உத்தரகாண்டில் பிரார்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவிக் குண்டர்கள்

காவிக் குண்டர்கள் குழந்தைகளின் தலையில் அடித்து, "நீங்கள் ஏன் இந்த பிரார்த்தனையில் பங்கேற்கிறீர்கள்" என்று கேட்டுள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற பிரார்த்தனை கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது என்றும் அந்தக் குழந்தைகளை அச்சுறுத்தி உள்ளனர்.

டந்த ஜூலை 14 ஆம் தேதி, உத்தரகாண்டில் உள்ள டேராடூனில் தங்கள் வீட்டில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவர்கள் மீது இந்துமதவெறி தலைக்கேறிய ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் திட்டமிட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தன்னுடைய வீட்டில் தனது குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் வாராந்திர பிரார்த்தனைக் கூட்டத்திற்கு தயாராகிக்கொண்டிருந்தார் தீக்ஷா பால். அப்போது அங்கு வந்த காவிக் குண்டர்கள் அவருடைய வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது, அங்கு இருந்தவர்களை தாக்கியது. தீக்ஷா பால் மத மாற்றம் செய்யும் வேலையை செய்வதாக அக்குண்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எதுவாக இருந்தாலும் நாம் உட்கார்ந்து விவாதிக்கலாம் என்று அவர்களிடம் கூறியுள்ளார்கள் அங்கு இருந்தவர்கள். ஆனால் காவிக் கும்பலோ யார் பேச்சையும் கேட்காமல் அங்கு இருந்தவர்களை அருவருக்கத்தக்க வகையில் இழிவான சொற்களால் வசைபாடியுள்ளது.

மேலும் அக்குண்டர்கள் வீட்டில் இருந்த மடிக்கணினியை தரையில் வீசி எறிந்து உடைத்துள்ளனர்; அதேபோல் வீட்டில் இருந்த குறுக்கு மேடை மற்றும் இசை உபகரணங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்; பூஜை அறை மற்றும் படுக்கையறையை நாசப்படுத்தியுள்ளனர்; கிறிஸ்தவர்கள் புனிதமாக கருதும் சிலுவையை வீட்டினர் முன்பே எட்டி உதைத்து வீட்டு வாசலில் தூக்கி எறிந்துள்ளனர்.

குறிப்பாக குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்டுள்ளனர். குழந்தைகளின் தலையில் அடித்து, “நீங்கள் ஏன் இந்த பிரார்த்தனையில் பங்கேற்கிறீர்கள்” என்று கேட்டுள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற பிரார்த்தனை கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது என்றும் அந்தக் குழந்தைகளை அச்சுறுத்தி உள்ளனர்.

இத்தகைய கொடிய தாக்குதலில் ஈடுபட்ட காவிக் குண்டர்களின் தலைவன் தேவேந்திர டோபல் முன்னாள் ராணுவ வீரன் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்தவன் என்று தீக்ஷா பால் குற்றம் சாட்டுகிறார். இத்தாக்குதலில் ஈடுபட்ட 11 காவிக் குண்டர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை நேரு காலனி போலீசு நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


படிக்க: சத்தீஸ்கர்: கிறிஸ்தவ பழங்குடிகள் மீது வன்முறையை ஏவும் ஆர்.எஸ்.எஸ்!


மேலும், நேரு காலனி போலீசு நிலைய விசாரணை அதிகாரி சத்பீர் சிங் இந்துத்துவ குண்டர்கள் தான் இத்தாக்குதலை திட்டமிட்டு நடத்தியுள்ளனர் என்பதை ஒப்புக்கொள்கிறார். “வீட்டில் எந்த மத மாற்றமும் நடைபெறவில்லை. இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள் குடும்ப உறுப்பினர்களிடம் தவறாக நடந்து கொண்டு அவர்களது வீட்டை நாசப்படுத்தியுள்ளனர்” என்று கூறியுள்ளார். ஆனால் அவர்கள் யாரையும் போலீசு இன்னும் கைது செய்யவில்லை.

பல்வேறு ஜனநாயக சக்திகளும் அமைப்புகளும் இத்தாக்குதலுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளதுடன், காவிக் குண்டர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். “நாங்கள் தாக்குதலைக் கண்டிக்கிறோம் மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்,” என்று ஐக்கிய கிறிஸ்தவ மன்றத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஏ.சி. மைக்கேல் கூறியுள்ளார்.

மேலும், அவர் “இந்த ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை கிறிஸ்தவர்களுக்கு எதிராக 361 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதே காலகட்டத்தில் மத மாற்றங்களில் ஈடுபட்டார்கள் என்ற பெயரில் 237 கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

“இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி செய்கிறது. மதமாற்றத் தடைச் சட்டங்களை அந்த மாநிலங்கள் இயற்றியுள்ளன. இந்த சட்டங்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்களை சட்டவிரோத மதமாற்ற நடவடிக்கைகளில் குற்றம் சாட்ட பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, உத்தரகாண்ட் அரசு 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உத்தரகாண்ட் மத சுதந்திர (திருத்தம்) சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இச்சட்டம் 2018 இல் இயற்றப்பட்ட முந்தைய சட்டத்தை விட மிகவும் கடுமையான விதிகளைக் கொண்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.


படிக்க: தெலங்கானா: மேடக்கில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் கலவரம்


இவ்வாறு நடந்துமுடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சி அமைத்தவுடனே, கடந்த ஒரு மாதக் காலத்திற்கும் மேலாக நாட்டின் பல மாநிலங்களில் சிறுபான்மை மக்கள் மீது திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் நடத்திவரும் தாக்குதல்களின் தொடர்ச்சியாகத்தான் டேராடூனில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாம் பார்க்க வேண்டும்.

கடந்த ஜூன் மாதத்தில் பக்ரித் பண்டிகையை ஒட்டி மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஹிமாச்சலப்பிரதேசம், அசாம், ஒடிசா, தெலுங்கானா எனப் பல மாநிலங்களில் அடுத்தடுத்து கலவரம் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டது, காவிக் கும்பல். குறிப்பாக, தெலுங்கானாவில் மேடக் பகுதியில் நடத்தப்பட்ட கலவரம் அதன் தீவிரத்தைக் காட்டியது.

இந்த சூழலில், நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இல்லை; ஓர் ஆண்டில் பா.ஜ.க. ஆட்சி கலைந்துவிடும்; பாசிச அபாயம் ஓய்ந்துவிட்டது; பா.ஜ.க-வின் இந்துராஷ்டிர கனவு தகர்ந்துவிட்டது என்று பேசுவதெல்லாம் நாட்டின் கோடானுகோடி உழைக்கும் மக்களை பாசிசத்திற்கு பலியாக்குவதில் தான் கொண்டுபோய் நிறுத்தும்.

அதேபோல், சிறுபான்மை மக்கள் மீதான காவிக் குண்டர்களின் இத்தாக்குதல்களை கண்டு முடங்கிவிடத் தேவையில்லை. ஏனென்றால் பா.ஜ.க. கும்பல் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தவுடனே நாட்டின் பல மாநிலங்களிலும் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. நீட் முறைகேடுகளுக்கு எதிரான மாணவர்களின் போராட்டங்கள், மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கறிஞர்களின் போராட்டங்கள் பாசிச எதிர்ப்பு சக்திகளுக்கு உத்வேக மூட்டுகின்றன.

ஆகவே, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலின் பாசிசத்தை வீழ்த்த நினைக்கும் அனைத்து ஜனநாயக சக்திகளும் உழைக்கும் மக்களும் இனம், மதம், சாதி, மொழி வேறுபாடின்றி ஒன்றிணைந்து பாசிஸ்டுகளை பணிய வைக்கும் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியது இந்த காலகட்டத்திற்கான முக்கியப் பணியாகும்.


அகிலன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க