பற்றி எரியும் மணிப்பூர்: வேடிக்கை பார்க்கும் காவிக் கும்பல்!

அமைதியை கொண்டுவருவதற்கு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் 10 ஆயிரம் ராணுவ வீரர்களையும் அசாம் மாநிலத்தின் ரைபிள்ஸ் படையையும் மணிப்பூருக்கு அனுப்பியுள்ளது பாசிச கும்பல்.

டந்த ஆண்டு மே 3 ஆம் தேதி மெய்தி இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்குமாறு மணிப்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து குக்கி பழங்குடி மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டமானது இரண்டு இனக்குழுக்களுக்கு இடையிலான மோதலாக பாசிச கும்பலால் மாற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களால் 200க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதுடன், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து சொந்த மாநிலத்திலேயே அகதிகளைப் போல் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சில மாதங்களாக வன்முறைச் சம்பவங்கள் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் மணிப்பூர் பற்றி எரியத் தொடங்கியுள்ளது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 7 ஆம் தேதியன்று ஆயுதமேந்திய வன்முறைக் கும்பலானது குக்கி பழங்குடியினப் பெண்ணைக் கொன்றதுடன் அவரது சடலத்துடன் சேர்த்து அவரது வீட்டையும் எரித்தது.

இச்சம்பவத்திற்குப் பிறகு, ஜிரிபாம் பகுதியில் வன்முறை சம்பங்கள் வெடித்தன. நவம்பர் 11 ஆம் தேதியன்று சகுரடோர் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் குக்கி இளைஞர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 10 குக்கி இன இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அந்த இளைஞர்கள் தங்களது கிராமத்தின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தவர்கள் என குக்கி மக்கள் கூறுகின்றனர்.


படிக்க: மணிப்பூர்: துஷார் மேத்தாவின் பொய்யை அம்பலப்படுத்திய குக்கி எம்.எல்.ஏ-க்கள்


அதே நாளில் ரோபேகரா போலீஸ் நிலையம் அருகிலுள்ள மெய்தி நிவாரண முகாமிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ஆயுதமேந்திய வன்முறை கும்பலால் கடத்தப்பட்டதாகக் கூறி இம்பால் பகுதி முழுவதிலும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மாநிலத்தின் பதற்றமான இம்பால் பள்ளத்தாக்கு, ஜிரிபாம் ஆகிய பகுதிகளில் ஆறு போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை (Armed Forces special powers Act-AFSPA) அமித்ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகம் நடைமுறைப்படுத்தியது.

இந்நிலையில் நவம்பர் 14 ஆம் தேதியன்று மாநிலத்தின் உள்துறை இணைச் செயலாளரான மயெங்பாம் வீட்டோ சிங் ஆப்ஸ்பா சட்டத்தைத் திரும்பப் பெற உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால் மாநில போலீசும் முதல்வர் பைரன் சிங்கும் மெய்தி இனவெறி கும்பல்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் மத்திய படைகளைத் திரும்பப் பெற வேண்டாம் என்றும் குக்கி இன மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


படிக்க: மணிப்பூர்: பழங்குடியின பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு உயிருடன் எரித்து படுகொலை!


நவம்பர் 16 ஆம் தேதியன்று காணாமல் போனவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.

இளைஞர்கள் மத்திய அரசு அலுவலகங்களுக்குப் பூட்டுப் போட்டதுடன் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டதால் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்குக் கிழக்கு மற்றும் மேற்கு இம்பால், பிஷ்ணுப்பூர் உள்ளிட்ட 7 மாவட்ட பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மாநில போலீஸ் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக மருந்தகங்கள், சில தனியார் வாகனங்கள் இயங்குவதைத் தவிர்த்து சந்தைகள், மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளதால் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு 5 நாள் பயணமாகச் சென்றுள்ள மோடிக்கு இந்தியாவிலுள்ள மணிப்பூருக்குச் செல்வதற்கு மட்டும் நேரமில்லை. அமைதியை கொண்டுவருவதற்கு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் 10 ஆயிரம் ராணுவ வீரர்களையும் அசாம் மாநிலத்தின் ரைபிள்ஸ் படையையும் மணிப்பூருக்கு அனுப்பியுள்ளது பாசிச கும்பல். தற்போது மேலும் ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்பி வைத்துவிட்டு வன்முறையைக் கட்டுப்படுத்திவிடுவோம் என்று கதையளந்து கொண்டிருக்கிறது.

ஒன்றரை வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களால் ஒவ்வொரு நாளும் மணிப்பூர் மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றனர். இப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணாமல் மோடி – அமித்ஷா பாசிச கும்பலானது மணிப்பூரில் நிலைமையைத் திட்டமிட்டே மோசமாக்கி வருகிறது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க