02.05.2022
சாதி வெறியைத் தூண்டி, மாணவர்களைக் காவு வாங்கும் சாதிக்கயிறு!
திமுக அரசின் மௌனம் கண்டிக்கத்தக்கது!
பத்திரிகை செய்தி
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுக்கும், பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. அதற்கு அடிப்படையாக கையில் சாதியைக் குறிப்பிடும் கயிறு கட்டி இருந்ததாக செய்திகள் வருகின்றன.
இந்தத் தகராறில் ஒருவரை ஒருவர் பெல்ட்டால் தாக்கிக் கொண்டனர். இதில் ஒரு மாணவன் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஏப்ரல் 30 அன்று உயிரிழந்தான்.
கடந்த அ.தி.மு.க ஆட்சி காலகட்டத்தில் மாணவர்கள் தமது கைகளில் சாதிய அடையாளம் கொண்ட கயிறுகளைக் கட்டக் கூடாது என பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
அதை  ஆசிரியர்களும் பேராசிரியர்களும், பல்வேறு முற்போக்காளர்களும் வரவேற்றபோது, சங்கி கும்பல் குறிப்பாக, இந்து மக்கள் கட்சி போன்ற ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் அடிவருடிகள் அனைவரும் ஒரே குரலில் அதை எதிர்த்தனர். உடனே அடிமை எடப்பாடி அரசு பின்வாங்கிக் கொண்டது.
அன்று தனது ட்விட்டர் பக்கத்தில், இது குறித்து கருத்து சொன்ன தி.மு.க எம்.பி கனிமொழி,  கையில் கயிறு கட்டக் கூடாது என்ற பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பை வரவேற்பதாக பதிவிட்டிருந்தார்.
ஆனால் இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தி.மு.க ஏன் மௌனம் காக்கிறது? இந்த மௌனம், சாதிய – மதவாத ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் நடவடிக்கைக்கு வழங்கப்படும் அங்கீகாரம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
தமிழக அரசே!
♦ மாணவர்கள் மத்தியில் புழங்கும் சாதிக்கயிறுகள் உள்ளிட்ட அனைத்து சாதிய அடையாளங்களையும் தடை செய்!
♦ பள்ளி – கல்லூரிகளில் ஜனநாயக உணர்வை வளர்த்தெடுக்க, மாணவர் சங்கம் உள்ளிட்டவற்றுக்கு அங்கீகாரம் வழங்கு?

இவண்,
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புமாஇமு, தமிழ்நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க