சாதி ஆணவத்தை வெட்டிடுவோம் | ம.க.இ.க பாடல் | வீடியோ

செத்தா உன்ன வேக வைக்கும் வெட்டியான் நான் உனக்கு… (வெட்டியான் நான் உனக்கு) சேத்து சாதியையும் வேக வைப்போம் – அப்ப என்ன பேரு எங்களுக்கு … ஊர சுத்தம் செஞ்ச குத்தத்துக்கோ… தோட்டிப் பட்டம் எங்களுக்கு... (தோட்டிப் பட்டம் எங்களுக்கு) மல சாக்கடையில் நீ எறங்கு – உன் சாதி என்ன சொல் எனக்கு…

சாதி ஆணவ வெறியாட்டங்கள் மீண்டும் தலை தூக்குகின்றன. ஆதிக்க சாதிச் சங்கங்கள், கட்சிகள் தங்களின் ஓட்டரசியலில் வாக்குப் பொறுக்குவதற்காக சாதிய வன்முறைகளைத் தூண்டி விடுகின்றன.

இதன் ஒரு வெளிப்பாடுதான் பாமக சாதி வெறியர்களும் இந்து முன்னணி பொறுக்கிகளும் இணைந்து நடத்திய சமீபத்திய பொன்பரப்பி வன்முறை !

கடந்த 1997-ம் ஆண்டு, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில், “ஆண்ட பரம்பரையா? அடிமைப் பரம்பரையா?” என்ற பாடல் ஒலித்தகடு வெளியிடப்பட்டது. அப்பாடல்கள் ஒவ்வொன்றும் அன்றுமுதல் இன்றுவரை ஆதிக்கச் சாதித் திமிரை நார்நாராய் கிழித்தெறிகின்றன.

நீங்களும் பாருங்கள் ! பகிருங்கள் !

பாடல் வரிகள் :

வெட்டுப்பட்டுச் செத்தோமடா மேலவளவிலே
வெந்து மடிந்தோமடா வெண்மணியிலே… (வெட்டுப்பட்டுச் செத்தோமடா)

வெட்டியாரப் பயலுன்னு
பட்டம் கெடச்சது எங்களுக்கு
கொட்டடிக்க மாடுதூக்க
கொடுப்பின வேறாருக்கு….?

செத்தா உன்ன வேக வைக்கும்
வெட்டியான் நான் உனக்கு… (வெட்டியான் நான் உனக்கு)

சேத்து
சாதியையும் வேக வைப்போம் – அப்ப
என்ன பேரு எங்களுக்கு …

வெட்டுப்பட்டுச் செத்தோமடா மேலவளவிலே…
வெந்துமடிந்தோமடா வெண்மணியிலே… (வெட்டுப்பட்டுச் செத்தோமடா)

குப்ப மலத்தை வாரி…
கொட்டும் வேலை எங்களுக்கு
கூடை பிஞ்சு மொகத்தில் வழிய
சுமந்திடறோம் உங்களுக்கு…

ஊர சுத்தம் செஞ்ச குத்தத்துக்கோ…
தோட்டிப் பட்டம் எங்களுக்கு… (தோட்டிப் பட்டம் எங்களுக்கு)

மல
சாக்கடையில் நீ எறங்கு – உன்
சாதி என்ன சொல் எனக்கு…

வெட்டுப்பட்டுச் செத்தோமடா மேலவளவிலே
வெந்து மடிந்தோமடா வெண்மணியிலே (வெட்டுப்பட்டுச் செத்தோமடா)

அழுகின பொணத்தக் கூட
மடியில் வச்சி வழிக்கிறோம்…
ஆனாலும் கூலி இல்ல…
எரந்து கஞ்சி குடிக்கிறோம்…

உன்ன ஊர் மதிக்க செஞ்சதுக்கோ….
அம்பட்டன்னு பேர் எடுத்தோம் (அம்பட்டன்னு பேர் எடுத்தோம்)

சாதி
ஆணவத்த வெட்டிடுறோம் – பேரு
என்ன வைப்ப… பாத்திடுறோம்…

வெட்டுப்பட்டுச் செத்தோமடா மேலவளவிலே
வெந்து மடிந்தோமடா வெண்மணியிலே … (வெட்டுப்பட்டுச் செத்தோமடா)

உன்னோட அழுக்குத் துணி
வெள்ளாவியிலே வேகுது …
எங்களோட முதுகுத்தோலு
வெய்யிலிலே தீயுது….

உன் துணிய தொவைக்கும்போது
வண்ணாரப் பய நான் உனக்கு …  (வண்ணாரப் பய நான் உனக்கு)

அடிச்சி
உன் திமிர வெளுப்போம்
அப்போ என்ன பேரு எங்களுக்கு ? …

– வினவு செய்திப் பிரிவு

1 மறுமொழி

  1. “அரிசனன்னு பேரு வக்க யாரடா நாயே..!” பாடலுக்கு இணையான பாடலிது.
    தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் ஒலிக்கப்பட வேண்டும்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க