பக்ரீத் அன்று முஸ்லீம்கள் மீது திட்டமிட்டு கலவரங்களை நடத்தியுள்ள பாசிசக் கும்பல்

ஆட்சி அமைத்த உடனேயே நாட்டின் பல மாநிலங்களில் காவிக் குண்டர்கள், முஸ்லீம் மக்களின் திருநாளான பக்ரீத் அன்று அவர்கள் மீது திட்டமிட்டு தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.

ண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி-அமித்ஷா தலைமையிலான பா.ஜ.க. கும்பல் வெற்றி பெற்று, கூட்டணி ஆட்சி அமைத்து மூன்றாவது முறையாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைத்த உடனேயே நாட்டின் பல மாநிலங்களில் காவிக் குண்டர்கள், முஸ்லீம் மக்களின் திருநாளான பக்ரீத் அன்று அவர்கள் மீது திட்டமிட்டு தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.

கடந்த ஜூன் 15 அன்று, தெலங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் நகரில் பசுவதையை தடை செய்ய கோரி பா.ஜ.க -ஆர்.எஸ்.எஸ் கும்பல் பேரணி நடத்தியது. இந்த பேரணியை பயன்படுத்திக் கொண்டு இந்துத்துவ பயங்கரவாத கும்பல் முஸ்லீம் மக்களின் கடைகள் மீது திட்டமிட்ட தாக்குதலை நடத்தியது.  காவிகளின் இக்கொடிய தாக்குதலை எதிர்த்து முஸ்லீம் மக்களும் போராடியுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த முஸ்லீம் மக்கள், “இந்த தாக்குதல் ஒன்றும் புதிதல்ல. ஒவ்வொரு ஆண்டும் மேடக் நகரில் பக்ரீத் திருநாள் கொண்டாடப்படும் நேரத்தில் இத்தகைய தாகுதல்கள் காவிகளால் திட்டமிட்டே நடத்தப்படுவதாக” கூறுகின்றனர்.

அதே போல், ஒடிசா மாநிலத்தில் உள்ள கடலோர நகரமான பாலசோரில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கின்ற பகுதியிலும் காவிக் கும்பல் பக்ரீத் பண்டிகைக்கு முந்தைய நாள் திட்டமிட்டு தாக்குதலை தொடுத்துள்ளது. இந்த தாக்குதல் ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சி அமைத்த நான்கே நாட்களில் அரங்கேறியுள்ளது. முஸ்லீம் மக்கள் வாழுகின்ற பகுதியில் மாட்டிறைச்சி வெட்டப்பட்டு உள்ளதாகவும், அங்கு உள்ள கழிவு நீர் கால்வாயில் மாட்டின் இரத்தம் கலந்து வருவதாக கூறிக்கொண்டு பா.ஜ.க. குண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.


படிக்க: குஜராத்தில் அரசு குடியிருப்பில் முஸ்லிம்களுக்கு இடம் இல்லை – சவால் விடும் பாசிசக் கும்பல்!


ஆனால், அந்த பகுதி முஸ்லீம் மக்களோ, அது மாட்டிறைச்சி அல்ல, ஆட்டிறைச்சி தான் என்று கூறியுள்ளனர். இருந்தாலும் காவிகள் முஸ்லீம் மக்கள் மீது தாக்குதலை தொடுத்தனர். தங்களை தற்காத்துக் கொள்வதற்காக முஸ்லீம் மக்களும் காவிகளை திருப்பியடித்துள்ளனர். முஸ்லீம் மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதலைத் தொடுத்த காவிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத போலீசு, முஸ்லீம் மக்கள் தங்களுடைய பண்டிகையை கொண்டாட விடாமல் தடுப்பதற்காக அவர்கள் வாழும் பகுதிகளில் மட்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது; இணையதள சேவையை துண்டித்துள்ளது.

அதே போல், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜேபி நார்த் செலஸ்ட் பகுதியில் சில முஸ்லீம் குடும்பங்கள் பக்ரீத் அன்று வெட்டுவதற்காக ஆட்டுக்குட்டிகள் கொண்டு வந்துள்ளதை தடுத்து நிறுத்தி இந்துத்துவா கும்பல் கலவரத்தில் ஈடுபட்டுள்ளது; ஹிமாச்சலப் பிரதேசத்தில் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் குர்பானி தரப்பட்ட பிராணியின் படத்தை வைத்ததற்காக முஸ்லீம் ஒருவரின் துணிக்கடையை போலீசு முன்னிலையில் சூறையாடியுள்ளது, இந்துத்துவா பயங்கரவாத கும்பல்.

மேலும், மத்திய பிரதேசத்தில் குளிர்சாதனப் பெட்டிக்குள் மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்று கூறி 11 முஸ்லிம்களின் வீடுகளை புல்டோசரை வைத்து அம்மாநில பாஜக அரசு இடித்துள்ளது; சட்டீஸ்கரில் உள்ள ராய்பூரில் மூன்று இஸ்லாமியர்கள் கால்நடைகளை ஏற்றிச் சென்றதால் ‘பசு பாதுகாப்பு’ குண்டர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.  மருத்துவமனையில் மற்றொருவர் 10 நாட்களாக உயிருக்குப் போராடிய நிலையில் உயிரிழந்துள்ளார்.


படிக்க: பாசிச பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகரிக்கும் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள்!


இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. குண்டர்கள் திட்டமிட்டு முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதலை தொடுத்து வரும் வேளையில், இந்தியா கூட்டணியினரோ மோடியின் மூன்றாவது ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்காது; சிறு பிரச்சனைக்கே ஆட்சி கலைந்துவிடும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். மோடி ஆட்சியின் முதல் 15 நாட்களில் நிகழ்ந்துள்ள 10 பிரச்சனைகளை பட்டியலிடும் காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி, அப்பிரச்சனைகளில் முஸ்லீம் மக்கள் மீது தொடுக்கப்பட்ட இத்தாக்குதல்களைப் பற்றிப் பேசவில்லை.

ஆனால், பாஜக கும்பல் ஆட்சிக்கு வந்தவுடனேயே சமூக செயற்பாட்டாளரான அருந்ததி ராய் மீது கொடிய கருப்பு சட்டமான ஊபாவின் கீழ் வழக்கு தொடுத்தது; ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து மூன்று குற்றவியல் திருத்தச் சட்டங்களை அமல்படுத்த உள்ளது; கூடிய விரைவில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதாக கூறியிருப்பது போன்ற தங்களுடைய நடவடிக்கைகள் மூலம் மோடியின் 2.0 ஆட்சியை விட மோடியின் 3.0 ஆட்சி உக்கிரமானதாக இருக்கும் என்பதை நமக்கு உணர்த்தியுள்ளது.

ஆகவே, மோடியின் 3.0 கூட்டணி ஆட்சி கலைந்துவிடும், வீழ்ந்துவிடும் என்று பிரம்மையில் மிதந்து கொண்டிருக்காமல், பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும் சட்டத் திட்டங்களுக்கு எதிராகவும், நீட் முறைகேடுகளுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம், குறைந்தபட்ச ஆதார விலைக்கான விவசாயிகளின் போராட்டத்தை போன்ற நீடித்த, உறுதியான, மக்கள்திரள் போராட்டங்களை கட்டியமைத்து காவி பாசிஸ்டுகளின் நடவடிக்கைகளை முறியடிக்க வேண்டியது நம் அனைவரின் முதன்மைக் கடமையாகும்.


அகிலன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க