நிரந்தரப் பணி கோரும் தற்காலிக – பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம், சம வேலைக்கு சம ஊதியம் கோரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம், ஆசிரியர் – விரிவுரையாளர் பணி உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் போராட்டம், நீட் எதிர்ப்பு – அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கக் கோரும் அமைப்புகளின் போராட்டங்கள் மற்றும் கூட்டங்கள் என கல்வித்துறை சார்ந்த போராட்டங்களும், நடவடிக்கைகளும் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் அதிகரித்து வருகின்றன. இன்னொருபுறத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்ந்து ஏராளமான அறிவிப்புகளும், திட்டங்களும் அரசு சார்பில் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் கூட, தமிழ்நாட்டிலேயே அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஷிவ் நாடார் குழுமம், ஒவ்வொரு ஆண்டும் பின்தங்கிய ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 200 மாணவர்களை இலவசமாகப் படிக்க வைப்பதாக தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இம்மாதிரியான அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தங்கள், திட்டங்களின் நோக்கம் என்ன? இந்தியக் கல்வித்துறை சந்திக்கும் சவால்களின் ஆணிவேர் எது? என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடை காணாமல், தமது கோரிக்கைகளுக்காகப் போராடுவோர் தீர்வை நோக்கி முன்னேற முடியாது. பிரச்சினைகளின் வெளிப்பாடுகளை மட்டும் எதிர்த்து போராடாமல் அதற்கு பின்னால் இருக்கும் காரணத்தை உணர்ந்து போராட்டத்தை முன்னெடுக்கும் போதுதான் உண்மையான தீர்வை நோக்கி நகர முடியும்.

கல்வித்துறை மீதான மோடி அரசின் தாக்குதல்கள்!

ஒன்றியத்தில் பாசிச மோடி கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த பத்தாண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு கல்வியிலும், கல்விசார் நிறுவனங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒருபுறம் தனியார்மயத்தின் உச்சமாகிய கார்ப்பரேட்மயம்; மறுபுறம் ஆர்.எஸ்.எஸ்-இன் மூர்க்கமான காவிமயம் என இரண்டும் ஒருசேர கல்வியில் திணிக்கப்பட்டு வருகிறது. சாராம்சத்தில் இவ்விரண்டுமே, கல்வியை சாதாரண உழைக்கும் மக்களிடமிருந்து விலக்கி, பணம் காய்க்கும் கருவியாகவும் குறிப்பிட்ட சாதி – பணக்காரப் பிரிவினருக்கானதாகவும் மாற்றும் நோக்கம் கொண்டவை.

மோடி அரசு கொண்டு வந்திருக்கும் தேசிய கல்விக் கொள்கை-2020, பள்ளிக்கல்வி முதல் பல்கலைக்கழக ஆய்வுப் படிப்பு வரை அனைத்தையும் காவி – கார்ப்பரேட்  நலனிற்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கான நடைமுறைத் திட்டங்களை முன்வைக்கிறது. 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு; இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு; அனைத்து வகை உயர்கல்விக்கும் நீட், கியூட் போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகள்; அரசுக் கல்வி நிறுவனங்களைத் தன்னாட்சி அதிகாரம் கொண்டவையாக மாற்றி அரசு நிதியளிப்பை நிறுத்துவது; பல்கலைக்கழக மானியக் குழுவைக் (யு.ஜி.சி.) கலைத்துவிட்டு உயர்கல்வி ஆணையத்தை உருவாக்குவது; வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் நுழைய அனுமதி; இணையவழிக் கல்வியைக் கட்டாயமாக்குவதன் மூலம் கார்ப்பரேட் – டிஜிட்டல் ஆதிக்கம்; பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட அம்சங்களைக் கற்றுத்தர என்.ஜி.ஓ., தன்னார்வலர்கள் என்ற பெயரில் காவிக் கும்பலை உள்நுழைப்பது; சிறுபான்மையின மாணவர்களின் கல்வி உதவித்தொகையை ஒழிப்பது; முற்போக்குக் கருத்துகளைப் பேசும் ஆசிரியர்கள் – மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி. குண்டர்கள் மூலம் தாக்குதல் நடத்துவது, துறைசார் நடவடிக்கை எடுப்பது; பாடத் திட்டங்களில் வரலாற்றைத் திரிப்பது, அறிவியல் கருத்துகளை நீக்குவது, புராண – இதிகாசப் புளுகுகளைச் சேர்ப்பது; கல்வித்துறை செயலர்கள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் என அனைத்து உயர்பதவிகளிலும் ஆர்.எஸ்.எஸ். அடியாட்களை நியமிப்பது என கல்வித்துறையில் கார்ப்பரேட்-காவிமய நடவடிக்கைகள் தினசரி நிகழ்வுகளாகிவிட்டன. ஏற்கெனவே இருந்துவந்த கல்விசார் நடவடிக்கைகள், நிறுவனங்கள் அனைத்தையும் காவி – கார்ப்பரேட்மயத்திற்கேற்ப மறுஒழுங்கமைப்பு – மறுகட்டமைப்பு செய்வதைத் தீவிரமாக்கி வருகிறது மோடி கும்பல்.

திமுக அரசின் ‘மாநிலக் கல்விக்கொள்கை’

மோடி அரசின் இத்தாக்குதல்களை நாடெங்கிலும் உள்ள ஜனநாயக – முற்போக்கு சக்திகள் தொடர்ந்து எதிர்த்து வந்தாலும், போராட்டக்களத்தில் தமிழ்நாடு முன்னோடியாக இருந்து வருகிறது. இந்த பின்னணியில் இருந்துதான் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், தேசிய கல்விக் கொள்கையை நிராகரித்து தமிழ்நாட்டிற்கென தனியாக மாநிலக் கல்விக்கொள்கை வகுக்கப்படும் என்று அறிவித்தது. ஆட்சிக்கு வந்த பின்னர், மாநிலக் கல்விக்கொள்கை வகுப்பதற்கான குழுவையும் அமைத்தது. ஆனால், “தேசிய கல்விக்கொள்கையின் ‘சரியான’ அம்சங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்” என்பதே அதன் உள்ளடக்கமாக இருந்தது. இதனை அம்பலப்படுத்திதான் மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த பேரா.ஜவஹர்நேசன் அக்குழுவிலிருந்து வெளியேறினார்.

“தேசியக் கல்விக்கொள்கை 2020-இன் அடியைப் பின்பற்றி மாநிலக் கல்விக்கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. எனவே, இந்த உயர்நிலைக் குழு உருவாக்கும் மாநிலக் கல்விக்கொள்கை பெயரில் மட்டும் மாற்றம் கொண்ட, தனியார்மய, வணிகமய, கார்ப்பரேட், சந்தை, சனாதன சக்திகளின் நலன்களைக் கொண்டிருக்கின்ற தேசியக் கல்விக்கொள்கை 2020-இன் மற்றொரு வடிவமாகவே இருக்கும்” என்று குற்றச்சாட்டை முன்வைத்தார்.


படிக்க: கல்வித்துறையில் கார்ப்பரேட் ஆதிக்கம்! | பேராசிரியர் வீ.அரசு


இந்தக் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு அரசு பதிலேதும் சொல்லாமல் கள்ளமௌனம் சாதித்தது. மாநிலக் கல்விக்கொள்கையை வகுக்கும் குழுவின் தலைவரோ, “இதெல்லாம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்” என புறங்கையால் தள்ளிவிட்டு கடந்து சென்றார். மேலும், கடந்தாண்டு அக்டோபர் மாதத்திலேயே, இன்னும் ஒரு வாரத்தில் மாநில கல்விக்கொள்கையின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில் இன்றுவரை அதன் நிலை என்னவென அறிய முடியவில்லை.

இதற்கிடையே, மாநிலத்திற்கென புதிதாக கல்விக்கொள்கை வகுக்கப்படும் என சொல்லிக் கொண்டே, இடைப்பட்ட காலத்தில் தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்திவரும் அனைத்து திட்டங்களும் தேசிய கல்விக்கொள்கையை அடியொற்றிய திட்டங்களாகவே உள்ளன. தமிழில் பெயர் வைத்துக் கொள்வதால் மட்டும் உள்ளடக்கம் மாறிவிடுமா என்ன?

கார்ப்பரேட்மயம் – கல்வித்துறை மறுகட்டமைப்பு

தி.மு.க. அரசின் நடவடிக்கைகளை கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக கல்வியில் நடைமுறைப்படுத்தப்படும் வழக்கமான தனியார்மய நடவடிக்கையாக மட்டும் பார்க்கக் கூடாது, இவை தற்காலத்திய நவீன வடிவத்திலான கார்ப்பரேட்மய நடவடிக்கைகள் ஆகும்.

1980-களின் இறுதியில் எம்.ஜி.ஆர். ஆட்சியின் இறுதிக்காலத்தில் துவங்கிய கல்வி தனியார்மயமானது, அரசு கல்வி நிறுவனங்களுக்கு இணையாக தனியார் மழலையர் பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை துவங்குவது, தனியார் கல்லூரிகள் துவங்குவது என்ற வகையில் இருந்தது. இது கல்வி தனியார்மயத்தின் முதல் கட்டமாக அமைந்தது.

2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு சி.பி.எஸ்.இ. எனப்படும் ஒன்றிய அரசின் பாடத்திட்டம், ஐ.சி.எஸ்.இ. எனப்படும் பன்னாட்டு பாடத்திட்டம் ஆகியவற்றைக் கற்பிக்கும் உண்டு உறைவிடப் பள்ளிகள் (இவை பெரும்பாலும் சங்கிலித் தொடர் நிறுவனங்கள் போல அமைந்தன) தொடங்கப்பட்டன. தனியார் கல்லூரிகளின் வளர்ச்சிப்போக்கில், பாடத்திட்டங்களைத் தாங்களே தீர்மானித்துக்கொள்ளும், வெளிநாட்டுக் கல்வி  நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போட்டுக்கொள்ளும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் நடைமுறைக்கு வந்தன. இது கல்வி தனியார்மயத்தின் இரண்டாவது கட்டமாகும்.

தற்போதைய கட்டத்தில், மேற்சொன்ன எல்லா நிறுவனங்களையும் உள்ளடக்கிய, அரசுக் கல்வி நிறுவனங்களையும் தின்று செரிக்கக்கூடிய கார்ப்பரேட்மயம் நடைமுறைக்கு வந்துள்ளது. கல்வியில் ஒவ்வொரு துறையையும் தனித்தனியே பிரித்து தனிச்சிறப்புமயமாக்கல், மையப்படுத்துதல், டிஜிட்டல்மயமாக்கல், கார்ப்பரேட்மயமாக்கல் என்ற வகையில் இந்த மறுகட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கூடுதலாக, வட இந்தியாவில், காவிகளின் நலனுக்கேற்ற வகையில் இந்த மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.


படிக்க: அநீதிக்கு எதிராகப் போராடவேண்டும் என்ற உணர்வை கொடுக்கும் கல்வி! | பேராசிரியர் ப.சிவக்குமார்


கடந்த இரண்டாண்டுகளாக தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வரும் வானவில் மன்றம், நம்ம ஸ்கூல் பவுண்டேசன், இல்லம் தேடிக் கல்வி, எமிஸ் பதிவேடு, எண்ணும் எழுத்தும், சிற்பி திட்டம், நான் முதல்வன் திட்டம், பொதுப்பாடத்திட்டம், பொது வினாத்தாள் முறை போன்றவற்றின் உள்ளடக்கம் மேற்சொன்ன வகையிலான கார்ப்பரேட்மயமே.

கற்பித்தலை பல்வேறு பிரிவுகளாக பிரிப்பது, இல்லம் தேடிக்கல்வி திட்டம், வானவில் மன்றம், இணையவழிக் கல்வி மூலம் மாணவர்களை வழக்கமான பாடத்திட்டம் மற்றும் வகுப்பறை முறைக்கு வெளியே கொண்டு செல்வது, அதனை மையப்படுத்துவது, பிறகு கார்ப்பரேட் நிறுவனங்களை அதில் நுழைப்பது என்பதே தனிச்சிறப்புமயமாக்கல், மையப்படுத்துதல், கார்ப்பரேட்மயமாக்கலின் நிகழ்ச்சிப்போக்காகும். இவற்றில் என்.ஜி.ஓ-க்களும், கார்ப்பரேட் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் பங்கெடுக்கின்றன. இதுமட்டுமின்றி, அனைத்து கற்றல் – கற்பித்தல், இதர பல நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக டிஜிட்டல் தளங்களில் பதியப்பட்டு, பிக் டேட்டா (Big Data) எனப்படும் பெரும் தரவுக்களஞ்சியம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், ஒட்டுமொத்த கல்வித்துறையின் நடவடிக்கைகளைப் பற்றிய தரவுகளையும் கார்ப்பரேட்டுகளால் எளிதாகப் பெற முடிகிறது. இதிலிருந்து, கார்ப்பரேட்டுகள் தமது அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்டுக் கொள்ள முடியும்.

இன்னொரு பக்கத்தில், பள்ளிக் கட்டடங்கள் பராமரிப்பு, துப்புரவுப் பணிகள், உணவு சமைத்தல், பாதுகாப்பு என கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தையே தனித்தனியே பிரிப்பது, அவற்றை மையப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் கீழ் கண்காணிப்பது, இப்பணிகளை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் என்ற பெயரில் இயங்கும் கார்ப்பரேட்டுகள் கட்டுப்பாட்டில் விட்டுவிடுவது என்ற போக்கும் தீவிரமடைந்து வருகிறது.

இதற்கு முன்பு, அரசு – தனியார் கூட்டுத்துவ அடிப்படையிலும், கார்ப்பரேட்டுகளின் விருப்பம் சார்ந்தும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி நிர்வாகங்களை, கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொள்ளும் திட்டம் நடைமுறையில் இருந்தது. இத்திட்டம், கார்ப்பரேட்டுகளுக்கு அவ்வளவாக இலாபம் தரவில்லை என்பதால், புதிய வேடம் பூண்டு வந்துள்ளதே தி.மு.க. அரசு அமல்படுத்தியுள்ள அரசு பள்ளிகளில்  கார்ப்பரேட்டுகளை உள்நுழைக்கும் நம்ம ஸ்கூல் திட்டமாகும். கல்வி வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகிக்கொள்வது என்ற காட்ஸ் (GATS) ஒப்பந்த அடிப்படையில்தான் இவையாவும் நடந்து வருகின்றன. ஆனால், காலத்திற்கேற்ப நடவடிக்கைகளின் பரிணாமம் மாறிக்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மனப்பாடக் கல்வியை பெருமளவு ஊக்குவித்த பாடத்திட்டத்தில் இருந்து சற்று மாறுபட்டதாக சமச்சீர் பாடத்திட்டமும், செயல்வழிக் கற்றலும் அமைந்தன. ஆனால், அது போதுமானதாக இல்லை. அதிலும் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தற்போது மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. இவ்வாறு பாடத்திட்டங்களுமே குழந்தைகளையும் அவர்களது உளவியல் புரிதலையும் மையப்படுத்தியதாக இல்லாமல், தொழிற்துறைக்குத் தேவையான திறன் சார்ந்தவையாக தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றன. மாணவர்களை சமூக மனிதர்களாக வளர்ப்பது, நன்னெறிப்படுத்துவதே கல்வியின் நோக்கம் என்றில்லாமல் புதிய பொருளாதார நிலைமைகளுக்கேற்ற நவீனக் கொத்தடிமைகளை உருவாக்குவதாக மாற்றப்பட்டுள்ளது.

இன்னொரு பக்கத்தில், மாணவர்கள் கூடிப் படிக்கும் – ஆசிரியர்கள் நேரடியாகக் கற்பிக்கும் வழமையான வகுப்பறை முறையை, இணைய வழிக் கற்றல் மூலம் பதிலீடு செய்வது என்ற போக்கு அதிகரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் வேறுவழியற்ற நிலையில் இணையவழிக் கற்றல் நடைமுறைக்கு வந்தது போலத் தோன்றினாலும், இது முற்றுமுழுதாக கார்ப்பரேட் – டிஜிட்டல் ஆதிக்கத்தின் இலக்கிலிருந்து செயல்படுத்தப்பட்டதே. இதற்கான சான்றுதான் யு.ஜி.சி. வழிகாட்டியுள்ள கலவைமுறைக் கற்றல் முறையாகும் (Blended Learning). கார்ப்பரேட் – டிஜிட்டல் ஆதிக்கம் அரசின் நோக்கமாக இல்லாவிட்டால், பல இலட்சம் பேர் ஆசிரியர், விரிவுரையாளர் பணிகளுக்குப் படித்துவிட்டு அற்பக்கூலிக்கு தனியார் கல்வி நிறுவனங்களிலும், சம்பந்தமில்லாத வேலைகளிலும் உழன்று கொண்டிருக்கும் ஒரு நாட்டில், கட்டாயமாக 40 சதவிகித பாடங்களை இணைய வழியில்தான் கற்பிக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? இவற்றின் பின்னே ஏகாதிபத்திய, டிஜிட்டல் கல்வி நிறுவனக் கொள்ளைதான் பிரதானமாக அடங்கியுள்ளது. இதற்கான சான்றுதான் பைஜூஸ்(Byjus) போன்ற கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின் அசுர வளர்ச்சியாகும்.

கல்வி கட்டமைப்பில் சிறுசிறு மாற்றங்களைத் தொடர்ந்து செய்துவருவதன் மூலம் ஒட்டுமொத்த கட்டமைப்பையே மாற்றுகின்ற வகையில்தான் ஒன்றிய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. புதிதாக உருவாக்கவிருக்கும் கட்டமைப்புக்கான கொள்கை, இலக்குகள் எதையும் வெளிப்படையாக அவர்கள் அறிவிப்பதில்லை. அவர்களின் பல்வேறு நடவடிக்கைகளில் இருந்து நாமே புரிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது. சான்றாக, ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை எதை நோக்கி இட்டுச் செல்கிறது என்பதுகூட ஓரளவு புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஆனால், மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் பூடகமானவையே. இவற்றின் பின்னே ஒளிந்திருக்கும் கொள்கை – இலக்குகளை அவ்வளவு எளிதாக நாம் அடையாளம் காண முடியாது.

தரப்படுத்தலா, இரகசியத் திட்டங்களா?

நாடு முழுவதிலும் பல இலட்சக்கணக்கான ஆசிரியர், விரிவுரையாளர், பேராசிரியர், ஆசிரியரல்லாத ஊழியர் பணியிடங்கள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழங்களில் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இந்த  காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான எண்ணிக்கையை காட்டிலும் பன்மடங்கு அதிகமான இளைஞர்கள் படித்துவிட்டு வேலையின்றி தவித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனாலும் ஒன்றிய, மாநில அரசுகள் இவர்களை நிரந்தரப் பணியாளர்களாக நியமனம் செய்யாமல், தற்காலிக, பகுதிநேர ஊழியர்களாக மட்டுமே நியமித்து வருகின்றன. ஆசிரியல்லாத இதர பணியிடங்களை அயல்பணி (அவுட்சோர்சிங்) மூலம் நிரப்பும் போக்கும் உருவாகி வருகிறது.

மற்றொருபுறம், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதியை அரசு தொடர்ந்து வெட்டி சுருக்குவதன் மூலமும் அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கத்தின் ஊழல் முறைகேட்டாலும் கல்வித்துறை திட்டமிட்டு சீரழிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 37,211 அரசுப் பள்ளிகளிகளில் பெரும்பாலானவை வகுப்பறை, ஆய்வுக்கூடங்கள், நூலகம், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல்தான் இயங்கி வருகின்றன. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு வாழ்வாதாரம் இழந்த உழைக்கும் மக்கள் பலர் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தபோதும் அம்மாணவர்களை தக்கவைத்து கொள்ளும் அளவிற்கு கூட அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதி இல்லை என்பதே எதார்த்த நிலையாகும். கட்டமைப்பு வசதி இல்லாததால் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவதை காரணம்காட்டி அரசு பள்ளிகளை இழுத்து மூடுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேற்சொன்ன வகையில் அரசுப் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும், ஆசிரியர் – ஊழியர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் மாணவர்களின் கற்றல்திறன் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தாத அரசு, தகைசால் பள்ளிகள் (School of Exellence), மாதிரி பள்ளிகள் (Model Schools) என ஏற்கெனவே இருக்கும் பள்ளிகள், மாணவர்களைத் தரம் பிரித்துக் கையாளத் தொடங்கியிருக்கிறது. 1000 மாணவர்களுக்கு அதிகமாகப் படிக்கும் பள்ளிகளை தகைசால் பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்து, போதிய ஆசிரியர் – அடிப்படை வசதிகள், ஆய்வக வசதிகள் செய்து தரப்போவதாக அரசு கூறுகிறது. 10-ஆம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள், மாநில – ஒன்றிய அளவிலான திறனறி தேர்வுகளில் முன்னிலை பெறும் மாணவர்களாகப் பொறுக்கியெடுத்து மாதிரிப்பள்ளிகள், சூப்பர் 30 போன்ற பெயர்களில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக சிறப்புப் பயிற்சிகள் கொடுத்து, பெரும் நிறுவனங்களில் படிக்கவும் வேலைக்குச் செல்லவும் உத்தரவாதம் செய்வதே அரசின் இலக்கு எனக் கூறப்படுகிறது.

1000 பேருக்கு மேல் படிக்கும் பள்ளிகளுக்கு செலுத்தும் கவனத்தை இதர பள்ளிகளுக்கு அரசு கொடுக்க மறுப்பது ஏன்? அங்கெல்லாம் மாணவர் சேர்க்கை குறைந்திருப்பதற்கான காரணங்கள் குறித்த அரசின் கருத்தென்ன? இதேபோல மாவட்டத்திற்கு சில மாணவர்களை மட்டும் வெற்றிபெற வைப்பது மட்டும் போதுமென்றால், மற்றவர்களின் நிலை குறித்து அரசின் பார்வை என்ன? இந்தப் போக்குகள்தான் மாநில அரசுக்கு ரகசியத் திட்டங்கள் இருப்பதை உறுதி செய்கின்றன. ஒட்டுமொத்த அரசுப் பள்ளிகளையும் மாணவர்களையும் தரப்படுத்த முயற்சி செய்யாமல், பொறுக்கியெடுத்து வளர்ப்பதன் மூலம், எதிர்காலத்தில் கார்ப்பரேட்டுக்கு தாரைவார்ப்பதற்கான முன்னோட்டமாகத்தான் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என நாம் குற்றம் சாட்டினால், அரசால் மறுக்க முடியாது.

நமது கவனம் குவிய வேண்டியது எங்கே?

கல்வித்துறையில் மேற்சொன்னவாறான கார்ப்பரேட் – டிஜிட்டல்மயமாக்கத்தை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது? ஆரம்ப காலத்திலிருந்தே கல்வி என்பது சமூகத்தின் பொருளாதார, உற்பத்தி நிலைமைகளுக்கேற்ப கட்டமைக்கப்படுவதாகவே இருந்து வந்துள்ளது. மாறிவரும் உற்பத்திமுறைக்குப் பொருத்தமாக கல்விமுறையும் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருகிறது. இன்றைய நிலைமையில், சமூகத்தில் உற்பத்திமுறை – பொருளாதாரத்தில் கார்ப்பரேட் – டிஜிட்டல்மயமே ஆதிக்கம் செலுத்துவதாக மாறி வருகிறது. தொழிற்துறை, விவசாயம், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், மருத்துவம் என அனைத்துத் துறைகளிலும் இந்தப் போக்கினை வெவ்வேறு அளவுகளில் நம்மால் கண்ணுற முடிகிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் கல்வித்துறையிலும் கார்ப்பரேட் – டிஜிட்டல்மயம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

தங்களுக்கு நிரந்தர வேலை வேண்டும் எனக் கோரும் தற்காலிக – பகுதிநேர ஆசிரியர்கள், சம்பள உயர்வு – ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட இதர கல்வித்துறை சார்ந்த கோரிக்கைகளுக்குப் போராடும் ஆசிரியர் சங்கங்கள், தரமான கல்வி, உத்தரவாதமான வேலைவாய்ப்புக்காக போராடும் மாணவர் அமைப்புகள் என அனைவரும் கவனிக்க வேண்டியது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் கார்ப்பரேட் – டிஜிட்டல்மயம் என்னும் போக்கையே. இப்போக்கினை எதிர்த்து இதர வர்க்கங்கள் எவ்வாறு போராடுகின்றனர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

சான்றாக, டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளில் ஒன்று உலக வர்த்தகக் கழகத்திலிருந்து இந்திய அரசு வெளியேற வேண்டும்; அடுத்தது, சுதந்திர வர்த்தகத்திலிருந்து (Free Trade Agreement) வெளியேற வேண்டும். உலக வர்த்தகக் கழகத்தின் அடிமை ஒப்பந்தங்களில் இந்திய அரசு கையெழுத்திட்டதன் விளைவே சுதந்திர வர்த்தகம் என்னும் பொறியில் சிக்கியிருப்பது என்பதை விவசாய சங்கங்கள் புரிந்து கொண்டு விட்டனர். இந்த ஒப்பந்தங்களின் விளைவே விவசாயம் மற்றும் விவசாய விளைப்பொருட்கள் மீதான கட்டுப்பாடு கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கு செல்வதாகும். எனவே தான் பிரச்சினையின் மையக்கண்ணியான உலக வர்த்தகக் கழகத்தில் இருந்து அரசு வெளியேற வேண்டுமெனக் கோரிக்கை வைக்கிறார்கள் விவசாயிகள்.

கல்வித்துறைக்கான தீர்வையும் நாம் இங்கிருந்தே துவங்க வேண்டும். மாறிவரும் பொருளாதாரச் சூழலுக்கேற்ப மாணவர்களைத் தயார்படுத்தவே, எல்லா மாற்றங்களையும் (கார்ப்பரேட் – டிஜிட்டல்மயம்) கொண்டு வருவதாகவும், இதுவே வளர்ச்சிக்கான வழியென்றும் அரசுகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. கல்வி என்பதே வேலைக்காகத்தான் என்ற மனநிலைக்குத் தயார் செய்யப்பட்டுள்ள பொது சமூகமும் இது சரிதானே என்று ஏற்றுக்கொள்ளும். ஆனால் கல்வி சார்ந்து இயங்கும், மக்களை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த மாற்றங்களுக்கு பின்னால் குழந்தைகளின் இயல்பை கொன்று அவர்களை அடிமைகளாக மாற்றுவது, கல்வியில் வர்க்க ஏற்றத்தாழ்வை உருவாக்குவது போன்ற பேரபாயங்கள் உள்ளதை உணர்ந்துகொள்ள முடியும்.

இந்த அபாயங்களை முறியடிப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி சிந்திப்பதில் இருந்தே, கல்வித்துறை சார்ந்த இதர எல்லாப் பிரச்சினைகளையும் தீர்ப்பதை நோக்கி நாம் நகர முடியும். கல்வியை சமூகத்தின் இதர துறைகளில் இருந்து எப்படி பிரித்துப் பார்க்க முடியாதோ, அதேபோல்தான் நிரந்தர வேலையின்மை, ஓய்வூதியம் உள்ளிட்ட எல்லாப் பொருளாதாரக் கோரிக்கைகளையும், கல்வித்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது. இன்றைய கட்டத்தில் கல்வித்துறையில் புகுத்தப்பட்டு வரும் கார்ப்பரேட்மயத்தை எதிர்ப்பதில்தான் நமது கவனம் குவிக்கப்பட வேண்டும்.

கார்ப்பரேட்மயத்தையும் காவிமயத்தையுமே இலக்காகக் கொண்டிருக்கும் தேசியகல்விக் கொள்கையை முற்றாக நிராகரிக்க வேண்டும். அதே சமயத்தில், தமிழ்நாடு அரசு உருவாக்க இருக்கும் மாநிலக் கல்விக் கொள்கை இத்தகைய அம்சங்களில் இருந்து மாறுபட்டதாக, குழந்தைகளை மையப்படுத்தியதாக, சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை நோக்கியதாக, ஆசிரியர்கள் – ஊழியர்களின் நலன் பேணுவதாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் போராட வேண்டும். நாம் ஏற்கெனவே வலியுறுத்தி வரும் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி; அறிவியல்பூர்வமான – தாய்மொழிக் கல்வி அடிப்படையிலான பாடத்திட்டம்; அருகமைப் பள்ளி – பொதுப்பள்ளி முறை; ஆகியவற்றுடன் பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை காவி – கார்ப்பரேட் பாசிச சித்தாந்தத்தின் ஊடுருவலைத் தடுத்து நிறுத்தவும் போராட வேண்டும்.

கல்வித்துறையில் எதிர்கொள்ளும் குறிப்பான பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் மற்றும் குறித்த நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆசிரியர்கள், கல்வியாளர்களை உள்ளடக்கிய “மக்கள் கல்விக் கூட்டியக்கம்” போன்ற அமைப்புகள் பருண்மையாக முன்வைத்து வருகின்றன. இத்தகைய முன்னெடுப்புகளை தொடர்ந்து ஆதரிப்பதும், தொடர் விவாதங்கள் மூலமாக குறிப்பான பிரச்சினைகளுக்கான குறிப்பான தீர்வுகள் – நடவடிக்கைகளை நாம் செழுமைப்படுத்திக் கொண்டே முன்னேறுவதும் அவசியம்.

நாம் சந்திக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கு பின்னாலும் அரசியல் அதிகாரம் இருப்பது போல, தீர்வுகளுக்குப் பின்னாலும் அரசியல் அதிகாரமும் இருக்கவே செய்கிறது. நாட்டையே சூறையாடும் கார்ப்பரேட்மயத்தின் பின்னால் அம்பானி – அதானிகளின் நலன்களுக்கான ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி. பாசிசக் கும்பலின் அரசியல் அதிகாரமே பாதுகாப்பாய் இருக்கிறது. இவற்றால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், மீனவர்கள், வியாபாரிகள், ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களின் கார்ப்பரேட்மய எதிர்ப்புப் போராட்டங்களை ஒன்றிணைப்பதும், இப்போராட்டங்களின் வழியே நமக்கான அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதும்தான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். நாம் எடுத்து வைக்கும் சிறுசிறு அடிகளும் இத்தீர்வை நோக்கியதாக இருக்கட்டும்!


வாகைசூடி

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க