அண்ணா பல்கலையில் சான்றிதழ் கட்டண உயர்வு : கல்வி என்ன கடைச்சரக்கா? | புமாஇமு

மதிப்பெண் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால் அது தேர்வுத்துறையின் தவறுதான். தேர்வுத் துறையின் தவறை திருத்தி வழங்க வேண்டியது அதன் கடமை. அதற்காக ரூ.1,000 கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்?

0
08.05.2022
18 சதவீதம் ஜிஎஸ்டி!
23 வகையான சான்றிதழ்களுக்கு பத்து மடங்கு
கட்டண உயர்வை அமல்படுத்திய அண்ணா பல்கலைக்கழகம்!
கல்வி என்பது கடைச்சரக்கா?
பத்திரிகை செய்தி!
அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்து விட்டாலோ, சேதமடைந்து விட்டாலோ அதற்கு பதிலாக புதிய சான்றிதழ் வாங்குவதற்கு இதுவரை ரூ.300 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது அந்தக் கட்டணம் 10 மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. அதாவது ரூ.3,000.
மதிப்பெண் சான்றிதழ்களில் மதிப்பெண்களோ, பெயர் விவரங்களோ தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால், அதை திருத்தி புதிய சான்றிதழ் வாங்குவதற்கான கட்டணம் ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மதிப்பெண் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால் அது தேர்வுத்துறையின் தவறுதான். தேர்வுத் துறையின் தவறை திருத்தி வழங்க வேண்டியது அதன் கடமை. அதற்காக ரூ.1,000 கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்? அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள், ஏதேனும் நிறுவனங்களில் பணிக்கு சேரும்போது, அவர்களின் சான்றிதழ் உண்மையானது தானா? என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அண்ணா பல்கலைக் கழகத்தின் மூலம் ஆய்வு செய்து உறுதிப்படுத்திக் கொள்ளும்.
அண்ணா பல்கலைக்கழகம் வழங்கிய சான்றிதழ்கள் உண்மையா என்பதை சரி பார்த்து சொல்ல வேண்டியது பல்கலைக்கழகத்தின் பணி. அதற்கான கட்டணத்தை ரூ.2,000 ஆக உயர்த்தியுள்ளது. பட்டச் சான்றிதழின் நகலை இரண்டாவது முறையாக வாங்க வேண்டும் என்றால், அதற்கான கட்டணம் ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
படிக்க :
♦ பள்ளிகளில் மூன்று மொழிக்கான சுற்றறிக்கை ! புதிய கல்விக்கொள்கையை திணிக்காதே ! | புமாஇமு
♦ சாதி வெறியைத் தூண்டி, மாணவர்களைக் காவு வாங்கும் சாதிக்கயிறு ! திமுக அரசின் மௌனம் கண்டிக்கத்தக்கது ! | புமாஇமு
இதற்கெல்லாம் காரணமாக பல்கலைக்கழகங்கள் கடந்த ஆண்டு நவம்பர் 25-ல் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியது தான். ஒன்றிய மோடி அரசின் உத்தரவின் கீழே இந்த ஜிஎஸ்டி வரி எல்லா மாநில பல்கலைக்கழகங்களுக்கும் சேர்த்து அமல்படுத்தப்பட்டுள்ளது.
மே 8 அன்றைய அறிவிப்புக்கு முன்பே பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஜிஎஸ்டி வரி 18% வசூலிக்கப்படுகின்றன. இது அண்ணா பல்கலைக்கழகத்தை போல் சான்றிதழ்களில் விதிக்கவில்லை நேரடியாக மாணவர்கள் படிக்கும் துறை சார்ந்தே வசூலிக்கப்படுகிறது. இதேபோல் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் இந்த ஜிஎஸ்டி 18 சதவீதத்தை மாணவர்கள் மத்தியில் வசூலித்து வருகிறது. கல்வி என்பது சேவை, அனைவருக்குமானது என்பதெல்லாம் போய் வெறும் கடை சரக்காக மாற்றப்பட்டு கொண்டிருக்கிறது என்பதற்கான உதாரணங்கள் தான் இவை.
அரசு பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் என்றால் ஏழை எளிய மாணவர்கள் கல்வி பயில முடியும் என்ற நிலைமை முற்றிலுமாக மாறுவதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதுதான் இந்த ஜிஎஸ்டி வரியையும் கல்விக்கு அமல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்தக் கார்ப்பரேட்டின் காவலர்கள்.
புதிய கல்விக்கொள்கை ஒட்டுமொத்த கல்வியையும் கார்ப்பரேட் மயமாகவும் காவி மயமாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு அங்கம்தான் ஜிஎஸ்டி அமல்படுத்துவது. இன்ஜினியரிங் படிப்பிலும் பகவத் கீதையை கொண்டு வருவது.
இன்று திராவிட மாடல் ஆட்சி நடப்பதாக சொல்லிக் கொள்ளும் தமிழகத்தில்தான் இந்த காவி கார்ப்பரேட் மாடல் நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த காவி – கார்ப்பரேட் மாடலை வீழ்த்த களமிறங்குவது தான் கல்வியை சேவையாக மாற்ற ஒரே வழி.
♣ அண்ணா பல்கலைக்கழகமே கட்டண உயர்வை திரும்பப் பெறு!
♣ கல்வியை கடைச் சரக்காக மாற்றும் புதிய கல்விக் கொள்கையையும் அதன் ஒரு அங்கமான இந்த ஜிஎஸ்டி வரியையும் ரத்து செய்!

இவண்,
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புமாஇமு, தமிழ்நாடு.
9444836642.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க