ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஆர்.என்.டி ரவிந்த்ரநாத் தாகூர் மருத்துவக் கல்லூரியில் உதய்பூர் திரைப்பட சங்கம் (Udaipur Film Society) சார்பாக சமூக முக்கியத்துவம் வாய்ந்த சினிமாவை ஊக்குவிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திரைப்பட விழாவை காவி கும்பல் தடுத்து நிறுத்தியதோடு வன்முறையிலும் ஈடுபட்டுள்ளது.
இனவெறி இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்ட குழந்தைகள் மற்றும் பாசிசக் கும்பலினால் படுகொலை செய்யப்பட்ட பேராசிரியர் சாய்பாபா ஆகியோரின் நினைவாக நவம்பர் 15, 16, 17 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற திரைப்பட திரையிடல் நிகழ்வில் கவிஞர் கபீரின் மத அரசியலை அம்பலப்படுத்தும் ஹாட் அன்காத் போன்ற படங்கள் திரையிடப்பட்டன.
திரைப்பட விழாவின் இரண்டாம் நாள் (நவம்பர் 16) மதியம் கல்லூரிக்குள் புகுந்த காவி கும்பல் பாலஸ்தீனம் மற்றும் பேராசிரியர் சாய்பாபா பற்றிய திரைப்படங்கள் “மத ஜிகாத்” மற்றும் மாவோயிஸ்ட் சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் படங்களாக இருப்பதாகக் கூறி உடனே படத்தை நீக்குமாறு தெரிவித்ததுடன் அங்குள்ள புத்தகக் கடையையும் அடித்து நொறுக்கியுள்ளது.
இச்சம்பவம் குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் ரிங்கு பரிஹார் கூறுகையில் “இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் நாங்கள் ஈடுபடுகிறோம் என்று கூறி எங்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்குப் பதிவு செய்யப் போவதாக மிரட்டியதுடன் தேசத்திடம் மன்னிப்புக் கேட்கும் வீடியோவை நாங்கள் வெளியிட வேண்டும் என்று தெரிவித்தனர்” என்று தெரிவித்தார்.
மேலும், “காவி கும்பலானது கல்லூரி முதல்வர் விபின் மாத்தூரை சந்தித்து திரைப்பட விழாவை நிறுத்த வலியுறுத்தியது. ஆனால் நாங்கள் விழாவின் முக்கியத்துவம் குறித்துத் தெரிவித்த பிறகும் முதல்வர் விழாவைத் தொடர்ந்து நடத்துவதை ஆதரிக்க முடியாது என்று தெரிவித்தார்” என்று கூறினார்.
படிக்க: பற்றி எரியும் மணிப்பூர்: வேடிக்கை பார்க்கும் காவிக் கும்பல்!
பாசிச கும்பல் ஆளும் மாநிலம் என்பதால் மாவட்ட ஆட்சியரும், போலீசும் வன்முறையில் ஈடுபட்ட கும்பல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததுடன் திரைப்பட நிகழ்வைத் தொடர்ந்து நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கையையும் எடுக்காமல் காவி கும்பலின் வன்முறைக்குத் துணைநின்றுள்ளது.
உதய்பூர் திரைப்பட சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் ஜோஷி இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்ததோடு “கலை மற்றும் சினிமாவை இதுபோன்ற வன்முறை கும்பல்களால் தடுக்க முடியாது. கலையானது அனைத்து வகையிலும் மக்களைச் சென்றடையும்” என்று கூறினார்.
மேலும், “இஸ்ரேலின் இனவெறியால் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளின் நினைவாகத் திரையிடப்பட்ட திரைப்படம் இடைநிறுத்தப்பட்டது துரதிருஷ்டவசமானது” என்று தெரிவித்துள்ளார்.
“காவி கும்பலின் வன்முறைக்குப் பிறகு மாற்று இடத்தில் திரைப்பட விழாவை நாங்கள் மீண்டும் தொடங்கினோம். ஆனால் காவி கும்பலால் வன்முறைகள் ஏற்படும் என்கிற பயத்தினால் வருகை குறைவாக இருந்தது” என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக காவி கும்பலானது பாசிச பா.ஜ.க ஆட்சி செய்யக் கூடிய மாநிலங்களில் அமல்படுத்தப்படும் மககள் விரோதத் திட்டங்கள், கொள்கைகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களைத் தேச விரோத தடுப்புச் சட்டத்தில் (UAPA) கைது செய்து சிறையில் அடைத்து படுகொலை செய்கிறது. அது மட்டுமல்லாமல் ஊடகங்களிலும், சினிமாக்களிலும் பி.ஜே.பி-க்கு எதிரான கருத்தை யாரும் தெரிவிக்கக் கூடாது என்கிற நிலையை உருவாக்கும் விதமாகக் கருத்துரிமையைப் படுகொலை செய்து வருகிறது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram