானதல்ல, ஆசிரியர்களும் அவ்வாறான நிலையில்தான் வாழ்கிறார்கள். ஆகவே அவர்களும் நிதானமாக நிர்வகிக்க முடியாதவர்களாகி குழந்தைகளை அடித்து மட்டுமே கையாளும் நிலைக்கு செல்கிறார்கள்.
இதன் விளைவுகள் பலவும் மோசமானவை. முதலில் மாணவர்களை கட்டுப்படுத்துவது ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டைக் காட்டிலும் சிக்கலாகிக்கொண்டே வருகிறது. ஒரு ஆசிரியரின் கண்காணிப்பு இல்லா நிலையில் வகுப்பறைகள் எந்த அசம்பாவிதமும் நிகழலாம் எனும் அளவுக்கு செல்கிறது. ஓடி விளையாடி காயமடைவது, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வது என்பது மட்டுமின்றி இதில் பங்கேற்காத மாணவர்களும் காயமடைவது நடக்கிறது. ஆரம்ப வகுப்புக்களில் முரட்டுக்குழந்தைகள் எண்ணிக்கை அதிகம். அவர்களை அடித்து ஒழுங்குபடுத்துவது எனும் தற்காலிக தீர்வை ஆசிரியர்கள் கைக்கொள்ளும்போது அவர் தன்னை அறியாமல் மேல் வகுப்புகளின் சூழலை மோசமாக்குகிறார்.
அடிப்பதன் மூலம் நம்மால் பிரச்சினையை ஒத்தி வைக்க மட்டுமே முடியும். அந்த கால இடைவெளியில் அப்பிரச்சினை தீவிரமாகிவிடுகிறது. சகிக்க முடியாத அளவுக்கு குறும்பு (அல்லது வேறு சேட்டைகள்) செய்யும் மாணவர்கள் வீட்டிலும் பள்ளியிலும் நிறைய தண்டனை பெறுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், அப்படி அடிவாங்கி திருந்திய மாணவர்கள் யாரையும் நான் பார்த்ததில்லை. அப்படி யாரையேனும் பார்த்தவர்களையும் நான் பார்த்ததில்லை.
மேல் வகுப்புகளில் அடி வாங்க துணிந்துவிட்ட மாணவர்களை கட்டுப்படுத்த எந்த வழிகளும் இருப்பதில்லை. இன்னும் கடுமையாக அடிப்பது மற்றும் பெற்றோர்களை வரவழைத்து எச்சரிப்பது இதுமட்டுமே மேல்/உயர் நிலை வகுப்புக்களில் உள்ள வாய்ப்பு. சமயங்களில் மாணவர்களுக்கு இடையேயான சண்டை பெற்றோர்கள் இடையேயான சண்டையாக மாறுகிறது. பள்ளிகளில் ஆய்வுகள் நடத்தும் மாணவர்கள் மற்றும் ஆற்றுப்படுத்துனர்கள் தங்களால் வகுப்புகளை கையாளவே முடிவதில்லை என குற்றம்சாட்டுகிறார்கள். ஒரு ஆண் உடற்கல்வி ஆசிரியர் இல்லாமல் இத்தகைய வேலைகளை எந்த வகைப் பள்ளிகளிலும் செய்ய முடிவதில்லை என்பதே கள நிலவரம்.
படிக்க:
♦ மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் ! சமூக அக்கறையை வளர்க்கும் முயற்சி இது !!
♦ கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் திருச்சி மாநாடு | பிப் 23
இவையெல்லாம் கண்ணுக்கு தெரிந்த பின்விளைவுகள். இன்னொரு விளைவு இன்னும் ஆபத்தானது. அடிக்கு பயப்படாத மாணவர்கள் ஆசிரியரை ஒரு கையறு நிலைக்கு தள்ளுகிறார்கள். அப்போது அந்த மாணவர்கள் ஆசியரை வென்றுவிட்டதாக நினைத்துக்கொள்கிறார்கள். பிறகு அந்த வெற்றியின் சுவையை அனுபவிப்பதற்காகவே மேலும் மேலும் குறும்பு செய்கிறார்கள். சக மாணவர்களிடம் ”கெத்து” காட்டுவதற்காகவே ஆசிரியரை எரிச்சலுக்கு உள்ளாக்கும் மாணவர்கள் பலர் உண்டு. பாடத்தை கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்த மாணவனை ஆசிரியர் ஒருவர் ‘’இங்க வாடா’’ என அழைத்தபோது “என் மேல கைவச்சா காலி” எனும் சினிமா பாட்டை பாடிக்கொண்டு வந்திருக்கிறார். “என்ன சொன்னே?” என கேட்டபோது “சும்மா பாடினேன் சார்” என பதில் சொல்லியிருக்கிறார். இதெல்லாம் அடித்தாலும் பரவாயில்லை எனும் தயாரிப்போடு செய்யப்படும் ஹீரோயிசம். இப்படியான மாணவர்களிடம் இயல்பாகவே ஒரு குழு சேர்ந்துகொள்கிறது. இவர்கள் மற்ற மாணவர்களுக்கும் இடையூறாக இருப்பதால் வகுப்பறைக்குள்ளும் பூசல்கள் முளைக்கின்றன.
போய்த் தொலைங்க சனியனுங்களே எனும் விரக்தி நிலைக்கு ஆசிரியர்கள் செல்லும்போது அது கற்கும் ஆர்வமுள்ள மாணவர்களையும் பாதிக்கின்றது. கற்பிக்கும் சூழலை கொண்டுவருவதற்காக அதிகம் மெனக்கெட வேண்டியிருப்பதால் பாடத்திற்கான அவகாசம் குறைகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது சராசரி மாணவர்கள்தான். அவர்களால் இந்த சேட்டைக்கார கும்பலிலும் சேர முடியாது; விரைவாக நடத்தப்படும் பாடங்களும் புரியாது. ஒரு வகுப்பறை எல்லா தரப்பு மாணவர்களையும் உள்ளடக்கியது. ஆனால் இப்படி அடிவாங்க துணிந்த கட்டுப்படாத மாணவர்கள் மூலம் வகுப்பறையின் சமநிலை குலைகிறது. இத்தகைய மாணவர்களையே பள்ளிகள் அதிகமாக ஆற்றுப்படுத்துனரிடம் அனுப்புகின்றன. நானறிந்தவரை எந்த ஆற்றுப்படுத்துனரும் இப்படியான மாணவர்களிடம் நேர்மறையான மாற்றத்தை கொண்டுவர முடிந்ததாக சொல்லவில்லை.
அடிப்பதை சட்டபூர்வமாக தடுத்து அதனை கடுமையாக பின்பற்றினால் என்ன நடக்கும்?
அப்படி பின்பற்றப்படும் இடங்களில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொண்டால் இது உருப்படியான யோசனையா எனும் முடிவுக்கு வரலாம். மூன்றாண்டுகளுக்கு முன்பு அடிக்கவே அடிக்காத பள்ளி என அறியப்பட்ட பிரீமியம் பள்ளியொன்றில் இப்போது அந்த ”சட்டம்” பயன்பாட்டில் இல்லை. அதில் கறாராக இருக்கும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நிலைப்பதில்லை. அதி மேட்டுக்குடி பள்ளிகளில் ஆசிரியர்கள் கண்டும் காணாமல் போகும் வாய்ப்பை தெரிவு செய்கிறார்கள். அப்படியான பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர் வகுப்புப் பாடங்களை எழுதாத மாணவர்களின் நோட்டை வீட்டுக்கு எடுத்துசென்று அவரே எழுதிக்கொண்டு வருகிறார். அடித்து கண்டிக்க முடியவில்லை பள்ளிக்கும் பதில் சொல்ல வேண்டும் எனும் நிலையில் அவருக்கு இந்த வாய்ப்பு மட்டுமே மிச்சமாக இருக்கிறது. மிக ஆபாசமான கமெண்ட்டுகளை கேட்டுவிட்டு அதை கவனிக்காததுபோல சென்றுவிடுகிறோம் என சில ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள் (இந்த நிலை எலீட் பள்ளிகளில் மட்டுமல்ல, சமீபத்தில் வெளியான அரசுப்பள்ளி மாணவர்களின் டிக்டாக் வீடியோ ஒன்று அவர்கள் ஆசிரியர் வகுப்பில் இருக்கையிலேயே அவரை சுற்றி ஆடிப்பாடுவதை காட்டியது. அப்போதும் ஆசிரியர் அமைதியாக அவர் வேலையை பார்க்கிறார்).
இத்தகைய அதி மேட்டுக்குடி பள்ளிகளில் உள்ள மிகைக் குறும்பு மற்றும் மோசமான நடத்தை கொண்ட மாணவர்களால் பாதிக்கப்படும் மாணவர்களை பாதுகாக்க உருப்படியான எந்த வழியும் இல்லை. அப்படியான பள்ளி ஒன்றில் இருந்து “நல்லா அடிக்கிற” பள்ளியை தேடி வந்து சேர்ந்த மாணவரை சில மாதங்களுக்கு முன்பு சந்தித்தேன். இப்போதான் பயமில்லாம பள்ளிக்கு வருகிறேன் என மகிழ்கிறார் அவர் (கெடுவினையாக அங்கேயும் அவர் மகிழ்ச்சி நீடிப்பதற்கான வாய்ப்பு அடுத்தடுத்த ஆண்டுகளில் குறைவு).
அடிக்கு பயப்படாத மாணவர்கள் ஆசிரியரை ஒரு கையறு நிலைக்கு தள்ளுகிறார்கள். அப்போது அந்த மாணவர்கள் ஆசியரை வென்றுவிட்டதாக நினைத்துக்கொள்கிறார்கள். பிறகு அந்த வெற்றியின் சுவையை அனுபவிப்பதற்காகவே மேலும் மேலும் குறும்பு செய்கிறார்கள்.
மாணவர்கள் அளவுக்கு மீறி குறும்பு செய்வது, விரும்பத்தகாத நடத்தைகள் மற்றும் உடல்ரீதியாக தண்டிப்பது ஆகியவை பல்வேறு காரணிகள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் விளைவுகள். அதனை ஒற்றைப் பிரச்சினையாக கருதுவதே அறிவீனம். அதனை ஒற்றை சட்டத்தின் மூலம் களைய முனைவது இன்னும் கோமாளித்தனமான முடிவு. மாணவர்கள் தொடர்பான எந்த ஒரு முடிவும் பல்வேறு தரப்பினரின் பங்கேற்புடனான விவாதங்களுக்கும் ஆய்வுகளுக்கும் பிறகே செய்யப்பட வேண்டும். தான்தோன்றித்தனமான முடிவுக்குப்பிறகான கடும் உழைப்புகூட சொதப்பும் என்பதற்கு நமது 11-ம் வகுப்பு புதிய பாடங்கள் ஒரு உதாரணம்.
நீட்டை மனதில் வைத்து பாடங்கள் கடுமையானதாக மாற்றப்பட்டிருக்கிறது. (உயிரியல் பாடம் மொத்தமாக ஆயிரத்து சொச்சம் பக்கங்கள், இயற்பியலில் வாக்கியங்கள் குறைக்கப்பட்டு சமன்பாடுகளும் கணக்கீடுகளும் மிகுந்திருக்கின்றன). ஆனால் அதே நீட் கணிதம் – உயிரியல் – வேதியியல் பாடப் பிரிவின் டிமாண்டை குறைத்திருக்கிறது (சேர்க்கையில் ஏறத்தாழ 30 சதம் வீழ்ச்சி). அக்கவுண்டன்சி, காமர்ஸ் போன்ற பிரிவுகளுக்கு அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் செல்வதால், மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள் முதல் குரூப்பை நாடுகிறார்கள். அதாவது நன்றாக படிப்பவர்களுக்கு ஒப்பீட்டளவில் எளிய பாடமும் சுமாராக படிப்பவர்களுக்கு மிகக்கடுமையான பாடச்சுமையும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முரண்பாட்டால் ஆசிரியர் மாணவர் என இரு தரப்பும் தண்டனை அனுபவிக்கின்றன. போன ஆண்டு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த சிக்கல் பூதாகரமாக வெளிப்படும் வாய்ப்பு இருந்தது. ஆனால், மதிப்பெண் தாராளமாக வழங்கப்பட்டு நிலைமை தற்காலிகமாக சமாளிக்கப்பட்டது. இந்த வருடம் +2 தேர்வுகள் நியாயமாக மதிப்பிடப்பட்டால் கணிதம் & அறிவியல் பிரிவில் 60% தேர்ச்சியே அதிகம்.
இப்படித்தான் கல்வி சார்ந்த பல மாற்றங்கள் பயன்பாட்டுக்கு ஆகாததாக செயல்படுத்தப்படுகின்றன. மாணவர்களை அடிக்காமல் வளர்ப்பது என்பது இன்றைய பள்ளிச் சூழலில் சாத்தியமே இல்லாதது. காரணம் அதில் பெற்றோர், அரசு, பள்ளி என பல தரப்பும் சம்மந்தப்பட்டிருக்கிறது. ஒரு சமூகமாக நமது நம்பிக்கை, பழக்கம், அறஉணர்வு ஆகியவற்றுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்கிருக்கிறது. இவை எது குறித்தும் கவலைப்படாமல் அதனை ஒரு ஆசிரியரின் கடமை என தள்ளிவிட்டால் நம்மால் ஒருபோதும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. மாறாக அதன் மூலம் உங்கள் பிள்ளைகளின் கல்விச்சூழலை நீங்கள் இன்னும் மோசமாக்குவீர்கள்.
பின்குறிப்பு : ஒரு ஆற்றுப்படுத்துனராக எனது பணி அனுபவத்தின் மூலமும் ஏனைய ஆற்றுப்படுத்துனர்கள் பகிர்ந்தவற்றின் மூலமும் எழுதப்பட்ட கருத்துக்கள் இவை. பெருமளவு மத்திய மற்றும் உயர்மத்தியதர வர்க்க பிள்ளைகள் உள்ள பள்ளிகளின் சூழலில் இருந்து பெறப்பட்ட தரவுகளே இதன் அடிப்படை. வேறு வகையான பள்ளிகளில் சூழல் வேறாக இருக்கலாம். அங்கிருக்கும் சிக்கல்கள் மற்றும் அதற்கான பரிந்துரைகள் முற்றிலும் வேறாக இருக்கலாம். எல்லா இடங்களுக்கும் பொருந்தக்கூடிய சில ஆலோசனைகளும் (பெற்றோர்கள் – ஆசிரியர்களுக்கானவை) இருக்கின்றன. ஆனால், அதற்கு கல்விப் புலத்தில் இருக்கும் ஏனைய பிரச்சினைகளை ஓரளவுக்கு புரிந்துகொள்வது அவசியம். அடுத்தடுத்த பதிவுகளில் அவற்றை பார்த்துவிட்டு இதற்கு நாம் என்ன செய்யலாம் எனும் பரிந்துரைகளை விவாதிக்கலாம்.
வில்லவன்
அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.
சிறப்பான கட்டுரை. மிகுந்த சமநிலையில் எழுதப்பட்ட கட்டுரை. தன் தொழில் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரை. வாழ்த்துக்கள். அடுத்த பகுதிகளை விரைவில் வெளியிடவும்
this is one of the best informative articles i read in recent periods
தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இதன் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் கொத்தடிமைகளாக தொடரும் நிலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வரிந்துகட்டிக்கொண்டு அவர்களின் அநியாயமான கோரிக்கைகளுக்கு ஒத்தூதும் கட்டுரைகளை வெளியிடும் நீங்கள் ஏன் தனியார் கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்களை கண்டுகொள்வதில்லை. தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் கருணாநிதி கட்சிக்கு வேண்டப்பட்டவர்களால் நடத்தப்படுகின்றன என்பதால் தானா?
இக்கட்டுரை என் மனபாரத்தை மிகவும குறைத்தது. //அடிக்காமல் வளர்க்க வேண்டும் எனும் உன்னத நிலைக்கும் அடிக்காமல் வளர்க்கத் தெரியாத யதார்த்த நிலைக்கும் இடையே இன்றைய பெற்றோர்கள் அல்லாடுகிறார்கள.// இது சத்திய வாக்கு. குழந்தையை அடித்துவிட்டு அழும் அம்மா நான்.