26.12.2023
தூத்துக்குடி பெரியார் மையத்தின் மீதும், தோழர்கள் மீதும்
தாக்குதல் நடத்திய காவி குண்டர்களை கைது செய்!
தாக்குதலுக்கு காரணமான RSS, BJPயை தடை செய்!
மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!
தூத்துக்குடியில் APC கல்லூரியின் எதிர்புறம் உள்ள பெரியார் மையத்தில் பெரியார் அமைக்கப்பட்ட தட்டி போர்டை புகார் வந்ததின் அடிப்படையில் எடுக்கச் சொல்லி சிப்காட் காவல் ஆய்வாளர் கடந்த 03.12.2023 அன்று கூறியதால் சில போர்டுகளை பெரியார் மையத் தோழர்கள் உள்ளே வைத்தனர்.
அதன்பின் வன்மம் தலைக்கேறி நேற்று (25.12.2023) மாலை 6.15 மணிக்கு மையத்தில் புகுந்த இரு காவி குண்டர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பெரியார் வாசகம் அமைக்கப்பட்ட தட்டி போர்டை கிழித்து கொடிகளை கீழே சாய்த்தனர். பெஞ்சுகளை சேதப்படுத்தினர். ‘மகளை கல்யாணம் பண்ணவன் பேர்ல என்னல மையம் வேண்டியிருக்கு. ஒழுங்கு மரியாதை ஊரைப் பாக்க ஓடிரு. நடக்கிறதே வேற’ என்று அங்கு காப்பாளராக இருந்த போஸ் என்கிற தோழரையும் மிரட்டிவிட்டு சென்றனர்.
படிக்க : தீர்க்கப்படவேண்டிய வழக்கு! | டிசம்பர் 25 வெண்மணி நினைவு தின கவிதை
அதன்பின் பெரியார் மையத் தோழர்கள் தகவல் தெரிந்து வந்தனர். போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இரு போலீஸார் இரவுப் பாதுகாப்புக்காக போடப்பட்டனர்.
இன்று (26.12.2023) பெரியார் மையத் தோழர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படாமலேயே போலீசு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. காலை 8 மணியளவில் சுமார் 20-க்கும் மேற்பட்ட காவிக் கும்பல் கையில் அரிவாளுடன் மையத்திற்குள் நுழைந்து காப்பாளர் போஸ், தோழர் செல்வராஜ் ஆகியோரை தாக்கியது. இதில் தோழர் செல்வராஜுக்கு பின்மண்டையில் காயம் ஏற்பட்டது. இரு தோழர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார்கள்.
சம்பவம் நடந்ததைக் கேள்விப்பட்டு பு.இ.மு, த.பெ.தி.க, மக்கள் அதிகாரம், ம.ஜ.க உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் பெரியார் மையம் சென்றோம். போலீஸ் குவிக்கப்பட்டது. ஆனால், அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அலுவலகத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த பெரியார் வாசகம் எழுதியிருந்த தட்டி போர்டை உள்ளே கொண்டு போய் வைக்கச் சொல்லி வலியுறுத்தினார். இதை தோழர்கள் மறுத்தனர்.
மேலும், போலீஸ் வேறு அமைப்பினர் யாரும் வரக்கூடாது என்று கூறியது. இதற்கு தோழர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் போலீஸ் பின்வாங்கியது. பெரியார் மையத்தின் அருகில் அச்சுறுத்தும் வகையில் நின்று கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான நபர்களை விசாரிக்காமல், குற்றவாளிகளை கைது செய்யாமல் தோழர்களை கலைந்து போகச் சொல்வதிலும், பிரச்சினைகளை நீர்த்துப் போகச் செய்வதிலுமே போலீஸ் குறியாக இருக்கிறது.
இந்தியா முழுவதும் காவி – கார்ப்பரேட் பாசிசம் ஏறித்தாக்கி வரும் சூழலில், தமிழ்நாட்டை சுற்றி வளைக்கத் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல். ஆனால், அதன் தொண்டையில் மாட்டிய முள்ளாக தமிழ்நாட்டில் பெரியாரும், அவரது பார்ப்பனிய எதிர்ப்பு கருத்துக்களும் இருக்கிறது. அதை ஒழித்துக் கட்டும் முயற்சியில் பாசிசக் கும்பல் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. இதற்குத் தோதாக அரசு நிர்வாத்தை தங்களது செயல்பாட்டிற்காக வளைத்துப்போடுகிறது. தொடர்ச்சியாக கலவரங்களையும், தாக்குதல்ளையும் நடத்தி வருகிறது.
படிக்க : ஆர்.என்.ரவிக்கு கருப்பு கொடி: SFI மாணவர்களை ஒடுக்கும் தமிழ்நாடு போலீசு!
ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியை தடை செய்து, இம்மண்ணிலிருந்து பாசிச சக்திகளை துடைத்தெறியாமல் அதன் பாசிச நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியாது. ஆகவே, புரட்சிகர, ஜனநாயக சக்திகள் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பலை தடை செய்ய உழைக்கும் மக்களை ஒன்று திரட்டி களத்தில் இறங்கிப் போராட வேண்டிய தருணம் இது.
- தூத்துக்குடி பெரியார் மையத்தின் மீதும், தோழர்கள் மீதும் தாக்குதல் நடத்திய காவி குண்டர்களை கைது செய்!
- தாக்குதலுக்கு காரணமான RSS, BJPயை தடை செய்!
செல்வம்
மண்டலச் செயலாளர்
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
9597494038.