தீர்க்கப்படவேண்டிய வழக்கு! | டிசம்பர் 25 வெண்மணி நினைவு தின கவிதை

தீர்க்கப்படவேண்டிய வழக்கு!

விளகாத இருளை கிழிக்க
வீடுதோறும் ஊடுறுவும் சிமிளி விளக்கின் ஒளி
இருள்படிந்த வாழ்வை அகற்றுவதில்லை

கிழக்கே தோன்றும் கதிரவனாய்
கிராமம்தோறும் தோன்றி
விடியலை மீட்டியது
விவசாயிகளின் குழந்தையாய்

கீழத்தஞ்சையில் தவழ்ந்த செங்கொடி!

தன் துடிப்பை நிறுத்தி
துக்கத்தினை வெளிப்படுத்தி
தொலைத்தூரம் வரை துவண்டே கிடந்தது

தோழர்களே,
அந்த துயர நாள் உங்களுக்கு தெரியுமா?
கைப்பேசியில் கதைப்பேசி
ஊர்கடக்கும் காரியமல்ல
சொல்லில் சுருக்கிட முடியாத

வரலாற்று சுவடு அது

தன்மீது தினிக்கும்
ஆண்டையின் உத்தரவை முடிக்க
கண் சொருகும் நாளிகை நெருங்கிடும்
உறை நெல் குத்தி
உமியை நீக்கி
ஒருபிடி சோறு உண்டு உறங்கிட
இரண்டொரு மணிகள் தான் கிடைக்கும்
மணையில் அசதியை போக்க
அசந்திட முடியாது

புலரும் முன்னே கேட்கும்
கொம்போலியின் சத்தம்
தூக்கத்தை கலைத்து

புஞ்சைக்கும் நஞ்சைக்கும் விர்ட்டும்

நீரா தண்ணி வாயிலிட்டு
வாய்க்கால் தண்ணியை முகத்தில் வாரியிரைத்து
ஊதும் குளிரில் நடுங்கும் தேகத்தை காக்க
நைந்துபோன சனல்சாக்கை உடலில் தைக்க
நிலவெளியில் அடியெடுத்து வைக்கும் கால்கள்
வளம்கொழிக்க வயல்வெளியில் விதை தெளிக்கும்
நாற்று பறிக்கும் கதிர் அறுக்கும்
நெல் அடிக்கும் நெடுக்க மூட்டை அடுக்கும்

பகல் போயும் நிமிராமல் உழைக்கும்
திண்ணை சுகம் தெரியாத பண்ணையடிமைகள்!

பெண்ணாளோ பால் கறக்கும் முன்பே
தெருவாசல் கூட்டி
பசுசானம் தெளித்து கொள்ளை வாசல் கூட்டி
கொட்டிலை வழித்து
குதிர் மெழுகி
குணிந்து கூப்பிட்டால்
குண்டு கலையத்தில் இரும்பு பித்தாளை மரக்காலில்
உண்டு கஞ்சி இல்லாமல் போனாலும்

சிண்டு பண்ணையாரின் சீண்டும் பார்வைக்கு
இணங்க வேண்டும்
முழங்கால் தெரிய முந்தானை சொருக வேண்டும்

நல்லது கெட்டதுக்கு நகர முடியாது
நாத்து நட்டாலும் களையெடுத்தாலும்
கறுக்காய் புடைத்தாலும்

கரி இருள் சூளும் போது தான்
கரையேற வேண்டும்

செம்பட்டை தலை சிறுசுகளோ
அம்மனத்தோடு அலைந்து திரியும்
பண்ணையின் ஆடு, மாடு பொழுதும் மேய்க்கும்
புல்லறுத்து போடும்
பூராண், பாம்பு புலங்கும்
வைக்கோல் போரில் ஓடி களைந்து உறங்கும்

இரவானால் ஏராளம் குழந்தையோடு விளையாடும்
குட்டி நிலாக்களின் கொஞ்சுதல்
கொஞ்ச நேரம் தான்
குடிசையில் கூரை கிடையாது
வெயில், பனியை தடுக்க
சுரையோ, பூசணி கொடியோ குறுக்க நெறுக்க படர்ந்திருக்கும்

காயோ கனியோ பூத்தால்
கரிசட்டிக்கு வராது
பண்ணையின் வாசலுக்கு தான் போக வேண்டும்
நண்டோ நத்தையோ தான் நாவுக்கு கிடைக்கும்

விடலை பருவம் அடைந்தால்
வீட்டைவிட்டு செல்ல கூடாது
தீட்டுப்பட்டு விடும் என தெருவார்கள் ஏசுவதுண்டு

ஏதோ பண்ணையிலிருந்து
வீசும் துணிதான் உடுத்த வேண்டும்
சடங்கு முடிக்க வேண்டும்
மணம் முடிந்தாலோ பண்ணையாரிடம் ஆசி வாங்க வேண்டும்
குடிசையில் நல்லது கூடாது
ஆண்டையின் ஆணை இல்லாமல் எதுவும் அசையாது

உடல் விரும்பாமல் உழவுக்கு மறுத்தாலோ
சவுக்கடியில் தப்ப முடியாது
சாணிப்பாலை துப்ப முடியாது
வரிவிழ அடிவிழும்
வயிறு நிறைய சாணிக்கரைசல் குடிக்க வேண்டும்
கப்பிகல்லில் மண்டியிட்டு செல்ல வேண்டும்
அப்பிய நெருஞ்சி முல்லில் உருண்டு புரள வேண்டும்
ஐயோ என்று சொல்ல கூடாது
ஐயா என்று தான் சொல்ல வேண்டும்

முதலியார், மண்றாடியார், தேசிகர்,
வாண்டையார், நாயக்கர் என கொடிய மிருகங்கள்
ஏவிய கொடிய செயல்கள் ஏராளம்
அத்தனை மிருகமும் நிரள செய்தது
43-ல் நெடுங்காடியில் அடியெடுத்து வைத்த
செங்கொடி இயக்கம்!
தென்கரை மடாதிபதிகளின் எச்சரிக்கை எடுத்தெரிந்து
விவசாயிகளிடம் சேர்த்தது
அரை லிட்டர் கூலி உயர்வோடு
அறுவடை செய்து செந்நெல்லை

குருதி குடிக்கவே வாழும் ஓநாய்கள்
உயிரையும் உடமையும் காக்க
நெல் உற்பத்தியாளர் சங்கமென்று
தஞ்சையில் உருவெடுத்தது

நாகை தலைமை
இரிஞ்சூர் கோபாலகிருஷ்ணன் நாயக்கருக்கு வரவே
தாழ்த்தப்பட்டோரை தாக்குவதும்
சேரிகளை சூறையாடுவதும்
குடிசைகளை கொளுத்துவதுமாய் இருந்தது

25.12.1968 அன்றும் அப்படிதான்
கோழை நறியின் சாதிவெறியும் சதிவெறியும்
ஈட்டி எரியெண்ணெய்

அரிவாள், கத்தி, சுளுக்கி, என
ஆட்களுடன் கீழ் வெண்மணியை சூழ்ந்தது

காலை பொழுதுக்காக கண் அயர்ந்தவர்களின் தூக்கமும்
துடித்து அழுதது

நடுராத்திரியில் என்ன நடக்கிறதென்றே தெரியாமல்
நாளாபுறமும் ஓடிய கூலி விவசாயிகளை
வெட்டி கொழுத்துங்கடா என்றது
ஆண்டையின் ஆணை
குத்தி குதற செய்த கூலிப்படை கொடூர தாக்குதலில்
விட்டுவிடென கெஞ்சியவர்களின்
கையறு நிலையின் கவசத்தையும்
சுட்டு வீழ்த்தியது காலி கூட்டம்

ஒருசொட்டு சுவாசத்திற்காக
ராமையாவின் குடிசைக்குள் புகுந்த
44 உயிரை தாழிட்டு தீமூட்டியது

தேகம் தீயில் சுடசுட
விளைச்சலில் தூக்கியெறிந்த
கைக்குழந்தையும் விடவில்லை
சாதி தீ திங்கதிங்க
உரிமை குரல் ஒவ்வொன்றும்
ஊமை குரலாய் ஓய்ந்தது

தோழர்களே
வெந்துதனிந்த கீழ வெண்மணி
நம்மிடம் கேட்பது ஒன்றை மட்டும்தான்
அன்று ஆண்டையால் ஒரு கிராமம்
இன்று காவி – கார்ப்பரேட் பாசிசத்தால்
பல கிராம மக்கள்
மண் காய்ந்து அதன் மனம் காய்ந்து
மரணமடைவதை காண முடியும்

ஆண்டை சாதிகளோ
அதே ரத்த வெறியோடு அலைகிறது
பிறர் சாதியினர் மீது
அன்றாடம் தாக்குதல்
கொலை, கொள்ளை, பறிமுதல் செய்கிறது

வீர மண்ணில்
செங்கொடி பறக்குமா?
சிவப்பதிகாரம் பற்றி படறுமா?
அந்த தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்துவோம்
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை நிலைக்குலைய வைப்போம்!
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவோம்!


தோழர் அன்பு

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க