கடந்த டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி மனித உரிமைகள் தினத்தன்று மணிப்பூரில் வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறிய ஒன்றிய மற்றும் மாநில பா.ஜ.க. அரசுகளுக்கு எதிராக, பா.ஜ.க-வை சேர்ந்த மணிப்பூர் சட்டமன்ற உறுப்பினர்கள், புதுடெல்லியின் ஜந்தர் மந்தரில் மௌன உள்ளிருப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
மணிப்பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டு மே 3 அன்று தொடங்கிய சிறுபான்மை குக்கி பழங்குடியின மக்கள் மீதான இனக்கலவரத்தில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 60,000 மக்கள் தங்கள் வீடுகளை இழந்து சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது மீண்டும் மணிப்பூர் கலவரம் தீவிரமடைந்துள்ள நிலையில், குக்கி இன சட்டமன்ற உறுப்பினர்கள் மோடியை சந்திக்க பலமுறை முயற்சிசெய்துள்ளனர். ஆனால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். மோடிக்கு அனுப்பிய கடிதங்களுக்கும் எந்த பதிலும் வரவில்லை.
ஒரு வருடத்திற்கும் மேலாக மணிப்பூரில் வன்முறைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், மணிப்பூர் முதலமைச்சர் என்.பைரேன் சிங்கிற்கு, ஜூலை 2024-இல் மோடியுடன் ஒரே ஒரு சந்திப்புக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதிலும் மணிப்பூர் இனக்கலவரம் குறித்து விவாதிக்க 15 நிமிடங்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில்தான், மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பத்து குக்கி பழங்குடியின சட்டமன்ற உறுப்பினர்களில் எல்.எம். காட், லெபாவ் ஹொக்கிப், லெட்சமாங் ஹொக்கிப், வுங்ஜாகின் வால்டே, பாவோலியன்லால் ஹாக்கிப், சின்லுன்தாங் மற்றும் நுர்சங்லூர் சனேட் ஆகிய ஏழு பேர் கருப்பு முகமூடி அணிந்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். “மோடிஜியை அகற்று”, “மணிப்பூரில் அரசு நடத்தும் இனப் படுகொலையை நிறுத்துங்கள்”, “பழங்குடியினர், சிறுபான்மையினருக்கு கேளாத செவிகள் மட்டுமே வழங்கப்படும்” போன்ற கோரிக்கைகள் பொறித்த பதாகைகள் ஏந்தி போராட்டத்தை நடத்தினர்.
இப்போராட்டத்தின் போது வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “கடந்த 19 மாதங்களாக இந்திய அரசாங்கத்தால் நாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளோம்” என்று தெரிவித்தனர். மேலும், மோடியின் பாதந்தாங்கி ஊடகங்கள் மணிப்பூர் குக்கி பழங்குடியின மக்களை திட்டமிட்டு புறக்கணித்து வருவதையும் போராடிய எம்.எல்.ஏ-க்கள் அம்பலப்படுத்தினர்.
இப்போராட்டத்திற்கு ஒரு நாள் கழித்து, பத்து குக்கி பழங்குடியின எம்.எல்.ஏ-க்களும் கையெழுத்திட்ட, அவர்களின் கோரிக்கைகள் அடங்கிய குறிப்பாணை ஒன்று பிரதமர் மோடியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில்
- சுகாதாரம், கல்வி, சாலைகள் மற்றும் நீர் வழங்கல் போன்ற முக்கியமான துறைகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியை அந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் நேரடியாக மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்க மத்திய அரசு பரிசீலிக்கவேண்டும்.
- தற்போதைய இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண அரசியல் உரையாடலை விரைவுபடுத்தவேண்டும்.
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அந்த குறிப்பாணையில் இடம்பெற்றிருந்தது.
மேலும், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை குக்கி மக்கள் வாழும் மலைப் பகுதிகளுக்கு வழங்காமல் பைரன் சிங் அரசு வஞ்சித்துவருதையும், நிதியை பாரபட்சமாக நிர்வகித்து வருவதையும் அதில் சுட்டிக்காட்டினர்.
இதனை “மெய்தி இன-பெரும்பான்மை மாநில அரசாங்கத்தால், வளர்ச்சியின் அடிப்படையில் மலை மாவட்டங்கள் நீண்டகால பாகுபாடுகளை எதிர்கொண்ட போதிலும், கடந்த 19 மாதங்களில் நடந்துவரும் வன்முறையின் போது இந்த பாகுபாடு மோசமடைந்து வருவதைக் காண்பது வருத்தமளிக்கிறது” என்று குக்கி இன சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
படிக்க: பாசிஸ்டுகளின் பாதங்களில் எதிர்க்கட்சிகளின் கொடி-மலர் | கவிதை
இப்போராட்டத்திற்கு முன்பே போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் ‘தி வயர்’ பத்திரிக்கையிடம் பேசுகையில், “எங்கள் கோரிக்கைகள் தெளிவாகவும் பரவலாகவும் அறியப்பட்டவை, ஆனால் ஒன்றிய அரசை தவிர” என்று குறிப்பிட்டார். மேலும், பா.ஜ.க. அரசு சிறுபான்மையினர் கோரிக்கைகளுக்கு எப்பொழுதுமே பாராமுகம்தான் காட்டி வருகிறது என்றும் குறிப்பிட்டார்.
பைரன் சிங் அரசு திட்டமிட்டு நடத்தும் குக்கி பழங்குடியின மக்கள் மீதான இக்கலவரத்தில் குக்கி மக்களின் வாழ்க்கை நிலைகுலைந்து போயுள்ளது. முன்பு உருட்டுக் கட்டைகள், துப்பாக்கிகளைக் கொண்டு வன்முறை நடத்தப்பட்ட நிலையில், தற்போது டிரோன்கள், வெடி மருந்துகள் நிரம்பிய ஏவுகணைகளைக் கொண்டு கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் மணிப்பூர் மாநில சட்டப்பேரவையில் பல்வேறு குழுமங்களுக்கான தலைவர் பதவியிலிருந்த குக்கி சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி பறிக்கப்பட்டு மெய்தி மற்றும் நாகா இனத்தை சேர்ந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
குக்கி இனத்தை சார்ந்த எம்.எல்.ஏ-களுக்கே, அதுவும் பா.ஐ.க. எம்.எல்.ஏ-களுக்கே இந்த அவலநிலை ஏற்பட்டு அவர்கள் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், எதிர்க்கட்சி எம்.பி-க்கள் மணிப்பூரில் நிலவும் நிலைமை குறித்து நாடாளுமன்ற விவாதம் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து அமைதியான முறையில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாசிச மோடியின் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையடுத்து, பா.ஜ.க. எம்.பி-களுக்கு தேசியக்கொடியும் ரோசாப்பூவும் வழங்கி எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வித்தியாசமான முறையில் ‘போராடி’ வருகின்றனர். மக்களை பிளவுப்படுத்தி கலவரங்களை உண்டு பண்ணி இன அழிப்பை நடத்தி வரும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிச கும்பலுக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டங்களை கட்டியமைக்காமல் அவர்களுக்கு ரோசாப்பூ கொடுத்து பாசிஸ்டுகளுக்கு ஜனநாயக அரிதாரம் பூசுவது இந்திய உழைக்கும் மக்களுக்கு எதிர்க்கட்சிகள் இழைக்கும் அப்பட்டமான துரோகமாகும்.
எனவே, மக்கள், பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் ஓர் இயக்கமாக ஒன்றுதிரண்டு மாபெரும் போராட்டங்களை கட்டியமைத்து “பாசிச மோடி அரசே, மணிப்பூர் இனக்கலவரத்தை நிறுத்து” என முழங்குவோம். ஆர்.எஸ்.எஸ் – பாஜக ; அம்பானி – அதானி பாசிசத்தை முறியடிப்போம்!
கபிலன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram