தெலங்கானா: மேடக்கில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் கலவரம்

மேடக் நகரில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க-வினர் முஸ்லீம்கள் மீதும் அவர்களது சொத்துகள் மீதும் தாக்குதல் நடத்தியதில் 7 முஸ்லீம் இளைஞர்கள் காயம் அடைந்தனர். மேடக் போலீசு வாய்மூடி அமைதியாக வேடிக்கை பார்த்தது.

நாளை (17/06/2024) பக்ரித் பண்டிகையை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். காவி பயங்கரவாதிகள் இந்தியா முழுவதும் பல இடங்களில் பசு கடத்தல் என்ற பெயரில் கலவர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பசுக்களை கடத்தினார்கள் என்று கூறி 11 பேரின் வீடுகளை அம்மாநில பா.ஜ.க. அரசு இடித்துத் தள்ளிய அட்டூழியம் அரங்கேறியிருக்கிறது. இதேபோல் இந்தியாவின் பிற பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், இதற்கு முன்னர் எந்தவித வகுப்புவாத வன்முறைகளும் கலவரங்களும் நடந்திறாத தெலங்கானா மாநிலத்தின் மேடக்கில் கடந்த சனிக்கிழமையன்று (15/06/2024) ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் கலவரத்தை நிகழ்த்தியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமையன்று மேடக்கில் உள்ள மின்ஹாஜ் உல் உலூம் மதரஸா நிர்வாகம், பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக கால்நடைகளை ஏற்றிச் சென்றபோது, பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (பி.ஜே.ஒய்.எம்.) என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த காவி குண்டர்கள் மதரஸா அருகே வாகனத்தை வழிமறித்து தாக்குதல் தொடுத்தனர். இது இந்துத்துவ குண்டர்கள் மற்றும் முஸ்லீம் இளைஞர்களுக்கிடையிலான கல் வீச்சு தாக்குதலாக மாறியது. இதனால் காயமடைந்த ஏழு இஸ்லாமிய இல்ளைஞர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, 200-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் மதரஸாவை சுற்றிவளைத்தும் மதரஸாவிற்குள் புகுந்தும் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தனர். இதுகுறித்து வெளியான ஒரு காணொளியில், காவி கும்பல் தடிகளை ஏந்தியபடி “ஜெய் ஸ்ரீராம்” என்ற கோஷங்களை எழுப்பி அங்கிருந்த கார்கள் மற்றும் பிற சொத்துகளைத் தாக்குவதை காண முடிகிறது. இத்தாக்குதலில் காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கும் வந்த காவி கும்பல் மருத்துவமனை கட்டிடத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதன் பிறகு போலீசு தடியடி நடத்தி குண்டர்களை கலைத்தது.

இச்சம்பவம் குறித்த தகவல் சுற்றுவட்டாரத்திற்கு பரவியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. சந்தைகள் மூடப்பட்டன. போலீசு அப்பகுதியில் குவிக்கப்பட்டது. அப்பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேடக் நகரில் நடந்த வன்முறை தொடர்பாக மேடக் மாவட்ட பா.ஜ.க. தலைவன் கதம் ஸ்ரீனிவாஸ், பா.ஜ.க-வின் நகரத் தலைவன் எம்.நயம் பிரசாத், பி.ஜே.ஒய்.எம். தலைவன் உள்ளிட்ட 7 பேரை தெலங்கானா போலீசு கைது செய்துள்ளது. மேலும், மேடக்கிற்கு செல்ல முயன்ற பா.ஜ.க. தலைவன் ஏ.ராஜா சிங்கை ஷம்ஷாபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று (16/06/2024) போலீசு கைது செய்தது.


படிக்க: மீண்டும் பாசிச பா.ஜ.க. ஆட்சி: என்ன செய்யப் போகிறோம்? | வெளியீடு


இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அப்பகுதி இஸ்லாமியர்கள் “இது மதராஸ் மீது மட்டுமல்ல, உள்ளூர் முஸ்லீம்கள் மீதும் நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்” என்று கூறியுள்ளனர். மேலும் “மேடக் நகரில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க-வினர் முஸ்லீம்கள் மீதும் அவர்களது சொத்துகள் மீதும் தாக்குதல் நடத்தியதில் 7 முஸ்லீம் இளைஞர்கள் காயம் அடைந்தனர். மேடக் போலீசு வாய்மூடி அமைதியாக வேடிக்கை பார்த்தது. ஏன் உடனே அவர்களை கைது செய்யவில்லை?” என்று குற்றஞ்சாட்டியுள்ளனர். போலீசு, காவி குண்டர்களுடன் சேர்த்து இஸ்லாமியர்கள் மீதும் வழக்கு பதிவு செய்திருப்பது அப்பகுதி மக்களின் கூற்றை நிரூபிக்கிறது.

மேலும், இதுகுறித்து “எக்ஸ்” தளத்தில் பதிவிட்டுள்ள அல் ஃபிராஸா என்பவர், “தெலங்கானாவில் உள்ள முஸ்லீம்களுக்கு ரேவந்த் ரெட்டி (தெலங்கானா முதல்வர்) மூலம் ஆர்.எஸ்.எஸ். ஒரு தெளிவான செய்தியை அனுப்புகிறது: நீங்கள் பா.ஜ.க. அல்லது காங்கிரசுக்கு வாக்களித்தாலும், இறுதியில் ஆர்.எஸ்.எஸ்-தான் வெற்றிபெறும். காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதால் நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று தவறாக நினைக்க வேண்டாம்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவில் உண்மை இல்லாமல் இல்லை. காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில்தான் ஆர்.எஸ்.எஸ். இத்தகைய கலவரத்தை நடத்தியுள்ளது. அதனை அம்மாநில போலீசு கையைக் கட்டி வேடிக்கை பார்த்துள்ளது. இது தேர்தலில் பா.ஜ.க-வை தோற்கடித்தாலும் ஆர்.எஸ்.எஸ். ஆட்சிசெய்ய விடாது என்பதையே காட்டுகிறது. அதிலும் தான் ஒரு ஆர்.எஸ்.எஸ்-காரன் என்பதை வெளிப்படையாகவே அறிவிக்கும் ரேவந்த் ரெட்டியின் இந்துத்துவ அரசியல் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் வளர்ச்சி மற்றும் அதன் திட்டத்தை நிறைவேற்றுவதற்கே சாதகமாக அமையும் என்பதை இதற்கு முன்பு இத்தகைய கலவரத்தை கண்டிறாத மேடக் சம்பவம் நன்குணர்த்துகிறது.


சோபியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க