08.06.2022
2,381 அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் மூடல்!
அங்கன்வாடி மையங்களிலேயே தொடர கல்வித்துறை முடிவு!
அரசுப் பள்ளிகளை ஒழித்துக் கட்டி தனியார் பள்ளிகளை வளர்க்க திமுக அரசு செய்யும் சதி!
அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் 2019-ல் தொடங்கப்பட்டன. 3-4 வயது குழந்தைகள் எல்.கே.ஜி வகுப்பிலும், 4-5 வயது குழந்தைகள் யு.கே.ஜி வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர்.
இதில், தற்போது 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் வரை படித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில்தான் பள்ளிக் கல்வித்துறையின் மேற்கண்ட உத்தரவு வந்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகள் கூறும்போது, ‘‘ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையுடன் இணைந்து 3 ஆண்டு சோதனை முயற்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. கொரோனா பரவலுக்கு பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதால், ஆசிரியர்கள், கட்டிடங்களின் தேவை அதிகரித்துள்ளது.
இதையடுத்து, மழலையர் வகுப்புகளை அங்கன்வாடி மையங்களிலேயே தொடர முடிவானது. அதற்கேற்ப மழலையர் வகுப்புக்கு தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 2,381 ஆசிரியர்கள் மீண்டும் அரசுப் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். எனவே, இனி மழலையர் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை அங்கன்வாடி மையங்கள் மூலமாகவே நடத்தப்படும்’ ’எனக் கூறியுள்ளனர்.
படிக்க :
♦ “பிஎம் ஸ்ரீ பள்ளிகள்”: புதிய கல்விக் கொள்கையின் ‘விசக் குஞ்சுகள்’ | புமாஇமு
♦ பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அரசியல் பேச தடை உத்தரவு ! | புமாஇமு கண்டனம்
இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மூன்று ஆண்டுகளுக்கு சோதனை முயற்சிதான் இந்த திட்டம் என்கிறார்கள். ஆனால், இந்த மழலையர் பள்ளிகளை தொடங்கும்போது அரசு சொன்ன விஷயம் என்னவென்றால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது அதை அதிகப்படுத்ததான் இந்தத் திட்டம் என்றார்கள்.
இந்த திட்டத்தை முழுமையாக அமல்படுத்த விடாமல் அரசே தடையாக இருந்ததையும் மீறி சில தலைமை ஆசிரியர்கள் தங்கள் சொந்த முயற்சியில் பலரிடமும் நிதி திரட்டி ஆசிரியர்களை அமர்த்தி இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். இந்த திட்டம் செயல்பட்டதன் விளைவாக மாணவர் சேர்க்கை அரசுப் பள்ளிகளில் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இதை பல்வேறு தலைமை ஆசிரியர்களும் தங்கள் சொந்த நடைமுறையில் நிரூபித்துள்ளனர்.
திரு வீரமணி, தலைமையாசிரியர், (மாநில நல்லாசிரிய விருதாளர்) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கெரிகேப்பள்ளி, ஊற்றங்கரை கிருஷ்ணகிரி அவர்கள் கூறும்போது, “எங்கள் பள்ளி தொடக்கப்பள்ளி, இங்கு மழலையர் வகுப்பு தொடங்க அரசு அனுமதி வழங்கவில்லை. என் சொந்த முயற்சியில், விருப்பத்தின் பேரில் மழலையர் வகுப்புகளைத் துவக்கினேன். 2018-ல் 28 என்ற மாணவர் எண்ணிக்கை இன்று 150 ஆகியுள்ளது! தேவையான அனைத்து நிதி, கற்பித்தல் வசதிகளையும் அரசின் உதவியின்றி நாங்களே செய்து கொள்கிறோம்” என பதிவு செய்துள்ளார்.
திரு குணசேகரன், தலைமை ஆசிரியர், அரசு தொடக்கப் பள்ளி, மாயனூர், கரூர் அவர்கள் கூறும்போது, “எங்கள் பள்ளியிலும் மழலையர் வகுப்பு ஆரம்பிக்க விரும்பி அரசு அதிகாரிகளிடம் அனுமதி கேட்டால் எந்த பதிலும் இல்லை. பெற்றோர்கள் அரசு மழழையர் பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப விருப்பமுடன் இருக்கின்றனர். எல்லா ஏற்பாடுகளையும் நாங்களே செய்து கொள்கிறோம். அனுமதி மட்டும் தாருங்கள் என்றால், சட்ட விதிகள் இல்லை என்கின்றனர். அது மட்டுமல்ல, ஏதாவது குழந்தைகளுக்குப் பிரச்சினை என்றால், நீங்கள் தான் பொறுப்பு என்றும் அச்சமூட்டுகின்றனர். ஆயினும் ஆரம்பித்துவிட்டோம். மழலையர் வகுப்பு ஆரம்பித்த பிறகுதான் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்துள்ளது. குறைந்த பட்சம் அனுமதி மட்டுமாவது வழங்கவே இவ்வளவு தயக்கம் காட்டினால், அரசுப் பள்ளிகளில் மாணவர்களை எப்படி தக்க வைக்க முடியும்? எனக் கேட்கிறார்.
இதைப்போல இன்னும் பல உதாரணங்களை இங்கு குறிப்பிட முடியும்? இப்படி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்தி உள்ள இந்த திட்டத்தை ஏன் இந்த அரசு மூன்று ஆண்டுடன் நிறுத்திக் கொள்கிறது? போட்டுக்கொண்ட திட்டம் வெற்றி என்றபோதும் ஏன் தொடரவில்லை?
இதற்கும் அதிகாரிகள் காரணம் கூறாமல் இல்லை. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது கட்டிடங்கள் இல்லை ஆசிரியர் இல்லை அதனால் இந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டு; இதில் உள்ள ஆசிரியர்களை நடுநிலைப் பள்ளிகளில் பணியமர்த்த போவதாகவும் கூறுகிறார்கள்.
மாணவர்கள் அதிகமாக சேர்கிறார்கள் என்றால் அதற்கேற்ற கட்டமைப்பை உருவாக்க வேண்டியதை பற்றிப் பேசாமல் நழுவிச் செல்வதையே வேலையாக வைத்துள்ளது அரசு. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி, 25 சதவீத மாணவர்களுக்கு அரசே பணம் வழங்கி தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறது. இதை கணக்கிட்டால் ஒவ்வொரு வருடமும் ரூ.100 கோடிக்கும் மேல் வருகிறது. இந்தப் பணத்தை வருட வருடம் முறையாக அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பிற்கு செலவு செய்திருந்தால் இன்று நிலைமை எப்படி இருந்திருக்கும். ஆதலால் அரசின் நோக்கம் இப்போது நமக்கு தெளிவாகத் தெரிகிறது.
இந்த புறக்கணிப்பின் பின்னால் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற கொள்கையும் அதற்கேற்றபடி அரசுப் பள்ளிகளை கைகழுவும் திட்டமும் அடங்கியுள்ளது.
இதை மறைத்துக் கொண்டு பல்வேறு காரணங்களைச் சொல்லி மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருவதற்கு திமுக அரசும் விதிவிலக்கு அல்ல.
2019-க்கு முன்பு வரை எந்த அரசுப் பள்ளியிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் இல்லை. இந்த சூழலில்தான் பல்வேறு தனியார் பள்ளிகளும் பிளே ஸ்கூல் மற்றும் கிண்டர் கார்டன் போன்ற மழலையர் வகுப்புகளை ஆரம்பித்து பெற்றோர்களை கவர்ந்து இழுத்தன. இதிலிருந்து பார்க்கும் பெற்றோர்களுக்கு அரசுப் பள்ளிகளுக்கு போவதற்கு மனம் வரவில்லை.
அடுத்தடுத்து மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்வதற்கும் இந்த எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் அடிப்படையாக அமைந்தன. இதிலிருந்துதான் ஒட்டுமொத்த அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைய ஆரம்பித்தது.
படிக்க :
♦ தொழில்நுட்ப கல்வி கட்டணங்களை உயர்த்தும் ஏ.ஐ.சி.டி.இ | புமாஇமு கண்டனம்
♦ அண்ணா பல்கலையில் சான்றிதழ் கட்டண உயர்வு : கல்வி என்ன கடைச்சரக்கா? | புமாஇமு
இதை பல்வேறு ஆசிரியர்களும் கல்வியாளர்களும் கண்டு கொண்டதால்தான் இந்தத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும்; அரசுப் பள்ளிகளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசு ஒத்துழைக்காத போதும் செயல்பட்டனர்.
ஆனால், இன்று சமூகநலத் துறை அதிகாரிகள் “இந்த ஆசிரியர்கள்; தலைமையாசிரியர்கள் ஒத்துழைக்காததால் தான் இந்த திட்டம் கைவிடப்படுகிறது” என்று எளிமையாக பொய்யான பழி சுமத்தி விட்டு தங்களின் தனியார்மய நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பிக்கின்றனர்.
ஏற்கனவே சமூகநலத் துறையின் கீழ் செயல்படும் அங்கன்வாடிகளில் பழைய முறையிலேயே பயிற்சி தரப்படும் என்ற அறிவிப்பு எல்லாம் பெற்றோர்களை மீண்டும் தனியாருக்கு போகச் சொல்லும் அறிவிப்புதான்.
தனியார் பள்ளிகளிலிருந்து மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு போய்விடக் கூடாது என்பதற்காகவே உடனடியாக கட்டணத்தை கட்டச் சொல்லி நெருக்கடி தருகிறார்கள். மாற்றுச் சான்றிதழ் தரமாட்டேன் என நெருக்கடி கொடுக்கிறார்கள். இந்த அறிவிப்பானது தனியார் பள்ளிகளுக்கு வரப்பிரசாதமாகவே அமையும்.
பெற்றோர்களின் வருமானத்தை தனியார் பள்ளிகள் கொள்ளையடிக்க போவதை தடுக்க வேண்டுமென்றால், மாணவர்களின் கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் இந்த தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்தக் கொள்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தையும் முறியடிக்க வேண்டிய தேவை நம்முன் உள்ளது.

இவண்,
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புமாஇமு, தமிழ்நாடு.
94448 36642.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க