2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் நாளொன்றுக்கு சராசரியாக இரண்டு முஸ்லீம் விரோத வெறுப்பு பேச்சு நிகழ்வுகள் நடப்பதாகவும், அதில் 498 (75 சதவிகிதம்) பாசிச பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் நடந்துள்ளதாகவும் ”இந்தியா ஹேட் லேப்” (India Hate Lab) என்ற ஆராய்ச்சிக்குழு பிப்ரவரி 26 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

இந்தியா ஹேட் லேப் என்பது அமெரிக்காவின் வாஷிங்டன், டி.சி-யை (Washington, DC) தளமாகக் கொண்ட ஒரு ஆராய்ச்சிக் குழுவாகும். இது பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்படுகிறது.

”இந்தியாவில் வெறுப்பு பேச்சு நிகழ்வுகள்” (Hate Speech Events in India) என்று தலைப்பிடப்பட்ட இக்குழுவின் ஆய்வறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு நிகழ்வுகள் 255 நடந்துள்ளன; அதே வேளையில் ஆண்டின் இரண்டாவது பாதியில் இந்த எண்ணிக்கை 413 ஆக உயர்ந்துள்ளது. அதாவது ஆண்டின் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் 62 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

வெறுப்பு பேச்சுகளில் 36 சதவிகித (239) நிகழ்வுகள் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைக்கு நேரடியாக அழைப்பு விடுப்பவையாகவும், 63 சதவிகிதம் (420) லவ் ஜிஹாத், நில ஜிஹாத், ஹலால் ஜிஹாத், மக்கள்தொகை ஜிஹாத் போன்ற ”சதி கோட்பாடுகளை” உள்ளடக்கியதாகவும் இருந்தன. சுமார் 25 சதவிகிதம் (169) முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களைக் குறிவைக்கும் உரைகளை கொண்டிருந்தன.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றது. இந்த காலகட்டத்தில் வெறுப்பு பேச்சு நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெற்றன.


படிக்க: பாசிச இனப்படுகொலைகளுக்கு பக்குவப்பட்டுவிட்டது நாடு!


மகாராஷ்டிரா மாநிலத்தில் குறைந்தது 118 வெறுப்புப் பேச்சு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 104 வெறுப்புப் பேச்சு நிகழ்வுகளும், மத்தியப் பிரதேசத்தில் 65 நிகழ்வுகளும், ராஜஸ்தானில் 64 நிகழ்வுகளும், ஹரியானாவில் 48 நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. உத்தராகண்டில் 41, கர்நாடகாவில் 40, குஜராத்தில் 31, சத்தீஸ்கரில் 21, பீகாரில் 18 வெறுப்பு பேச்சு நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.

இதில் விஷ்வ இந்து பரிஷத் – பஜ்ரங் தளம் 32 சதவிகித (216) வெறுப்பு பேச்சு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக, 46 சதவிகித (307) வெறுப்பு பேச்சு நிகழ்வுகள் சங்க பரிவார அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டவை.

மேலும், பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் டி ராஜா சிங் மற்றும் நிதேஷ் ரானே, அந்தராஷ்ட்ரிய இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா, இந்துத்துவவாதியான காஜல் ஷிங்காலா, சுதர்சன் நியூஸ் உரிமையாளர் சுரேஷ் சவ்ஹாங்கே, இந்து மதத் தலைவர்கள் (இந்து பயங்கரவாத சாமியார்கள்) யதி நரசிங்கானந்த், காளிச்சரண் மகாராஜ், சாத்வி சரஸ்வதி மிஸ்ரா ஆகியோர் அதிக வெறுப்பு பேச்சுகளுக்குக் காரணமான முதல் எட்டு பேச்சாளர்கள் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


படிக்க: விலைவாசி உயர்வு: அசாம் முதல்வர் சர்மா முஸ்லீம் வெறுப்பு பேச்சு!


”முஸ்லீம் விரோத வெறுப்பு பேச்சு இயல்பாக்கப்பட்டு இந்தியாவின் சமூக-அரசியலில் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்பதை எங்கள் பகுப்பாய்வு காட்டுகிறது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்காளர்களை துருவப்படுத்த முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பரவலாக பயன்படுத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று ”இந்தியா ஹேட் லேப்” மற்றும் ”இந்துத்துவா வாட்ச்” ஆகியவற்றின் நிறுவனரான ரகீப் ஹமீது நாயக் (Raqib Hameed Naik) எச்சரித்துள்ளார்.

கடந்த ஜனவரி 29 அன்று, தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 இன் கீழ் ”இந்தியா ஹேட் லேப்” மற்றும் ”இந்துத்துவா வாட்ச்” ஆகியவற்றின் வலைத்தளங்களை பாசிச மோடி அரசு இந்தியாவில் முடக்கியது குறிப்பிடத்தக்கது. பாசிச மோடி அரசின் இந்த நடவடிக்கையைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ளப் போவதாக இவ்விரண்டின் நிறுவனரான ரகீப் ஹமீது நாயக் அப்போது கூறியிருந்தார்.

ஏதோ வெறுப்பு பேச்சுகள் தொடர்பான தரவு என்று எண்ணி இந்த செய்தியை நாம் அலட்சியமாகக் கடந்துவிடக்கூடாது. பாசிச சங்க பரிவார கும்பலின் வெறுப்பு பேச்சுகள் எவ்வளவு அபாயகரமானவை என்பதைப் புரிந்துகொள்ள ஒரு எடுத்துக்காட்டை மட்டும் பார்ப்போம்.

அந்தராஷ்ட்ரிய இந்து பரிஷத்தின் (Antarrashtriya Hindu Parishad) நிறுவனரும் தற்போதைய தலைவருமான பிரவீன் தொகாடியா, 2023 ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று ஹரியானாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ”இன்று இஸ்ரேலின் முறை. அதே பாலஸ்தீனம் நமது கிராமங்களிலும், தெருக்களிலும் எழுச்சி பெற்று வருகிறது. அவர்களிடமிருந்து எங்கள் வளத்தை, எங்கள் பெண்களைக் காப்பாற்றுவது எங்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கிறது” என்று பேசினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தியாவில் முஸ்லீம்களை இனப்படுகொலை செய்வதற்கான தருணத்திற்காகக் காத்திருப்பதாகப் பொருள்படும் படி வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.

பாசிச கும்பலின் வெறுப்பு பேச்சுகளை இனிமேலும் அனுமதிக்க முடியாது. இந்தியாவில் காசாவைப் போன்றதொரு இனப்படுகொலையை நடத்த துடிக்கும் பாசிஸ்டுகளை முறியடிக்க வேண்டியது புரட்சிகர – ஜனநாயக சக்திகள் அனைவரின் கடமையாகும்.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க