ஆர்.எஸ்.எஸ். கூடாரத்திலிருந்து எட்டிப்பார்க்கும் ‘நீதி’மான்கள்

"இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்படும். சட்டத்துறை சார்ந்தவர்கள் எங்கள் கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்வதற்கும் எங்களது நிகழ்ச்சிநிரல்களை சட்டப்பூர்வமாக முன்னெடுத்துச் செல்வதற்கும் கருத்துப் பரிமாற்றம் என்பது முக்கிய பங்காற்றுகிறது‌‌” என்று வி.ஹெச்.பியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்-இன் கிளை அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் எனப்படும் வி.ஹெச்.பி-யின் சட்ட அமைப்பான “விதி பிரகோஷ்த்” (Vidhi Prakosth) கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.09.2024) அன்று ஒருங்கிணைத்த கூட்டத்தில், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுமார் 30 பேர் காவி சால்வையுடன் கலந்துகொண்டுள்ளனர். மேலும், ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இக்கூட்டத்தில் பங்கேற்றதுடன் அப்புகைப்படங்களைத் தனது “எக்ஸ்” தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இக்கூட்டத்தில் வாரணாசி மற்றும் மதுராவில் கோவில்கள் கட்டுவதில் உள்ள சட்டரீதியான சிக்கல்கள், வக்ஃபு வாரிய திருத்தச் சட்டம் மற்றும் மதமாற்றத் தடைச் சட்டம் உள்ளிட்டவற்றை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

வி.ஹெச்.பி தலைவர் அலோக் குமார் கூறுகையில், “நீதிபதிகள் மற்றும் வி.ஹெச்.பி-யின் இடையே சுதந்திரமான கருத்துப் பரிமாற்றம் நடந்து அதன்மூலம் இருதரப்பினருக்கும் இடையிலான புரிதல் வலுப்பட வேண்டும் என்பதே இக்கூட்டத்தின் மைய நோக்கமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“இப்படிப்பட்ட ஒரு நிகழ்வை நாங்கள் ஒருங்கிணைத்திருப்பது இதுவே முதன்முறையாகும். இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்படும். சட்டத்துறை சார்ந்தவர்கள் எங்கள் கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்வதற்கும் எங்களது நிகழ்ச்சிநிரல்களை சட்டப்பூர்வமாக முன்னெடுத்துச் செல்வதற்கும் கருத்துப் பரிமாற்றம் என்பது முக்கிய பங்காற்றுகிறது‌‌” என்று வி.ஹெச்.பியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது, இந்தியாவில் சட்டப்பூர்வமாகவே பாசிசத்தை அரங்கேற்றி அதன்மூலம் இந்துராஷ்டிரக் கனவை அடைவது என்ற ஆர்.எஸ்.எஸ்-இன் சதித்திட்டத்தைத் தெளிவுபடுத்துகிறது.

வாரணாசி காசி விஸ்வநாத கோவிலை இடித்து ஞானவாபி மசூதியும், மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமியை‌ ஆக்கிரமித்து ஷாஹி மசூதியும் கட்டப்பட்டுள்ளன என இந்துத்துவ வெறியர்களின் பொய்-வெறுப்பு குற்றச்சாட்டுக்களைக் கண்டிக்காமல் இன்றுவரை உச்சநீதிமன்றம் வழக்குகளைக் கிடப்பில் போட்டு‌ சங்கப்பரிவார் கும்பலுக்குச் சாதகமாகச் செயல்பட்டு வருகிறது‌. மறுபுறம், பா.ஜ.க. ஆளும் சில மாநிலங்களில் இயற்றப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டம் நீதிமன்ற விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளது. இதுமட்டுமன்றி பா.ஜ.க. கூட்டணியிலிருக்கும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனதா கட்சி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியுள்ளதன் பேரில், வக்ஃபு வாரிய திருத்தச் சட்டம் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் நீதிபதிகளை ஒருங்கிணைத்து நடத்தப்பெற்ற இக்கூட்டமானது‌ முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது‌.


படிக்க: சங்கி நீதிபதியின் ஒப்புதல் வாக்குமூலம்!


விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு ஓய்வுபெற்ற நீதிபதிகளை ஒருங்கிணைத்து இத்தகைய கூட்டம் நடத்தியிருப்பது ஏதோ தனித்த நிகழ்வல்ல. ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆர்.எஸ்.எஸ்-இல் இணைவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு வக்காலத்து வாங்கியும் அதன் சித்தாந்தங்களின் அடிப்படையிலும் பணியில் உள்ள நீதிபதிகள் பேசிவருவதும் கூட அண்மைக் காலமாக வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. அதிலும் குறிப்பாகப் பாசிசக் கும்பலுக்கு எதிராகச் சாட்டையைச் சுழற்றுபவராகப் பலராலும் கற்பனை செய்யப்பட்ட இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வீட்டில் விநாயகர் சதுர்த்தி நிகழ்வில் மோடி கலந்துகொண்டிருப்பது பாசிசமயமாகியுள்ள நீதித்துறையின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.

இந்திய அரசுக் கட்டமைப்பின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் விரோத சிந்தனை மற்றும் செயல்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று பலர் கூறிவரும் நிலையில், நீதிமன்றம், போலீசுத்துறை, ராணுவம் போன்ற‌ அரசுக் கட்டமைப்பில் பிரிவினைவாத, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ்-யின் ஊடுருவல் எவ்வளவு ஆழமாக உள்ளது  என்பதை மீண்டும் அம்பலப்படுத்தும் விதமாகவே இச்சம்பவம் அமைந்துள்ளது.

நாட்டின் இயற்கை வளங்களையும் மனிதவளங்களையும் சுரண்டிக் கொழுக்கும் கார்ப்பரேட் தரகு முதலாளிகளான அதானி, அம்பானி, அகர்வால், வேதாந்தா போன்ற பார்ப்பன-பனியா-மார்வாடி கும்பலுக்கான இந்துராஷ்டிரத்தை, பாசிச பா.ஜ.க. மற்றும்‌ இந்திய அரசுக் கட்டமைப்புகளின் கூட்டுச்சதியின் மூலம் நிறுவத்துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-இன் நிகழ்ச்சிநிரலின் படியே சமீபகால நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. சட்டத்தின் வழியில் தங்கள் இலக்கை அடைய முயன்று வருவதாக இந்துத்துவவாதிகள் கூறுவதையும் கடந்த ஜூலை 1 முதல் நாடுமுழுவதும் மூன்று குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டதையும் இதன்‌ தொடர்ச்சியாகவே அணுகவேண்டும்.

மக்கள் விரோத கூட்டாளிகளான சங்கப்பரிவார்-பா.ஜ.க. கும்பல், அதிகார மற்றும் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக உழைக்கும் மக்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், ஜனநாயக சக்திகள், பாசிச எதிர்ப்பு சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டங்களைக் கட்டியமைக்கப்பட வேண்டும். பாசிஸ்டுகளால் முற்றிலுமாக சிதைக்கப்பட்டுள்ள இக்கட்டமைப்பிற்கு எதிராகப் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்ற மாற்றுக் கட்டமைப்பிற்கான கோரிக்கையின் அடிப்படையில் இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.


ஜென்னி லீ

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



1 மறுமொழி

  1. வினவு, இந்துக்களை மட்டும் எதிர்ப்பதாக நான் நினைக்கவில்லை, நம் இந்திய கலாச்சாரத்தை, பண்பாட்டினை அழிக்க அன்னிய சக்திகளிடம் விலை போய்விட்டதாக தான் நினைக்கிறேன். இந்தியாவை சிதைப்பதற்கான சதி திட்டத்தை செயலாக்க , தேசவிரோத சக்திகள் பல வழிகளில் முயற்சித்தாலும், எங்கள் பாரத தாயை காக்க , வீரசிவாஜி, திலகர், பட்டேல், பாரதி, வாஜ்பாய், அத்வானி,மோடி, ஜெய்சங்கர், அஜித் தோவல், போன்ற நல்லவர்கள் தோன்றி கொண்டே இருப்பார்கள். இலவச மயக்கத்திலிருந்து மக்கள் விழிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க