மணிப்பூர்: துஷார் மேத்தாவின் பொய்யை அம்பலப்படுத்திய குக்கி எம்.எல்.ஏ-க்கள்

ஏற்கெனவே, கடந்த அக்டோபர் 18 அன்று மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்கை பதவி நீக்கம் செய்யக்கோரி 19 பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்கள் மோடிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது குக்கி எம்.எல்.ஏ-க்களின் இக்கூட்டறிக்கை பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

ணிப்பூர் வன்முறை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் வழக்கு விசாரணை ஒன்றில், மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்று ஒன்றிய அரசின் அரசு தரப்பு வழக்கறிஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) துஷார் மேத்தா தெரிவித்திருந்தார். இந்நிலையில், மணிப்பூர் குக்கி எம்.எல்.ஏ-க்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டு துஷார் மேத்தா பேசியது அப்பட்டமான பொய் என்பதை அம்பலப்படுத்தியுள்ளனர்.

கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதத்தில் மணிப்பூரில் குக்கி பழங்குடியின மக்கள் மீதான மெய்தி இனவெறியர்களின் இன அழிப்பு கலவரம் தொடங்கியது. இது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் நலனுக்காக நடத்தப்படுகின்ற திட்டமிட்ட வன்முறை என்பதை பலரும் அம்பலப்படுத்திவந்த நிலையில், அதனை நிரூபிக்கும் விதமாக “மணிப்பூரில் குக்கி இனமக்கள் மீதான இனஅழிப்பை தொடங்கியது நான்தான்” என முதல்வர் பைரன் சிங் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் 48 நிமிட ஆடியோ (Audio) வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பைரன் சிங்கின் தலைமையில் காவி கும்பல் எவ்வாறு மணிப்பூர் கலவரத்தை திட்டமிட்டு தொடங்கி நடத்தியது என்பது பைரன் சிங்கின் வார்த்தைகளின் மூலமே அம்பலமானது.

இதனையடுத்து, கடந்த அக்டோபர் மாத இறுதியில், குக்கி பழங்குடியின சமூகத்திற்கு எதிரான வன்முறையில் அரசு இயந்திரத்தின் உடந்தையையும் ஈடுபாட்டையும் இந்த ஆடியோ காட்டுவதாகவும் ஆடியோ மீது நீதிமன்றத்தின் கண்காணிப்புடன் கூடிய எஸ்.ஐ.டி. விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் குக்கி மனித உரிமை அமைப்பு வழக்கு தொடுத்தது. குக்கி அமைப்பின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், ஆடியோ டேப்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டது. இந்நிலையில், கடந்த நவம்பர் 8 அன்று இவ்வழக்கு விசாரணையின்போது, தனது வாதத்தை முன்வைத்த ஒன்றிய அரசின் அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா, பைரன் சிங் குக்கி எம்.எல்.ஏ-க்களை சந்தித்து அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10, 2024) அன்று பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்கள் உட்பட மணிப்பூரில் உள்ள பத்து குக்கி பழங்குடியின சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அவ்வறிக்கையில், நவம்பர் 8, 2024 அன்று நடைபெற்ற உச்சநீதிமன்ற விசாரணையின்போது, ​​ “மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் அனைத்து குக்கி எம்.எல்.ஏ-க்களையும் சந்தித்து, நிலைமையை அமைதிப்படுத்த முயற்சி செய்கிறார்” என்று இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தது அப்பட்டமான பொய் என்றும் அது இந்திய உச்சநீதிமன்றத்தை தவறாக வழிநடத்துவதற்குச் சமமானது என்றும் தெரிவித்துள்ளனர்.


படிக்க: மணிப்பூர்: பழங்குடியின பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு உயிருடன் எரித்து படுகொலை!


மேலும், “(மணிப்பூரில் வன்முறை தொடங்கிய) மே 3, 2023-க்குப் பிறகு, முதல்வர் என்.பைரன் சிங்குடன் நாங்கள் எந்தச் சந்திப்பையும் நடத்தவில்லை என்பதையும், இன்றுவரை தொடரும் எம் மக்கள் மீதான வன்முறை மற்றும் இனச் சுத்திகரிப்புக்கு மூளையாக செயல்பட்ட பைரன் சிங்கை எதிர்காலத்திலும் சந்திக்கும் எண்ணம் இல்லை என்பதையும் நாங்கள் தெளிவுப்படுத்துகிறோம்” என்று உறுதிபட தெரிவித்துள்ளனர். அவ்வறிக்கையில், கடந்த நவம்பர் 7 அன்று மூன்று குழந்தைகளுக்கு தாயான 31 வயது ஜோசங்கிம் ஹ்மார் என்ற குக்கி பழங்குடியின பெண்ணை, மெய்தி இனவெறியர்கள் வீடுபுகுந்து பாலியல் வல்லுறவு செய்து, உயிருடன் எரித்துக் கொன்ற கொடூர சம்பவத்தை எம்.எல்.ஏ-க்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், “ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தும், பாதுகாப்பற்ற பெண்ணை மெய்தி வெறியர்கள் காட்டுமிராண்டித்தனமாகக் கொன்றதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்றும் “மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் உண்மைகளை குறுக்கு சோதனை செய்யாமல் வாதங்களை சமர்பிக்கும் சொலிசிட்டர் ஜெனரலின் தொழில்சார்ந்த நடத்தையையும் நாங்கள் கண்டிக்கிறோம்” என்றும் பத்து எம்.எல்.ஏ-க்களும் தங்களது கண்டனத்தை தெரித்துள்ளனர்.

ஏற்கெனவே, கடந்த அக்டோபர் 18 அன்று மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்கை பதவி நீக்கம் செய்யக்கோரி 19 பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்கள் மோடிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது குக்கி எம்.எல்.ஏ-க்களின் இக்கூட்டறிக்கை பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், மணிப்பூரில் அமைதி நிலைநாட்டப்படுவதாக பா.ஜ.க. கும்பல் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றிய நிலையில், இன்று உலகமே அறியும் வகையில் குக்கி பழங்குடியின மக்கள் மீதான இன அழிப்பு தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், மோடி அரசின் அரசு தரப்பு வழக்கறிஞரான துஷார் மேத்தா எந்தவித கூச்சநாச்சமும் அச்சமுமின்றி உச்சநீதிமன்றத்தில் பொய்யான தகவலை தெரிவிக்கிறார். பொய்யிலும் புரட்டிலும் ஊறிப்போன காவி கும்பலுக்கு இவ்வாறு உண்மைக்கு மாறான செய்திகளை தெரிவிப்பது வழக்கம்தான் என்பதையும் உச்சநீதிமன்றம் போன்ற அரசு நிறுவனங்களை காவி கும்பல் ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை என்பதையுமே இச்சம்பவம் நிரூபிக்கிறது.

ஆனால், இன்னொருபுறத்தில் குக்கி பழங்குடியின பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டது; வயலில் வேலை செய்துகொண்டிருந்த குக்கியின பெண் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டது; 11 குக்கி போராளிகள் சி.ஆர்.பி.எஃப். போலீசால் கொல்லப்பட்டது என குக்கி பழங்குடியின மக்கள் மீதான வன்முறையும் இன அழிப்பும் நாளுக்கு நாள் தீவிரப்படுத்தப்படுகிறது. இந்த அப்பட்டமான இன அழிப்பு கலவரம் அம்பானி-அதானி போன்ற கார்ப்பரேட் கும்பலுக்கு காடுகளை திறந்துவிடுவதற்காகவே நடத்தப்படுகிறது.

இதனால், இனவெறி, மதவெறி, சாதிவெறி கலவரங்கள் நாளை தமிழ்நாடு உள்ளிட்டு எல்லா மாநிலங்களிலும் நடத்தப்படுவதற்கான அத்துணை வாய்ப்புகளும் உள்ளன. எனவே, குக்கி பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதும் அவர்களுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் போராட்டங்களை கட்டியமைப்பதும் இந்திய உழைக்கும் மக்களின் கடமையாகும். இப்போராட்டங்கள் மோடி-அம்பானி-அதானி கும்பலின் கனிமவள-இயற்கைவள சூறையாடலுக்கு எதிரான போராட்டமாக வளர்த்தெடுப்பட வேண்டியது இன்றைய உடனடி கடமையாகும்.


ஆலம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க